Site icon இன்மதி

அம்பாசடர் மீண்டு(ம்) வருகிறது, மின்சாரக் கனவோடு

அம்பாசடர் மீண்டும் வருகிறது, முழுக்க மின்னுயிர் ஊட்டப்பட்ட ஆன்மாவுடன்; பிரமிக்க வைக்கும் கட்டழகு வடிவ நேர்த்தியுடன்.

Read in : English

அம்பாசடர் மீண்டும் வரத் தயாராக இருக்கிறது. செயற்கை நுண்ணறிவால் செழுமையாக்கப்பட்ட இன்றைய தொழில்நுட்பக் காலத்தில், தொன்மையின் மீளுருவாக்கம் நிகழவிருக்கிறது. அதிநவீன வடிவங்கள் கொணர்ந்த டெஸ்லாவைத் தவிர்த்து, உலகம் முழுவதும் இருக்கும் கார், மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளர்கள் பலர் தற்போது மின்வாகனத் துறையில் இறங்கியிருக்கிறார்கள். அட, ஹம்மர் கூட சொந்தமாக மின்வாகனம் தயாரிக்கிறது.

ஃபோர்டு மஸ்டாங் முதல் போர்ஷ் டேய்கன் வரையிலும், மற்றும் இடைப்பட்ட எல்லா நிறுவனங்களிலும் நடைபெறும் முழு மின்வாகனப் புரட்சியின் மத்தியில், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் இழந்துபோன தனது நீண்டகால பாரம்பரியப் பெருமையை மீட்டெடுத்திருக்க வேண்டிய நேரம் இது. ஆம். அம்பாசடர் மீண்டும் வருகிறது, முழுக்க மின்னுயிர் ஊட்டப்பட்ட ஆன்மாவுடன்; பிரமிக்க வைக்கும் கட்டழகு வடிவ நேர்த்தியுடன்.

எளிமையான வேர்களில் கால்பதித்து 1948-ல் தொடங்கப்பட்ட அம்பாசடர் தனது வடிவத்தை மூன்றாம் மாரிஸ் ஆக்ஸ்ஃபோர்டிடம் இரவல் வாங்கியது. ’ஆம்பி’ அல்லது ‘ஆம்பை’ என்று வாஞ்சையுடன் அழைக்கப்படும் அந்தக் காலத்தில் பணக்கார இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தியாவின் முதல் காரை உற்பத்தி செய்த பெருமை  ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்க்கு இன்னும் உண்டு.

ஒரு டஜன் மக்கள் இருக்கக்கூடிய முன்னாடி சோபா இருக்கை கொண்ட பருமனான பழைய அம்பாசடர் கார் நம்மில் சிலருக்கு இன்னும்  ஞாபகமிருக்கலாம். உயர்ந்த அதிகாரமும் கெளரவமும் கொண்ட பல பணக்கார இந்தியர்களின் அந்தஸ்து குறியீடாக ஆம்பியை நம்மில் பலர் இனங்காண்கிறார்கள்.

  1948-ல் தொடங்கப்பட்ட அம்பாசடர் தனது வடிவத்தை மூன்றாம் மாரிஸ் ஆக்ஸ்ஃபோர்டிடம் இரவல் வாங்கியது.

வரவிருக்கும் புதிய மின்சார அம்பாசடர் கார் அந்தப் பெருமையை இன்னும் ஒருபடி மேலே கொண்டுசெல்லும்; அப்படியிருக்கும் அதன் அழகு, நேர்த்தி, வசதி, செளகரியம் மற்றும் ஆடம்பரச் செழுமை.

இந்தப் புதிய எந்திரத்தின் மின்னணு வர்ணத்தோற்றம் நம்பிக்கை ஊட்டுவதாகவும் எதிர்காலத்திற்கு தயாரான நிலையிலும் இருக்கிறது. ஒரு வர்ணத்தோற்றம் ‘டியூபோட்ஜ் டிசைன்’ நிறுவனத்திற்காக அமால் சாட்புடே பயிற்சித் திட்டமாக செய்தது. அந்த வடிவமைப்பு பானட் மீதான  முக்கிய வளைவுகளை வைத்திருக்கிறது. காரின் ஒட்டுமொத்தத் தோற்றம் அதிதிறன் எஞ்சின் கொண்ட ஸ்போர்ட்ஸ் காரை (மஸ்ல் கார்) போல இருக்கிறது.

மின்சார அம்பாசடர் காரின் இன்னொரு வர்ணத்தோற்றம் விஷால் வெர்மா உருவாக்கியது. இது நிஜமான அசல் அம்பாசடரின் கனத்த அடையாளங்களைத் தக்க வைத்திருக்கிறது.

இவையெல்லாம் வெறும் புறத்தோற்ற வர்ணஜாலங்கள்தான்; ஆனால் இந்த நேர்த்தி வடிவங்கள் எல்லாம் அம்பாசடரின் மின்வாகனத்தின் மீது பெரிதாக தாக்கம் செலுத்துவதில்லை. பார்க்கப்போனால், வடிவமைப்புக்கும், உற்பத்திக்கும் பொறுப்பான புதிய குழுதான் தீர்மானிக்க வேண்டும், புதிய கார் எப்படி காட்சி அளிக்க வேண்டும் என்பதை.

வடிவம் என்பது கற்பனை செய்யக்கூடிய விசயமே. அசலான பழைய அம்பாசடர் மாடலிலிலிருந்து ஒரு புத்துணர்ச்சியைப் பெற்று, பெரிய முன்பக்க கிரில், தனித்துவ முத்திரையான பானட், மேம்படுத்தப்பட்ட ஒளி, மின்சார அமைப்புகள் ஆகியவை உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு.  டிசி கஸ்டம்ஸ் மாற்றியமைத்த அம்பாசடர் வடிவம் எடுத்துரைக்கத் தகுதியானது.

தமிழ்நாட்டிற்கு இதில் என்ன இருக்கிறது?

2017-ல் குருப்பே பிஎஸ்ஏ (பியூஜியாட்) சுமார் ரூ.80 கோடிகொடுத்து அம்பாசடர் வணிகப் பெயருக்கான உரிமைகளை வாங்கியது. இப்போது ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் பியூஜியாட்டுடன் இணைந்து இந்தியாவில் மின்சார அம்பாசடர் கார்களை உற்பத்தி செய்யவிருக்கிறது.

மேற்குவங்கத்தில் இருந்த ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் உத்தரபாரா ஆலையிலிருந்து 2014 செப்டெம்பரில் வெளிவந்தது புகழ்பெற்ற அம்பாசடரின்  இறுதி கார்.

2021-ல் அந்த ஆலை மூடப்பட்டவுடன், நிறுவனம் பின்வருமாறு தெரிவித்தது: “உத்தரபாரா ஆலையில் நிலைமை மோசமாகி விட்டது; உற்பத்திக் குறைவு, ஒழுங்கீனம், நிதிப்பற்றாக்குறை, நிறுவனத்தின்  முக்கிய பொருளான அம்பாசடர் காருக்கான தேவை குறைதல், ஏறிக்கொண்டே போன கடன் சுமைகள் ஆகியவையே அதன் காரணங்கள்.”

அந்த ஆலை மூடப்பட்ட நாளிலிருந்து, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நல்லதோர் எதிர்காலத்தைத் திட்டமிட்டுக் கொண்டிருந்தது.

2017-ல் குருப்பே பிஎஸ்ஏ (பியூஜியாட்) சுமார் ரூ.80 கோடிகொடுத்து அம்பாசடர் வணிகப் பெயருக்கான உரிமைகளை வாங்கியது. இப்போது ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் பியூஜியாட்டுடன் இணைந்து இந்தியாவில் மின்சார அம்பாசடர் கார்களை உற்பத்தி செய்யவிருக்கிறது.

முதலில் மின்சார இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும் பொருட்டு ஹிந்துஸ்தான் மோட்டார்ஸும், பியூஜியாட்டும் ஒப்பந்தம் போட்டிருக்கின்றன. இதன்படி 51 சதவீதம் பங்கு ஹிந்துஸ்தான் மோட்டார்ஸிடம் இருக்கும்.

திருவள்ளூரில் ஹிந்துஸ்தான் மோட்டார் இன்னொரு ஆலையை இயக்கிக் கொண்டிருக்கிறது. அந்த ஆலை இந்தியாவிற்காக மிட்சுபிஷியையும், சிட்ரோயென்னையும் உற்பத்தி செய்கிறது. குரூப்பே பிஎஸ்ஏ, சிட்ரோயென் சி5 எஸ்யூவியையும் உற்பத்தி செய்யும் அந்த ஆலையில் குரூப்பே பிஎஸ்ஏ சுமார் ரூ. 4,000 கோடி முதலீடு செய்திருக்கிறது என்று விக்கிபீடியா சொல்கிறது.

திருவள்ளூர் ஆலை தமிழகத்தின் தலைநகருக்கு அருகே இருப்பதாலும், தேவைப்படும் உட்கட்டமைப்பு பலமாக இருப்பதாலும், பிஎஸ்ஏ, மிட்சுபிஷி என்ற வாகனங்களோடு இப்போது எச்எம் (ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்) அம்பாசடரும் வரவிருக்கிறது. இந்தியாவின் டெட்ராயிட் இன்னுமொரு புகழ்மாலையைச் சூடிக்கொள்ளப் போகிறது.

இந்தியாவின் மீதான் ஆம்பியின் செல்வாக்கு

அம்பாசடர் வந்த காலம் முதல் அந்தக் கார்கள் மீது இந்தியர்கள் பெரும் மோகம் கொண்டனர். பிக்கப் மாடலை சில ஆர்வலர்கள் விரும்பினர்; சிலருக்கு மஞ்சள்நிற கொல்கத்தா டாக்ஸி; மற்றவர்களுக்கு கறுப்பும், மஞ்சளுமான மும்மை டாக்ஸி. ஆனால் என்னவிருந்தாலும் வெள்ளை அம்பாசடர் அழகே தனி; அது ஈடு இணையற்றது.

மேற்குவங்கத்தில் இருந்த ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் உத்தரபாரா ஆலையிலிருந்து 2014 செப்டெம்பரில் வெளிவந்தது புகழ்பெற்ற அம்பாசடரின் இறுதி கார்.  

1970-ல் விற்கப்பட்ட மொத்த கார்களில் 75 சதவீதம் அம்பாசடர்தான். இந்தியாவில் பல திரைப்படங்களிலும், இசைக் காணொலிகளிலும் ஆம்பி இடம்பெற்றிருக்கின்றன. இந்தியர்களோடு அப்படியொரு பந்தத்தை ஆம்பி கொண்டிருந்தது.

இந்தக் காலத்தில் ஏதாவது அம்பாசடர் கார் கடந்து போனால் தலைதிருப்பிப் பார்ப்பவர்கள் உண்டு. அதற்கு அம்பாசடருக்குத் தகுதியும் உண்டு. இந்தத் தொன்மப்புகழ் அம்பாசடருக்குத் தனித்துவச் சிறப்பைக் கொடுத்திருக்கிறது. அதன் உரிமையாளர்கள் எப்போதும் தங்களின் சிறப்பான உடமையைப் பற்றிச் சிலாகித்துக் கொண்டே இருக்கிறார்கள். நன்றாகப் பேணிக் காக்கப்பட்ட ஓர் அம்பாசடர் கார் சென்னையில் ரூ. 90,000-லிருந்து ரூ. 2,00,000 வரை விலைபோகலாம். அநேகமாக அதை வாங்குவதற்கு இது சரியான நேரமாக இருக்கலாம்.

ஆம்பியின் எதிர்காலம்

நாம் காத்திருக்கும் அம்பாசடரின் மின்சாரப் புத்துயிர்ப்பு இன்னும் முழுவதுமாய் உருவாகவில்லை. ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் இயக்குநர் உத்தன் போஸ் முன்பு டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் இப்படிச் சொல்லியிருந்தார்: “புதிய எஞ்சினின் எந்திரமய வேலையும், வடிவமைப்பு வேலையும் முடியும் நிலைக்கு முன்னேறி இருக்கின்றன.”

மின்சாரத்தில் எரியும் எஞ்சின் கொண்ட அம்பாசடர் 2024-க்குள் சந்தைக்கு வந்துவிடும். ‘அம்பாசடர்’ பெயர் உரிமை இப்போது குரூப்பே பிஎஸ்ஏ-விடம் இருப்பதால், அந்த நிறுவனமே காரை வளர்த்தெடுப்பதை ஆரம்பித்து வைக்கும்.

மின்சார கார் வரும்போது, அதற்கொரு சந்தை நிச்சயமாய் இருக்கும். என்றாலும் தூய்மைவாதிகள் அசலான அம்பாசடரை விரும்புவர்; காரணம் பழைய நினைவுகளைத் தூண்டிவிடுவது அதுதான்; நிஜமான தொன்மை உணர்வும் அதில்தான் இருக்கிறது.

அதனால் என்ன? ஒரு தொன்மைப் புகழ்ச் சின்னத்தின் முழுக்க மின்மயமான, இந்தியாவிலே உருவான நவீன வடிவக்கார் தேசத்தின் சாலைகளில் பெருமையோடு உலாவருவதை யாரும் தடுக்க முடியாது. ஒருவேளை எதிர்காலத்தில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் இந்தியாவின் ஒரே ‘மஸ்ல் காரான’ காண்டெஸாவை மீட்டெடுத்து மீளுருவாக்கம் செய்யக்கூடும்.

Share the Article

Read in : English

Exit mobile version