Read in : English
ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி அரசியல்ரீதியாக இப்போது ஆவியிழந்து போய்விட்டது. எனினும் 2.2 கோடி மக்கள் வாழும் இலங்கைத் தீவுத்தேசம் தங்களை நிராகரித்துவிட்டது என்ற கசப்பான உண்மை கண்ணுக்குப் புலனாகாத மாதிரியும், செவிகளில் விழாத மாதிரியும் அந்த ராஜாங்கக் குடும்பத்தினர்கள் இன்னும் பாவனை செய்துகொண்டிருக்கிறார்கள். வேடிக்கை!
தங்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக முடிவில்லா வரிசைகளில் மூச்சுமுட்ட நின்று கொத்துக் கொத்தாக உயிரை விட்டுக் கொண்டிருக்கும் 69 இலட்சம் மக்கள் – தனக்கு வாக்களித்து அதிகாரத்தைக் கையில் தந்த அந்தப் பாவப்பட்ட ஜனங்கள் – இன்னும் தன்னைச் செயல் ஜனாதிபதியாகவே நீடிக்க விரும்புகிறார்கள் என்று ஒரு மாயநினைப்பிலே பதவியை விட்டு இறங்காமல் அதிலே ஒட்டிக்கொண்டிருக்கிறார் கோத்தபய ராஜபக்ச. தொடக்கத்தில் அகிம்சை நெறியிலும், இப்போது வன்முறைப் பாதையிலும், ஐம்பது நாட்களுக்கும் மேலாக தீயாய்ப் பரவிக் கொண்டிருக்கும் போராட்டங்கள் அவரை இன்னும் அசைத்துப் பார்த்தது போலத் தெரியவில்லை; போராளிகள் எழுப்பும் விண்முட்டும் சத்தங்கள் அன்னத்தின் மீது ஒட்டாத தண்ணீரைப் போல தன் செவிகளில் விழாதது போல அவர் பாவனை செய்கிறார்.
தேசத்தின் பொருளாதாரத்தைச் சீரழித்த பின்பும், 2019-ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சம் வாக்குகள் பெற்று தான் பெற்ற அபரிமிதமான வெற்றிக் கதகதப்பிலே கோத்தபய ராஜபக்ச இன்னும் பெருமையுணர்வுடன் குளிர்காய்ந்துக் கொண்டிருக்கிறார். பதவிக்காலம் முடியும் முன்பு தான் இறங்கப்போவதில்லை என்று இறுமாப்புடன் அவர் முழங்கிக் கொண்டிருக்கிறார்.
ஒருபுறம் ஜனாதிபதி ஓர் அங்குலம்கூட அசைய மறுக்கிறார்; மறுபுறம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே செயல் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கத்தரிக்க முயன்று கொண்டிருக்கிறார். ஜனநாயகமற்ற முறையில் ஜனாதிபதிக்கு எல்லையில்லா அதிகாரங்களை அள்ளித்தந்த 20-ஆவது சட்டத்திருத்தத்தை, 21-ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து ஒழிப்பதில் முனைப்புடன் ஈடுபட்டிருக்கிறார் பிரதமர்.
ராஜபக்ச குடும்பத்தினர் தங்களுக்காகக் கொண்டுவந்த 20-ஆவது சட்டத்திருத்தம், இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் சரித்திரத்தை அதலபாதாளத்திற்கு வீசியெறிந்தது. ஜனநாயகத்திற்குச் சாவுமணி அடித்தது. அரசியல் சர்ச்சை அனலுக்கு அது நெய்வார்த்தது. அந்த 20-ஆவது சட்டத்திருத்தம் ராஜபக்ச குடும்பத்திற்குத் தங்கத்தட்டில் ஏந்தி தாரைவார்த்த அதிகாரங்கள் அழிவுக்கு வழிவகுக்கும் என்று உரிமைச் செயறபட்டாளர்களும் குடிமைச் சமூகத்தினரும் பன்னாட்டு மக்களும் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தினர்.
ராஜபக்ச குடும்பத்தினர் தங்களுக்காகக் கொண்டுவந்த 20-ஆவது சட்டத்திருத்தம், இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் சரித்திரத்தை அதலபாதாளத்திற்கு வீசியெறிந்தது.
இலங்கை என்னும் ஜனநாயக, சமவுடமைக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது வீசியெறியப்பட்ட அணுகுண்டு இந்த 20-ஆவது சட்டத்திருத்தம் என்று வீரியமாக எடுத்துச் சொன்னார்கள் விமர்சகர்கள்.
இலங்கையின் சமீபத்திய அரசியல் வரலாற்றில் முதன்முறையாக, அப்போதும் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவின் யூஎன்பி (ஐக்கிய தேசியக் கட்சி) அறிமுகப்படுத்திய 19-ஆவது சட்டத்திருத்தம் ஜனாதிபதிக்கும், மந்திரிச் சபைக்கும் சமமான செயல் அதிகாரங்களைப் பங்கிட்டுத் தந்தது. ஆனால் இன்றைய எஸ்எல்பிபி (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா) தலைமையிலான அரசாங்கம் கொண்டுவந்த 20-ஆவது சட்டத்திருத்தம், சமபங்கு அதிகாரங்களை வழங்கிய 19-ஆவது திருத்தத்தை அடியோடு ஒழித்துவிட்டு, ஜனாதிபதிப் பதவியை தனியொருவராக வைத்திருந்த கோத்தபய ராஜபக்சவுக்கு அளவில்லா அதிகாரங்களை அள்ளித்தந்தது. பிரதமரின் மற்றும் அவரது அமைச்சரவையின் அதிகாரங்களைப் பலகீனப்படுத்தி, 19-ஆவது திருத்தம் ஜனாதிபதியின் மீது விதித்திருந்த கட்டுத்தளைகளையும், தடைகளையும் அடியோடு நீக்கி, அவருக்கு வரம்பற்ற வானளவு அதிகாரங்களைக் கொடுத்தது 20-ஆவது சட்டத்திருத்தம்.
கடந்த இருபது ஆண்டுகளில் பெரும்பாலும் இலங்கை அரசியலை இயக்கிக் கொண்டிருப்பவர்கள் ராஜபக்ச சகோதர்கள்தான். தேசத்தின் வரவுசெலவுக் கணக்கில் நான்கில் மூன்றுபகுதியை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள். சீன நிறுவனங்களோடு சந்தேகத்துக்குரிய ஒப்பந்தங்கள் செய்துகொண்டு அவற்றின் மூலம் அவர்கள் ஊழலில் ஈடுபட்டார்கள்; மேலும் அப்பட்டமாக காத்திரமான மனிதயுரிமைகளை காலில் போட்டு மிதித்தார்கள். இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது வைக்கப்பட்டன. என்றாலும் பெரும்பான்மை மக்கள் ஆதரவு அவர்களுக்கு இருந்தது.
ஆனால் அதெல்லாம் பழைய கதை. இன்று ராஜபக்ச குடும்பத்தின் ராஜவம்ச ஆட்சிக்கொடி ரத்தக்களரியான பூமியில் ரதம் கவிழ்ந்தது போல இறக்கப்பட்டு கிழிந்துபோய்க் கிடக்கிறது.
இன்றைய 21-ஆம் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்தால், ஜனாதிபதியின் எல்லையில்லா அதிகாரங்கள் இல்லாமல் போகும் அளவுக்குக் கட்டுப்பாடுகள் உருவாகிவிடும். அது மட்டுமின்றி, இனி இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஆகமுடியாத நிலையும் உண்டாகலாம். இந்தச் சட்டவிதியே இன்னொரு ராஜபக்ச சகோதரரை நோக்கி எறியப்படும் அம்புதான். அதிகாரப் போதைகொண்ட அந்தக் குடும்பத்தின் ஆகப்பெரும் அரசியல் தந்திரவாதியான பசில் ராஜபக்சதான் அந்தச் சகோதரர். கிரேக்கப் பெருங்காப்பிய வீரன் அக்கிலீஸின் குதிகால் அவனுடைய அழிவுக்குக் காரணமானதைப் போல, பசில் ராஜபக்சவின் அமெரிக்கக் குடியுரிமைதான் தற்போது அவரது அரசியல் வனவாசத்திற்குக் காரணமாகப் போகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா (எஸ்எல்பிபி) என்னும் ராஜபக்ச குடும்பத்தின் ஆளும் அரசியல் கட்சியே, இரட்டைக் குடிமகனும், தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்சவின் மூளையில் பிறந்த அசுரக் குழந்தைதான். ராஜாங்க ராஜபக்ச குடும்ப விசுவாசிகளால் நிரம்பிய எஸ்எல்பிபி பாராளுமன்றத்தில் ஆகப்பெரும் செல்வாக்கோடு அதிகாரப் பலத்தைக் கொண்டிருக்கிறது. அவமானப்பட்டு ஒளிந்துகொண்ட மேனாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தற்போது அரசி்யல் களத்தில் காணாமல் போய்விட்டார். அதனால் திரைமறைவுக்குப் பின்னிருந்துத் தீயாய்க் காய்களை நகர்த்துபவர் பசில் ராஜபக்சதான். தனது இரட்டைக் குடியுரிமையை முரட்டுப் பிடிவாதத்துடன் பற்றிக்கொண்டே அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள ஆனமட்டும் கடுமையாகப் போராடுவார்.
சமீபகாலமாக இரண்டு அரசியல் அதிகார மையங்கள் இலங்கையை ஆட்டிப்படைத்தன: ஒன்று ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச உருவாக்கியது; இன்னொன்று மேனாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை மையப்படுத்தியது.
போர்க்காலத்தில் பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தபய ராஜபக்ச அரசியலுக்கு அப்போது புதியவர். அவர்தான் 2019-ல் நடந்த தேர்தலில் வென்று செயல் ஜனாதிபதியாக உச்சம் தொட்டார். அப்போதிருந்தே ராஜபக்ச குடும்பத்தில் உட்குழப்பங்களும் சச்சரவுகளும் சர்ச்சைகளும் வெடித்தன. அந்தக் குடும்பப் பேதங்களால் குலைந்துப் போயின இலங்கையின் அரசியலும் பொருளாதாரமும்.
குறிப்பாக கோத்தபயவும், மகிந்தவும் அவர்களின் விசுவாசக் கும்பல்களும் மந்திரி நியமனங்கள், வேளாண் கொள்கைகள், முதலீட்டு ஒப்பந்தங்கள் மற்றும் அரசியல் சலுகைகள் ஆகிய விசயங்களில் மோதிக் கொண்டனர் என்று தி வாஷிங்டன் போஸ்ட் என்னும் அமெரிக்கப் பத்திரிகையிடம் சொன்னார்கள் இந்நாள் மற்றும் மேனாள் மந்திரிகளும், வெளிநாட்டுத் தூதுவர்களும், ராஜபக்ச குடும்பத்தின் அந்தரங்க நட்பு வட்டாரங்களும்.
இரண்டு சகோதரர்களுக்கிடையிலான அவநம்பிக்கை மகிந்த விசுவாசிகள் கோத்தபய விசுவாசிகளைக் குற்றஞ்சாட்டும் அளவுக்கு மிகக் கடுமையாகிப் போனது. கறுப்புத் திங்கள் என்றழைக்கப்படும் மே 9 அன்று, வன்முறையில் இறங்கிய கலவரப் போராளிகளால் முற்றுகையிடப்பட்ட டெம்பிள் ட்ரீஸ் என்னும் மகிந்தவின் இல்லத்தில் அவரும் அவரது குடும்பத்தினரும் மாட்டிக் கொண்டபோது, அவர்களைக் காப்பாற்றுவதில் கோத்தபயவின் இராணுவ விசுவாசிகள் தாமதம் செய்தனர் என்று மகிந்த விசுவாசிகள் கொதித்து விட்டனர்.
இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு பாராளுமன்றத்தில் அனுமதி இல்லை என்று சொல்லும் 21-ஆவது சட்டத்திருத்தத்தின் ஷரத்திற்கு – பசில் ராஜபக்சவை இலக்காக்கி அடிக்கக் காத்திருக்கும் ஷரத்திற்கு – அவரது சொந்தக் கட்சியான எஸ்எல்பிபி-யிலேயே ஆகப்பெரும் ஆதரவு இருக்கிறது.
21-ஆம் சட்டத்திருத்தம் மட்டும் அமலுக்கு வந்தால், அதிகச் சேதாரம் ஆளும் ராஜபக்ச குடும்பத்தின் ஆகப்பெரும் சர்ச்சை நாயகனான பசில் ராஜபக்சவுக்குத்தான். அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பது மட்டுமல்லாமல், அவர்க்கெதிராக வைக்கப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளின் முகாந்திரத்தில் அவர்மீது சட்ட நடவடிக்கையும் பாய்ந்துவிடும்.
ஏற்கனவே பசில் ராஜபக்ச செய்ததாகச் சொல்லப்படும் பல ஊழல்களும், அரசுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்ட்டுகளும் புலன்விசாரணையில் இருக்கின்றன. அரசு ஒப்பந்தங்களை வாங்கிக் கொடுப்பதில் இடைத்தரகராய்ச் செயல்பட்டு கமிஷன் வாங்குகிற அவருடைய பழக்கத்தால் அவருக்கு “மிஸ்டர் டென் பர்செண்ட்’ (திருவாளர் பத்து சதவீதம்) என்ற அவமான அடைமொழி அபகீர்த்தியும் அவருக்கு உண்டு.
சட்டத்தின் நிர்த்தாட்சண்யமான நீண்ட கரத்திலிருந்து இதுவரை எப்படியோ பசில் ராஜபக்ச தப்பித்துவிட்டார்; உபயம் ராஜபக்ச குடும்பத்தின் அடிவருடிகளான நீதிபதிகள். ஆனால் ராஜபக்ச குடும்பத்தினர்க்கு எதிராக வெடித்த ரத்தக்களரியான போராட்டத்தில் பொதுஜனங்களும் குதித்ததால், இதுகாறும் நிலவிய இணக்கமான சூழல் இறுதிநிலைக்கு இன்று வந்துவிட்டது; நட்பு-பகைச் சமன்பாடுகள் மாற ஆரமபித்துவிட்டன. அதனால் இப்போதெல்லாம் நீதித்துறையினரும், அதிகாரிகளும் அதிஜாக்கிரதையாக அடியெடுத்து வைப்பது போலத் தோன்றுகிறது. ஆனாலும், குள்ளநரி தந்திரமும், கள்ள அரசியல் மந்திரமும் தெரிந்த பசில் ராஜபக்ச, பாராளுமன்றத்தில் தனது கட்சி எஸ்எல்பிபி-க்கு இருக்கும் மிருகத்தனமாக பெரும்பான்மையைப் பயன்படுத்தி தனக்கெதிராகக் கட்டவிழ்க்கப் பட்டிருக்கும் எதிர்ப்புப் பேரலைகளைத் தடுக்க திரைமறைவுத் திருட்டுத்தனங்களில் இறங்குவது போலத் தெரிகிறது. ஆனால் அவரது கட்சியின் எல்லாப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து அவருக்கு அடிவருடிகளாக இருக்கத் தயாராக இல்லை.
இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்குப் பாராளுமன்றத்தில் அனுமதி இல்லை என்று சொல்லும் 21-ஆவது சட்டத்திருத்தத்தின் ஷரத்திற்கு – பசில் ராஜபக்சவை இலக்காக்கி அடிக்கக் காத்திருக்கும் ஷரத்திற்கு – அவரது சொந்தக் கட்சியான எஸ்எல்பிபி-யிலேயே ஆகப்பெரும் ஆதரவு இருக்கிறது. ஆனாலும் பாராளுமன்றத்தில் 21-ஆவது திருத்தத்தை நிறைவேற்ற கடுமையான பிரயத்தனம் செய்யும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராகப் பசில் ராஜபக்சவின் ஆதரவாளர்கள் சிலர் பெரியதோர் அவதூறுப் பரப்புரையைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள்.
இதற்கிடையில் எஸ்ஜேபி கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டணி (டிஎன்ஏ) கட்சியும் பாராளுமன்றத்தில் 21-ஆவது சட்டத்திருத்தத்தை ஆதரிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டன. சோதனையில் சோர்ந்துபோன தேசத்திற்குத் துரோகம் செய்யும் வகையில் அந்தக் கட்சிகள் ’அசிங்கமான அரசியல்’ பரமபத ஆட்டம் ஆடுகின்றன என்று அவற்றின் நிலைப்பாடு விமர்சிக்கப்படுகிறது.
பாராளுமன்றத்தில் 21-ஆவது சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் ஆதரவு இன்றைய அரசுக்குத் தேவை. அதனால் ஆளும் கட்சியான எஸ்எல்பிபியின் உறுப்பினர்கள் பலரைக் கொண்டு மந்திரிசபையில் இருக்கும் வெற்றிடங்களை நிரப்புவதைத் தவிர அரசுக்கு வேறுவழி இல்லை.
இலங்கையில் இனிவரும் நாட்கள் இன்னும்பல அதிரடிச் சம்பவங்களால் அல்லோலகல்லோலப் படும். பார்க்கலாம்!
Read in : English