Read in : English
சமீபகாலமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளைத் தாக்கிக் கொண்டிருக்கும் வெப்ப அலை, 2010-ஆம் ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் தொட்ட சிகரங்களையும் தற்போது தாண்டிவிட்டது. அதனால் தமிழ்நாட்டுக் கிழக்குக் கடற்கரையில் வாழும் மக்களுக்கு நரகத்தை உருவாக்கக்கூடிய அதீத ஈரவெப்பம் என்னும் அமைதியான உயிர்க்கொல்லியின் பக்கம் விஞ்ஞானத்தின் பார்வை திரும்பியிருக்கிறது. விளைவு உயிர்க்கே ஆபத்தாகலாம்.
சமீபத்திய வெப்ப அலையில் மாட்டிக்கொண்ட தேசத் தலைநகர் உட்பட பல வடஇந்தியா பகுதிகள் 45-லிருந்து 50 பாகை செல்சியஸ் வரையிலான வெப்ப அளவுகளில் தகித்தன. இவை பாரம்பரிய ‘உலர்ந்த குமிழ்’ வெப்பநிலைகள்.
அதீத ஈர வெப்பம் என்பது ஈரக்குமிழ் வெப்ப அளவுகளில் அளக்கப்படுகிறது. ஓரிடத்தில் நிலவும் உலர்ந்த வெப்ப நிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஈரவெப்பத்தின் அளவு கணிக்கப்படுகிறது. இந்த இயற்கை நிகழ்வைப் பற்றிய புரிதல் இதுதான்: ஈரக்குமிழ் வெப்பநிலை 35 பாகை செல்சியஸைத் தாண்டிவிட்டால், பலகோடி ஆண்டுகளாகப் பரிணாமம் அடைந்து உருவாகிய மனித உடலால் அதற்குத் தக்கவாறு அனுசரிக்க முடியாமல் போய்விடும். வெப்பக் கட்டுப்பாட்டு உயிரியல் அமைப்புகள் பாதிக்கப்படும். விளைவு உயிர்க்கே ஆபத்தாகலாம். விஞ்ஞான ஆய்வுகள் சொல்கிற “அற்புதமான முழுஆரோக்கியத்தையும், மொத்த செயற்பாடின்மையும், முழுநிழலையும், ஆடை அணியாத பழக்கத்தையும், வரம்பில்லாத நீரருந்தும் வழக்கத்தையும்” கொண்டிருக்கிற மக்களுக்கும் கூட இந்த வெப்பத்தின் தாக்கம் அபாயத்தை உருவாக்கும்.
ஓரிடத்தில் நிலவும் உலர்ந்த வெப்ப நிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஈரவெப்பத்தின் அளவு கணிக்கப்படுகிறது. ஈரக்குமிழ் வெப்பநிலை 35 பாகை செல்சியஸைத் தாண்டிவிட்டால், பலகோடி ஆண்டுகளாகப் பரிணாமம் அடைந்து உருவாகிய மனித உடலால் அதற்குத் தக்கவாறு அனுசரிக்க முடியாமல் போய்விடும்.
சில சமீபத்து ஆராய்ச்சிகள் (பின்னால் கொடுக்கப்பட்டிருக்கின்றன) சொல்வது இதுதான்: இந்தப் பயங்கரமான சூழல் எப்போதோ நிகழவிருப்பது அல்ல. ஏற்கனவே தெற்காசியாவின் சிலபகுதிகளில் அது ஆரம்பமாகி விட்டது. வானிலை மையங்கள் தரவுகளைச் சராசரியாக்கித் தருவதால், பெரும்பாலான வெப்ப நாட்களில் தனிப்பட்ட இடங்களில் நிகழும் அச்சமூட்டும் ஈரவெப்ப உச்சங்கள் கவனத்திற்கு வருவதில்லை.
’சயன்ஸ்’ இதழில் காலின் ரேமாண்ட்டும் அவரது சகபணியாளர்களும் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரை பின்வருமாறு சொல்கிறது: “வளி (உலர்குமிழ்) மண்டல வெப்பநிலை இந்த அளவைத் தாண்டிவிட்டால், வியர்வை அடிப்படையிலான உள்ளிருக்கும் குளிரான முறையில் வளர்சிதைமாற்ற வெப்பம் வெளியேற்றப்படுகிறது. ஈரக்குமிழ் வெப்பம் 35 பாகை செல்சியஸைத் தாண்டிவிட்டால், இந்தக் குளிராக்கும் கட்டமைப்பு தன் வீரியத்தை மொத்தமாக இழந்துவிடுகிறது.” வியர்வை மூலம் உள்ளிருக்கும் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை மனித உடல் பரிணாமத்தின் மூலம் பெற்றிருக்கிறது. ஆனால் இந்த ஆற்றலும் செயல்பட முடியாமல் போய்விடும். எப்போது? அதீதமான ஈரவெப்பம் அடிக்கும்போது. சுற்றிலும் ஈரப்பதம் அதிகமாகும் போது.
வானிலை நிலையத் தரவுகள் தந்த பருவநிலைப் பதிவுகளை ஆராய்ந்தபோது, உலகம் முழுவதும் ஈரக்குமிழ் வெப்பநிலை 31, 33 பாகை செல்சியஸ் அளவுகளை தாண்டிய நிகழ்வுகள் தெரிந்தன என்று அந்த விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். மேலும், 35 பாகை செல்சியஸ்க்கு மேலான பல்வேறு அளவுகள் தினசரி உச்சங்களாக பதிவு செய்யப்படிருக்கின்றன என்று இரண்டு நிலையங்கள் தெரிவித்திருக்கின்றன.
வானிலை மையங்கள் தரவுகளைச் சராசரியாக்கித் தருவதால், பெரும்பாலான வெப்ப நாட்களில் தனிப்பட்ட இடங்களில் நிகழும் அச்சமூட்டும் ஈரவெப்ப உச்சங்கள் கவனத்திற்கு வருவதில்லை.
“உடல்ரீதியாக அதிகப்பட்சம் தாங்கக்கூடிய நிலைக்கு அருகே அல்லது அந்த நிலையையும் தாண்டக்கூடிய இந்த பருவநிலைகள் பெரும்பாலும் ஒன்றிலிருந்து இரண்டு மணிநேரம் வரைக்கும் நிகழ்கின்றன,” என்று விஞ்ஞானிகள் எழுதுகிறார்கள். இந்த நிகழ்வுகள் “தெற்காசியாவிலும், கடலோர மத்தியக்கிழக்கிலும், கடலோரத் தென்மேற்கு வட அமெரிக்காவிலும் அதிகமாக ஏற்படுகின்றன; அசாதாரணமான உயர்கடல் தளத்து வெப்பநிலைகளுக்கும், அழுத்தமான கண்டம்சார்ந்த வெப்பத்திற்கும் அருகே அவை நிகழ்கின்றன.”
உலக வெப்பமயமாதலால் வெளிவரும் கரியமில வாயுக்களைக் கட்டுப்படுத்த உலகநாடுகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் விட்டாமல், 21-ஆம் நூற்றாண்டின் மூன்றாவது கால்பகுதியில், தெற்காசியா தொடர்ந்து 35 பாகைக்கும் அதிகமான வெப்பநிலை நிகழ்வுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஈரக்குமிழ் வெப்பநிலைகளின் விஞ்ஞான ஆருடங்கள் கூறுகின்றன.
பருவநிலை மாற்றத்திற்கான உலகநாடுகளின் குழுவின் (ஐபிசிசி) பருவநிலை மாற்றம் பற்றிய ஏடுகளில், அன்றாட வழமையாகிவிட்ட ஆகப்பெரிய கரியமில வாயு வெளிப்பாடுகளின் விசயத்தில் இந்நிகழ்வுகள் பசுமைஇல்ல வாயுக்களின் பிரதிநிதித்துவ குவிமையப் பாதை (ஆர்சிபி – ரெப்ரசன்டேட்டிவ் கான்ஸென்ட்ரேஷன் பாத்) 8.5 என்ற பிரிவின்கீழ் வருவதாகச் சொல்லப்படுகின்றன.
ஒன்றிய அரசிற்கும், கடலோர மாநிலங்களுக்கும் எச்சரிக்கைமணி அடிக்கும் விஞ்ஞானச் செய்தி இதுதான்: கிழக்குக் கடலோர இந்தியா ஏற்கனவே 31 பாகைக்கும் மேலான அதீத ஈரக்குமிழ் வெப்பநிலைப் பிரதேசமாக மாறிவிட்டது. இதற்கு மாறாக, மேற்கு தெற்காசியா இந்தக் கடலோர இயற்கை நிகழ்வுக்கு இதுவரை விதிவிலக்காகவே இருந்திருக்கிறது. அநேகமாக ஈரக்காற்று நிலம்நோக்கிக் கடத்தப்படுவது ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் மேற்குத் தொடர்ச்சிமலைகளில் பரந்துகிடக்கும் பசுமை வளத்தால் நீர்ப்பாசனம் உருவானதும் நீர்ம ஆவிக்கடத்தல் நிகழ்ந்ததும் கூடுதல் காரணங்களாக இருக்கலாம்.
எல் நினோ தாக்கம்
மேலும், 1998, 2016 போன்ற எல் நினோ ஆண்டுகளில் ஈரக்குமிழ் வெப்பநிலைகள் உலகம் முழுவதும் உச்சமடைந்த நிகழ்வுகள் சிகரம் தொட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய துணைக்கண்டத்தில் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தி அதன்மூலம் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தியதில் வீரியமான கோடைப் பருவகாலம் ஆற்றிய பங்கைச் சுட்டிக்காட்டிய தரவுகளையும் இந்த ஆராய்ச்சி காட்டுகிறது.
பூமியைப் பாதிக்கும் இந்தத் தொடர்நோய்க் கண்டுபிடிப்பு மிகவும் கவலைக்குரியது. ஏனென்றால் தொழில்யுகத்திற்கு முன்பிருந்த வெப்பநிலைகளை விட 2.5 பாகை செல்சியஸ் அதிகமாகப் பூமி சூடானாலே போதும், 35 பாகைக்கும் மேலான ஈரக்குமிழ் வெப்பநிலை நிகழ்வுகள் ஏராளமாகவே உருவாகிவிடும். அப்போது கடலோரத் தமிழ்நாடு உட்பட இந்திய துணைக்கண்டம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாமலும், அதீத ஈரவெப்பத்திலிருந்துத் தப்பிக்க முடியாமலும் அவதிக்குள்ளாவர்கள்.
வியர்வை மூலம் உள்ளிருக்கும் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை மனித உடல் பரிணாமத்தின் மூலம் பெற்றிருக்கிறது. ஆனால் இந்த ஆற்றலும் செயல்பட முடியாமல் போய்விடும். எப்போது? அதீதமான ஈரவெப்பம் அடிக்கும்போது. சுற்றிலும் ஈரப்பதம் அதிகமாகும் போது.
இந்த எச்சரிக்கைமணி ஓசைகளை அரசுகள் காதுகொடுத்துக் கேட்க வேண்டும். பசுமை இல்ல வாயுக்களை வீரியத்துடன் குறைக்கும் நோக்கத்துடன் இந்தப் பிரச்சினையை அணுகவேண்டும். சும்மா பருவநிலை மாற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று உதட்டளவில் பேசுவது பிரயோஜனம் இல்லை. இதற்கு இணையாக மாநில அரசுகளும் செயல்பட வேண்டும். வெப்ப அலைகள் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை, குறிப்பாக புறவிடங்களில் பணிகள் செய்வோர்கள் மீதும், வயதானவர்கள் மீதும், உடல்நலம் குன்றியவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி ஆய்வுகள் நடத்தி மாநில அரசுகள் இந்தப் பிரச்சினையைப் பற்றி வீரியமானதொரு புரிதலை வளர்த்துக்கொள்வது அவசியம்.
இந்தியாவின் மேற்குக் கடலோரப்பகுதிகளில் கொழிக்கும் பசுமை வளமும், பெரிய நீர்நிலைகளும் ஏற்படுத்தியிருக்கும் நல்ல விளைவுகளைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதனால் மக்கள் பெருத்த இடங்களில் செயற்கை ஈரநிலங்களையும், பசுமைச் சூழலையும் உருவாக்கி நன்மைதரும் சிறு வானிலைக் கட்டமைப்புகளைப் படைக்கும் சாத்தியத்தைப் புரிந்துகொள்வதும் முக்கியம். மாநகரங்களின் மத்தியில் புதிய ஏரிகளையும் உருவாக்கலாம். கிழக்குக் கடலோரப்பகுதிகளில் வசிப்பிடங்களை இயற்கை சார்ந்த முறையில் மீளுருவாக்கம் செய்வது நிஜத்தில் தவிர்க்க முடியாதது. கட்டிடங்கள், சாலைகள், கட்டுமானங்கள் போன்ற உஷ்ணத்தை உள்வாங்கும் காங்கிரீட்டுகளை பெருமளவில் மேலும் மேலும் சேர்த்துக் கொண்டே போனால், இயற்கை சார்ந்த வசிப்பிட மறுசீரமைப்பு பயங்கரமாகப் பாதிக்கப் படலாம்.
Read in : English