Read in : English
கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை கோடை வெப்பமும், அங்கு சேர்ந்துள்ள காகிதக் குப்பைகளும் காரணம் என்று கூறி எளிதாகக் கடந்து விட முடியாது. சென்னையில் பல்வேறு இடங்களிலிருந்து தினந்தோறும் 3,600 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்தக் குப்பைகள் கொடுங்கையூரில் 269 ஏக்கர் பரப்பளவில் உள்ள குப்பைக் கிடங்கிலும் பெருங்குடியில் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள குப்பைக் கிடங்கிலும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.
“சதுப்பு நிலப்பகுதியில் திடக்கழிவுகளை சேமிக்கும் இடம் இருப்பதே முதல் தவறு. 25 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டப்பட்ட குப்பைகள் பல லட்சம் டன் கணக்கில் நிரம்பியுள்ளன. அதிக அளவில் கொட்டப்பட்ட குப்பைகளின் அழுத்தத்தால் மீத்தேன் உள்ளிட்ட வாயுக்கள் அப்பகுதியில் நிரம்பி உள்ளன. சிறு தீப்பொறி ஏற்பட்டதும் அது மிகப்பெரிய அளவில் பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீ விபத்தில் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். தீப்பற்றிய பகுதியில் சூழ்ந்த கரும்புகையே, அங்கு அளவுக்கு அதிகமாக பிளாஸ்டிக் கழிவுகள், பாலித்தீன் பொருட்களின் தேங்கி இருப்பதைக் காட்டுகிறது” என்கிறார் சூழியலாளர் டாக்டர் ஜெயஸ்ரீ வெங்கடேசன்.
“பெரிய இடம் உள்ளது என்பதாலும், யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள் என்பதாலும் குப்பைகளை அப்படியே கொட்டிவிட முடியாது. 200 ஏக்கர் நிலத்தை ஒரே முறையில் சீரமைத்திட முடியாது. சிறு, சிறு பகுதிகளாக பிரித்து அவற்றிற்கு சதுரமாகவோ அல்லது வட்டமாகவோ ஒரு வடிவமைப்பை கொடுக்க வேண்டும். அதன் பின்னர் அதில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தலாம். இப்படி செய்தால் தான், அங்குள்ள குப்பைகளை முறையாகக் குறைக்க முடியும். இவ்வளவு செய்தாலும் மாசடைந்த அப்பகுதி மீண்டும் சதுப்பு நிலமாக மாற வாய்ப்பில்லை. ஆனால், அங்கு மரங்களை வளர்த்து பசுமையை ஏற்படுத்தலாம். தொழில்நுட்பத்தில் சாதித்து வருவதாக கூறிக் கொள்ளும் அரசுகள், கழிவுகளை அகற்றுவதில் மட்டும் போதிய அக்கறை காட்டாமல் இருப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.
குப்பைகளைச் சேகரிக்கும் போதே அதை மட்கும் குப்பை, மட்காத குப்பை என்று தரம் பிரித்து வாங்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்கும் குப்பைகள் எளிதாகக் கிடைத்து விடும். பெரும்பாலான மட்கும் குப்பைகளை ஆரம்பக்கட்டத்திலேயே உரமாக மாற்றி விடலாம்.
“நீர்நிலை இருக்கும் பகுதியில் டன் கணக்கில் குப்பைகளை கொட்டுவதால் அங்குள்ள ஏரி, குளங்களின் நிறம் சிவப்பாக மாறி சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று கன்ஸ்யூமர் ஆக்ஷன் குரூப் அமைப்பின் மூத்த ஆய்வாளர் சுமன நாராயணன் கூறியுள்ளார். ”மாசு கலந்த நீர் மக்களுக்கு விஷமாகி வருகிறது. இதைத் தடுக்க குப்பைகளைச் சேகரிக்கும் போதே அதை மட்கும் குப்பை, மட்காத குப்பை என்று தரம் பிரித்து வாங்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்கும் குப்பைகள் எளிதாகக் கிடைத்து விடும்.
பெரும்பாலான மட்கும் குப்பைகளை ஆரம்பக்கட்டத்திலேயே உரமாக மாற்றி விடலாம். பிளாஸ்டிக், ரப்பர், கண்ணாடி மற்றும் உலோகங்களை மறுசுழற்சிக்கு அனுப்பிவிடலாம். குப்பைகள் உருவாகும் இடத்திலேயே அவற்றை தரம்பிரித்து விட்டால் மொத்தமாக ஒரே இடத்தில் சேகரித்து பிரிக்க வேண்டிய அவசியம் இருக்காது. சுற்றுச்சூழலும் மாசடையாது” என்கிறார்.
குப்பைகளைப் பிரித்து கொடுக்கவில்லை என்றால் குப்பைகளை எடுக்க முடியாது என கண்டிப்புடன் மாநகராட்சி அறிவுறுத்த வேண்டும். ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் குப்பைகளை தரம்பிரிக்க மைக்ரோ கம்போஸ்டிங் மையம் அமைத்துள்ளதாக மாநகராட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதுவும் முழுமையாக நடைபெறுகிறதா என்றால் கேள்விக்குறி தான். குறிப்பிட்ட பகுதிகளில் இருக்கும் மைக்ரோ கம்போஸ்டிங் மையத்தில் அந்தந்த வார்டில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்படும்.
அவ்வாறு தரம்பிரிக்கும் போதே மட்கும் குப்பைகளை அங்கேயே உரமாக மாற்றி மக்களுக்கு வழங்கும் திட்டத்தையும் அரசு அறிவித்துள்ளது. இதை முழுமையாக செயல்படுத்தினால், 60 சதவீத குப்பைகளை ஆரம்ப கட்டத்திலேயே தவிர்த்து விடலாம் என்கிறார் சுமன நாராயணன்.
ஏற்கெனவே பெருங்குடி பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக குப்பைகள் சேர்ந்துள்ளதால் அங்கு புதிய குப்பைகளை மேலும் சேர்ப்பதை குறைக்க வேண்டும், அதேவேளையில் அங்கு சேர்ந்துள்ள குப்பைகளை எந்தவிதத்தில் கையாண்டு அப்புறப்படுத்த வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். பெருங்குடியில் கொட்டப்பட்டு சிதைந்துள்ள குப்பைகளை பயோ மைனிங் முறையை பயன்படுத்தி உரமாக மாற்றும் பணிகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். இரண்டு பக்கமும் கவனமுடன் செயல்பட்டால் தான் 2 ஆண்டுக்குள் குப்பைகள் தேங்குவதை பெரும்பாலும் தவிர்க்க முடியும்.
பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகம் மட்டுமின்றி டெல்லி, மும்பை பகுதிகளிலும் உள்ள குப்பை கிடங்குகளில் தீப்பற்றி உள்ளன. பெருங்குடியில் 30 லட்சம் டன்னுக்கும் மேலாக குப்பைகள் தேங்கியுள்ளன. அதனால் மீத்தேன் வாயுக்கள் பெருமளவில் பெருகி இருக்கும். கோடைக்காலத்தில் குப்பை கிடங்கில் தீ பிடித்தது முதல் முறை இல்லை. இதற்கு முன் பலமுறை தீ பற்றி எரிந்துள்ளது. அதனால் அங்குள்ள குப்பைகளை பையோ மைனிங் முறையில் உரமாக மாற்ற வேண்டும்” என சுமன நாராயணன் கூறுகிறார்.
பெருங்குடியில் கொட்டப்பட்டு சிதைந்துள்ள குப்பைகளை பயோ மைனிங் முறையை பயன்படுத்தி உரமாக மாற்றும் பணிகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.
பயோ மைனிங் முறை என்பது, குப்பையை பிரித்து அகற்றுவதற்கு முன், கிடங்கை கிளறி, ஒவ்வொரு பகுதியாக பிரித்து கொள்ள வேண்டும். அப்படி பிரிக்கும் போது, பல பெரும்பாலான குப்பை மக்காமல் இருக்கும். துர்நாற்றமும் வீசும். மீத்தேன் வாயுவும் உற்பத்தியாகி ஆபத்தை தரலாம். அதனால், பிரித்தெடுக்கும் குப்பையை அப்படியே எடுத்து, இயந்திரத்தில் கொட்டி தூளாக்க முடியாது. கொட்டினாலும், ஒவ்வொரு குப்பையும் தனித்தனியாக பிரியாது. மித்தேன் வாயு வெளியேறி ஊழியர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தலாம். இவற்றை எல்லாம் தவிர்க்க, பிரிக்கப்பட்ட குப்பை மீது, ‘பயோ கல்ச்சர்’ என்ற இயற்கை நுண்ணுயிரி தெளிக்கப்படும். 40 நாட்களுக்கு பிறகு அந்த குப்பையை எடுக்கும் போது, அனைத்தும் மக்கி, கையாளுவதற்கு எளிதாக இருக்கும். அதே நேரத்தில், நாற்றமும் வீசாது, மீத்தேன் வாயுவும் இருக்காது. இறுதியாக அந்த குப்பையை இயந்திரத்தில் கொட்டி, தனித்தனியாகப் பிரித்து அகற்றி உரமாக்கலாம். இந்த வேலையை செய்வதற்காக தனியார் நிறுவனத்திற்கு அரசு டெண்டர் விட்ட நிலையில், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
பையோ மைனிங் முறையில் குப்பைகளை அகற்றி விட்டால் அங்குள்ள மண், நீர் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அப்பகுதிகளைப் பசுமை இடமாக மாற்றலாம் என்று கூறும் சுமன நாராயணன், “லண்டனில் ஆற்றுப்பகுதியில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டதால் அப்பகுதி முழுவதுமாக மாசடைந்தது. அரசு கவனம் செலுத்தி, குப்பைகளை அப்புறப்படுத்தி அங்குள்ள நீர், மண் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தன. பின்னர், அப்பகுதிக்கு ஏற்ற மரங்கள் நடப்பட்ட நீரின் தன்மையும் சுத்திகரிக்கப்பட்டது. அப்பகுதி பூங்காவாக மாற்றப்பட்டது. இதேபோன்று பெருங்குடியில் உள்ள பகுதியையும் ஆய்வு செய்து மரங்களை வைத்து பசுமையை ஏற்படுத்தலாம்.
இதெல்லாம், உடனே ஏற்பட்டு விடாது. பல ஆண்டுகள் ஆகும். ஆனாலும் அரசும் மக்களும் முழு முயற்சியில் அந்தப் பணியில் ஈடுபட வேண்டும். ஏனெனில், குப்பைகளை ஈசியாக நினைத்து விடுகிறோம். குப்பைகளால் ஏற்படும் நீர், நிலம் மற்றும் காற்று மாசுபட்டால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு சாதாரண உடல் உபாதைகள் முதல் புற்றுநோய் வரை பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. கொடுங்கையூர் குப்பை கிடங்கு பகுதியில் நாங்கள் எடுத்து ஆய்வில் மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவது உறுதியாகியுள்ளது. இதை தவிர்க்க குப்பைகளை ஆரம்பத்திலேயே தரம்பிரித்து அவற்றை மறுசுழற்சி மற்றும் உரமாக மாற்றுவதை சரியாக செய்ய வேண்டும். அரசு இந்த செயல்முறைகளை கண்டிப்புடன் கவனித்தாலே திடக்கழிவு மேலாண்மை முழுமையாக வெற்றி அடையும்” என்றார்.
“மண்டலங்களில் உள்ள தெருக்களைப் பெருக்குதல், வீடுகள் தோறும் தரம் பிரித்துச் சேகரிக்கப்படும் கழிவுகளை, அதற்குரிய பதப்படுத்தப்படும் நிலையங்களுக்குக் கொண்டு செல்லுதல், எஞ்சிய கழிவுகளைக் குப்பை கொட்டும் வளாகங்களுக்குக் கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த Urbaser SA and Sumeet Facilities Limited நிறுவனத்திற்கு 8 ஆண்டுகளுக்கு சென்னை மாநகராட்சி டெண்டர் விட்டது. இந்நிறுவனம் ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, ஓமன், பக்ரைன், பிரேசில், அர்ஜென்டினா, சிலி, பெரு ஆகிய நாடுகளிலும், டெல்லியிலும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கு உட்பட்ட 92 வார்டுகளில் உள்ள 16,621 தெருக்களில் வசிக்கும் மக்களின் குப்பைகளை சேகரிக்கும் பணியை இந்நிறுவனம் செய்து வருகிறது.
”பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை பழைய பொருட்களை விலைக்கு வாங்குவோர் ஒப்பந்தத்தின்படி வந்து எடுத்துச் செல்வார்கள் என்றும், மட்கும் குப்பைகள் உரமாக்க அப்பகுதியில் சேமிக்கப்படும் என்றும், பாலித்தீன் போன்றவை தார் தயாரிக்கும் நிறுவனத்திற்கும், மறுசுழற்சி பொருட்கள் மறுசுழற்சி நிறுவனங்களுக்கும் தனித்தனியே அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார். எஞ்சியவை மொத்தமாக பெருங்குடி குப்பை சேகரிக்கும் பகுதிக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்படும்” என்றார் வேளச்சேரியில் குப்பைப் பிரிக்கப்படும் இடத்தில் வேலை செய்யும் ஒரு பெண்.
தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள் நேரடியாக பரவலாக்கப்பட்ட குப்பை பதனீட்டு நிலையங்களான இயற்கை உரம் தயாரிக்கும் மையம், பொருட்கள் மீட்பு வசதி மையம், எரியூட்டும் நிலையம், உயிரி அழுத்த இயற்கை வாயு நிலையம், தோட்டக் கழிவு மற்றும் தேங்காய் மட்டை பதனிடும் மையம், வளமீட்பு மையம், உயிரி மீத்தேன் வாயு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஏற்கெனவே அரசின் அறிவிப்புப்படி, இத்தனை ஆண்டுகளாக மலைப்போல் குவிந்த குப்பைகளை பையோ மைனிங் செய்யும் பணியும் அங்கு நடைபெற்று வருகிறது என்று பெருங்குடி குப்பைக் கிடங்கில் வேலை செய்பவர்கள் கூறுகிறார்கள்.
“பல ஆண்டுகளாக படிந்த குப்பைகளில் மீத்தேன் வாயு உருவாகி அழுத்தத்துடன் இருந்துள்ளன. அதீத வெப்பத்தால் குப்பையில் பற்றிய லேசான தீ, மீத்தேன் வாயுவால் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. இரண்டு நாட்களுக்கு முன்பு கூட நள்ளிரவில் தீ பற்றியது. மேலே நெருப்புகள் அணைக்கப்பட்டாலும் உள்ளே கங்குகள் உள்ளன. வாயுக்கள் தீயை அதிகப்படுத்துகின்றன. ஓராண்டிற்குள் இந்த குப்பைகளை முழுவதுமாக அகற்ற திட்டமிட்டிருப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது” என்கிறார்கள் பெருங்குடியில் தீ விபத்து ஏற்பட்டபோது பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள்
பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் சேர்ந்துள்ள குப்பைகளை திட்டமிட்டு அப்புறப்படுத்த வேண்டும், வருங்காலங்களில் சேரும் குப்பைகளை ஆரம்பக்கட்டத்திலேயே தரம் பிரித்து உரிய முறையில் பயன்படுத்தினால் பேரழிவுகளைத் தவிர்க்கலாம். இதில் அரசுக்கு மட்டும் பொறுப்பு இருந்தால் போதாது. மக்களும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். அதாவது, குப்பைகளைத் தரம் பிரித்து கொடுத்தால் போதும். வரும் முன் காப்பது நல்லது.
Read in : English