Site icon இன்மதி

பிளஸ் டூ தேர்வில் 3 பாடங்களில் நூற்றுக்கு நூறு: அன்று தமிழ் வழியில் படித்த அரசுப் பள்ளி மாணவி, இன்று டாக்டர்!

ராமநாதபுரத்தில் கே. நந்தகுமார் ஐஏஎஸ் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, சிறப்பாகப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்ட எலைட் ஸ்கூலில் படித்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவி டி. இலக்கியா, பிளஸ் டூ தேர்வில் மூன்று பாடங்களில் நூற்றுக்கு நூறு எடுத்து, தற்போது டாக்டராகியுள்ளார்.

Read in : English

ராமநாதபுரத்தில் கே. நந்தகுமார் ஐஏஎஸ் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, சிறப்பாகப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்ட எலைட் ஸ்கூலில் படித்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவி டி.இலக்கியா, பிளஸ் டூ தேர்வில் மூன்று பாடங்களில் நூற்றுக்கு நூறு எடுத்து, தற்போது டாக்டராகியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த இலக்கியாவின் அப்பா தட்சிணாமூர்த்தி, கூரியர் சர்வீஸ் கடை வைத்திருக்கிறார். அம்மா சாந்தி வீட்டைக் கவனித்துக் கொள்கிறார். சாயல்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பிலிருந்து 10ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தார். எஸ்எஸ்எல்சி தேர்வில் 500க்கு 484 மதிப்பெண்கள் பெற்றார். அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்.

சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த இலக்கியா டாக்டரானது எப்படி என்பதை நம்மிடம் விளக்கினார்:

பள்ளியில் படிக்கும்போது, நான் டியூஷன் எதுவும் சேர்ந்து படித்ததில்லை. வகுப்பில் பாடம் சொல்லித் தருவதைக் கவனமாகக் கேட்பேன். வீட்டிலேயே நானாக எனது பாடங்களைப் படித்து விடுவேன். எஸ்எஸ்எல்சி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றதால் ராமநாதபுரத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்ட எலைட் பள்ளியில் சேருவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. அங்கு படித்தால், பிளஸ் டூ தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று விடலாம் என்று நினைத்து அந்தப் பள்ளியில் சேர்ந்தேன்.

பிளஸ் ஒன் வகுப்பில் உயிரியல், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப் பிரிவை எடுத்துப் படித்தேன். எலைட் ஸ்கூலில் உள்ள விடுதியில் தங்கிப் படிக்காமல், அந்த ஊரில் உள்ள எனது சித்தி ராஜேஸ்வரி வீட்டில் தங்கி இருந்து எலைட் பள்ளிக்கு டேஸ்காலராகப் போய் படித்து வந்தேன். அதற்காக எனக்கு சிறப்பு அனுமதி கொடுத்தார்கள்.

பள்ளியில் படிக்கும்போது எலைட் ஸ்கூல் ஒருங்கிணைப்பாளரான நவநீத கிருஷ்ணன் சார் எங்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்வார். பாடங்களில் சந்தேகம் இருந்தால் ஆசிரியர்களிடம் எப்போது வேண்டுமானாலும் கேட்டுத் தெளிவு பெறலாம். நாங்கள் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் எங்கள் மீது தனிக்கவனம் செலுத்துவார்கள். அப்போது கலெக்டராக இருந்த நந்தகுமார் சார் வாரந்தோறும் நேரில் வந்து எங்களிடம் பேசி தன்னம்பிக்கையூட்டுவார். பள்ளியில் படிக்கும்போது படிப்பிலேய் தீவிர கவனம் செலுத்திப் படித்து வந்தேன். பள்ளியில் வைக்கப்படும் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் எடுப்பேன்.

பிளஸ் டூ தேர்வில் 120க்கு 1158 மதிப்பெண்கள் பெற்றேன். உயிரியல், கணிதம், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் 200க்கு 200 மதிப்பெணகள். இயற்பியலில் 200க்கு 194 மதிப்பெண்கள்.

2016இல் பிளஸ் டூ தேர்வில் 120க்கு 1158 மதிப்பெண்கள் பெற்றேன். உயிரியல், கணிதம், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் 200க்கு 200 மதிப்பெணகள். இயற்பியலில் 200க்கு 194 மதிப்பெண்கள். அந்த ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு இல்லை. பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் எம்பிபிஎஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. மருத்துவப் படிப்பில் சேருவதற்கான கட் ஆப் மதிப்பெண்கள் 198.5.

எனது கட் ஆப் மதிப்பெண்களுக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் இருந்தது. எங்களது ஊருக்கு மதுரை பக்கம் என்பதாலும் செலவு குறைவாக ஆகும் என்பதாலும் அப்பாவின் ஆலோசனைப்படி மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்கத் தேர்வு செய்தேன்.

ஏற்கெனவே, எனது அண்ணன் வங்கிக் கடனுதவி பெற்று சிவில் என்ஜினியரிங் படித்து வந்தார். நான் எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்றால் படிப்தற்கான பணத்துக்கு என்ன செய்வது என்று எனது குடும்பம் திகைத்திருந்தது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தனது கட்சி சார்பில் எனது முதலாண்டு படிப்புச் செலவுக்குத் தேவையான பணத்தை வழங்கினார். இரண்டாம் ஆண்டில் ஜெயலலிதா மரணத்தை அடுத்து, அந்த உதவித் தொகை கிடைக்கவில்லை. ராணி பவுண்டேஷன் என்ற அறநிறுவனம் எனது இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு படிப்புச் செலவுகளுக்கு உதவி அளித்தது. நான்காம் ஆண்டில், அதிமுக அறக்கட்டளையிலிருந்து எனக்கு உதவித் தொகை கிடைத்தது. அதனால் என்து எம்பிபிஎஸ் படிப்பை எந்தவித பொருளாதார சிரமமும் இன்றி முடிக்க முடிந்தது

மெடிக்கல் ரெக்ரூட்மெண்ட் போர்டு மூலம் அரசுப் பணியில் சேர வேண்டும். அதுவும் எனது சொந்த ஊரான சாயல்குடிப் பகுதியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது எனது விருப்பம்.

பிளஸ் டூ வரை தமிழ் வழியில் படித்ததால், மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த முதல் ஆறு மாதங்களில் பாடங்கள் சரிவரப் புரியாது. மற்றவர்களிடம் பாடங்களைக் கேட்டுப் புரிந்து கொண்டு படிக்க ஆரம்பித்தேன். அப்படியே படிப்படிப்படியாக பிக் அப் செய்து விட்டேன். தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இன்டர்ன்ஷிப் செய்து வருகிறேன். வருகிற 18ஆம் தேதியுடன் எனது இன்டர்ன்ஷிப் முடிகிறது.

மெடிக்கல் ரெக்ரூட்மெண்ட் போர்டு மூலம் அரசுப் பணியில் சேர வேண்டும். அதுவும் எனது சொந்த ஊரான சாயல்குடிப் பகுதியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது எனது விருப்பம். அரசுப் பணி கிடைக்கும் வரை தனியார் மருத்துவமனையில் பணிபுரிவேன். முதுநிலைப் பட்டப் படிப்பைப் படிக்க வேண்டும் என்ற விருப்பமும் இருக்கிறது. அனஸ்தீஸ்யா பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டப் படிப்பைப் படிக்க வேண்டும் என்பது எனது விருப்பம் என்கிறார் டாக்டர் இலக்கியா.

Share the Article

Read in : English

Exit mobile version