Read in : English
தேசிய குடும்ப ஆரோக்கிய ஆய்வு-5-ன் அறிக்கைகள் வெளியிடப்பட்டு விட்டன; அவை இணயத்தில் காணப்பெறுகின்றன. 1992-93-ல் தொடங்கப்பட்ட ஒரு நீண்ட ஆய்வுத்தொடரில் ஐந்தாவதாக 2019-21 காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வு வந்திருக்கிறது. இரண்டாவது ஆய்வு 1998-99-லும், மூன்றாவது ஆய்வு 2005-06-லும், நான்காவது ஆய்வு 2015-16-லும் நடத்தப்பட்டன. இதுவரை நடத்தப்பட்ட இந்த ஐந்து ஆய்வுகளும் ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலன் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, மக்கள்தொகை அறிவியலுக்கான பன்னாட்டு கழகத்தை மைய முகமையாக கொண்டு நடத்தப்பட்டன.
தேசிய குடும்ப ஆரோக்கிய ஆய்வு-5 இரண்டு கட்டமாக 2019-21 ஆண்டுகளில் நடத்தப்பட்டது. முதல்கட்ட ஆய்வு 2019 ஜூன் 17 முதல் 2020 ஜனவரி 30 வரையிலும், இரண்டாவது கட்ட ஆய்வு 2020 ஜனவரி 2 முதல் 2021 ஏப்ரல் 30 வரையிலும் நடத்தப்பட்டன. மொத்தம் 6,36,699 வீடுகளிலிருந்தும், 7,24,115 பெண்களிடமிருந்தும், 1,01,839 ஆண்களிடமிருந்தும் தரவுகள் திரட்டப்பட்டன. இந்தியா முழுக்கவும், மாநிலங்கள் வாரியாகவும், ஒன்றிய பிரதேசங்கள் வாரியாகவும், மொத்தம் 707 மாவட்டங்களிலிருந்து மக்கள்தொகை, சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகியவை சம்பந்தமான தகவல்களை 2017, மார்ச் 31 நிலவரப்படி இந்த ஆய்வு-5 வழங்குகிறது.
ஆய்வு-5 பல பிரச்சினைகள் சம்பந்தமாக நிறைய, களத்தில் பெறப்பட்ட தரவுகளைத் தருகிறது. அவற்றில் சில சுகாதாரம் என்பதின் குறுகலான வரையறையைத் தாண்டி இருக்கின்றன. இந்தியாவுக்கும், இந்திய ஒன்றியத்தின் மாநிலங்களுக்குமான ஆய்வு-5-ன் அறிக்கைகளில் கிடைக்கும் சில முக்கியமான குறிப்பான்களைப் பற்றியதுதான் இந்தக் கட்டுரை. குறுகலான இந்த வரையறைக்குள்ளே, சில முக்கிய குறிப்பான்களில் தமிழ்நாட்டு முன்னேற்றத்தின் அளவைப் பற்றி இந்தக் கட்டுரை எடுத்துரைக்கும். அதே வேளையில் மிகச்சிறப்பாகச் செயல்பட்ட கேரளாவைப் பற்றியும், மோசமாகச் செயல்பட்ட உத்தரபிரதேசத்தைப் பற்றியும், ஒட்டுமொத்த இந்தியாவைப் பற்றியும் சில குறிப்புகள் கட்டுரையில் ஆங்காங்கே வரும்.
ஆய்வு-5-ன் தகவல் பட்டியலிலிருந்து எடுக்கப்பட்ட ஐந்து குறிப்பான்கள் சம்பந்தமான தரவுகளின் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தரவுகளின் அடிப்படையில்தான் அட்டவணையை தொடர்ந்து நான் முன்வைக்கும் கருத்துகள் இங்கு இடம் பெறுகின்றன.
குழந்தை இறப்பு விகிதம்
ஒரு மக்கள்கூட்டத்தின் ஆரோக்கிய நிலையைக் குறிக்கும் முக்கிய குறிப்பான் சேய் இறப்பு விகிதம்தான் (ஐஎம்ஆர் – இன்ஃபண்ட் மார்ட்டாலிட்டி ரேட்). பிறக்கும் 1,000 குழந்தைகளில் முதலாண்டு நிறைவடையும் முன்பே மரித்துவிடும் சேய்களின் எண்ணிக்கைதான் குழந்தை இறப்பு விகிதம். nfhs ஆய்வு-5-ன் படி, இந்தியாவின் சராசரி ஐஎம்ஆர் 35.2. தமிழ்நாடு இந்த விசயத்தில் பரவாயில்லை; இதன் ஐஎம்ஆர் 18.6 தான். உத்தரபிரதேசத்தில் நிலைமை படுமோசம்; இதன் ஐஎம்ஆர் 59.8. கேரளா பிரமாதமாகச் செயல்படும் மாநிலம். இதன் ஐஎம்ஆர் வெறும் 4.4 தான்.
தொழில் வளர்ச்சியடைந்த பல முன்னேறிய நாடுகளுக்கு இணையாக அல்லது அவற்றைத் தாண்டிய நிலையில் கேரளா இருக்கிறது. இந்த ஐஎம்ஆர் எண்களின் முக்கிய அம்சம் என்னவென்றால், நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிக அளவு அவை இருக்கிறது என்பதுதான். இரண்டு இடங்களிலும் குறைவாக இருப்பது கேரளாவில்தான். அங்கே கிராமப்புறங்களில் ஐஎம்ஆர் மிகக் குறைவு. நகர்ப்புறங்களில்அதையும் விட குறைவு.
பிறப்பு பாலின விகிதாச்சாரம்
இந்த ஆய்வுக்கு முந்தைய ஐந்து வருடங்களில் பிறப்பு பாலின விகிதாச்சாரம் அசாதாரணமாகக் குறைவான நிலையில் இருக்கிறது. உலகம் முழுவதும் பிறப்பு பாலின விகிதாச்சாரங்கள் ஆண் குழந்தைப் பிறப்புகளுக்கே சாதகமாக உள்ளன. அதாவது சராசரியாக 105 ஆண் குழந்தைகளும், 100 பெண் குழந்தைகளும் பிறக்கின்றன. அதாவது ஒவ்வொரு 1,000 ஆண் குழந்தைகள் பிறக்கும்போதும் 952 பெண்குழந்தைகள் பிறக்கின்றன. ஆய்வு 5-ன் படி, இந்தியாவின் எண்ணிக்கை 929; உலகச் சராசரியை விட்டு மிகவும் தள்ளிப் போன எண்ணிக்கை அல்ல.
அதைப்போல கேரளாவின் சராசரியான 951 உலகச் சராசரிக்கு மிகவும் நெருங்கியே உள்ளது. உத்தரபிரதேசத்தின் எண்ணிக்கையும் ஓரளவு பரவாயில்லை ரகம்தான். தமிழ்நாட்டின் மிகக்குறைவான சராசரி என்பது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பால் தெரிவு கருக்கலைப்பு, அதாவது கருக்கொலை, நடக்கிறது என்று சொல்லும் பலவிதமான அறிக்கைகளொடு பொருந்தி வருகிறது. இது கவலைக்குரிய விசயம்.
ஊட்டச்சத்தின்மையும் ரத்தச்சோகையும்
தேசிய குடும்ப ஆரோக்கிய ஆய்வுகளின் அறிக்கைகள் எல்லாம் இந்தியாவில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்தின்மை உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. ஆய்வு-5 தரும் தரவுகள் இதை உறுதிசெய்கிறது. ஐந்து வயதிற்குக் கீழான குழந்தைகளின் வளர்ச்சி முடக்கம் மற்றும் ரத்தச்சோகை ஆகியவற்றைப் பற்றிய தரவுகள், வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் சராசரி சதவீதம் ஆய்வு-5-ன் படி 35.5 என்று சொல்கின்றன. ஆய்வு-4-ல் இருந்த எண் 38.4-லிருந்து லேசாக இறங்கியிருக்கிறது இந்த குறியீட்டை பொருத்தவரையில்.
திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவர்கள் ஏற்றுமுன்வைத்த பாலின சமத்துவம் என்னும் உயரிய கோட்பாட்டை முற்றிலும் அமல்படுத்த ’திராவிட மாடல்’ இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்பதையும் தேசிய குடும்ப ஆரோக்கிய ஆய்வு-5 குறிக்கிறது. மேலும் முழுமையாக இல்லாவிட்டாலும் ஒப்பீட்டளவில் சிறந்திருக்கும் கேரளாவின் செயற்பாட்டையும் இந்த ஆய்வு நமக்கு கவனப்படுத்துகிறது
தமிழ்நாடு பரவாயில்லை. இதன் சதவீதம் 25; ஆய்வு-4-ன் படி இது 27.1 சதவீதமாக இருந்தது. லேசான இறக்கம்! ஐந்து வயதிற்குக் கீழான, குழந்தைகளின் வளர்ச்சி முடக்கம் கேரளாவில் 23.4 சதவீதம்; இது அகில இந்திய அளவில் குறைவானதுதான்; ஆனால் ஆய்வு-4-ல் இருந்த 19.7 சதவீதத்தை விட இது அதிகம் என்பது கவலைதரும் தகவல். எதிர்பார்த்ததைப் போல உபி 39.7 சதவீதத்தில் அதிக அளவில் இருக்கிறது. எனினும் ஆய்வு 4-ல் இருந்த 46 சதவீதத்தைவிட இது குறைவானது என்பது ஆறுதல் தருகிற தரவு. ஐந்து வயதிற்கும் கீழான ஆறுமாதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகை எல்லா ஆய்வுகளிலுமே அதிகமாகவும் அதிகரித்தும் காணப்பட்டது. இந்த விசயத்தில் கேரளா எவ்வளவோ பரவாயில்லை. என்றாலும் அங்கேயும் ஆய்வு-4 அறிக்கையை ஒப்பிடுகையில் ரத்தசோகை சற்று அதிகமாகியிருக்கிறது. தமிழ்நாடு மிகவும் பின்தங்கிவிட்டது இந்த விசயத்தில்.
இதன் சதவீதம் 57.4. ஆய்வு 4-ல் ஏற்கனவே அதிகமான நிலையில் இருந்த 50.7 சதவீதத்திலிருந்து உயர்ந்துவிட்டது. . .தமிழ்நாட்டின் சதவீதம் தேசிய சராசரிக்கும், உபியின் சதவீதத்திற்கும் குறைவானதுதான். 15 வயதிலிருந்து 49 வயது வரைக்குமான பெண்களின் ரத்தசோகை விசயமும் அப்படித்தான் இருக்கிறது. இந்தியா, தமிழ்நாடு, உபி ஆகியவற்றின் எண்ணிக்கை 50 % க்கும் சற்று மேலான அளவில் உள்ளன. கேரளாவில் முன்றில் ஒருபங்கு என்று தான்இருக்கிறது.
இல்லற வன்முறை
நடப்புக்கால இந்திய சமூகத்தின் மிகவும் கவலைக்குரிய விசயம் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துக் கொண்டே போவது தான். தேசிய குடும்ப ஆரோக்கிய ஆய்வுகளின் தரவுகள் இதை உறுதியாகச் சொல்கின்றன. நாட்டிலுள்ள 18-49 வயதுக் குழுமத்தில் இருக்கும் மணமான பெண்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருபகுதியினர் கணவரின் வன்முறைக்கு ஆளானதாகச் சொல்கிறார்கள். உபி வழக்கம்போல இந்த விசயத்தில் உயர்ந்த விகிதத்தைக் கொண்டிருக்கிறது. ஆனால் பெரும் அதிர்ச்சி தருவது தமிழ்நாடுதான். இந்த மாநிலத்தில் கணவனின் வன்முறைக்காளான பெண்கள் 38.1 சதவீதம்; ஆய்வு 4-ல் இருந்த 40.7 சதவீதத்திலிருந்து சற்று தான் குறைந்திருக்கிறது. ஆனால் கேரளாவில் இது 9.9 சதவீதம் என்ற நிலையில் மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஆய்வு 4-ல் இருந்த 14.3 சதவீதத்திலிருந்து மிகவும் குறைந்துவிட்டது. என்றாலும் நாகரிகமான ஒரு சமூகத்தில் இதைக்கூட நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
எதிர்காலச் சவால்கள்
ஆரோக்கியம் மற்றும் நலன் ஆகியவற்றைக் காட்டும் குறிப்பான்களில் நாடு கொஞ்சம் முன்னேறியிருப்பதை தேசிய குடும்ப ஆரோக்கிய ஆய்வு-5 சுட்டிக்காட்டுகிறது. ஆனால் இந்த முன்னேற்றம் மெதுவாகவும், சமச்சீர்வில்லாமலும் நிகழ்கிறது என்பதையும் அது சொல்கிறது. திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவர்கள் ஏற்றுமுன்வைத்த பாலின சமத்துவம் என்னும் உயரிய கோட்பாட்டை முற்றிலும் அமல்படுத்த ’திராவிட மாடல்’ இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்பதையும் தேசிய குடும்ப ஆரோக்கிய ஆய்வு-5 குறிக்கிறது. மேலும் முழுமையாக இல்லாவிட்டாலும் ஒப்பீட்டளவில் சிறந்திருக்கும் கேரளாவின் செயற்பாட்டையும் இந்த ஆய்வு நமக்கு கவனப்படுத்துகிறது.
இறுதியாக பிற்போக்குத்தனமான சித்தாந்தங்களைக் கொண்ட மாநிலங்களில் மனிதநலன் அல்லது பாலின சமத்துவம் பெரிதாகக் கொண்டாடப்படவில்லை என்பதையும் இந்த ஆய்வு காட்டுகிறது.
Read in : English