Site icon இன்மதி

எதிர்ப்புக் குரல் எழுப்புவோர் மீது தேச துரோக வழக்கு: தமிழகம் விதிவிலக்கு அல்ல!

தேச துரோகக் குற்றத்தைக் கையாளும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 124ஏ பிரிவை மறுஆய்வு செய்ய மத்திய அரசு உறுதியளித்துள்ளதை அடுத்து, அதன் மறுபரீசீலனை நடைமுறைகள் முடிக்கப்படும் வரை நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள தேசத் துரோக வழக்கு விசாரணைகளை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.(Image credits: thedrain_in-twitter)

Read in : English

உரிமைக்காக குரல் கொடுக்கும் மக்களையும், அரசின் திட்டங்கள் அல்லது நடவடிக்கைகள் குறித்து விமர்சிப்பவர்களையும் மத்திய, மாநில அரசுகள் தேச விரோதிகளாக முத்திரைகளை குத்தி விடுகின்றன. இதில் தமிழகமும் விதிவிலக்காக இல்லை. மீத்தேன், ஸ்டெர்லைட், கூடங்குளம் அணுமின் நிலையம், சி.ஏ.ஏ. என அரசு திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது 124ஏ சட்டப்பிரிவின் கீழ் தேச துரோக வழக்கு பாய்ந்துள்ளது என்கிறார்கள் மனித உரிமை வழக்கறிஞர்கள்.

அனைத்து தேச துரோக வழக்குகளின் விசாரணையையும் உச்சநீதிமன்றம் புதன்கிழமை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. தேச துரோகக் குற்றத்தைக் கையாளும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 124ஏ பிரிவை மறுஆய்வு செய்ய மத்திய அரசு  உறுதியளித்துள்ளதை அடுத்து, அதன் மறுபரீசீலனை நடைமுறைகள் முடிக்கப்படும் வரை நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள தேசத் துரோக வழக்கு விசாரணைகளை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய வழக்கறிஞர் புகழேந்தி, “இந்திய தண்டனைச் சட்டத்தில் 124ஏ பிரிவு தேச துரோகத்தை வரையறுக்கிறது. அதாவது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அரசுக்கு எதிராகப் பேசுதல், எழுதுதல், அரசை அவமதிக்கும விதத்தில் நடத்தல் அல்லது அவ்வாறு நடப்பவர்களை ஊக்குவித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது தேச துரோகமாகக் கருதப்படுகிறது. ஆனால், மாநிலத்தை ஆளும் அரசுகள் உரிமைக்காக குரல் கொடுக்கும் மக்கள் மீதும், அரசின் திட்டங்கள் அல்லது நடவடிக்கைகள் குறித்து விமர்சிப்பவர்களை தேச விரோதிகளாக முத்திரைகளை குத்தி விடுகின்றன என்கிறார்

மீத்தேன், ஸ்டெர்லைட், கூடங்குளம் அணுமின் நிலையம், சி.ஏ.ஏ. என அரசு திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள், சமூக வலைதளத்தில் கருத்து பதிவிடுவோர்  மீது 124ஏ சட்டம் பாய்ந்துள்ளது.

“உதாரணமாக, மீத்தேன், ஸ்டெர்லைட், கூடங்குளம் அணுமின் நிலையம், சி.ஏ.ஏ. என அரசு திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள், சமூக வலைதளத்தில் கருத்து பதிவிடுவோர்  மீது 124ஏ சட்டம் பாய்ந்துள்ளது. 2011ஆம் ஆண்டு கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடிய 9000பேர் மீது 20 தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. திமுக ஆட்சியில் மீத்தேன் திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் மீத்தேன் திட்டம் கொண்டு வந்தாலும் 2014ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில்  போராட்டம் நடத்தப்பட்டது. அதனால் அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவானது. 2017ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது ஸ்டெர்லைட் திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2019ஆம் ஆண்டு சி.ஏ.ஏ. என்ற குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது 124ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழக்கத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பலர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதுமட்டும் இல்லாமல் தனிப்பட்ட முறையில் கருத்து பகிர்ந்தவர்கள் மீதும் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விருந்தினர்களை உபசரிப்பதில் மிகச்சிறந்தவர்கள்’ என்று அண்டை நாட்டு மக்களைப் பாராட்டியதற்காக அரசியல்வாதியும், நடிகையுமான ரம்யா மீதும் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது. அதிமுக ஆட்சியில் ம.தி.மு.க தலைவர் வைகோ மீதும் தேசத்துரோக வழக்குகள் பாய்ந்துள்ளன. சமூக வலைதளமான பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் குறிப்பிட்ட சம்பவத்தையோ, அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து பதிவிடுவோர் மீது தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்கிறார் புகழேந்தி.

“இப்படி உரிமைக்காக குரல்கொடுப்பவர்களை அரசியல் ரீதியாக பழி வாங்கும் வகையில் தேசத்துரோக சட்டத்தை அதிகாரத்தில் இருப்பவர்கள் கையில் எடுத்துக் கொள்கின்றனர். இதுவரை அரசுக்கு எதிராக செயல்பட்டவர்கள் என்று போடப்பட்ட 124ஏ பிரிவின் கீழ் தொடரப்பட்ட வழக்குகளில் ஒரு சதவீத வழக்குகளில் மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. பெரும்பாலான வழக்குகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன அல்லது தவறாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன. தேசத்துரோக சட்டத்தை கொண்டு வந்த பிரிட்டிஷ் அரசாங்கமே 2008இல் அந்த சட்டத்தை ரத்து செய்துள்ளது. தனது நாட்டு மக்களை தேச விரோதி என முத்திரை குத்தப்படுவதை முன்னேறிய நாடுகள் விரும்புவதில்லை. ஆனால், வளரும் நாடான இந்தியாவில் தேசத்துரோக சட்டத்தை தவறாக பயன்படுத்தும் போக்கு அதிகரித்திருப்பது அதிகாரவர்கத்தின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறது” என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி.

உரிமைக்காகக்  கேள்வி எழுப்புவது ஜனநாயகத்தின் முக்கியமான அம்சம். அப்படி கேள்வி கேட்டால் தேசத்துரோகி என முத்திரை குத்தி ஒடுக்கப்படுவது எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது..

 

தேசத்துரோக வழக்கில் கைதானவர்களுக்கு எளிதில் ஜாமீன் கிடைப்பதில்லை என்கிறார் வழக்கறிஞரும், மக்கள் உரிமை கழகத்தின் தேசிய பொதுச்செயலாளருமான டாக்டர் வி. சுரேஷ். “”பெரும்பாலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 124ஏ பிரிவின் (தேச துரோகக் குற்றம்) கீழ் மட்டும் போடப்படுவதில்லை, 121ஏ (தேசத்துக்கு எதிராகப் போர் தொடுப்பதற்கான முயற்சி), 120பி (குற்றவியல் சதி) ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்படுவதால் குற்றம்சாட்டப்பட்டவர்•களுக்கு எளிதாக ஜாமீன் கிடைக்காது. பாதிக்கப்பட்டவர்களுக்கு விசாரணையின் இறுதியில் நிரபராதி என தீர்ப்பளித்து விடுவிக்கப்பட்டாலும் அவர்கள் சிறையில் இருந்த நாட்களும், பாதிக்கப்பட்டவரின் குடும்பமோ அல்லது அமைப்போ சந்தித்த இன்னல்களுக்கு எந்தவித பதிலும் சட்டத்தில் இல்லை. காவல்துறையை சேர்ந்த சிலர் ஆட்சியாளர்களுக்குச் சாதகமாக செயல்பட்டு, அரசுக்கு எதிராகக் கேள்வி எழுப்புகிறவர்கள் மீது வழக்கு பதிவு செய்கின்றனர். தேசத்துரோக வழக்கின் நீதிமன்ற விசாரணையில் போலீசார் மீது தவறு இருந்தது தெரிய வந்தாலும் அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.   அரசியல் தலைவர்களுக்காக செயல்படும் சில காவல்துறையினர் மீது எந்த குற்றவியல் நடவடிக்கைகளும் பாய்ந்ததில்லை” என்று கூறும் சுரேஷ், உரிமைக்காகக் கேள்வி எழுப்புவது ஜனநாயகத்தின் முக்கியமான அம்சம். அப்படி கேள்வி கேட்டால் தேசத்துரோகி என முத்திரை குத்தி ஒடுக்கப்படுவது எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்.

Share the Article

Read in : English

Exit mobile version