Read in : English
பருவமழைக்கு முந்தைய காலத்தில் துணைக் கண்டத்திற்கு வருகை தரும் தொடர்ச்சியான கடுமையான வானிலை அமைப்புகளில் ஒன்றான அசானி சூறாவளி, கால நிலை மாற்றம் இந்தியாவின் மாநிலங்களுக்கு கடுமையான சவாலாக இருப்பதைக் காட்டுகிறது. அசானி ஒடிசாவில் மீண்டும் திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் உண்மையில் புதன்கிழமை அதிகாலை ஆந்திரப் பிரதேசம் – ஒடிசா கடற்கரையை நோக்கி நகர்ந்தது. சூறாவளிகள் ஆற்றல் மிக்க அமைப்புகளாக, கூடுதல் சக்தியோடு பல மாநிலங்களுக்கு உள்நாட்டில் பயணிக்கின்றன.
இந்தக் கோடையில், இந்தியத் துணைக்கண்டத்தின் உலகவரைபடங்கள் காட்டிய ஒரு பெரிய சிகப்புப் பட்டை பல இடங்களின் கோடை வெப்பநிலை 45 பாகை செல்சியஸைத் தாண்டியதைச் சொன்னது. அப்போது ஆசனி வங்கக் கடலிலிருந்து ஒரு வித்தியாசமான உச்சக்கட்டமாக வந்தது.
கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் புயல்களின் தாக்கத்திற்காளானது. இந்தக் கடலோரத் தீபகற்பம் பருவகாலத்தில், பருவகாலத்திற்கு முன்பு, பருவகாலத்திற்குப் பின்பு அடிக்கும் புயல்களின் தாண்டவத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. ஆம்பன் (மே, 2020), ஃபானி (ஏப்ரல் 25-மே 5, 2019) ஆகிய புயல்கள் அதிகச்சக்தி கொண்டவை.
இந்தியா என்னும் கடலோரத் தீபகற்பம் பருவகாலத்தில், பருவகாலத்திற்கு முன்பு, பருவகாலத்திற்குப் பின்பு அடிக்கும் புயல்களின் தாண்டவத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. ஆம்பன் (மே, 2020), ஃபானி (ஏப்ரல் 25-மே 5, 2019) ஆகிய புயல்கள் அதிகச்சக்தி கொண்டவை.
இன்னும் நிறைய வரும்
உலகம் முழுவதும் உயர்ந்துகொண்டே இருக்கிறது சராசரி வளிமண்டல வெப்பநிலை. அதன் தாக்கம் கடல் தளத்து வெப்பநிலையிலும் பதிகிறது. அதனால் புயல்களும் அதிகமாகும்; அவற்றின் அழுத்தமும் அதிகமாகும்; ஒரு வருடத்தில் புயலடிக்கும் நாட்களும் அதிகமாகும் என்று விஞ்ஞானம் கணிக்கிறது. மனிதனின் செயல்களின் விளைவாக பசுமைஇல்ல வாயுக்கள் வெளியாகி அதனால் உலகம் வெப்பமயமாகிக் கொண்டிருக்கிறது. அதன் தாக்கம் கடல்தளத்து வெப்பநிலையிலும் கடல் வெப்பத்திலும் உருவாகிறது.
ஆசனிப்புயல் அச்சுறுத்தலால் பல மாநிலங்களில் வழக்கமான செயற்பாடுகள் தடைப்பட்டன என்று செவ்வாய் அன்று ஏஎன்ஐ செய்தி சொன்னது. ஹைதராபாத், விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் செல்லவிருந்த பத்து விமானச்சேவைகள் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டன.
செவ்வாய் அன்று ஆசானிப்புயல் வடமேற்கு நோக்கி நிலையாக நகர்ந்து விஜயவாடா கடலில் பின்னோக்கி வளைந்து ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஒடிசா கடலோரப்பகுதிகள் வழியாக 45-50 ‘நாட்ஸ்’ வேகத்தில் பயணிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுத்துறை எதிர்பார்த்தது. வானிலை அமைப்பு பின்னோக்கி வளைய ஆரம்பித்தவுடன் அதன் வேகம் மட்டுப்படும். காற்றின் வேகமும் 25 நாட்ஸ்க்கு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின்பு அது மிகக் கடுமையானது என்ற பிரிவிலிருந்து இறங்கி வெறும் புயலாக மாறிவிடும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த கணிப்புகளை அசானி பொய்யாக்கியது.
கடல்தள வெப்பநிலைத் தொடர்பு
உயர்ந்த கடல்தள வெப்பநிலை 28-29 பாகையிலும் அதற்கும் மேலான பாகையிலும் இருந்தால், அரபிக்கடலிலும், வங்கக்கடலிலும் புயல் கருவாகிப் பரிணாமம் அடைந்து வளர்வதற்கான சூழல் உருவாகும் என்று இந்திய வெப்பமண்டல வானிலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள். நிஜத்தில் புயல்கள் தாக்கும்போது, அவை குளிரான உப்பு ஏரிகளைத் தூண்டிவிட்டு கடல்தளத்தைக் குளிராக்கிவிடுகின்றன.
2001-லிருந்து அரபிக்கடலில் உருவான புயல்கள் எண்ணிக்கை 52 சதவீதம் உயர்ந்திருக்கிறது; மிகக்கடுமையான புயல்கள் எண்ணிக்கை 150 சதவீதம் ஏறியிருக்கிறது
அரபிக்கடலிலும், வங்கக்கடலிலும் உருவான புயல்களைச் சாட்சியாக வைத்துப் பார்த்தால், அரபிக்கடல் ஆகப்பெரும் அழிவு அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருக்கிறது என்று வெப்பமண்டல வானிலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் எண்ணுகிறார்கள். இதுவரை அரபிக்கடலில் அடித்த புயல்களின் எண்ணிக்கையும், நாட்களின் எண்ணிக்கையும் இந்தச் சிந்தனைக்கு வலுசேர்க்கின்றன. 2001-லிருந்து அரபிக்கடலில் உருவான புயல்கள் எண்ணிக்கை 52 சதவீதம் உயர்ந்திருக்கிறது; மிகக்கடுமையான புயல்கள் எண்ணிக்கை 150 சதவீதம் ஏறியிருக்கிறது. இதற்கு மாறாக வங்கக்கடலில் உருவான புயல்களின் எண்ணிக்கை இந்தக் காலகட்டத்தில் 8 சதவீதம் சரிந்திருக்கிறது. இந்தப் புயல்களின் ஆழம் என்பது வேறு விசயம்.
ஃபானிப் புயல்பற்றிய ஆய்வு ஒன்று நேச்சர் பத்திரிக்கையில் வெளியானது. அந்த வானிலை நிகழ்வு கடுமையானது என்ற பிரிவிலிருந்து மிகமிகக் கடுமையானது என்ற பிரிவுக்கு படுவேகமாக முன்னேறியது என்றும், காற்றின் வேகம் 55-லிருந்து 90 நாட்ஸ்க்கு 24 மணி நேரத்தில் விரைந்தது என்றும் அந்த ஆய்வு சொல்லியிருப்பது சுவாரஸ்யமானது. வங்கக்கடலின் தள வெப்பநிலையும், கடல்நீர் வெப்பமும் பல தசாப்தங்களில் அதிகரித்துவிட்டன. என்றாலும் மற்ற வளிமண்டல நிலையில் பெரிதாக மாற்றங்கள் இல்லை.
“அரபிக்கடலில் புயலுருவாக்கம் மேற்கு நோக்கியே அதிகம் நிகழ்கிறது. ஏனெனில் ஒருகாலத்தில் குளிர்ச்சியாக இருந்த கடல்நீர் இப்போது வெதுவெதுப்பாகி விட்டது,” என்று வெப்பமண்டல வானிலைக் கழகத்தின் விஞ்ஞானியும், புயல்கள் பற்றி பல புத்தகங்கள் எழுதியவருமான பேராசிரியர் ரோக்ஸி மத்தேயூ கோல் இன்மதியிடம் பகிர்ந்துக் கொண்டார்.
பேராசியர் கோலும் அவரது சகப்பணியாளர்களும் கிளைமேட் டைனாமிக்ஸ் என்ற பத்திரிக்கையில் (2021), அரபிக் கடலில் கடந்த இரண்டு பத்தாண்டுகளில் அடித்த புயல்களின் மொத்த நாட்கள் எண்ணிக்கை 80 சதவீதம் உயர்ந்துவிட்டது என்றும், மிகக்கடுமையான புயல்களின் நாட்கள் எண்ணிக்கை 260 சதவீதம் ஏறியிருக்கிறது என்றும் எழுதியிருக்கின்றனர். ”இந்தப் புயல்களின் அதிகரிப்புக்கும், உயர்ந்துகொண்டே செல்லும் கடல் வெப்பநிலைக்கும், வெப்பமயமாகும் உலகத்தினால் உண்டான ஈரப்பத அதிகரிப்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.” என்றும் அவர்கள் எழுதியுள்ளனர்.
ஒக்கிப் புயல் அழிவுக்குப் பின்பு, வினீத் குமார் சிங், கோல், மற்றும் மேதா தேஷ்பாண்டே ஆகிய ஆராய்ச்சியாளர்கள் கரண்ட் சயன்ஸ் பத்திரிக்கையில், வானிலை அமைப்பு ஒன்பதுமணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்திலிருந்து புயலாக முன்னேறி, பின்பு 24 மணி நேரத்தில் மிகக்கடுமையான புயலாக உருமாறியது என்று எழுதினார்கள். அந்த மாதிரியான அதிசக்தி கொண்ட இயற்கை நிகழ்வைச் சாத்தியமாக்கியது ‘மேடன் ஜூலியன் ஆஸிலேஷன்’ (எம்ஜேஓ) என்ற இயற்கை நிகழ்வும், வெதுவெதுப்பான கடல் நிலையும்தான் என்று அவர்கள் எழுதினார்கள்.
கடற்கரை மாநகரங்களை அடிக்கடி நிகழவிருக்கும் புயல்களின் சவாலுக்குத் தக்கவாறு தகவமைக்க வேண்டும்; பசுமை இல்ல வாயுக்களின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும். தேசிய சுற்றுப்புறச் சூழல் கொள்கையின் அடிநாதமாக இந்த இரண்டு விசயங்களும் விளங்க வேண்டும்
இந்த எம்ஜேஓ, வெப்பமண்டல பருவகாலத்திற்குள் நிகழும் ஊசலாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு புயல் வானிலை வகை (அலை); 30-90 நாட்களுக்கு ஒருதடவை இது பூமத்திய ரேகையில் மேற்கிலிருந்து கிழக்கிற்கு பயணிக்கிறது,” என்று சொல்கிறது மக்கிரா ஹில்லின் ஆக்ஸஸ் சயன்ஸ் என்னும் விஞ்ஞானக் கலைக்களஞ்சியம். காற்றிலும் கடல்தள வெப்பநிலையிலும் ஏற்படும் மாற்றங்கள், மேகமூட்டம், வெப்பமண்டலத்தில் மழை ஆகியவற்றுக்குக் காரணம் இந்த எம்ஜேஓ-தான் என்று சொல்லப்படுகிறது. எம்ஜேஓவின் பலம் எல் நினோ நிகழ்வோடும் (பலகீன விளைவு), லா நினாவோடும் (பலமானது) தொடர்புடையது.
இந்த ஆண்டு தொடர்ந்த லா நினா விளைவுடன், எம்ஜேஓ பலமாகத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டது போலத் தெரிகிறது. உண்மையில் இந்தியப் பெருங்கடல் பகுதியை செவ்வாய் அன்று இரண்டு புயல்கள் தாக்கின: ஆசனி மற்றும் கரீம். வடக்கில் அடித்தது ஆசனி. தெற்கில் கரீம். ஆசனி ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஒடிசா கடலோரப்பகுதிகளுக்கு அருகே சுழன்றடித்தது. கரீம் 112 கிமீ/மணி வேகத்தில் இந்தியப் பெருங்கடலின் தெற்கில் வீசியது. இரண்டுக்கும் இடையே 2,800 கிலோமீட்டர் தூரம் இடைவெளி இருந்தது. இரண்டு புயல்களுக்கு இடையில் 1,000 கிமீ தூரம் இடைவெளி இருந்தால், அவை ஒன்றோடு ஒன்று ஊடுருவாது என்று வானிலை நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்த நூற்றாண்டில் இதுவரை அடித்த புயல் வகைகளின் அடிப்படையில் சிந்திக்கும் போது, அரபிக்கடலில் இனிவரும் ஆண்டுகளில் இன்னும் கடுமையான புயல்கள் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால் மேற்குக் கடற்கரையில் உள்ள முக்கிய மாநகரங்களும், மக்கள்தொகை பெருத்த பகுதிகளும் மிகுந்த உயிரிழப்புகளையும், பொருளாதார அழிவுகளையும் எதிர்கொள்ள வேண்டிவரும். சென்னை உட்பட கிழக்குக் கடற்கரை மாநகரங்களில் புயல்நிகழ்வு குறைந்தாலும் புயல்களின் கனத்தால், ஆழத்தால் அந்த மாநகரங்களுக்கு ஓர் அச்சுறுத்தல் இருக்கத்தான் செய்கிறது.
கடற்கரை மாநகரங்களை அடிக்கடி நிகழவிருக்கும் புயல்களின் சவாலுக்குத் தக்கவாறு தகவமைக்க வேண்டும்; பசுமை இல்ல வாயுக்களின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும். தேசிய சுற்றுப்புறச் சூழல் கொள்கையின் அடிநாதமாக இந்த இரண்டு விசயங்களும் விளங்க வேண்டும்.
Read in : English