Site icon இன்மதி

சென்னைப் பெருநகரிலும் பேருந்து வசதி இல்லாமல் புறக்கணிக்கப்பட்ட முக்கியப் பகுதி: எப்போது விடிவு கிடைக்கும்?

இடதுபுறத்தில் ரங்கராஜபுரம் மெயின் ரோடு உள்ளது, இது இப்போது தி நகர் நோக்கி இரு சக்கர வாகன போக்குவரத்துக்கு முக்கியமாக உதவுகிறது. வலதுபுறம் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை உள்ளது, இதன் வழியாக இரு சக்கர வாகனங்கள் ஓடுகின்றன.

Read in : English

சென்னையில் மேற்கு மாம்பலம், தி. நகர், அசோக் நகர், மற்றும் கோடம்பாக்கம் ஆகிய பகுதிகள் கூடுமிடத்தில் சுமார் ஐந்து சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்துக் கிடக்கும் ஒரு குடியிருப்புப்பகுதி ஏன் ஒரு பேருந்து வழித்தடமும் இல்லாமல் வெறிச்சென்று கிடக்கிறது? இது ரங்கராஜபுரம் என்ற பெரிய குடியிருப்புப் பகுதியின் கதை.

ஒரு காலத்தில் மாநகரப் பேருந்துக் கழகத்தின் இரண்டு வழித்தடங்களையும், பின்பு இரண்டு ‘சிறுபேருந்து’ வழித்தடங்களையும் கொண்டிருந்த ரங்கராஜபுரத்தில் இப்போது பேருந்துகள் ஓடுவதில்லை. இதனால் போக்குவரத்துக்காக அந்தப் பகுதி மக்கள் அதிகப் பணம் செலவழிக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.

ரங்கராஜபுரம், பேருந்து வசதி இல்லாத பகுதியாக இருந்து வருவதை திமுகவால் தடுக்கமுடியவில்லை. அதை மாற்றுவதற்கான வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது. இந்தப் பகுதி மக்கள் பேருந்து நிறுத்தத்துக்குச் செல்ல குறைந்தது 800 மீட்டர் தொலைவு நடக்க வேண்டும்.

இது திமுக கோட்டை நகர்ப்புறமயமாக்கல், பேருந்து இணைப்பு ஆகியவற்றில் பெரும் ஆர்வம் கொண்ட கட்சி என்று திமுகவுக்கு ஒரு பெயர் உண்டு. ஆனால் ரங்கராஜபுரம், பேருந்து வசதி இல்லாத பகுதியாக இருந்து வருவதை திமுகவால் தடுக்கமுடியவில்லை. அதை மாற்றுவதற்கான வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது.

இந்தப் பகுதி மக்கள் பேருந்து நிறுத்தத்துக்குச் செல்ல குறைந்தது 800 மீட்டர் தொலைவு நடக்க வேண்டும். அது மேற்கு மாம்பலத்தில் அல்லது சாமியார் மடத்தில் அல்லது கோடம்பாக்கம் ஆற்காடு சாலை லிபர்டி அருகே இருக்கும். இல்லை என்றால் தம்பையா ரெட்டி சாலையிலிருந்து ஒரு ஷேர் ஆட்டோவைப் பிடிக்க வேண்டும். இந்த நிலைக்கு முற்றிலும் மாறுபாடாக இருக்கின்றன, அ 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் மற்கு சைதாப்பேட்டை போன்ற பகுதிகளில்நிகழ்ந்த விஷயங்கள். பேருந்து வறட்சி கொண்ட மேற்கு சைதாப்பேட்டைக்கு முன்னாள் மேயரும் இந்நாள் அமைச்சருமான மா. சுப்பிரமணியம் புதிய பேருந்து வழித்தடங்களால் அந்தப் பகுதிக்கு புத்துணர்ச்சி கொடுத்திருக்கிறார். இதைப் பற்றிப் பின்னர் பேசுவோம்.

ஒருகாலத்தில் இன்னொரு முன்னாள் திமுக மேயரான மறைந்த சா. கணேசனின் சொந்த மண்ணாக இருந்த ரங்கராஜபுரம் வாடிவிட்டது; அதன் குடிமக்களும் வாடிப்போய்விட்டனர். அப்போது, அதாவது, 1990-களின் மத்தியில் வீடுகளின் கட்டுமானப் பணிகள் ஓங்கியிருந்தன என்பது ஒரு நகைமுரண். மாம்பலம், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையில் மேற்கு நோக்கிய திசையில் ரயில்வே பார்டர் சாலையிலிருந்து எல்லா பகுதிகளிலும் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் எழுந்தன. அஜீஸ் நகர், பராங்குசபுரம், விஸ்வநாதபுரம, கார்ப்பரேஷன் காலனி, நாகார்ஜுன நகர் மற்றும் யுனைடெட் இந்தியா காலனி ஆகிய பகுதிகள் வளர்ந்தன. குடிசைப் பகுதிகள் மீளுருவாக்கம் பெற்றன; அவற்றில் மிகவும் பிரதானமானது ‘அறுபது குடிசைகள்’ கொண்ட காலனி. மேலும் மாநகராட்சிப் பள்ளி உட்பட அங்கே மூன்று பெரிய பள்ளிகளும் இருந்தன.

பெருநகரச் சென்னை மாநகராட்சித் தேர்தலை ஒட்டி, மாவட்ட எல்லைகள் மீள்வடிவம் செய்யப்பட்டன. அப்போது ரங்கராஜபுரம் பழைய வார்டு எண் 134-லிருந்து மாறி 10வது மண்டலத்தில் 132வது வார்டுக்கு மாற்றப்பட்டது. பழைய வார்டு 134, இப்போது பெரும்பாலும் மேற்கு மாம்பலத்தில் இருக்கிறது. அந்த வார்டில் பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார். 132வது வார்டு திமுகவின் கார்த்திகா பாஸ்கரால் கைப்பற்றப்பட்டது.

1990-களில் மெட்ரோ வாட்டர் குழாய் பதிக்கும் பணிக்காகச் சாலையை மூடியவுடன், 11-டி பேருந்து (கே.கே.நகர்- பாரிமுனை) ரங்கராஜபுரம் பிரதான சாலையில் நிற்கும் வழக்கத்தை நிறுத்திக்கொண்டது. பின்பு அந்தத் தற்காலிகப் பேருந்து வசதியின்மை நிரந்தரமானது. பேருந்தே அந்த பகுதியில் ஓடுவதில்லை என்பதால் மக்கள் பெரும்பாலும் சொந்த கார் அல்லது இரு சக்கர வாகனம் அல்லது அதிகம் வசூலிக்கும் ஆட்டோ போன்றவறில்தான் பயணிக்கிறார்கள்.

இன்னொரு பேருந்து 12-சி ஒரு முனையில் இருக்கும் சாலிக்கிராமம்/வடபழனி கோயில்களை, கடைவீதிகளை மறுமுனையில் இருக்கும் மயிலாப்பூர்/பட்டினப்பாக்கம் பகுதிகளுக்கு சென்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பேருந்தின் சேவை அரைமணிக்கு ஒன்றாக குறைந்தது. அதிமுகவின் 2011-2021 ஆட்சியின் போது அதுவும் சுத்தமாக மறைந்துபோனது. தகவல் அறியும் சட்டத்தின்படி சமர்ப்பித்த மனுவிற்குப் பதில் அளித்த பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (எம்டிசி), 12-சி வழித்தடத்தில் வாரநாட்களில் ஐந்து சேவைகளும், வார இறுதி நாட்களில் மூன்று சேவைகளும் இயங்குவதாக இந்த எழுத்தாளரிடம் 2016ஆம் ஆண்டு அக்டோபரில் தெரிவித்தது.

பேருந்து வசதியின்மை என்பது செல்வாக்கே இல்லாத பயணிகள் வர்க்கத்தைச் சார்ந்த பெண்களை, மாணவர்களை, முதியோர்களை, சிறுவியாபாரிகளை மட்டும்தானே பாதிக்கும்.

அலுவலகம் செல்வோர்களுக்கான முழுச்சேவை பேருந்து வழித்தடமான எம்11-ஏ ரங்கராஜபுரத்தில் ஐந்து விளக்குப் பகுதியில் தொடங்கி பனகல் பார்க், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, சென்ட்ரல் வழியாக வள்ளலார் நகருக்குச் சென்றது. அது தி.நகரிலிருந்து புறப்பட்டு வந்த பிரபலமான 11ஏ சேவையின் விரிவுதான். அந்த எம்11ஏ வழித்தடத்தில் இன்னும் சிறந்த சேவையைத் தரும்படி ரங்கராஜபுர மக்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். தி இந்து நாளிதழும் அதைப் பற்றி செய்தி வெளியிட்டது. ஆனால் அந்த வழித்தடமும் இல்லாமல் போனது. கொஞ்சம் நஞ்சமிருந்த பேருந்துச் சேவைகளும் விரைவில் மாயமாய் மறைந்துபோயின.

பேருந்து வசதிகள் மறைந்துபோன பின்பு, அதிமுக அரசு எஸ்-30 வழித்தடத்தோடு சிறுபேருந்து ஒன்றினைப் பரிச்சயமான இரட்டை இலை இலச்சினையோடு’ அறிமுகம் செய்தது. அது மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலிலிருந்து அசோக் நகர் மெட்ரோ நிலையம் வரைக்கும் ஓடியது. ஆனால் அதுவும் மறைந்துபோனது. ஏனென்றால் கோடம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் போன்ற முக்கிய இடங்களை அது தொடவே இல்லை. பயணிகள் ஆதரவு இல்லை என்று எம்டிசி காரணம் கூறியது.

எஸ்-30 போனது; எஸ்-78 வந்தது. 2018ஆம் ஆண்டி-ன் முதல் காலாண்டில் அறிமுகமான எஸ்-78 வடபழனியிலிருந்து தியாகராயநகர் வரை பனகல் பூங்கா வழி ஓடி இடையில் ரங்கராஜபுரம் பிரதான சாலையையும் தொட்டது.

ஆனால் ஏற்கனவே நொந்துபோயிருந்த ரங்கராஜபுரவாசிகள் மிகவும் அவநம்பிக்கையோடு இருந்தார்கள். மேலும் எம்டிசி இந்த எஸ்-78 பேருந்து சேவை பற்றி அறிவிப்பேதும் செய்யவில்லை. அதனால் இதுவும் மாயமாய் மறைந்து போனது. பின்பு ஓராண்டு கழித்து கொரோனா பரவியதால், ஊரடங்கு வந்தது; அதனால், அப்போதைக்கு பேருந்து வசதி பற்றி கவலைப்பட வேண்டியது இல்லாமல் போனது.

2021இ-ல் நடந்த மாநிலச் சட்டசபைத் தேர்தல் போக்குவரத்து விஷயத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சொல்லப்போனால் பேருந்து வசதியின்மை என்பது செல்வாக்கே இல்லாத பயணிகள் வர்க்கத்தைச் சார்ந்த பெண்களை, மாணவர்களை, முதியோர்களை, சிறுவியாபாரிகளை மட்டும்தானே பாதிக்கும். குறிப்பாக 132, 134 வார்டுகளில் பேருந்து வசதியின்மை என்பது ஒரு பெரிய பிரச்சினையாகக் கருதப்படவில்லை.

இந்த எழுத்தாளர் கவுன்சிலர் கார்த்திகா பாஸ்கரிடம் இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசியபோது, ரங்கராஜபுரத்திற்குப் பேருந்து சேவைகள் வேண்டும் என்ற முறையீடுகள் தனக்கும் வந்திருப்பதாக அவர் சொன்னார். ஆனால் பிரச்சினை மெட்ரோ ரயில் நிலையக் கட்டுமான வேலைதான் என்று சொல்லப்பட்டது. “எல்லோரும் பேருந்து வசதி வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். மாணவர்கள், பெண்கள் என்று எல்லோருமே,” என்று சொல்லிய அவர், இந்தப் பிரச்சினையைத் தீர்க்கச் செயல்படுவதாக வாக்களித்தார்.

இதுவொரு முக்கிய பிரச்சினை; குறைந்த செலவில் போக்குவரத்து வசதி தேவைப்படும் அனைத்துத்தரப்பினரும் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்சினையை மேலிடத்திற்கு கொண்டுபோவதாக கவுன்சிலர் உமா ஆனந்தனும் கூறியிருக்கிறார். சட்டப்பேரவை உறுப்பினர் ஜே. கருணாநிதியும் தங்கள் கோரிக்கையை ஆதரித்துச் செயல்பட வேண்டுமென்று இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.

பஸ் போக்குவரத்து இல்லாமல் ரங்கராஜபுரம் இருப்பதை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஸ் போக்குவரத்து இல்லாமல் ரங்கராஜபுரம் இருப்பதை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரங்கராஜபுரம் பிரதான சாலையைத் தொட்டு செல்லும் சிறுபேருந்து வழித்தடத்திற்கான சாத்தியங்கள் நிறைய உண்டு.

அவற்றில் இரண்டை மட்டும் இங்கே தருகிறேன்:

அசோக்நகர் மெட்ரோ ரயில் நிலையம் முதல் மேற்கு மாம்பலம், ரங்கராஜபுரம் வழியாக, பனகல் பூங்கா வரையிலான வழித்தடத்தில் சிறுபேருந்துகளை இயக்கலாம். இதில் மேற்கு மாம்பலம், ரங்கராஜபுரம் பிரதான சாலை, கோடம்பாக்கம் ரயில் நிலையம், லிபர்டி, மகாலிங்கபுரம மேம்பாலம், உஸ்மான் சாலை, மற்றும் இறுதியில் பனகல் பூங்கா ஆகியவை பகுதிகள் வரும்.

மேற்கு சைதாப்பேட்டை முதல் லிபர்டி தியேட்டர் முனை வரை சிறுபேருந்துகளை இயக்கலாம். ஜெயராஜ் தியேட்டரில் தொடங்கி கோடம்பாக்கம் சாலை, மேட்டுப்பாளையம், அசோக் நகர் ஏழாவது நிழற்சாலை, ஆர்யகவுடா சாலை, உமாபதி தெரு, ஃபைவ் லைட்ஸ், ரங்கராஜபுரம் பிரதான சாலை, அம்பேத்கர் சாலை ஆகிய இடங்கள் வழியாகச் சென்று இறுதியில் ஆற்காடு சாலையிலுள்ள லிபர்டியை அடையலாம்.

இந்த இரண்டு ஆலோசனைகளிலும் ரங்கராஜபுரத்திலுள்ள குறைவான பயன்பாட்டு மேம்பாலம் இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக பயணிகள் அதிகமிருக்கும் முனையங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ரங்கராஜபுரத்தில் வீடுதோறும் சென்று ஆய்வு நடத்தினால் மேலும் பல வழித்தடங்களை மக்கள் சொல்லக்கூடும்.

சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்ரமணியம் 18-கே பேருந்துச் சேவையை சிறுபேருந்துச் சேவையாக விரிவாக்கம் செய்து (எஸ்18கே) மேற்கு சைதாப்பேட்டையின் கடைக்கோடி பகுதிகளான விநாயகபுரம், பார்ஸன் நகர் ஆகிய பகுதிகளுக்குக் குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துவசதி கிடைக்கச் செய்திருக்கிறார். மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய அண்டை மாவட்டங்களுக்குக் குறிப்பிட்ட நேரங்களில் மேற்கு சைதாப்பேட்டையிலிருந்து பேருந்துகள் இயங்குகின்றன.

பேருந்து ஓடிக்கொண்டிருக்கும் பகுதி, வந்து சேரும் நேரம் போன்ற தகவல்களைப் பயணிகளுக்கு வழங்கும் ‘நிஜ நேரத்து பயணியர் தகவல்’ என்னும் அமைப்பு இன்னும் அமலுக்கு வரவில்லை. போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் செய்ய வேண்டிய பணி அது. பெங்களூரில் அந்த அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாகியும் இன்னும் சென்னையில் ‘வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது’ என்ற நிலைதான்.

இரண்டு தசாப்தங்களின் இதுவரை இருந்த புறக்கணிப்பை ஒழித்துவிட்டு, ரங்கராஜபுரத்தை தாமதமின்றி மீண்டும் எம்டிசி போக்குவரத்து வரைபடத்திற்குள் திமுக அரசு கொண்டுவருமா என்பதுதான் கேள்வி. பெண்களுக்கு இலவச பயண வசதியைத் தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினால், பணிக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவும் வகையில், போக்குவரத்து வசதியை மேம்படுத்த முடியும்.

Share the Article

Read in : English

Exit mobile version