Read in : English
ட்ரோன்களை உற்பத்தி செய்யும் தொடக்கநிலை நிறுவனங்களை (ஸ்டார்ட்-அப்ஸ்) ஆதரிக்கும் நோக்குடன் ட்ரோன் சக்தி திட்டம் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் ட்ரோன் கொள்கை உருவாக்கப்பட்டது. ’மின்னணு ஆகாயம்’ என்னும் பெயர் கொண்ட திட்டம், வணிக, ராணுவ, மற்றும் ட்ரோன் விமானங்கள் பறப்பதற்கும், அனுமதி கொடுப்பதற்கும் உள்ள விதிமுறைகளை முறைப்படுத்தி ஒருங்கிணைக்கும் வகையில் ஒரு மின்னணு வெளியை உருவாக்க விழைகிறது.
தமிழ்நாட்டிற்கென்று ஆளில்லா ஆகாய வாகன நிறுவனம் இருக்கிறது. சட்டவிரோதமான மணல் கொள்ளையைத் தடுப்பதற்கும், கல் குவாரிகளைக் கண்காணிக்கவும் ட்ரோன்களை உற்பத்தி செய்வதும் அதன் அடிப்படை நோக்கம். ட்ரோன்களை உற்பத்தி செய்வதற்கும், பரிசோதிக்கவும் ட்ரோன் மையத்தை உருவாக்குவதற்கும் அரசு சமீபத்தில் இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இனிவரும் காலங்களில் ட்ரோன் பயன்பாடு அதிகரிக்கும். ட்ரோன் வடிவமைப்பிலும், உற்பத்தியிலும் மட்டுமல்ல ஆளில்லா இந்த ஆகாய ஊர்திகளை இயக்கவும் தொழில்நுட்பத் திறன் கொண்ட ஆட்கள் தேவை. அப்போது பலருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். விமான பைலட்டும், ட்ரோன்களை இயக்குபவருமான கேப்டன் ராபின் சிங்கிடம் இன்மதி நிகழ்த்திய உரையாடல்:
தொழில்முறை பயன்பாடுகளுக்கு ட்ரோன்கள் ஓட்ட சான்றிதழ் பெற்ற தகுதியான விமான ஓட்டிகள் வேண்டும். பைலட்கள் மட்டும்தான் ட்ரோன்களை இயங்க முடியும் என்பதல்ல; மற்றவர்களும் சான்றிதழ் பெற்று மற்றவர்களும் ட்ரோன்களை இயக்கலாம். ட்ரோன் ஓட்டிகளாக முடியும்.
கேள்வி: யாரெல்லாம் ட்ரோன்களை இயக்க முடியும்?
கேப்டன் ராபின் சிங்: ஒரு குழந்தைகூட ட்ரோன் பொம்மையை இயக்க முடியும். ட்ரோன் என்பது ரிமோட்டில் இயக்கப்படும் கார் போலத்தான். ஒரே ஒரு வித்தியாசம் இதுதான்: எக்ஸ்-ஒய் ஆக்ஸிஸ்க்குக் கூடுதலாக இஜட் ஆக்ஸிஸ் இருக்கிறது; இதன் வழி ட்ரோன் இயங்குகிறது.
ஆனால் தொழில்முறை பயன்பாடுகளுக்கு ட்ரோன்கள் ஓட்ட சான்றிதழ் பெற்ற தகுதியான விமான ஓட்டிகள் வேண்டும். பைலட்கள் மட்டும்தான் ட்ரோன்களை இயங்க முடியும் என்பதல்ல; மற்றவர்களும் சான்றிதழ் பெற்று மற்றவர்களும் ட்ரோன்களை இயக்கலாம். ட்ரோன் ஓட்டிகளாக முடியும்.
ஆனால் ஒரு பைலட்டுக்கு சில தகுதிகள் உண்டு. கருவிகள் மூலமும் தன் உணர்வுகள் மூலமும் விமானத்தை ஒரு பைலட் இயக்குகிறார். விமானத்தின் செயல்பாடுகளை அறிவதன் மூலமும் தொழில்நுட்ப அறிவும் கடும் பயிற்சியும், விமானச் சூழல் குறித்த அனுபவமும் அவருக்குத் தகுந்த உணர்வைத் தருகின்றன. கருவிகளை நன்றாகப் புரிந்துகொண்டு செயல்பட ஒரு பைலட்டால்தான் முடியும். விமானத்தில் இருந்து இயக்கிய அனுபவத்தினால், ஒரு கேமிரா முன்னர் இருந்து கொண்டு தொலைவில் இருந்தே ட்ரோனை திறன்பட அவரால் இயக்கமுடியும். ஒரு விமானத்தில் பயணம் செய்யும்போது அவரது உயிருக்கும் மற்றவர்களின் உயிர்களுக்கும் அவர்தான் பொறுப்பு. எனவே, ஆபத்து அதிகம். ஒரு ட்ரோன் விபத்தைச் சந்தித்தால் ட்ரோன் மட்டும்தான் சேதமாகும். ஆனால் விமான விபத்து அப்படியல்ல.
கேள்வி: தொழில்முறையான ட்ரோன்களை இயக்குவதில் எதெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறது?
கேப்டன் ராபின் சிங்: ட்ரோன்களை இயக்குவதை பைலட்கள் மேலும் சிறப்பாகச் செய்ய முடியும். அவர்களுக்குக் கூடுதலான புரிதலும் கட்டுப்படுத்தும் திறனும் மேலும் கூடுதல் கவனத்துடன் செயல்படும் திறனும் எச்சரிக்கை உணர்வும் இருக்கின்றன. அத்துடன் அவருக்குப் பயிற்சியும் அனுபவமும் இருக்கிறது. எனவே, விமான பைலட்டுகள் நல்ல ட்ரோன் ஓட்டிகளாக இருக்க முடியும். ட்ரோன்கள் மிகவும் விலை உயர்ந்தவை; அதனால் விபத்தில் ட்ரோன்கள் அழிவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ட்ரோன், காணும் பொருட்களை எல்லாம் ஒரு பறவை போல் பார்க்கிறது. காட்டிற்குள் பாதையைக் கண்ணுறுவதற்கு ட்ரோனைப் பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, உயரழுத்த கேபிள்கள் தரையில் பதிப்பதற்கு அது பயன்படும். வரைபடத்தில் குறைபாடுகள் உண்டு. ட்ரோன்தான் முழுமையான நிஜ சித்திரங்களைக் கொடுக்கும். ட்ரோன்கள் ஒரு கட்டடத்திற்குள் நுழைந்து அது எப்படி உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதைப் படம்பிடித்துக் காட்டும். ட்ரோன்களை சிறப்பாக இயக்கி நுட்பமாகப் படம் பிடிக்க பைலட்களால் முடியும். ட்ரோன் விரைவாகப் படம்பிடித்துக் காட்டும் காட்சிகளின் நுட்பங்களை ஒரு விமான ஓட்டியால்தான் உள்வாங்கிக் கொள்ள முடியும். ஏனென்றால் அவர்களுக்கு ஒரு விசேஷமான உள்ளுணர்வு உண்டு.
கேள்வி: ட்ரோன் ஓட்டிகளுக்குச் சான்றிதழ் கொடுக்கும் முன்பு எந்தவிதமான பயிற்சிகள் கொடுக்கப்படும்?
கேப்டன் ராபின் சிங்: உயர்வான தொழில்முறை நேர்த்திதான் முதல் தேவை. தொழில்முறை நோக்கத்தை பாதுகாப்பாகச் சாதிப்பதற்கு எப்படி ட்ரோனைக் கட்டுப்படுத்துவது என்று தெரியவேண்டும். ட்ரோனுக்குச் சாதகமான சுற்றுச்சூழலை உருவாக்கி அதை விமானத் துறையோடு ஒன்றிணைக்க சமீபத்தில் நிறைய கொள்கை மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. டைரக்டரேட் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியேஷன்தான் இந்தியாவில் எல்லாவிதமான ஆகாய மார்க்க வாகனங்களையும் கட்டுப்படுத்தும்.
விமானம் இயக்குவதின் முக்கிய அம்சம், சிவில் விமானத்துறை ஒழுங்குமுறை விதிகளின் கட்டமைப்புதான். அதை தொழில்துறை ‘கார்ஸ்’ ((சிவில் ஏவியேஷன் ரெகுலேஷன்ஸ்) என அழைக்கிறது. விமானத்திற்கு, விமான நிலையத்திற்கு, ஊழியர் பயிற்சிக்கு, சான்றிதழ் வழங்குவதற்கு, விமானத்தின் பறக்கும் தகுதிக்கு, சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பிற்கு, சரக்குப் போக்குவரத்து என்று நிறைய விஷயங்களுக்கு இந்தக் ’கார்ஸ்’தான் விதிகளை வகுத்திருக்கிறது. ட்ரோன் செயல்பாடுகளுக்கும் விதிமுறைகளை அரசு உருவாக்கியிருக்கிறது. ட்ரோன் ஓட்டிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
ராணுவத் தளங்கள் அல்லது விமான நிலையங்கள் போன்ற இடங்கள் ட்ரோன்கள் பறக்கக்கூடாத மண்டலங்களாகும்.
கேள்வி: ட்ரோன்களை ஓட்டுவதற்கு என்ன மாதிரி அனுமதிகள் தேவைப்படலாம்?
கேப்டன் ராபின் சிங்: 200 அடி உயரம் வரைக்கும் ட்ரோன்கள் பறக்கலாம். அனுமதி தேவையில்லை. அதைப்போல, அனுமதி கேட்கும் ட்ரோன்கள் எவ்வளவு எடை கொண்டிருக்க வேண்டும் என்பதில் சில வரைமுறைகள் உண்டு.
200 அடிக்கும் மேலான உயரத்தில் 25 கிலோ எடைகொண்டு இயங்கும் ட்ரோனுக்கு அனுமதி தேவை. பைலட் நேரில் வந்து ஓட்டும் வணிக விமானத்திற்கு எஃப்ஐசி / ஏடிசி சான்றிதழ்கள் தேவை; குறிப்பிட்ட விமானப் பயணத் திட்டத்துக்கு அனுமதி கொடுக்கலாம். பாதுகாப்புத் துறை வழங்கும் சான்றிதழும் தேவை. அது விமானப் போக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது; பாதுகாப்பு சரியென தரும் அனுமதி அது. அதைப்போல ட்ரோன்களுக்கும் அனுமதிகள் தேவைப்படும்.
ராணுவத் தளங்கள், விமான நிலையங்கள், கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் போன்ற இடங்கள் ட்ரோன்கள் பறக்கக்கூடாத சிவப்பு மண்டலங்களாகும்; அதைப்போல பச்சை மண்டலங்கள் என்றழைக்கப்படும் இடங்களில் ட்ரோன்கள் 800 அல்லது 1000 அடி உயரத்தில் பறப்பதற்கு அனுமதிக்கப்படலாம். மஞ்சள் மண்டலங்களில் குறிப்பிட்ட சில விதிமுறைகளுக்கு உட்பட்டு பறக்க அனுமதி அளிக்க்கப்படும்.
கேள்வி: பயிற்சி நிலையங்களில் என்ன இருக்கும்?
கேப்டன் ராபின் சிங்: ட்ரோன் பயிற்சி நிறுவனம் என்பது தரையிலிருந்து ட்ரோனை இயக்குவதற்கான பயிற்சி அளிக்கும் அமைப்பு. அங்கு பிளைட் சிமுலேட்டர் இருக்கும். ட்ரோன் பறப்பதற்கு ஒரு பகுதி நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அப்புறம் அசல் ட்ரோனும் இருக்கும். இந்தப் பயிற்சி நிறுவனம் செயல்படுவதற்கு அரசு முகமை, ஒப்புதல் அளிக்கும்.
Read in : English