Read in : English
நிதிப்பற்றாக்குறை இருந்தாலும், இந்த ஆண்டு தமிழ்நாடு பட்ஜெட்டில், லண்டனின் கியூ கார்டன்ஸுடன் ஒத்துழைப்புடன் சென்னைக்கு அருகே ரூ.300 கோடி மதிப்பில் ஒரு தாவரவியல் பூங்கா உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கிண்டி குழந்தைகள் பூங்காவை ஒரு விழிப்புணர்வு மையமாக மீளுருவாக்கம் செய்ய ரூ.20 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமர்ப்பித்த இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில், தென்படும் காடுகள் மீதான அன்புதான் பின்வரும் கேள்வியைக் கேட்கத் தூண்டுகிறது: பாதுகாக்கப்பட்ட காடுகளிலும் இயற்கைக் காப்பகங்களிலும் மட்டுமல்லாது, மக்கள் தொகை மிகுந்த மாநகரங்களிலும் நகரங்களிலும் இருக்கும் இயற்கை வளங்களை மேம்படுத்த தமிழ்நாடு இன்னும் என்ன செய்யப் போகிறது?
தமிழ்நாடு இயற்கைவளம் கொண்ட ஒரு பிரதேசம். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வசிக்கும் வண்ணத்துப் பூச்சிகள் பற்றி வைத்தியநாதன் கண்ணனும், எஸ். சந்திரசேகரனும் சமீபத்தில் எழுதி வெளியிட்ட ஓர் ஆய்வு, பயனுள்ள இந்தப் பூச்சிகளின் வரத்தை ஊக்குவிக்க அவற்றின் வசிப்பிடத்தையும், தாவரப் பூக்களையும், மகரந்த மூலங்களையும் பேணிக்காக்க, விழிப்புணர்வை உண்டாக்க நிறைய சாத்தியங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது.
பூவில் (க்ளோரியோசா), கனியில் (ஜாக்), பறவையில் (மரகதப்புறா), விலங்கில் (தார்) இனம்பிரிப்பது போல, வண்ணத்துப்பூச்சியிலும் வகைகள் பிரிக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளன. ’தமிழ் யோமன்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிற மலைச்சிறகன் எனும் தமிழ் மறவன் என்கிற வண்ணத்துப் பூச்சியை தமிழ்நாட்டின் சின்னமாக தமிழக அரசு தேர்ந்தெடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் வலசை செய்யும் குறிப்பிட்ட சில வகை வண்ணத்துப்பூச்சிகளின் புகலிடமாகத் திகழ்கிறது.
தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் வலசை செய்யும் குறிப்பிட்ட சில வகை வண்ணத்துப்பூச்சிகளின் புகலிடமாகத் திகழ்கிறது. தென்மேற்குப் பருவகாலத்திற்கு முன்பு அந்த வண்ணத்துப் பூச்சிகள் கிழக்கு நோக்கிப் புலம்பெயர்ந்து மீண்டும் வடகிழக்குப் பருவகாலத்தில் வந்துவிடுகின்றன. பருவநிலை வழக்கம்போல இப்போதும் இருந்தால், 2022-ஆம் ஆண்டின் சீசன் நெருங்கிவரும் வாய்ப்பு அதிகம்.
கொரோனா பெருந்தொற்றுக்காளான கடந்த இரண்டு ஆண்டுங்களைவிட இந்த ஆண்டு வண்ணத்துப்பூச்சி வாழ்விடங்களுக்கு இயற்கை ஆர்வலர்கள் பயணிக்கலாம். மாநிலத்தில் இருக்கும் 32 உள்ளூர் வகைகள் உட்பட 324 வகை வண்ணத்துப்பூச்சிகளில் பெரும்பாலானவற்றை அவர்கள் காணமுடியும். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தைப் பற்றிய ஆய்வில் 168 வகை வண்ணத்துப் பூச்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆக்டா சயன்டிஃபிக் வெட்ரினரி சயன்ஸஸ் என்ற இதழில் இந்த ஆய்வு ஆண்டு ஆரம்பத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில்கூட, கிண்டி தேசிய பூங்கா உள்பட பல வண்ணத்துப்பூச்சி வாழ்விடங்கள் இருக்கின்றன. சென்னைக்குத் தெற்கே நன்மங்கலம் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் தாவரங்கள் பற்றி செய்யப்பட்ட கடந்த கால ஆய்வு ஒன்று 40 வகையான வண்ணத்துப்பூச்சிகளையும், 79 பறவைகளையும், ஆறு வகை ஊர்வன வகைகளையும், ஐந்து வகை நீர்-நில விலங்குகளையும், ஐந்து வகை பாலூட்டிகளையும் பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் வண்ணத்துப்பூச்சிகள் குறித்து மாணவர்கள் உள்ளிட்டவர்களிடம் விழிப்புணர்ச்சியூட்டுவதற்காக சமூக ஊடகங்களில் இயற்கை ஆர்வலர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். (முகநூலில் ‘ஆக்ட் ஃபார் பட்டர்ஃப்ளைய்ஸ் என்ற நிகழ்வு இருக்கிறது). மேலும், இதற்காகப் பயணங்களும், கல்வி நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன.
தற்போது ஏராளமானோர் தோட்டம் வளர்ப்பதைப் பொழுதுபோக்காகச் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். தோட்டங்களில் உள்ள மலர்களைத் தேடி வரும் வண்ணத்துப் பூச்சிகளை பார்க்கவும் படங்கள் எடுக்கவும் செய்கிறார்கள் என்று வைத்தியநாதன் கண்ணனும், அவரது சகாவும் சொல்கிறார்கள்.
செம்மொழிப் பூங்கா போன்ற பாதுகாக்கப்பட்ட இடங்கள் வண்ணத்துப் பூச்சிகளை ஈர்க்கும் இடங்கள் என்று அறிக்கைகள் சொல்கின்றன. நகர்ப்புறங்களில் பாழ்நிலங்கள் என்று கைவிடப்பட்ட இடங்களை மீட்டெடுத்து அவற்றை வண்ணத்துப்பூச்சிப் பூங்காக்களாக மீளுருவாக்கம் செய்வது மிகச்சிறந்த வழி.
அடையாறு நதியின் முகத்துவாரத்தில் பல்லுயிர் பெருக்கப் பகுதியை மீட்டெடுத்தால், வண்ணத்துப்பூச்சிகளுக்கு உகந்த சுற்றுச்சூழலை உருவாக்கக்கூடிய சாத்தியங்கள் உண்டு. செம்மொழிப் பூங்கா போன்ற பாதுகாக்கப்பட்ட இடங்கள் வண்ணத்துப் பூச்சிகளை ஈர்க்கும் இடங்கள் என்று அறிக்கைகள் சொல்கின்றன. மாநகரத்தில் சில இடங்களை வண்ணத்துப்பூச்சிகளை ஈர்க்கக்கூடிய உறைவிடங்களாக வடிவமைக்க வேண்டும்.
நகர்ப்புறங்களில் பாழ்நிலங்கள் என்று கைவிடப்பட்ட இடங்களை மீட்டெடுத்து அவற்றை வண்ணத்துப்பூச்சிப் பூங்காக்களாக மீளுருவாக்கம் செய்வது மிகச்சிறந்த வழி. வண்ணத்துப்பூச்சிகளின் தேவைகளை நிலஅமைப்பு அம்சங்களோடு பொருத்தமாக இணைப்பதிலும், வண்ணத்துப் பூச்சிகளுக்கு உகந்த தாவரங்களையும், தேர்ந்தெடுப்பதிலும்தான் இதன் ரகசியம் இருக்கிறது.
ஒரு நகர்ப்புற வண்ணத்துப்பூச்சித் தோட்டம் பற்றிய கையேடு ஒன்றை ஆர்வலர்களுக்குக் கிடைக்கச் செய்தால், அவர்கள் சரியான தாவரவியல் வளங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். இதற்கான ஓர் உதாரணம் மேற்குத்தொடர்ச்சி மலையில் வாழும் வண்ணத்துப்பூச்சி இனங்களைப் பற்றியும், தொடர்புள்ள தாவரங்கள் பற்றியும் ஆர். நித்தினும், அவரது சகாக்களும் ஜர்னல் ஆஃப் தெரடெண்டு டாக்ஸா என்ற இதழில் கொடுத்திருக்கும் பட்டியலைச் சுட்டிக்காட்டலாம்.
வண்ணங்களோடும் வனப்போடும் பூக்கள்தோறும் தாவித்தாவிப் பயணிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் சுற்றுப்புறசூழலின் நலிவை குறிப்பாக உணர்த்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. “பருவநிலை மாற்றங்கள், காடுகளின் சீரழிவு, மனித தொல்லைகள், சுற்றுப்புறசூழல் அழிவு ஆகியவற்றை அளவிடுவதற்கு வண்ணத்துப்பூச்சிகள் மறைமுகமான குறியீடுகளாகச் செயல்படுகின்றன. சுற்றுப்புறசூழல் வேறுபாடுகள், வசிப்பிடக் கட்டமைப்பின் மாற்றங்கள் வண்ணத்துப்பூச்சிகளைப் பாதிக்கின்றன; ஏனென்றால் அவை மிகவும் கூரிய உணர்வு கொண்டவை,” என்று கண்ணனும், சகபணியாளர்களும் எழுதியிருக்கிறார்கள்.
காடு மீதான காதலுணர்வுக்கு ஆட்பட்டு, சிறகு முளைத்த சிறப்பழகுகளான வண்ணத்துப்பூச்சிகளுக்கு தங்கள் தோட்டங்களைத் தாரைவார்த்து கொடுப்பதின்மூலம், மாநகரவாசிகள் வண்ணத்துப்பூச்சிகளுக்கு திறந்தவெளியை மேலும் விரிவாக்கி சீரழிந்த வசிப்பிடங்களைச் சீர்படுத்தலாம். சகதியைக் குழைப்பதால் வண்ணத்துப்பூச்சிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக் கனிமங்கள் கிடைக்கின்றன; அதற்கு ஈரமண் அவசியம்.
வண்ணத்துப்பூச்சிகளை இனங்காணுவதைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் கொண்டவர்களுக்கு கிருஷ்ணமேக் குண்டே எழுதிய ஒரு புத்தகம் இருக்கிறது. உறைவிடம், சுற்றுப்புறவியல், உயிரியல் ஆகிய கோணங்களில் “தீபகற்ப இந்தியாவின் வண்ணத்துப்பூச்சிகள்” பற்றி அந்தப் புத்தகத்தில் அவர் எழுதியிருக்கிறார். விட்டில் பூச்சிக்கும் வண்ணத்துப்பூச்சிக்கும் இடையில் இருக்கும் வித்தியாசமான அம்சங்களை அவர் எடுத்துரைக்கிறார். ஜார்ஜ் மத்தேயூ (கேரளா காடு ஆராய்ச்சிக் கழகம்) எழுதிய “வண்ணத்துப்பூச்சித் தோட்டக்கலை” என்ற புத்தகம் சொல்வது இது: “வண்ணத்துப்பூச்சிகளை வரவேற்கும் தோட்டத்து தாவரங்களை அடையாளம் காணுங்கள்.”
பரப்பரப்பான மாநகரத்தில் பெரும்பாலான மக்கள் நின்று நிதானித்து சென்னையில் காணப்படும் ஒருசில வண்ணத்துப்பூச்சி வகைகளைப் பார்க்க மாட்டார்கள். டானி கோஸ்டர்கள், லைம் ஸ்வாலோடெயில்கள், பிளெயின் டைகர் அல்லது காமன் க்ரோ வண்ணத்துப்பூச்சி ஆகியவை அந்த வகைகளில் சில. நகர்ப்புறத் தோட்டங்களுக்கும், பூங்காக்களுக்கும் செல்பவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள திறந்தவெளிப் பகுதிகளை வண்ணத்துப்பூச்சிகளுக்கான விருந்தோம்பும் வாழ்விடங்களாக மாற்றி மாநகரத்திற்கு வண்ணமும், வனப்பும் ஊட்டலாம். இதற்குத் தேவை பணமல்ல, இயற்கை மீதான அன்பு மட்டுமே!
Read in : English