Site icon இன்மதி

குறைந்த விலையில் உணவு: நடுத்தர வர்க்க மக்களுக்கும் அமுதசுரபி அம்மா உணவகம்!

At Rs 1 idly, Rs 5 sambar rice and Rs 3 for two chapattis, the Amma Canteen can provide three meals at Rs 15 a day. And that makes a difference to Chandramohan, a salesperson at a firm, who has been eating at Amma Canteen for nearly eight years.

Read in : English

தமிழ்நாட்டில் 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அம்மா உணவகம் ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமின்றி நடுத்தர மக்களும் சாப்பிடும் இடமாக இருக்கிறது. ஒரு ரூபாய்க்கு இட்லி, ஐந்து ரூபாய்க்கு சாம்பார் சாதம், மூன்று ரூபாய்க்கு இரண்டு சப்பாத்தி என அம்மா உணவகத்தில் குறைந்த விலைக்கு உணவுகள் வழங்குவதால். ஒரு நாளில் மூன்று வேளையும் சாப்பிட ரூ.15 போதும்.

கடந்த 8 ஆண்டுகளாக அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வரும் தனியார் நிறுவனத்தில் சேல்ஸ் மேனாக வேலை பார்க்கும் சந்திரமோகன் கூறுகிறார்.

”மனைவி காலமாகி விட்டார். மகன்களுக்கு திருமணமாகி வசதியாக வாழ்கின்றனர். கடைசி காலத்திலும் உழைத்து வாழ விரும்புகிறேன். அதனால் சேல்ஸ்மேன் வேலை பார்க்கிறேன். நான் வெளியே ஒரு வேலை உணவு சாப்பிட வேண்டும் என்றால் ரூ.100 செலவழிக்க வேண்டும். ஆனால், அம்மா உணவகத்தில் ரூ.5க்கு ஒரு வேளை உணவை சாப்பிட்டு விடலாம். தரமணியில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்போர் வந்து அம்மா உணவகத்தில் எங்களுடன் சாப்பிடுவார்கள். ஓ.எம்.ஆர்., தரமணி, ரெட் ஹில்ஸ், மிண்ட், தண்டையார் பேட்டை பகுதிகளில் உள்ள அம்மா உணவகத்தில் சாப்பிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளேன். தண்டையார் பேட்டையில் உள்ள உணவகத்தில் மதிய சாப்பாடு நன்றாக இருக்கும். தரமணியில் உள்ள உணவகத்தில் இரவு சப்பாத்தியும், அதற்கு தரும் தாலும் நன்றாக இருக்கும். ஒவ்வொருவரின் கைப்பக்குவத்திற்கு ஏற்றவாறு உணவின் சுவையில் கொஞ்சம் மாற்றம் தெரியும். அதற்காக எப்பொழுதும் எனது பையில் ஊறுகாய் பாக்கெட்டுகளை வாங்கி வைத்திருப்பேன். சுவை குறைவாக இருந்தால் ஊறுகாயை வைத்து சமாளித்துக்கொள்வேன். ஒரு இட்லி ஒரு ரூபாய். காலையில் ஐந்து ரூபாய்க்கு ஐந்து இட்லி, மதியம் 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம் அல்லது தக்காளி சாதம், இரவு 3 ரூபாய் 2 சப்பாத்தி சாப்பிடலாம். நாளொன்றுக்கு 3 வேலையும் சாப்பிட குறைந்தபட்சம் ரூ.15 செலவாகும். இதே வெளியே சாப்பிட்டால் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ரூ.200 இல்லாமல் சாப்பிட முடியாது. அம்மா உணவகத்தில் ரூ.450க்குள் குறைந்த பட்ஜெட்டில் ஒரு மாதத்திற்கான உணவை சாப்பிடலாம். குறைந்த விலை என்பதால் உணவின் தரத்தில் குறை இருப்பதில்லை. வெளியே இருக்கும் ஹோட்டல்களில் சாப்பிடுவதை காட்டிலும் அம்மா உணவகத்தில் உணவு சுகாதாரமாகவும், சுத்தமாகவும் தரப்படுகிறது. இது பலருக்கு புரிவதில்லை. ஹோட்டல்களில் இந்த சுத்தம் இருக்குமா என்பது சந்தேகம் தான். 8 ஆண்டுகளாக அம்மா உணவகத்தில் மாதம் ரூ.450 பட்ஜெட்டில் எனது உணவுத்தேவை பூர்த்தியாகி விடுகிறது” என்கிறார் சந்திரமோகன்.

அம்மா உணவகத்தில் குறைந்த விலைக்கு உணவுகள் வழங்குவதால். ஒரு நாளில் மூன்று வேளையும் சாப்பிட ரூ.15 போதும்.

தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வரும் ஜெய் ஆகாஷ் என்ற இளைஞர் 6 மாதங்களாக அம்மா உணவகங்களில் சாப்பிட்டு வருகிறார். எஸ்.ஆர்.பி. டூல்ஸ், தரமணி, சென்னை ஒன் போன்ற பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். திருவண்ணாமலையை சேர்ந்த இவர் மத்திய கைலாஷ் பகுதியில் தங்கியுள்ளார். மாதம் ரூ.38,000 சம்பாதித்தாலும் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வருகிறார். பேச்சலராக இருக்கும் தனக்கு ஹோட்டல் உணவுகள் சாப்பிடுவது அலுத்து விட்டதாலும் இரவு நேரத்தில் சப்பாத்தி கிடைப்பதாலும், குறைந்த விலைக்கு தரமான உணவு கிடைப்பதாலும் அம்மா உணவகத்தை நாடி வருவதாகக் கூறுகிறார் அவர்.

கட்டட வேலை செய்யும் இருவர், காசு குறைவு என்பதால் அம்மா உணவகத்திற்கு வந்து சாப்பிடுவதாக கூறினர். ஆளுக்கு 4 சப்பாத்திகளை வாங்கி கொண்டு தரையில் அமர்ந்து சாப்பிட்ட 40 வயதை கடந்த இருவரும் வேளச்சேரி பகுதியில் கட்டட வேலை செய்து வருகின்றனர். இரவு நேரத்திலும், வாய்ப்பு இருக்கும் பொழுதும் அம்மா உணவகத்தில் சாப்பிடுவதால் காசு மிச்சமாவதாக கூறினர். “சொற்ப வருமானம் கிடைக்கும் தங்களுக்கு அம்மா உணவகம் உதவியாக உள்ளது“ என்று குறிப்பிட்டனர்.

பேச்சலராக இருக்கும் என்னால் 3 வேளையும் ஹோட்டலில் சாப்பிட முடியாது. சம்பாதிப்பதை ஹோட்டலில் சாப்பிட செலவாகிவிடுகிறது. அதனால், ஒருவேளை உணவை அம்மா உணவகத்தில் சாப்பிட்டு பட்ஜெட்டை சரி செய்கிறேன்.

இவர்களைத் தொடர்ந்து, ஸ்விக்கி நிறுவன டீ ஷர்ட்டுடன் அங்கு வேலை பார்க்கும் இளைஞர் அம்மா உணவகத்துக்கு வந்தார். அவருக்குத் தேவையான சப்பாத்திகளை வாங்கி சாப்பிட்டார். இரவு நேரத்தில் மட்டும் அம்மா உணவகத்தில் ரூ.10க்குள் சாப்பிடுவதாக கார்த்திக் என்ற அந்த இளைஞர் கூறினார். கிண்டியில் ஸ்விகியில் வேலைபார்க்கும் கார்த்திக், தனது வருமானத்தை மிச்சப்படுத்த அம்மா உணவகத்தை நாடி வருவதாகக் கூறினார். “பேச்சலராக இருக்கும் என்னால் 3 வேளையும் ஹோட்டலில் சாப்பிட முடியாது. சம்பாதிப்பதை ஹோட்டலில் சாப்பிட செலவாகிவிடுகிறது. அதனால், ஒருவேளை உணவை அம்மா உணவகத்தில் சாப்பிட்டு பட்ஜெட்டை சரி செய்கிறேன்“ என்கிறார் கார்த்திக்.

தூத்துக்குடியை சேர்ந்த சேகர் கொரோனா காலத்தில் இருந்து 2 ஆண்டுகளுக்கு மேலாக அம்மா உணவகத்தி சாப்பிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். தூத்துக்குடி பூர்வீகமாகக் கொண்ட சேகரின் மனைவி ஆசிரியர் பணி செய்து வருகிறார். இவருக்கு 3 அடுக்கு மாடி கொண்ட வீடு தூத்துக்குடியில் உள்ளது. ஓரளவுக்கு வசதி இருந்தாலும், கடந்த 28 ஆண்டுகளாக சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். அரசியல் தலைவர்களின் அலுவலகங்களில் சேகர் பணிபுரிந்து வருவதால் மாதம் அவரது ஊதியம் ரூ.40 ஆயிரத்தைத் தாண்டுகிறது.

எனினும், 2 ஆண்டுகள் கொரோனா கால்ததில் அம்மா உணவகத்தில் சாப்பிட்டுப் பழகி விட்டதாகவும், வீட்டில் சாப்பிட்ட திருப்தியை தருவதால் அம்மா உணவகத்தில் சாப்பிடுவதாகவும் கூறினார். “வெளியே ஹோட்டலில் ஒரு வேலைக்கு ரூ.70 கொடுத்து வாங்கி சாப்பிடும் சப்பாத்தியை அம்மா உணவகத்தில் ரூ.6 க்கு வாங்கி சாப்பிடுகிறேன்“ என்கிறார் சேகர். தனக்கான செலவை இவ்வாறு குறைப்பதாக கூறும் சேகர், அம்மா உணவகம் இல்லையென்றால் நடுத்தர மற்றும் கீழ்மட்ட மக்களின் வயிற்றுப்பசியை போக்க முடியாது என்றார். “எனக்கு வசதி இருந்தாலும் பர்சில் ஆயிரம் ரூபாய் இருந்தாலும் அம்மா உணவகத்தை நாடி வருகிறேன்“ என்கிறார் சேகர்.

Share the Article

Read in : English

Exit mobile version