Site icon இன்மதி

பொறியியல் படிப்புகளில் சேர +2 வகுப்பில் கணிதம் கட்டாயமில்லை: சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஏஐசிடிஇ முடிவு!

Photo Credit: Entrance Exam 2009-SRM University on 3.5.09 -Varatharajan Thirumurugan -Flickr

Read in : English

பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இதுவரை இருந்து வந்துள்ளது. தற்போது, இந்த மூன்று பாடங்களையும் சேர்த்துப் படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என்று அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் கையேட்டில் (Approval Process Handbook 2022-23) புதிதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பயோ டெக்னாலஜி, ஃபேஷன் டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகள் உள்பட சில பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு கணிதப் பாடத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டியதில்லை.

அதாவது, 29 இளநிலைப் பட்டப் பட்ட மற்றும் டிப்ளமோ படிப்புகளில் 10 படிப்புகளில் சேருவதற்கு கணிதம் கட்டாயப்பாடமில்லை என்கிறது ஏஜசிடிஇ.

கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரிக்கல் என்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் பாடப்பிரிவுகளில் சேருவதற்கு வேதியியலை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்று ஏஐசிடிஇ அமைப்பின் புதிய விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணிதம் படிக்காமல் பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு முதல் இரண்டு செமஸ்டர்களில் ப்ரிட்ஜ் கோர்ஸ் மூலம் கணிதப் பாடம் மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படும் என்று ஏஐசிடிஇ தலைவர் அனில் டி சகஸ்ரபுதே கூறியுள்ளார்.

கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்கள் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்குத் தேவையில்லை என்றால் ஜேஇஇ மெயின், ஜேஇஇ அட்வான்ஸ்ட் நுழைவுத் தேர்வுகளில் இந்தப் பாடங்களில் தேர்வு வைப்பது எதற்காக?

மேல்நிலை வகுப்புகளில் கணிதத்தை ஒரு பாடமாக இரண்டு ஆண்டுகள் படிக்காமல் இருந்துவிட்டு, பொறியியல் கல்லூரியில் சேர்ந்த பிறகு ஓராண்டில் கணிதப் பாடத்தை ப்ரிட்ஜ் கோர்ஸ் மூலம் கற்றுத்தந்து விட முடியுமா. ஏற்கெனவே, பிளஸ் டூ வகுப்பில் கணித்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்துவிட்டு, பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களே என்ஜினியரிங் மேத்மேட்டிக்ஸ் போன்ற சில பாடங்களைப் படிப்பதற்குத் திணறுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறார்கள் சில பேராசிரியர்கள்.

ஏற்கெனவே பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேராமல் ஏராளமான இடங்கள் காலியாக இருக்கும் போக்கு கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்கிறது. பொறியியல் படிப்புகளில் முதுநிலைப் படிப்புகளிலும் தற்போது ஏராளமான காலி இடங்கள் இருக்கின்றன. இந்த நிலையில், பிஇ, பிடெக் படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்கள் அடிப்படையானவை. கணிதத்தை ஒரு பாடமாகப் படிக்காமல் பொறியியல் படிப்பைப் படிப்பது கடினம். ஏஐசிடிஇயின் இந்த முடிவு பொறியியல் படிப்புத் தரத்தை மேலும் குறைத்துவிடும் என்கிறார்கள் சில கல்வியாளர்கள்.

“கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்கள் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்குத் தேவையில்லை என்றால் ஜேஇஇ மெயின், ஜேஇஇ அட்வான்ஸ்ட் நுழைவுத் தேர்வுகளில் இந்தப் பாடங்களில் தேர்வு வைப்பது எதற்காக?” என்று கேள்வி எழுப்புகிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வுகள் துறை முன்னாள் இயக்குநர் பேராசிரியர் பி.வி. நவநீதகிருஷ்ணன்.

மருத்துவப் படிப்புகளில் சேர உயிரியல் படிப்பு வேண்டாம், மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த பிறகு ப்ரிட்ஜ் கோர்ஸ் மூலம் உயிரியல் பாடத்தைக் கற்றுத்தருகிறோம் என்று கூறிவிடுவார்களா?

“அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி, பயோ மெடிக்கல் என்ஜினியரிங், பயோ இன்பர்மேட்டிக்ஸ் படிப்புகளைக் கொண்டு வந்தபோது இந்தப் படிப்புகளில் சேர உயிரியல் பாடப்பிரிவில் படித்த மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அந்தப் பொறியியல் படிப்புகளைப் படிக்க உயிரியல் பாடம் படித்திருப்பது மட்டும் போதாது என்று கண்டறிந்த பிறகு, அந்தப் படிப்புகளில் சேர கணிதப் பாடம் கட்டாயமாகப்பட்டது. தற்போது, அண்ணா பல்கலைக்கழகத்தில் எந்தப் பொறியியல் படிப்பில் சேர வேண்டுமானாலும் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகள் கட்டாயம் என்ற நடைமுறை உள்ளது” என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் அவர்.

“ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ட்ஸ், மெஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ் போன்ற புதிய தொழில்நுட்பப் பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிப்பதற்கு, அந்தப் பாடங்களின் தன்மைக்கு கணிதப் பாடம் கட்டாயமாகத் தேவைப்படும் என்பதை ஏஐசிடிஇ கருத்தில் கொள்ளத் தவறிவிட்டதோ என்று தோன்றுகிறது. பொறியியல் படிப்புகளில் சேர கணிதம் வேண்டாம் என்று சொல்பவர்கள், மருத்துவப் படிப்புகளில் சேர உயிரியல் படிப்பு வேண்டாம், மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த பிறகு ப்ரிட்ஜ் கோர்ஸ் மூலம் உயிரியல் பாடத்தைக் கற்றுத்தருகிறோம் என்று கூறிவிடுவார்களா?” என்ற கேள்வியை எழுப்புகிறார் பேராசிரியர் பி.வி. நவநீதகிருஷ்ணன்.

அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சலின் இந்த புதிய விதிமுறைகளைத் தமிழக அரசு கடைப்பிடிக்குமா? என்பது சந்தேகமே.

அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வுகளை நடத்தும் பல்வேறு பொறியியல் கல்வி நிறுவனங்கள் இதனை ஏற்றால் அவர்கள் நடத்தும் நுழைவுத் தேர்வு முறையில் மாற்றங்களைச் செய்ய வேண்டியதிருக்கும். அது சாத்தியமா என்றும் தெரியவில்லை.

கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படிக்காமல், பொறியியல் படிப்புகளில் சேர விரும்புகிறவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? மாணவர்களுக்கு படிப்பில் சேருவதில் நெகிழ்ச்சியை அளிக்கிறேன் என்ற பெயரில் இந்த அளவுக்கு எல்லை கடந்து போக வேண்டுமா என்ன?

Share the Article

Read in : English

Exit mobile version