Read in : English
தமிழகத்தில் ஆட்சி மாறியபோதும் அதன் அதீதமான தொழில் உற்பத்தியும், முன்னேறிய சுற்றுச்சூழலும் வெளிநாட்டில், குறிப்பாக வளைகுடா நாடுகளில், இருக்கும் முதலீட்டாளர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் பேரார்வத்தை ஏற்படுத்தியுள்ளன. பொதுவாக மறைவான விஷயங்கள் தலைப்புச் செய்திகள் ஆவதில்லை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் மேற்கொண்ட ஐக்கிய அரபு அமீரக பயணம் தவறான காரணங்களுக்காகச் செய்தியானது. என்றாலும், அது நிகழ்ந்த நேரமும், அதன் முக்கியத்துவமும் புறந்தள்ள முடியாதவை. ஏனென்றால் மாநிலத்தின் முதலீட்டுக்குத் தகுதியான சூழலில் உறைந்திருக்கும் காரணிகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
முதல்வரின் பணம் உலகப் பொருட் கண்காட்சி 2020 நடந்து கொண்டிருந்தபோது நிகழ்ந்தது. அந்த நிகழ்வு துபாயில் ஆறு மாதங்களுக்குப் பின்பு இப்போது முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது. அந்தக் கண்காட்சியில் இருந்த இந்தியப் பிரிவுக்கு சுமார் 17 லட்சம் பேர் சென்றிருக்கின்றனர் என்பது தற்போதைய தரவுகள் சொல்லும் தகவல். கருத்துகளையும், தொழில் திட்டங்களையும் பரிமாறிக் கொள்வதற்கும், நீண்டகாலச் செயல்திட்டத்தை உருவாக்கிக் கொள்வதற்குமான ஆகப்பெரும் வாய்ப்பு அது. தங்களின் இருப்பைப் பறைசாற்றிய பல்வேறு இந்திய மாநிலங்கள் அங்கே வரிசைகட்டி நின்றன. அங்கே தமிழ்நாட்டுக் குழுவும் ஒருகட்டத்தில் வந்து சேர்ந்தது சரியானதே.
வழமையான அரசாங்க விதிமுறைகளையும், மக்களுக்கிடையிலான தொடர்புகளையும் தவிர்த்து, சில முக்கியமான ஒப்பந்தங்களும் ஸ்டாலின் பயணத்தின்போது கையெழுத்தாகியிருக்கின்றன.
இந்திய-ஐக்கிய அரபு அமீரகத்தின் விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்திற்கு வகை செய்யும் வகையில் மு.க. ஸ்டாலின் பயணம் நிகழ்ந்தது. அந்த ஒப்பந்தம் சுங்க விதிமுறைகளை எளிமையாக்கும்; உற்பத்திப்பொருள் விநியோக இயக்கத்தின் செலவுகளைக் குறைக்கும்; தொழில்முறைச் சேவைகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். வழமையான அரசாங்க விதிமுறைகளையும், மக்களுக்கிடையிலான தொடர்புகளையும் தவிர்த்து, சில முக்கியமான ஒப்பந்தங்களும் ஸ்டாலின் பயணத்தின்போது கையெழுத்தாகியிருக்கின்றன.
அவற்றில் மிகவும் முக்கியமான ஒன்று அபுதாபியில் இயங்கும் லூலுக் குழுமம் தமிழ்நாட்டில் செயற்படுத்தப்போகும் ரூ.3,500-கோடி முதலீட்டுத் திட்டம். டாலர் 7.4 பில்லியன் மதிப்புகொண்ட அந்தச் சில்லறை வணிகக் குழுமம் தமிழ்நாட்டில் கடை வணிக வளாகங்கள், அதிநவீன சந்தைகள், உணவு பதனப்படுத்தும் நிலையங்கள், தொழில் தளவாட மையங்கள் ஆகியவற்றை உருவாக்க உறுதி பூண்டிருக்கிறது. கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, முதல் கடைவணிக வளாகம் (மால்) 2024-க்குள் சென்னையில் கட்டப்படும்; முதல் அதிநவீன சந்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் கோயம்புத்தூரின் லட்சுமி ஆலை வளாகத்தில் திறக்கப்படும்.
உணவு பதனப்படுத்தும் நிலையங்களை, தொழில் தளவாட மையங்களை லூலு குழுமம் உருவாக்கி, வேளாண் விளைபொருட்களை வாங்கிப் பதனப்படுத்தி அவற்றை மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும். இதுசம்பந்தமாக அதிகாரப்பூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்ளவும், இடங்களை தேர்வுசெய்து முடிக்கவும் ஓர் உயர்நிலைக் குழு விரைவில் தமிழகம் வரவிருக்கிறது. லூலு குழுமத்தின் தலைவர் யூசுஃபாலி எம்ஏ, “தமிழக இளைஞர்கள் 15,000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கொடுக்க நாங்கள் எண்ணியிருக்கிறோம்,” என்று சொல்லியிருக்கிறார்.
மற்றுமொரு முக்கியமான அறிவிப்பை ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் செய்திருக்கிறது. வளைகுடா நாடுகளிலும், இந்தியாவிலும் இருக்கும் மிகப் பெரிய ஒன்றிணைக்கப்பட்ட மருத்துவ சேவை நிறுவனங்களில் ஒன்று அந்த நிறுவனம். அதன் மையங்களை தமிழ்நாட்டில் உருவாக்குவதற்கு அந்த நிறுவனம் மாநில அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி, மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், ஆய்வுக்கூடங்கள் ஆகியவற்றை உருவாக்கி தரமான, கட்டுப்படியான விலையில் மருத்துவம் தருவதற்கும், 3,500 வேலை வாய்ப்புகளை உண்டாக்குவதற்கும் அந்த நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. 500 கோடி முதலீடு செய்ய உள்ளது.
ஸ்டாலின் துபாயில் இருந்தபோது அவரை, ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேரின் நிறுவனத்தலைவரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் ஆஜாத் மூப்பன் சந்தித்து ஒப்பந்தத்தை வழங்கினார். இந்தியாவில் தெற்கு, மேற்கு மாநிலங்களில் அந்த நிறுவனம் ரூ.3,000 கோடி முதலீடு செய்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஸ்டாலின், ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் செல்வதற்கு முன்பே தமிழ்நாடு அங்கே ஒரு முதலீட்டுக் களத்தை உருவாக்கியிருக்கிறது. கொரோனா பெருந்தொற்று வீரியத்தோடு தாக்கத் தொடங்கிய காலத்திற்கு முன்பே, சரியாகச் சொன்னால், 2019ஆம் ஆண்டு செப்டம்பரில் முதலீட்டாளர் வட்ட மேஜை மாநாடு ஒன்று துபாயில் நடந்தது. அன்றைய முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அந்தக் கூட்டத்தில் பேசினார்; தொழில் தலைவர்கள் அமைப்பின் உறுப்பினர்களோடு அளவளாவினார்; தமிழகத்தின் பெரிய திட்டங்களுக்கான அந்நிய முதலீடுகளைக் கேட்டிருந்தார்.
ஆட்சி மாறினாலும், முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தமிழகத்தின் பலம் அதிகரித்திருக்கிறது. ஆட்சியில் எந்தக் கட்சி இருந்தாலும், யார் முதல்வராக பதவி வகித்தாலும், இந்தப் போக்கு தொடர வேண்டும்.
மின்வாகன உற்பத்தி, மின்சாதனங்கள், ஹார்டுவேர், மென்பொருள், உணவு பதனப்படுத்தல், விமானப் பராமரிப்பு, சீர்செய்தல், கட்டமைப்பு மீளுருவாக்க நிலையங்கள் அமைத்தல் ஆகிய துறைகளில் எல்லாம் தமிழகம் முனைப்போடு செயல்படுகிறது என்று அந்தச் சமயத்தில் பழனிச்சாமி பேசினார். “ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் தொழிலதிபர்களும், முதலீட்டாளர்களும் தமிழ்நாட்டில் இருக்கும் வசதிகள் குறித்து அறிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளனர்,” என்றார் அவர்.
பழனிச்சாமியின் பயணத்தின்போது, தமிழ்நாடு தொழில் உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது என்றும், நன்கு வளர்த்தெடுக்கப்பட்ட தொழில் சுற்றுச்சூழலைக் கொண்டிருக்கிறது என்றும் முழங்கப்பட்டது. மோட்டார் வாகனம், மோட்டார் வாகன உதிரிப்பொருட்கள், ஜவுளி, தோல், இலகுவான, மற்றும் கனத்த பொறியியல், குழாய்கள், மோட்டார்கள், மின்னணு மென்பொருள், ஹார்டுவேர் ஆகிய துறைகளில் தமிழ்நாடு கொண்டிருக்கும் பலங்கள் முன்வைக்கப்பட்டன.
2019ஆம் ஆண்டு செப்டம்பர் கூட்டத்தில் திட்டங்களைப் பற்றி பேசிய அன்றைய தலைமைச் செயலாளர் கே. சண்முகம், 2000ஆவது ஆண்டு ஏப்ரலிலிருந்து 2019 மார்ச் வரை தமிழகத்தில் ரூ.2,984.8 கோடி நேரடி அந்நிய முதலீடுகள் செய்யப்பட்டன என்றார். இந்தியாவிலேயே நேரடி அந்நிய முதலீடு செய்யப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது என்றும் அவர் சொன்னார். “தொழில்நிலையங்களை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகளை எளிமையாக்கவும், சீரமைக்கவும் நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். நிர்வாகத்தை எளிமையாக்க, வெளிப்படையாக்க, பொறுப்புணர்வோடும் திறனோடும் செயல்பட வைக்க நாங்கள் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவோம்,” என்றார் அவர்.
ஆட்சி மாறினாலும், முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தமிழகத்தின் பலம் அதிகரித்திருக்கிறது. ஆட்சியில் எந்தக் கட்சி இருந்தாலும், யார் முதல்வராக பதவி வகித்தாலும், இந்தப் போக்கு தொடர வேண்டும்.
துபாயில் 2019இல் நிகழ்ந்த தொழில் தலைவர்கள் அமைப்புக் கூட்டத்தில் முதலீடு விஷயத்தில் தமிழ்நாட்டின் சிறப்புகள் எடுத்துச் சொல்லப்பட்டன. வரிகளைத் திருப்பித் தருதல், முதலீடு மானியங்கள், அதிதிறன் கொண்ட தொழிலாளர் படை, தரமான மின்சாரம் போன்ற ஊக்கம்தரும் காரணிகள் தமிழ்நாட்டில் இணக்கமான தொழில் சூழலை உருவாக்கியிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆறு விமானநிலையங்கள், நான்கு துறைமுகங்கள், அதிதிறன் கீர்த்தி ஆகியவற்றைக் கொண்ட தமிழகத்தின் சிறந்த நவீன உட்கட்டமைப்பு வசதிகள் மாநிலத்தை முதலீட்டாளர்களின் தேர்வாக்கியிருக்கிறது.
இந்தியாவில் நான்காவது பெரிய பொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு. அது தேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.4 சதவீதப் பங்களிப்பைத் தருகிறது. பலமான, பலதரப்பட்ட உட்கட்டமைப்பு அஸ்திவாரம் கொண்ட ஒரு தொழிற்களம் தமிழ்நாடு. மீண்டும் மு.க.ஸ்டாலின் ஒரு முதல்வராக துபாய்க்குச் செல்வாரோ, இல்லையோ, தமிழ்நாடு முதலீடுகளை ஈர்க்கும் தனது உரிமையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதுடன், பலப்படுத்திக்கொள்ளும்.
Read in : English