Site icon இன்மதி

ஜெய்பீம் தாக்கம்: இருளர் பழங்குடி இன பள்ளிக் குழந்தைகளுக்கு பரத நாட்டியப் பயிற்சி!

After watching Jai Bhim film, she started wondering what if she taught Bharatanatyam to Irular children.

Read in : English

திண்டிவனம் பகுதியில் உள்ள இருளர் பழங்குடி இனக் குழந்தைகளுக்கு இலவசமாக பரதநாட்டியம் கற்றுத்தரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த நாட்டியக் கலைஞர் கௌசல்யா ஸ்ரீனிவாசன்.

திண்டிவனம் ரோசனையில் உள்ள தாய்த்தமிழ் பள்ளியில் இருளர் பழங்குடி இனப் பள்ளிக் குழந்தைகளும் பெற்றோர்களும் அண்மையில் கூடியிருந்தனர். ஆர்வமுள்ள பழங்குடி இன குழந்தைகளுக்குப் பரதநாட்டியம் கற்றுக் கொடுப்பதற்கான முயற்சியை மேற்கொள்வதற்கு முன், பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இதுகுறித்து விழிப்புணர்ச்சியூட்டுவதற்கான தொடக்கநிலைக் கூட்டம்தான் அது.

பரதநாட்டியம் என்பது அனைவருக்கும் பொதுவானது. சாதி, மத, இன பாகுபாடு இன்றி அனைவரும் பரத நாட்டியத்தைக் கற்றுக் கொள்ளலாம். யாருக்கும் பரத நாட்டியம் வரும். யாரும் கற்றுக் கொள்ளலாம்.

“பரதநாட்டியம் என்பது அனைவருக்கும் பொதுவானது. சாதி, மத, இன பாகுபாடு இன்றி அனைவரும் பரத நாட்டியத்தைக் கற்றுக் கொள்ளலாம். யாருக்கும் பரத நாட்டியம் வரும். யாரும் கற்றுக் கொள்ளலாம். ஆர்வமும், ஈடுபாடும், முயற்சியும் இருந்தால் போதும்” என்று கூட்டத்தினரிடையே அவர் விளக்கினார். ஆர்வமுள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு தான் இலவசமாக பரதநாட்டியம் கற்றுத்தருவதாகவும் தெரிவித்தார்.

அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பள்ளிக் குழந்தைகளுக்கு நாட்டியத்தின் சில அடவுகளை மேடையில் கற்றுத்தந்து, அவர்களையும் சில அடவுகளை செய்து காட்டச் செய்தார். இருளர் இனப் பள்ளிக் குழந்தைகள் சிலர், பரதநாட்டியம் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டினர்.

அதன் தொடர்சியாக, மேல்மலையனூர் கிராமத்தில் இருளர் பழங்குடியினரிடையே பரதநாட்டியம் குறித்து விழிப்புணர்ச்சியூட்டும் நிகழ்ச்சியில் கௌசல்யா கலந்து கொண்டார். அங்கும் கூடியிருந்த மக்களிடையே பரதநாட்டிய அடவுகளைச் செய்து காட்டினார். சில பள்ளிக் குழந்தைகள் தொடர்ந்து நாட்டியம் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருப்பதாகக் கூறினர். இதைத் தொடர்ந்து அருட் சகோதரி லூசினா முயற்சியால், இதுபோன்ற நிகழ்வு விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது.

கௌசல்யாவின் மகள் ஸ்ருதி ஸ்ரீனிவாசன்

“2003இல் புல் பிரைட் ஸ்காலராக அமெரிக்காவில் இருந்தபோது, கென்னடி சென்டரில் மாலையில் இலவசமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அந்த நிகழ்ச்சியில் எனக்கும் நாட்டியமாட வாய்ப்புக் கிடைத்தது. அப்போது எனது மனதில் தோன்றியதுதான் ஆர்ட் பார் ஆல் (அனைவருக்குமான கலை) என்ற கருத்தாக்கம். அமெரிக்காவில் மாசாசூசெட்ஸில் உள்ள பிரிட்ஜ் வாட்டர் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் தியேட்டர் அண்ட் டான்ஸ் துறையில் பரதநாட்டிய வருகைதரு பேராசிரியராகப் (Adjunct Professor) 15 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறேன். அப்போது ஜப்பானிய, ஆப்ரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்தவர்கள் என பல இனத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பரதநாட்டியத்தைக் கற்றுத் தந்திருக்கிறேன். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும்கூட, பரதநாட்டியம் கற்றுத்தந்திருக்கிறேன். இதன் தொடக்கம், 2001ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள சிறுமலர் பார்வையற்றோர் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு ஸ்கிரைப்பாக செல்வது வழக்கம். அதன் தொடர்ச்சியாக அங்குள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பரதநாட்டியம் கற்றுத் தந்தேன். அவர்கள் எனது விரல்களைத் தொட்டுப் பார்த்து நாட்டிய அடவுகளைக் கற்றுத்தருவார்கள். அதுவே, எனக்கு ஃபுல் பிரைட் ஸ்காலராவதற்கு முக்கியக் காரணம்” என்கிறார் கௌசல்யா

பரதநாட்டியம் பற்றியே தெரியாத ஒரு சமூகக் குழுவில் உள்ளவர்களுக்குப் பரதநாட்டியத்தைக் கற்றுத்தர வேண்டும் என்ற முயற்சித் தொடங்கினேன். ஜெய்பீம் படத்தைப் பார்த்த பிறகு, இருளர் இன குழந்தைகளுக்கு பரதநாட்டியம் கற்றுத் தந்தால் என்ன என்று நினைத்தேன்.

“பரதநாட்டியம் பற்றியே தெரியாத ஒரு சமூகக் குழுவில் உள்ளவர்களுக்குப் பரதநாட்டியத்தைக் கற்றுத்தர வேண்டும் என்ற முயற்சித் தொடங்கினேன். ஜெய்பீம் படத்தைப் பார்த்த பிறகு, இருளர் இன குழந்தைகளுக்கு பரதநாட்டியம் கற்றுத் தந்தால் என்ன என்று நினைத்தேன். இதற்காக, எங்களது வீட்டின் அருகே இருந்த நீதிபதி சந்துரு சாரை அணுகினேன். அவர்தான் பேராசிரியர் கல்விமணியை அடையாளம் காட்டினார். அதன் பிறகுதான் இருளர் பழங்குடியினர் குழந்தைகளுக்கு பரதநாட்டியம் கற்றுத்தரும் முயற்சி தொடங்கி இருக்கிறது” என்கிறார் கௌசல்யா.

“ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கு நேரிலும் இணைய தளம் மூலமாகவும் நாட்டியத்தைக் கற்றுக் கொடுக்கலாம் என்று நினைத்திருக்கிறோம். முதலில் நாட்டியம் கற்றுக் கொள்ள ஆர்வம் உள்ள பள்ளிக் குழந்தைகளை வாட்ஸ் ஆப் குழுவில் இணையும் படி கேட்டுக் கொண்டுள்ளோம். இந்தப் பயிற்சிக்குக் குறைந்தது ஓராண்டாவது தேவைப்படும். 50 பேர் பரதநாட்டியம் கற்றுக் கொள்ள முன்வந்தால், அதில் குறைந்து ஐந்து, பத்துப் பேராவது தொடர்ந்து கற்று தகுதி பெறுவார்கள்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் கௌசல்யா.

கௌசல்யா ஸ்ரீனிவாசன்

“நீதிபதி சந்துரு சொல்லி, இருளர் பழங்குடி இனக் குழந்தைகளுக்கு இலவசமாக நாட்டியம் கற்றுக் கொடுக்க முன்வந்தார் நாட்டியக் கலைஞர் கௌசல்யா. 6வது வகுப்புக்கு மேல் படிக்கிறவர்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படும். நேரிலும் இணைய தளம் மூலம் இலசவாகப் பயிற்சி அளிப்பதாகக் கூறியிருக்கிறார். பழங்குடி இருளர் இனக் குழந்தைகளும் ஒரு கலையைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பாக இதைப் பார்க்கிறோம். பழங்குடி இருளர் இனக் குழந்தைகளும் இந்தக் கலையைக் கற்று தேர்ச்சி பெறுவதன் மூலம் தங்களாலும் சாதிக்க முடியும் என்று தன்னம்பிக்கையைப் பெறுவார்கள் என்கிறார் பேராசிரியர் பிரபா கல்விமணி.

பிரபல நாட்டியக் கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரனிடம் நாட்டியம் கற்ற அவர், 2003இல் புல்பிரைட் ஸ்காலர்ஷிப் பெற்று அமெரிக்கா சென்றவர். பரதநாட்டியத்தில் வைஷ்ணவ மத சம்பிரதாயங்களிலும் உள்ள முத்திரைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய அரசின் சீனியர் பெல்லோஷிப் பெற்றவர். சென்னையில் கடந்த 30 ஆண்டுகளாக சுனர்த்தகா என்ற நாட்டியப் பள்ளியை நடத்தி வருகிறார் கௌசல்யா. தற்போது அது சுனர்த்தகா டிரஸ்ட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் செயல்பாடுகளில் ஒன்றுதான் அனைவருக்குமான கலை முயற்சி (ஆர்ட் பார் ஆல் இன்ஷியேட்டிவ்).

Share the Article

Read in : English

Exit mobile version