Site icon இன்மதி

எம்ஜிஆரையும் இரட்டை இலையையும் விமர்சிக்கும் ‘குதிரைவால்’!

குதிரைவால் திரைப்படத்தின் டைட்டில் தொடங்கி முடிவு வரை திரைக்கதையிலும் வசனத்திலும் அரசியல் விரவிக்கிடக்கிறது. படத்தில் கையாளப்படும் மேஜிக்கல் ரியலிசம் என்கிற மாய எதார்த்தம், படத்தின் கருத்து சாதாரண மக்களைச் சென்றடைவதற்குத் தடையாக இருக்கிறது.(Photo Credit: Neelam Productions Twitter page)

Read in : English

இன்றைய சூழலில் ‘கனவு காணுங்கள்’ என்பது ஒரு நேர்மறை மந்திரம். அதன் தொடர்ச்சியாக ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ என்ற விருப்பத்தை நோக்கி நகரலாம். நோக்கம் பூர்த்தியானால் ‘கனவெல்லாம் நனவானதே’ என்று கொண்டாட்டத்தில் திளைக்கலாம். உண்மையில் தானாக வரும் கனவு பெரும்பாலும் அப்படியொரு திளைப்பில் ஆழ்த்தாது. அரைகுறையாக நினைவில் தங்கி பல கேள்விகளை எழுப்பும். கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்குமான கண்ணியாகவும் உருவெடுக்கும். அதைச் சொல்ல முயற்சித்திருக்கிறது பா. ரஞ்சித்தின் நீலம் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘குதிரைவால்’.

அடையாள அழித்தொழிப்பைத் தொட்டு விரியும் இக்கதையை ஜி.ராஜேஷ் எழுத, மனோஜ் லயோனல் ஜேசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் இருவரும் திரைப்படைப்பாக ஆக்கியிருக்கின்றனர். கனவு என்பது என்ன? அது நம் ஆழ்மனதை பிரதிபலிக்கிறதா? அப்படியென்றால் கனவு உணர்த்தும் விஷயத்தை கண்டறிவது எப்படி? கனவை ரொம்பவும் சீரியசாக எடுத்துக்கொண்டு அதற்கான பலன்களைத் தேடுபவர்கள் இவ்வுலகில் கணிசமானவர்கள். அவர்கள் முன்னிருக்கும் பதில்கள் எல்லாமே பெரும்பாலும் மரபுவழிக் கதைகளாகவும் புராண உதாரணங்களாகவும் இருக்கும். ஒரு கனவு எவ்வாறு நமக்கு முழுமையாக நினைவில் இராதோ, அதுபோலவே அதற்கான பதில்களும் அமையும்.

குதிரைவால் கதையின் நாயகன் சரவணன் என்ற ப்ராய்டு (கலையரசன்) தன் கனவுக்கான காரணத்தைத் தேடும் பயணமும் அப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு மலை. அதன் மீதிருக்கும் ஒரு மரம். அதனருகே இருக்கும் ஒரு குதிரை. அதற்கு வால் இல்லை. ஏன் அதற்கு வால் இல்லை என்ற கேள்விக்கான விடையை கனவில் தேடுவதற்குள் முழிப்பு தட்டுகிறது. கனவு கண்ட சரவணன், தன் பின்புறத்தில் வால் முளைத்ததாக உணர்கிறார். அது மற்றவர்களின் கண்களுக்கு தெரிகிறதா என்று அறிய முற்படுபவர், ஒருகட்டத்தில் அப்படித் தெரியாவிட்டாலும் கூட அந்த வால் உண்மை என்றே நம்பத் தொடங்குகிறார்.

குதிரைக்கும் வாலுக்கும் தனித்தனியே அர்த்தம் தெரியத் தொடங்கும்போது மறந்துபோன கடந்த கால உண்மையொன்றை நோக்கிச் செல்கிறார். அதன்பிறகாவது குதிரைவாலுக்கு முற்றுப்புள்ளி விழுந்ததா அல்லது கானல்நீராகத் தொடர்கிறதா என்பதோடு படம் முடிவடைகிறது.

கனவுக்குள் சிக்கித் தவிப்பதால், நிகழ்காலத்தில் தான் பார்த்து வந்த வங்கி வேலையில் இருந்து சரவணன் துரத்தப்படுவதும், அவரைத் தேடி வேறொரு வங்கியின் க்ளையண்ட் எக்ஸ்யூட்டிவ் வருவதும், தனது தாயிடம் இறந்துபோன தந்தையின் நினைவைத் தூண்டியதாக ஒரு பெண் வசைபாடுவதும், வழக்கமாக சிகரெட் பிடிக்கும் கடைக்காரர் எப்போதும் அக்குளில் கையைவிட்டு எதையோ தேடுவதும் கிளைக்கதைகளாக விரிகின்றன.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமார் மற்றும் இசையமைப்பாளர்கள் பிரதீப்குமார் மற்றும் மார்ட்டின் விஸ்ஸர், ஒலிக்கலவையைக் கையாண்டிருக்கும் ஆண்டனி ஜே ரூபன், கலை இயக்கத்தை கவனித்திருக்கும் ராமு தங்கராஜ், விஎஃப்எக்ஸ் பணியாளர்கள் உட்பட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே இயக்குநர் இணையின் பார்வைக்கு உயிருட்டியிருக்கின்றனர்.

ஒரு ரோபோ முகம் திருப்புவது போல மேலிருந்து கீழ் நோக்கும் கேமிரா பார்வையும் களத்தில் நிறைந்திருக்கும் ஒலிகளுடன் பின்னணி இசையும் கலந்திருக்கும் விதமும் புதிதாக உணரவைக்கின்றன. நிச்சயமாக இவ்வம்சங்கள் தரும் காட்சியனுபவம் மிகப்புதிது. ஆனால், எது கனவு எது நனவு என்ற கேள்விக்கு சுலபத்தில் பதில் தெரியாமல் இருப்பதே ‘குதிரைவால்’ அனுபவத்தைப் பலவீனப்படுத்துகிறது.

குதிரைவால் டைட்டில் தொடங்கி முடிவு வரை திரைக்கதையிலும் வசனத்திலும் அரசியல் விரவிக் கிடக்கிறது.  

கனவைத் துரத்தும் பயணத்தில் கனவுக்கு விளக்கம் தரும் ஒரு பாட்டி, சில ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன பக்கத்துவீட்டுக்காரர் பாபு ராஜேந்திரன் (சேத்தன்), ‘கட்டிப்புடிடா கட்டிப்புடிடா’ பாடலை சிலாகிக்கும் ஒரு ஜோதிடர் (கே.எஸ்.ஜி.வெங்கடேஷ்), நீல உடையணிந்த இருசாயி என்ற வானவில் என்ற வான்கா (அஞ்சலி பாட்டீல்), ஆறு மாதங்கள் மட்டுமே பாடமெடுத்த கணித ஆசிரியர் ஸ்டூவர்ட் கோடீஸ்வரன் (ஆனந்த் சாமி), மலைக்கிராமமொன்றில் வசிக்கும் தனது தந்தை, தாய், சகோதரி, தாத்தா, பாட்டி மற்றும் இளம் பிராயத்து தோழி ஆகியோரைச் சந்திப்பதாக நகர்கிறது கதை.

சரவணன் ஏன் தன்னை பிராய்டு என்று சொல்லிக் கொள்கிறார்? இருசாயிக்கு ஏன் இத்தனை பெயர்கள்? சரவணனின் இளம் வயது பாட்டிதான் அவரது கனவிலும் இடம்பெறுகிறாரா? சரவணனின் பிரமைக்கு காரணம் போதைப்பழக்கமா அல்லது இளம் வயது நரக வாழ்க்கையா என்று எந்த கேள்விக்கும் பதில் கிடையாது. இதையும் மீறி ரசிக்கத் தொடங்கினால் ஆங்காங்கே சில விஷயங்கள் தட்டுப்படுகின்றன.

நாயை ‘வாக்கிங்’ அழைத்துச் செல்லும் பாபு ராஜேந்திரன் கனவில் மட்டும் சரவணனிடம் உறவு பாராட்டுகிறார். அதாவது, வாழும் காலத்தில் இருவரும் சரியாக பேசிக்கொண்டது கூட கிடையாது. 200 சிரிஞ்சுகளால் ரத்தம் உறிஞ்சப்பட்டு மர்மமாக இறந்துபோனார் பாபு என்ற தகவல் தொலைக்காட்சியில் சொல்லப்படுவதற்கு, ரகசியமான முறையில் அவருக்கிருந்த போதைப்பொருள் பழக்கமாக இருக்கலாம்.

சிகரெட் தரும் பெட்டிக்கடைக்காரர் அக்குளை சொறிந்தவாறே பொருளை எடுத்துக்கொடுத்துவிட்டு தன் கையிலிருக்கும் வாசனையை நுகர்வது, சரவணனின் எண்ணம் கனவாக உருப்பெறுவதைக் காட்டுகிறது.

வங்கியில் தூங்கி வழியும் மேலாளாரின் வசைச்சொற்களால் மன உளைச்சலுக்கு ஆளாகும் சரவணன், அதிலிருந்து தப்பிக்க புகை, மது என்றிருக்கிறார். அவர் மீது அந்த மேலாளர் கொண்டிருக்கும் அபிப்ராயத்தில் அலட்சியம் நிறைந்திருக்கிறது.

கேளம்பாக்கத்தில் இருக்கும் ஒரு பாட்டி கனவுக்கு விடை சொல்வதாகத் தகவலறிந்து தேடிச் செல்ல, ‘ரகசியம் வெளியே தெரியக்கூடாதே’ என்று தனது அபூர்வ கைக்கொள்ளலை மறைக்கப் பார்க்கிறார் அந்த பாட்டி.

கணித ஆசிரியரோ ஒரு படி மேலே சென்று, உனது செக்ஸ் ஆசையும் நீ மறந்துபோன பெண்ணும்தான் இந்த கனவுக்கு காரணம் என்கிறார்.

பிரச்சினைக்குத் தீர்வு காண ஜோதிடரை காணச் சென்றால், அவரோ செக்ஸை மையப்படுத்திப் பேசி சரவணனின் ஆண்மையை கேள்விக்குள்ளாக்குகிறார்.

இளம்பிராயத்தில் யாரோ ஒருவரால் கர்ப்பமான சகோதரியை தாயும் தந்தையும் திட்டிக் கொண்டிருப்பதைக் காண்கிறார் சரவணன். திடீர் கருக்கலைப்பில் ஈடுபட்டு அவர் மரணமடைய, அந்த உண்மை கூட அவருக்குப் புரிவதில்லை. நீருக்குள் விழும் பெண்கள் எல்லாம் நீலியாகி வானத்தில் பறப்பார்கள் என்ற நம்பிக்கை கொண்ட தோழி தன்னை விட்டுப் பிரிந்ததும், இருவருக்குமிடையே இருந்த அன்யோன்ய உறவு கலைவதும் அப்பாத்திரத்தின் மனச்சிதைவுக்கான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

இதையெல்லாம் மீறி, சரவணன் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற உண்மை இக்கதையின் அடிநாதமாக ஒலிக்கிறது. தான் வாழ்ந்த மண் கனவில் மட்டும் எட்டிப்பார்க்க, நகர வாழ்வும் கூட புறக்கணிப்புக்கு உள்ளாக்குகிறது என்பதையே அவரது நிகழ்காலம் வெளிப்படுத்துகிறது. அதனால், படம் முழுக்கவே ஒடுக்கப்பட்ட ஒருவனின் வலிகளே காணக் கிடைக்கிறது.

குதிரைவால் டைட்டில் தொடங்கி முடிவு வரை திரைக்கதையிலும் வசனத்திலும் அரசியல் விரவிக் கிடக்கிறது. பெட்டிக்கடையில் கலையரசன் சிகரெட் புகைக்கும் காட்சியில், பின்னணியில் 500, 1000 ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு குறித்த செய்திக்கான தினசரியின் விளம்பரம் காட்டப்படுகிறது. படத்தில் நிரம்பியிருக்கும் சமகால அரசியல் விமர்சனத்தின் ஒரு துளி இது.

‘மனுஷன் நாக்குல ஈரம் இல்ல’, ‘மேத்ஸ்ல எல்லாமே அடங்கிரும்’, ‘நனவுல தொலைச்சதை கனவுல தேடுறேன்’, ‘என் அடையாளத்தை சிதைக்கப் பார்க்குறீங்க, நீங்கள்லாம் ஒரு நெட்வொர்க்கா செயல்படுறீங்களா’, ‘எம்ஜிஆரு செத்துட்டாரா நேத்து கூட சினிமாவுல பார்த்தோமே’, ‘நீங்க நம்பரை வச்சுதானே அடையாளப்படுத்துவீங்க, என் பேரு எதுக்கு’ என்பது உட்பட ஆங்காங்கே பல வசனங்கள் நம்மைத் தொடுகின்றன.

மிக முக்கியமாக, பழங்குடியினர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலை எம்ஜிஆரும் அவரது கட்சியின் சின்னமான இரட்டை இலையும் எவ்வாறு கபளீகரம் செய்தது என்று விமர்சிக்கிறது

அடையாள அழிப்பு அரசியல், ஆதார் அட்டை கட்டாயம், மலைகளில் இருந்து துரத்தப்படும் பழங்குடிகள், சுற்றுச்சூழல் சிதைப்பு, கடனுக்கு பழக்கப்படுத்தும் கார்பரேட் நிறுவனப் பணி, மன உளைச்சலை தாங்க முடியாமல் போதைப்பழக்கத்துக்கு ஆளாகுதல், தோற்றத்தை முன்வைத்து மதிக்கும் சமூகம் என்று பல விஷயங்களுக்குப் பின்னிருக்கும் அரசியலைப் பேசுகிறது இப்படம்.

அதற்காக சமகால இலக்கியங்களையும் மாய எதார்த்தம் எனும் மேஜிகல் ரியாலிசத்தையும் துணைக்கு அழைத்திருக்கிறார் திரைக்கதையாசிரியர் ராஜேஷ். இதுவே, படம் பேசும் உட்பொருள் சாதாரண மக்களைச் சென்றடையாமல், அவர்களை பதறி ஓட வைக்கிறது.

மிக முக்கியமாக, பழங்குடியினர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலை எம்ஜிஆரும் அவரது கட்சியின் சின்னமான இரட்டை இலையும் எவ்வாறு கபளீகரம் செய்தது என்று விமர்சிக்கிறது ‘குதிரைவால்’. திரையிலும் நேரிலும் எம்ஜிஆரை பார்த்த காரணத்திற்காகவே, வாழ்நாள் முழுக்க வாக்கு செலுத்தியவர்களை கேள்விக்கு உட்படுத்துகிறது. அந்த விமர்சனத்தை ஏன் அழுத்தமாக முன்வைக்கவில்லை என்ற கேள்வியே நம்முன் நிழலாடுகிறது. புரிந்துகொள்ளும் வகையில் உரக்கச் சொன்னால் எதிர்ப்பு பலப்படும் என்ற பயமா?

புதுவித அனுபவம் என்பதற்காக மிகப்பொறுமையாக ஒவ்வொரு பிரேமையும் உற்றுநோக்குவது ஒருகட்டத்தில் அயர்ச்சியடைய வைக்கிறது. மக்களுக்கான அரசியல் என்று சொல்லி எதனை முன்வைத்தாலும், அது அவர்களுக்கு அருகாமையில் இருக்க வேண்டும். வேறெங்கோ நின்றுகொண்டு கோஷமிடுவதற்கும், இது போன்ற மாய எதார்த்த பாணியில் கதை சொல்வதற்கும் என்ன வித்தியாசம்? இல்லை, அதுதான் எங்கள் நோக்கம் என்று படக்குழு சொன்னால், உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் என்று சொல்வதைத் தவிர வேறு வார்த்தைகள் இல்லை!

Share the Article

Read in : English

Exit mobile version