Site icon இன்மதி

இந்தியக் காடுகளில் அழிந்து போன சிவிங்கிப்புலி மீண்டும் உலா வருமா?

இன்று இந்தியாவில் சிவிங்கிப்புலி ஒன்று கூட இல்லை. படங்களிலும், இலக்கியத்திலும் தான் இது பற்றி தெரிந்த கொள்ள வேண்டும்---

Read in : English

இந்தியக் காடுகளை அலங்கரிக்க மீண்டும் வரும் வேங்கைப்புலி வேங்கை என்ற சிவிங்கிப்புலி பூனைக்குடும்பத்தைச் சேர்ந்தது. நில வாழ் விலங்குகளிலேயே அதிவேகமாக ஓடும் திறன் பெற்றது. மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் ஓடும்.

இளம் மஞ்சள் நிறத்தில் தலை சிறிதாகவும், உடல் நீளமாகவும், கால்கள் உயரமாகவும், வால் நீளமாகவும் இருக்கும். உடல் முழுதும் வட்டவடிவ கருப்புப் புள்ளிகள் காணப்படும். கீழ்வயிற்றுப்பகுதி வெள்ளை நிறத்தில் இருக்கும். சிறுத்தை போல் தோன்றும். ஆனால், முற்றிலும் மாறுபட்ட விலங்கு.

வளர்ந்த சிவிங்கி, 65 கிலோ எடையும், 135 செ.மீ. நீள உடலும், 84 செ.மீ. நீள வாலையும் கொண்டிருக்கும். மான், குதிரை, முயல் உள்ளிட்ட புல்வெளி உயிரினங்களை வேட்டையாடி உண்ணும். இந்தியத் துணைக் கண்டத்தில் ராஜஸ்தான் துவங்கி, தென் தமிழகம் வரை காடுகளில் பரவியிருந்து.

ஆனால், இன்று இந்தியாவில் சிவிங்கிப்புலி ஒன்று கூட இல்லை. படங்களிலும், இலக்கியத்திலும் தான் இது பற்றி தெரிந்த கொள்ள வேண்டும். இந்த இனத்தை இந்தியக் காடுகளில் மீண்டும் பல்கி பெருக வைக்க திட்ட அமலாக்க அறிக்கை ஒன்று, கடந்த ஜனவரியில் உருவாக்கப்பட்டுள்ளது.

சிவிங்கிப்புலி இனம், ஆப்பிரிக்காவில் தோன்றி இந்தியாவில் பரவியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் முழுமையாக அழிந்துவிட்டது. ஆப்பிரிக்காவில் அழிந்துவரும் உயிரினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சிவிங்கியை, வேங்கை புலி என்று தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஆங்கிலத்தில், சீட்டா என்பர். பாலுாட்டி வகையைச் சேர்ந்த வேட்டை விலங்கு. ஒரு காலத்தில் இந்திய பரப்பில் அதிகம் வாழ்ந்தது. இந்தியா விடுதலை பெற்றபோது, சிவிங்கிபுலி முழுமையாக அழிந்திருந்தது.

வேட்டை வெறியர்களால் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட்ட சிவிங்கிப்புலி என்ற அற்புதமான விலங்கினத்தை மீண்டும் கொண்டு வர முயற்சி நடக்கிறது

தற்போதைய சட்டீஸ்கர் மாநிலம், சுர்குஜா பகுதியை ஆட்சி செய்த மன்னர் ராமானுஜ பிரதாப் சிங், கடைசியாக, 1948இல் ஒரு சிவிங்கியை சுட்டு வீழ்த்தியதாக வரலாற்று பதிவு உள்ளது. மத்திய பிரதேச மாநில காட்டில் சிவிங்கியை, 1951இல் மக்கள் பார்த்ததாக ஒரு குறிப்பு உள்ளது. பின், இந்திய மண்ணில் எங்கும் காணப்படவேயில்லை.

வேட்டை வெறியர்களால் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட்ட சிவிங்கிப்புலி என்ற அற்புதமான விலங்கினத்தை மீண்டும் கொண்டு வர முயற்சி நடக்கிறது. கடந்த, 2020இல் உச்ச நீதிமன்றம் இதற்கு அனுமதி அளித்துள்ளது.

இந்தியக் காடுகளில் பல்கி வளப்படுத்திய ஆசிய சிவிங்கி, தற்போது மேற்காசிய நாடான ஈரானில் மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ளது. ஆப்ரிக்க காடுகளிலும், ஒருவகை சிவிங்கி உள்ளது. பிரதமராக இந்திரா பதவி வகித்தபோது, 1970இல் ஈரானுக்கு ஆசிய சிங்கங்களை பரிசாகத் தந்தார். அதற்கு மாற்றாக அங்கிருந்து, சிவிங்கியை வாங்க முயற்சித்தார்; அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. தற்போது, ஆப்ரிக்க நாடான நமீபியாவில் சிவிங்கியை வாங்கி, ராஜஸ்தான், மத்தியபிரதேச காடுகளில் விட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியப் பகுதியில் ஆட்சி செய்த சமஸ்தான மன்னர்கள், சிவிங்கிப்புலியை வளர்ப்பதில் விருப்பம் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட வளர்ப்பு மிருகம் போல் இருந்தது. காட்டில், மான், முயல் வேட்டைக்கு பழக்கி பயன்படுத்தியுள்ளனர். முகலாய வம்ச மன்னர்களிடமும் இந்த வழக்கம் இருந்துள்ளது.

மன்னர் அக்பர், இது போன்ற விலங்குகளை வளர்த்து வந்தார் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. வேட்டையாடுவதை விளக்கும் ஓவியங்களில் சிவிங்கிப்புலிகள் காணப்படுகின்றன. தற்போதைய மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோலாப்பூரில், சிவிங்கி மற்றும் சிறுத்தையை வேட்டைக்கு பழக்கியது பற்றிய ஆதாரப்பூர்வ தகவல்கள் உள்ளன. அப்போதைய கோலாப்பூர் சமஸ்தான மகாராஜ் ராஜாராம், வேட்டைக்கு சிவிங்கிப்புலிகளை பழக்கி பயன்படுத்தியுள்ளார். அவற்றுக்கு பயிற்சி கொடுக்க, பிரத்யேகமாக ஒரு சமூக பிரிவு இருந்துள்ளது. அதை, சிட்டேவான் என குறிப்பிடுகின்றனர்.

விலங்கு தோலுக்குள் பொருள்களை திணித்து, உயிருள்ள மிருகம் போல் காட்சிப்படுத்தும் கலையில் நிபுணராக இருந்தவர், போதா வான் இன்ஜாய். இவர் கோலாப்பூரில், 35 பழக்கிய சிவிங்கிப்புலிகள் இருந்ததாக, 1936இல் பதிவு செய்துள்ளார்.

அழிந்துபோன வேங்கைப்புலி இனத்தை, இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரும் செயல்திட்டத்தை, இந்திய வனவிலங்கு டிரஸ்ட் மற்றும் இந்திய வனவிலங்கு இன்ஸ்டிடியூட் இணைந்து உருவாக்கியுள்ளன.

காட்டில் பிடித்து வரப்படும் சிவிங்கிப் புலிகளை, பழக்கி பயிற்சி கொடுப்பதற்கு என்றே ஒரு கூடத்தை உருவாக்கியிருந்தார் மன்னர் ராஜாராம். அதற்கு, சிட்டே – கானா என்று பெயர். இது, கோலாப்பூர் பஸ் நிலையம் அருகே தற்போது உயர்நிலைப் பள்ளியாக உள்ளது.

மன்னர் காலத்தில் சிவிங்கியை, குதிரை வண்டிகளில் ஏற்றி வேட்டைக்கு அழைத்து செல்வர். மான் கூட்டத்தைக் கண்டதும், தாவிச் சென்று சரியாக வேட்டையாடும். வேட்டையை நடத்தி முடித்ததும் சிவிங்கிப்புலியை பிடித்து, கழுத்து மற்றும் இடுப்பில் கயிற்றால் கட்டி கட்டுப்படுத்துவர், சிட்டாவான்கள்.

சிவிங்கிப்புலி

பிரிட்டிஷ் ஆட்சி ஆதிகாரி அல்லது ராஜ குடும்பத்துக்கு நெருங்கிய விருந்தினர்கள் வரும்போது, இதுபோன்ற வேட்டை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர் மன்னர்கள். வேட்டையாடும் காட்சியை, பைனாகுலர் கருவி மூலம் பார்க்கவும் வசதி செய்யப்பட்டிருந்தது. இப்படி எல்லாம், அழிந்துபோன வேங்கைப்புலி இனத்தை, இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரும் செயல்திட்டத்தை, இந்திய வனவிலங்கு டிரஸ்ட் மற்றும் இந்திய வனவிலங்கு இன்ஸ்டிடியூட் இணைந்து உருவாக்கியுள்ளன. ஆப்ரிக்காவிலிருந்து கொண்டு வரப்படும் சிவிங்கிப்புலிகளை விட்டுவிட உகந்த, காட்டுப்பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேச மாநிலம், குனோ பாலபூர் மற்றும் நவ்ரோடேகு வனவிலங்கு சரணாலயம், ராஜஸ்தான் மாநிலத்தில் ஷாஹ்கர் வனப் பகுதி ஆகியவற்றில் விடலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், சண்டீகர் மாநிலங்களில் நடந்த ஆய்வுக்கு பின், பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் முக்கியமாக சிவிங்கிப்புலிகளுக்கு உணவு கிடைக்கும் வாய்ப்பு, அந்தப் பகுதியில் வாழும் மக்கள் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிவிங்கிகளை, இந்தியா கொண்டு வர உச்சநீதிமன்றமும் அனுமதித்துவிட்டது. தொடர்ந்து சிவிங்கிப்புலிகள் வாழ ஏற்ற சுற்றுச்சூழல் பற்றி விரிவான ஆய்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் சிவிங்கி மறுவாழ்வு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் வரைவு கடந்த ஜனவரி மாதம் இறுதியில் வெளியிடப்பட்டது.

தேர்வு செய்யப்பட்டுள்ள வனப்பகுதிகளுக்கு, வேங்கைப்புலி எப்போது கொண்டு வரப்படும் என்பது தெரியவில்லை. இந்திய காட்டு வாழ் உயிரின உணவு சங்கிலியில் இருந்து அறுந்துபோன அற்புத விலங்கை மீண்டும், சங்கிலியில் பிணைக்கும் முயற்சி நடந்து வருகிறது. அந்த முயற்சி சூழலை மேம்படுத்துமா என்பது, நீண்ட ஆய்வுக்கு பின்தான் தெரிய வரும்.

Share the Article

Read in : English

Exit mobile version