Site icon இன்மதி

தமிழ்நாடு பட்ஜெட்: மதுரை – தூத்துக்குடி தொழிற் பாதைத் திட்டம் உயிர் பெறுமா?

Read in : English

இந்தியாவை பொறுத்தவரை தமிழ்நாடு தொழிற்துறையில் மிகவும் முன்னேறிய மாநிலம். சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளை பொறுத்தவரை தமிழகம் இந்திய அளவில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட 50 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்தியாவில் உள்ள இவ்வகை தொழிற்சாலைகளில் எட்டு சதவீதம் நமது மாநிலத்தில் உள்ளன. தமிழக நிதி அமைச்சர் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கும் இந்த நிலையில் இந்தத் தொழிற்துறைக்கு உள்ள எதிர்பார்ப்புகள் என்ன?

2013ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மதுரை – தூத்துக்குடி தொழிற் பாதைத் திட்டம் (Madurai – Tuticorin industrial corridor ) தென்தமிழகத்தின் தொழில் முன்னேற்றத்திற்கு ஒரு மாபெரும் நம்பிக்கையை அளித்தது. இந்தியாவின் டெட்ராய்ட் என்றழைக்கப்படும் சென்னையை தவிர்த்து தொழில் வளர்ச்சி என்பது கோவையில் மட்டுமே சொல்லிக்கொள்ளும் வகையில் இருக்கிறது. மத்திய மற்றும் தென் மாவட்டங்கள் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம். ஆனால் புதியதாக வரும் தொழிற்சாலைகள் சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டுமே குவிகிறது. இந்தப் போக்கு மதுரை – தூத்துக்குடி தொழிற் பாதைத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் மாறும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஒன்பது ஆண்டுகள் கழிந்தும் இந்த திட்டத்தில் முன்னேற்றம் ஒன்றும் இல்லை.

புதியதாக வரும் தொழிற்சாலைகள் சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டுமே குவிகிறது. இந்தப் போக்கு மதுரை தூத்துக்குடி தொழிற் பாதைத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் மாறும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

“அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் முடிப்பது மிக முக்கியம். திட்டங்கள் அறிவிப்போடு நிற்பதால் எந்த பயனும் இல்லை” என்கிறார் மதுரையை சேர்ந்த எஸ்விஎஸ் வேல்சங்கர். சர்வதேச விமான நிலையம், நல்ல துறைமுகம் மற்றும் சிறந்த சாலை வசதிகள் என்று சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு அரசு மற்ற பகுதிகளையும் அடையாளம் காண்பிக்க வேண்டும். மதுரையிலும் சர்வதேச விமானநிலையம் உள்ளது. தூத்துக்குடியில் துறைமுகம் உள்ளது. மதுரை – தூத்துக்குடியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. எனவேதான் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டபோது அருப்புக்கோட்டை – எட்டயபுரம் பகுதிகளில் 8 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தொழிற்சாலைகளுக்கு தேர்வு செய்யவேண்டும் என்று மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொழில் முனைவோர் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.

கடந்த ஜனவரி மாதம் கலைஞர் மு கருணாநிதி பெயரில் மதுரையில் அமையவிருக்கும் நூலகத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின், மதுரையில் மற்றுமொரு சிப்காட் தொழிற்பூங்கா அமைவதை பற்றி அறிவித்தார். இந்தத் திட்டத்தை பற்றிய அறிவிப்பும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இரண்டு ஆண்டுகளாக பெருந்தொற்று தொழில் முனைவோரை மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறது. பெரும்பாலான சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் தொற்றுக்கு முந்தைய வளர்ச்சியை எட்டவில்லை. பல தொழிற்சாலைகள் திறக்கப்படவே இல்லை என்கிறார்கள் தொழில் மற்றும் வியாபார சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள். சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தபின்பு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளின் கொள்கை முடிவுகள் மைய அரசிடமே குவிந்துள்ளன. மைய அரசு அறிவிக்கும் பெரும்பாலான சலுகைகள் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கே செல்கின்றன என்கிறார் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் மூத்த தலைவர் ரத்தினவேலு.

முதலமைச்சர் மு க ஸ்டாலின், மதுரையில் மற்றுமொரு சிப்காட் தொழிற்பூங்கா அமைவதை பற்றி அறிவித்தார். இந்தத் திட்டத்தை பற்றிய அறிவிப்பும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ரூ. ஐந்து கோடி விற்றுமுதல் செய்யும் குறு மற்றும் ரூ.50 கோடி விற்றுமுதல் செய்யும் சிறு தொழில் நிறுவனங்கள், ரூ.250 கோடி விற்றுமுதல் செய்யும் நடுத்தர நிறுவனங்களுக்கு எப்படி ஈடாகும்? என்கிறார் ரத்தினவேலு. எனவே சிறு மற்றும் குறு நிறுவனங்களை தனியே பிரித்துத் திட்டங்களை அறிவிக்கவேண்டும் என்று மைய அரசை மாநில அரசு நிர்பந்திக்க வேண்டும் என்கிறார் அவர்.

சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு தொழில் மற்றும் வியாபார சங்கங்கள் மத்திய நிதி அமைச்சரைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பது உண்டு. மாநில நிதிநிலை அறிக்கை வெளிவரும் முன்பு மாநில நிதி அமைச்சரை சந்திப்பது உண்டு. இவை அனைத்தும் இப்போது வழக்கொழிந்து போன ஒன்றாகி விட்டது. என்ன கோரிக்கையென்றாலும் சரக்கு மற்றும் சேவை வரி குழுவிற்கு முன்வைக்குமாறு மத்திய நிதி அமைச்சர் கூறுகிறார். இந்த குழுவில் மாநில நிதி அமைச்சர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்ற நிலையில் தங்களது கோரிக்கைகளை எங்கு முன்மொழிவது என்பதில் மிகுந்த சிரமங்கள் உள்ளதாக தொழில் மற்றும் வியாபார சங்க நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். குறைந்தபட்சம் மாநில நிதி அமைச்சர், சரக்கு மற்றும் சேவை வரி குழுவின் சந்திப்புகளுக்கு செல்லும் முன்பு தங்களை சந்தித்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்கிறார்கள் அவர்கள்.

Share the Article

Read in : English

Exit mobile version