Site icon இன்மதி

விடுதலைப் புலிகள் குறித்த வலைப் பதிவுகளை முகநூல் முடக்குவது, கருத்து உரிமைக்கு எதிரானதா?

ஈழப்போர் குறித்து பேச தடை செய்யும் ஃபேஸ்புக் நிறுவனம் உலகமே எதிர்க்கும் உக்ரைன் மீதான ரஷ்ய போர் குறித்து பேச தனது வலைதளக் கதவுகளை திறந்துள்ளது (Photo Credit: Pexels)

Read in : English

இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 30 கோடி பேர் கணக்கு வைத்துள்ள முகநூல் (பேஸ் புக்) என்ற சமூக வலைதளத்தில் பகிரப்படும் ஈழப்போரில் விடுதலைப் புலிகள் குறித்த தகவல்கள், பிரபாகரனின் புகைப்படம், சர்ச்சைக்குரிய முள்ளிவாய்க்கால் குறித்த தகவல்கள் அல்லது புகைப்படங்கள், தமிழ் தேசியத்தின் கொள்கை ரீதியான பதிவுகள் போன்றவற்றை முகநூல் முடக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ அவர்களின் கருத்துகள் முகநூலில் முடக்கப்படுகின்றன என்கிறார்கள்.

2021ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி தமிழர் வணிகர் சங்கத்தை சேர்ந்த மேகநாதன் முனுசாமியின் முகநூல் பதிவு முடக்கப்பட்டது. நாம் தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சந்திப்போம்” என பதிவிடப்பட்டிருந்ததால் தனது முகநூல் கணக்கு முடக்கப்பட்டது என பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறுகிறார் அவர். பிரபாகரன் பிறந்த நாளன்று பதிவிட்ட வீடியோவால் தனது முகநூல் கணக்கு முடக்கப்பட்டதாகக் கூறுகிறார் வந்திய தேவன்.

சமூக வலைதளம் மூலம் கருத்துரிமையை பறிக்கும் அரசியலை மக்கள் எதிர்க்க வேண்டும்” என்கிறார் நார்வே நாட்டில் வசித்து வரும் இங்கர்சால்.

“பிரபாகரனின் பிறந்த தினத்தன்று யாராவது பிரபாகரனின் புகைப்படத்தையோ அல்லது அவரது சகாக்களின் புகைப்படத்தையோ பகிர்ந்தால் அதை கண்டு கலக்கமடையும் ஃபேஸ்புக், அவர்களின் கணக்குகளை தற்காலிகமாக தடை செய்யப்பட்டது என்று J Wiki என்ற பெயரில் செயல்படும் ஃபேஸ்புக் பயனர் கூறுகிறார்.

“சுதந்திரத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த ஈழத்தில் உள்ள எனது சகோதர, சகோதரிகளுக்கு மரியாதை செலுத்தும் பதிவை பேஸ்புக் நீக்கியுள்ளதாகவும், அடுத்த 30 நாட்களுக்கு ஃபேஸ்புக்கில் நேரலை அல்லது விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் கனடாவைச் சார்ந்த நீதன்சண்.

”பல நேரங்களில் சில நண்பர்கள் அனுப்பும் முகப்புத்தக இணைப்பைத் தந்தால் அதனை நான் பார்க்க அனுமதி இல்லை என்று வரும். பதிவிடும் பதிவுகள் றிஹிஙிலிமிசி என்று அல்லாமல் இருந்தால் நட்பு வட்டத்தில் இல்லாதவர்கள் பார்க்க முடியாது என நினைத்தேன். ஆனால், என் சகோதரர் ராஜாதிராஜதேவன் மு (படியான் அம்பலம்) என்ற கணக்கில் முகநூலில் உள்ளார். அவரால் எனது பதிவை பார்க்க முடியவில்லை, என்னால் அவரது பதிவை பார்க்க முடியவில்லை. 3 ஆண்டுகளாக முகநூல் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி டிவிட்டர், கூ செயலி, இ-மெயில் என தொடர்ந்து தகவல்கள் முடக்கப்பட்டு வருகின்றன. சமூக வலைதளம் மூலம் கருத்துரிமையை பறிக்கும் அரசியலை மக்கள் எதிர்க்க வேண்டும்” என்கிறார் நார்வே நாட்டில் வசித்து வரும் இங்கர்சால்

“விடுதலைப் புலிகளை ஆதரிப்பதும், ஈழத்தமிழர்களை ஆதரிப்பதும், ஈழப்போர் குறித்து பேசுவதும் கருத்துரிமை சார்ந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள இந்த உரிமையைப் பறிக்கும் வகையில் அதுகுறித்த கருத்துகளை முகநூல் பக்கங்களில் தடை செய்யும் ஃபேஸ் புக் நிறுவனத்தின் முயற்சி சரியல்லை, என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி.

தமிழ் தேசியவாதிகள் மற்றும் விடுதலை புலிகளின் கருத்துக்களை முடக்கும் முகநூல் நிர்வாகத்தை கண்டித்து 2021ஆம் ஆண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது கண்டனத்தைப் பதிவிட்டிருந்தார். “தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை ஒட்டி, அவரது படத்தை முகநூல் தளத்தில் பகிர்ந்த அனைவரது கணக்குகளும் முடக்கப்பட்டதாகவும், அந்த நாளில், ஆதரவற்ற, வாய் பேச முடியாத, காது கேட்காத குழந்தைகள் இல்லம் சென்று உணவு அளித்ததை நேரடியாக ஒளிபரப்பியவருக்கு, அடுத்த 60 நாள்களுக்கு, நேரடி ஒளிபரப்பு செய்யத் தடை விதித்து முகநூல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது” என்று அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

உலக நாடுகள் முழுவதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பல்லாயிரகணக்கான இயக்கங்கள், தனிப்பட்ட குழுக்கள், தனிநபர்களை ஃபேஸ்புக் நிரந்தர தடைப்பட்டியலில் வைத்துள்ளது. அந்த தடைப்பட்டியலில் தான் விடுதலை புலிகள், பிரபாகரன், திலீபன், ஈழப்போரின் குறிப்புகள் உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளன. போர் நடந்த குறிப்பிட்ட நாளிலோ அல்லது ஈழப்போரின் தலைவர் கொல்லப்பட்ட அல்லது பிறந்த நாளிலோ ஒரு பதிவையோ, கருத்தையோ பகிர்ந்தால் அது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என முகநூல் நிர்வாகம் விளக்கம் கூறுகிறது.

முகநூலில் பகிரப்படும் பதிவுகள் மிகவும் வன்முறையான தகவல்களா, பாலியல் ரீதியானதா, இன வெறியைத் தூண்டுபவையா, வெறுப்பை உமிழ்பவையா அல்லது பயங்கரவாதத்தை ஆதரிக்கிறதா என்பதைத் தீர்மானிக்க முகநூல் நிறுவனம் சில கையேடுகளை பயன்படுத்துவதாக தி கார்டியன் பத்திரிகை கூறுகிறது.

அந்த கையேடுகளில் வெறுப்பு பேச்சு, பழிவாங்கும் நோக்கம், தானாக காயப்படுத்திக்கொள்வது, தற்கொலை, வன்முறை அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட முக்கியமான பல்வேறு விஷயங்கள் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய பதிவுகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் ஃபேஸ்புக் கண்காணிப்பதாகவும் கார்டியன் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆயுத உதவியோ, பொருளாதார உதவியோ செய்யக்கூடாதே தவிர, அவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதும், அவர்கள் மீதான தடையை நீக்க வலியுறுத்துவதும், பிரச்சாரம் செய்வதும் சட்டவிரோதமானது இல்லை என பல வழக்குகளில் நீதிமன்றங்கள் குறிப்பிட்டுள்ளன

“வன்முறையை, பாதுகாப்பின்மையை, அச்சமூட்டும் பதிவுகளை நீக்குவது தங்களது கொள்கை என கூறும் முகநூல் நிறுவனம் அவ்வபோது அதை மாற்றிக் கொள்வது தான் விசித்திரமாக உள்ளது” என்று புலம்பெயர் தமிழர் பேரவை தலைவரும், வழக்கறிஞருமான தோ.ஜான்சன் கூறுகிறார்.

”ஈழப்போர் குறித்து பேச தடை செய்யும் ஃபேஸ்புக் நிறுவனம் உலகமே எதிர்க்கும் உக்ரைன் மீதான ரஷ்ய போர் குறித்து பேச தனது வலைதளக் கதவுகளை திறந்துள்ளது. ரஷ்ய படையின் தாக்குதலாலும், குண்டு மழையாலும் உக்ரைன் போர்க்களமாக காட்சியளிக்கிறது. லட்சகணக்கான மக்கள் தாய் மண்ணை விட்டு, வேறு நாடுகளுக்கு தஞ்சமடைந்து வருகின்றனர். இந்தக் கொடூர வன்முறை குறித்து பதிவிடவும், கருத்துகளை பகிரவும் தனது கட்டுப்பாடுகளில் தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளதாக முகநூல் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவிக்கும் ரஷ்யா குறித்தும், தங்களின் உரிமைக்காக போராடும் உக்ரைன் மக்கள் குறித்தும் பேசுவதற்குச் சுதந்திரம் அளிக்கும் முகநூல் நிறுவனம், 12 ஆண்டுகளுக்கு முன்பு ஈழத்தில் நடைபெற்ற இலங்கை ராணுவத்தின் கொடூரம் குறித்தும், தங்களின் உரிமைக்காக குரலெழுப்பும் தமிழீழ மக்களின் கருத்து குறித்தும் வெளிப்படையாக பேசுவதை தடுப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?” என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.

“தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆயுத உதவியோ, பொருளாதார உதவியோ செய்யக்கூடாதே தவிர, அவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதும், அவர்கள் மீதான தடையை நீக்க வலியுறுத்துவதும், பிரச்சாரம் செய்வதும் சட்டவிரோதமானது இல்லை என பல வழக்குகளில் நீதிமன்றங்கள் குறிப்பிட்டுள்ளன” என்று கூறும் சிறைக்கைதிகள் உரிமை மையத்தின் இயக்குநரும் வழக்கறிஞருமான ப.புகழேந்தி, விடுதலைப் புலிகள் குறித்தோ, ஈழப்போர் குறித்தோ பேச எந்தவிதத் தடையும் இல்லை என பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டிள்ளார்.

பிரபாகரன் படத்தை வைத்து விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி நடத்தப்பட்ட கையெழுத்து பிரச்சாரத்தின் போது ஒரு வழக்கின் தீர்ப்பில் ”விடுதலைப் புலிகள் குறித்து பேசுவது தவறானது இல்லை, அது மக்களின் கருத்து உரிமை” என சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி கே. சந்துரு குறிப்பிட்டிருந்தார். அண்மையில் விடுதலைப் புலிகள் குறித்து பேசியதாக கொளத்தூர் மணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமாரும் ”மக்களின் அடிப்படைக் கருத்து உரிமையை தடுக்க முடியாது, மாவீரர் நாளை கொண்டாடுவதில் அரசு தலையிட முடியாது” என்றார்.

“விடுதலைப் புலிகளை ஆதரிப்பதும், ஈழத்தமிழர்களை ஆதரிப்பதும், ஈழப்போர் குறித்து பேசுவதும் கருத்துரிமை சார்ந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள இந்த உரிமையைப் பறிக்கும் வகையில் அதுகுறித்த கருத்துகளை முகநூல் பக்கங்களில் தடை செய்யும் ஃபேஸ் புக் நிறுவனத்தின் முயற்சி சரியல்லை. எந்த தடை செய்யப்பட்ட இயக்கத்தைப் பற்றியும் பேசுவதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் உரிமை கொடுத்திருப்பது என்பதை அந்த நிறுவனத்துக்கு எடுத்துக் கூற வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் ப.புகழேந்தி.

Share the Article

Read in : English

Exit mobile version