Site icon இன்மதி

கோவை மான்ஜாக்: அருகி வரும் அபூர்வமான தாவரத்தை பாதுக்காக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் நடவடிக்கை

கோவை மான்ஜாக் என்ற அபூர்வமான தாவரத்தை 1938ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி டாக்டர் கே. செரியன் கண்டறிந்தார்.

Read in : English

ஜி. குன்ஹி கண்ணன் வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்க நிறுவனத்தில் 2001இல் சேர்ந்தபோது, தாவரவியல் தோட்டத்தில் பாலாடைப் போன்ற வெள்ளை நிறப்பூக்களும், ஆரஞ்சுநிறப் பெரிப் பழங்களும் கொண்ட ஒரு தாவரத்தை அவர் காணநேர்ந்தது. அது ஒரு காலத்தில் கோயம்புத்தூர் பகுதியில் மிகப்பிரலமான கோவை மான்ஜாக் (சிறுநறுவிலி) தாவரமென்றும், அது போராகினேசியா தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் அவருக்குத் தெரியும். பறவைகள் பெரிப் பழங்களை உண்பதைப் பார்த்து அவரும் ஒரு சிலவற்றைத் தின்றுப் பார்த்தார். மென்று தின்பதற்கு அந்தச் சிறிய மஞ்சள்- ஆரஞ்சு பெரிகளின் சதைப்பகுதி கொஞ்சமாகத்தான் இருந்தது என்றாலும், பழங்கள் இனிப்பாக இருந்தன.

கோயம்புத்தூருக்குத் தெற்கே எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த நஞ்சுண்டபுரத்தில் திரட்டிக் கொண்டுவந்த தாவரங்களில் இந்தத் தாவரத்தை டாக்டர் கே. செரியன் ஜேக்கப் 1938ஆம் ஆண்டு மே 2-ஆம் தேதி அன்று கண்டுபிடித்தார். இது பின்பு கோர்டியா டிஃப்யூசா கே.சி. ஜேக்கப் என்று பெயரிடப்பட்டது. பின்னர் தாவரவியல் விஞ்ஞானிகள் இந்தப் புதர் தாவரத்தை அபூர்வமான, அருகி வரும் தாவரங்களின் பட்டியலில் சேர்த்தனர். துரிதமான நகரமயமாக்கலும், மனிதனின் மற்ற நடவடிக்கைகளும் ‘கோவை மான்ஜாக்’ தாவரத்தை அழிவின் விளிம்புக்குத் தள்ளிவிட்டன என்று சந்திரபோஸும் நாயரும் தெரிவித்தார்கள். இயற்கைச் சூழலில் வெறும் பத்துச்செடிகள்தான் காணப்பட்டன என்று ஆறுமுகமும், மற்றவர்களும் 2018இ-ல் நடத்திய ஆய்வு சொல்கிறது.

கோயம்புத்தூரின் பல்லுயிர்ச் செழிப்பிடமாகிய சிங்காநல்லூர் ஏரியைச் சுற்றிய பகுதிகளில் சில மான்ஜாக் தாவரங்களை வளர்ப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டார். ஒருகாலத்தில் இப்பகுதியில் இந்தத் தாவரம் பரவலாக இருந்தபோதும், இன்று இதைப் பற்றி ஒருவருக்கும் ஒன்றும் தெரியவில்லை.

கோயம்புத்தூர் பகுதிக்கு மட்டுமே இந்தத் தாவரம் உரியது என்பதையும், அது இப்போது அழிந்துவிடக்கூடிய ஆபத்தில் இருக்கிறது என்பதையும் அறிந்தார் குன்ஹி கண்ணன். அவர் நகர்ப்புறப் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் கல்வி மையம், தமிழ்நாடு வனத்துறை, பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு சலீம் அலி மையம் ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்களோடு சேர்ந்துகொண்டு, கோயம்புத்தூரின் பல்லுயிர்ச் செழிப்பிடமாகிய சிங்காநல்லூர் ஏரியைச் சுற்றிய பகுதிகளில் சில மான்ஜாக் தாவரங்களை வளர்ப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டார். ஒருகாலத்தில் இப்பகுதியில் இந்தத் தாவரம் பரவலாக இருந்தபோதும், இன்று இதைப் பற்றி ஒருவருக்கும் ஒன்றும் தெரியவில்லை. இந்தத் தாவரத்தைப் பற்றிய அறிவும் விழிப்புணர்வும் மக்களிடையே இல்லாததால், அந்தக் காட்டுப் பகுதியில் இது முற்றிலும் ஒழிந்துபோனது என்று நகர்ப்புறப் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் கல்வி மையத்தைச் சார்ந்த ஜோசப் ரெஜினால்ட் சொல்கிறார். இந்தத் தாவரத்தின் இலைகளில் ஆன்டிஆக்ஸிடாண்ட் தன்மைகளும், தாவர வேதியியல் பண்புகளும் இருக்கின்றன என்று சமீபத்து ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

ஏன் இந்தத் தாவரம் அழிவு அபாயத்தில் இருக்கிறது என்பது பற்றி இன்னும் பல ஆய்வுகள் நடத்தவேண்டும் என்று குன்ஹி கண்ணன் சொல்கிறார். “கோவை மான் ஜாக் விஷயத்தில் விதை மீளுருவாக்கம் நிகழ்வதில்லை., இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். தாவர மீளுருவாக்கத்திற்கு அதிமுக்கியமான அம்சமான மகரந்தச் சேர்க்கை இல்லாமல் போனதும், வசிப்பிடத்தில் ஏற்படும் தொல்லையும் முக்கியமான காரணங்கள். இதைப் பற்றி நிறைய ஆய்வுகள் நட்த்தப்பட வேண்டும்” என்கிறார் அவர்.

கோயம்புத்தூரின் சிங்காநல்லூர் ஏரி 280 ஏக்கர் நிலப்பரப்பில் தவழும் ஒரு நீர்நிலை. அது பல்லுயிர்களின் முக்கிய இருப்பிடம். இந்த ஏரியை மாதிரிச் சதுப்பு நிலமாக உருவாக்க வேண்டிய முக்கியத்துவத்தைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு சுற்றுப்புறச்சூழல் நிறுவனங்கள் முயன்று கொண்டிருக்கின்றன. சிங்காநல்லூர் ஏரி வலசைப் பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும் ஒரு முக்கியஸ்தலம். 2021-இல் இயற்கை ஆர்வலர்கள் இந்த ஏரியின் அருகே ஒரு புதிய பூச்சியினத்தைக் கண்டுபிடித்து அதற்கு ’அஸ்ஃபோண்டைலியா சிங்காநல்லூரென்ஸிஸ்’ என்று பெயரிட்டுள்ளார்கள்.

கோவை மான்ஜாக் என்ற தாவரம் அபூர்வமான அருகி வரும் தாவரம் என்பதால் முக்கியத்துவமானது என்கிறார் குன்ஹி கண்ணன்.

இந்தப் பகுதியில் 300-க்கும் மேலான ஏக்கர் பரப்பில் ஆய்வு செய்தபோது எங்கேயும் ஒரு கோவை மான்ஜாக் தாவரம்கூட தென்படவில்லை என்று ஜோசப் ரெஜினால்டு சொல்கிறார். “இந்த உள்ளூர்த் தாவரத்தின் வசிப்பிடம் மனிதனின் தலையீடுகளால், குறிப்பாக வேகமான நகரமயமாகுதல், ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் அருகி வருகிறது. ஒரு தாவர இனத்தின் அழிவு நல்லதுக்கு அல்ல. ஒவ்வொரு இனமும் முக்கியமானது. வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் தாவரயியல் பூங்காவில் இரண்டே இரண்டு கோவை மான்ஜாக் செடிகள் இருக்கின்றன. நாங்கள் அங்கே நட்ட இரண்டு மரக்கன்றுகள்தான் அப்படி வளர்ந்துள்ளன” என்கிறார் அவர்.

கோவை மான்ஜாக்கின் ஆபூர்வத்தன்மைதான் அதன் முக்கியத்துவம என்கிறார் குன்ஹிகண்ணன். கொஞ்ச காலத்திற்கு முன்பு கேரளாவில் சிக்கன்குன்யா பரவியபோது, கம்யூனிஸ்ட் பச்சா அல்லது சியாம் களை (கிரோமோலேனா ஓடராட்டா) என்ற தாவரத்தின் மருத்துவக் குணம் தெரியவந்தது. அதைப்பற்றி குன்ஹிகண்ணன் சொல்கிறார்: “இந்தத் தாவரம் (கம்யூனிஸ்ட் பச்சா) ஒரு களை; ஆனால் அதற்கு ஒரு பெரிய மருத்துவ குணம் உண்டு. சிக்கன்குன்யா போன்ற நோய்களை அது குணமாக்கும் என்று சில சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன. அதைப்போல, கோவை மான்ஜாக்கின் பயன்பாடும் முக்கியத்துவமும் விரிவாக ஆராயப்பட வேண்டும். அது எந்த நேரத்திலும் அழிந்துவிடும் அபாயம் இருப்பதால், நாம் இந்த ஆராய்ச்சியை வேகமாகச் செய்வது அவசியம்.”

கோவை மான்ஜாக்கின் பெரிக் கனிகள் பறவைகளுக்கும், வெள்ளை இளஞ்சிவப்புப் பூக்கள் தேனீக்களுக்கும் உபயோகமாக இருக்கின்றன. சுற்றுப்புறச்சூழல் குழு இரண்டு கோவை மான்ஜாக் கன்றுகளை சிங்காநல்லூர் ஏரியைச் சுற்றி நட்டுள்ளது.

கோவை மான்ஜாக்கின் பெரிக் கனிகள் பறவைகளுக்கும், வெள்ளை இளஞ்சிவப்புப் பூக்கள் தேனீக்களுக்கும் உபயோகமாக இருக்கின்றன. சுற்றுப்புறச்சூழல் குழு இரண்டு கோவை மான்ஜாக் கன்றுகளை சிங்காநல்லூர் ஏரியைச் சுற்றி நட்டுள்ளது. “நாங்கள் நட்டுள்ள கன்றுகளின் வளர்ச்சியைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் ஏராளமான கோவை மான்ஜாக் கன்றுகளை நடவிருக்கிறோம். அநேகமாக அடுத்த நான்கு மாதங்களுக்குள் 10 கன்றுகளை நடுவோம். நாங்கள் சிங்காநல்லூரைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அது நூற்றுக்கணக்கான தாவரங்களும் விலங்குகளும் ஒன்றிணைந்து வாழும் ஓர் அருமையான இடம்” என்கிறார் ஜோசப் ரெஜினால்டு.

Share the Article

Read in : English

Exit mobile version