Site icon இன்மதி

அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ, ஹிரோஷிமா பல்கலைக்கழகத்தில் எம்எஸ், டோக்கியோவில் வேலை: தமிழ் வழியில் படித்த முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவரின் சாதனை!

சுந்தரவேல் ஜப்பானிய பள்ளி மாணவர்களுக்கு ஜப்பானிய மொழியைக் கற்றுத் தருகிறார். இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு ஆன்லைன் மூலம் ஜப்பானிய மொழியைக் கற்றுத் தருகிறார்

Read in : English

தமிழ் வழியில் படித்த கிராமப்புறத்தைச் சேர்ந்த விளிம்பு நிலை மாணவர் எம். சுந்தரவேல் (28) அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ படித்து, பின்னர் ஹிரோஷிமா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். படித்து விட்டு, தற்போது டோக்கியோவில் உள்ள ஜப்பானிய நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.

கல்லூரியில் படிக்கும்போது தொடக்க மாதங்களில் ஆங்கில வழியில் படிக்க சிரமப்பட்ட சுந்தரவேல், தற்போது ஜப்பானியப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தருகிறார். தற்போது தமிழ்நாட்டிலிருந்து ஜப்பானில் வேலை செய்ய வந்த இரண்டு பேருக்கும் திருநெல்வேலியிருந்து ஜப்பானில் படிக்க வர இருக்கும் மாணவர் ஒருவருக்கும் ஆன்லைன் மூலம் ஜப்பானிய மொழியைக் கற்றுத் தருகிறார் இந்த முதல் தலைமுறைப் பட்டதாரி.

தர்மபுரியிலிருந்து நான்கு ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கெங்கான் கொட்டாய் கிராமத்தில் விளிம்பு நிலை குடும்பத்தில் பிறந்த சுந்தரவேல் படிப்பினால் முன்னேறிய தனது வாழ்க்கைக் கதையை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:

மலையை ஒட்டிய கிராமம் கெங்கான் கொட்டாய். இந்த ஊருக்கு வெளியே மலையை ஒட்டி உள்ள இடத்தில் எங்க வீடு இருந்தது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தது எனது குடும்பம். அப்பா முருகன், விவசாயக் கூலி வேலை செய்வார். வீடுகளுக்கு கூரை மேய்தல், கூரையில் ஓடு பதித்தல் போன்ற வேலைகளைச் செய்வார். அவரது வருமானத்தில் தான் குடும்பம் நடக்க வேண்டும். அப்பா பள்ளிக்கூடமே போகாதவர். என் அம்மா கலைவாணி 9ஆம் வகுப்புவரை படித்தவர்.

அப்பா முருகன், அம்மா கலைவாணியுடன் சுந்தரவேல்

கெங்கான் கொட்டாய் கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். பிறகு, 6ஆம் வகுப்பிலிருந்து 10ஆம் வகுப்புவரை எங்களது ஊரிலிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சோலைக்கொட்டாய் என்ற ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். பள்ளிக்கு நடந்து போய் நடந்து வர வேண்டும். மழை நாட்களில் போய் வருவது சிரமமாக இருக்கும். நானும் எனது அண்ணன் மணிவேலும் அப்படித்தான் பள்ளிக்கூடம் போய் வந்தோம். வீட்டில் மின்சார வசதி இல்லை என்பதால் மண்ணெண்ய் விளக்கில்தான் படிக்க வேண்டும்.

10ஆம் வகுப்புப் படிக்கும் போது, வகுப்புகள் முடிந்த பிறகு சிறப்பு வகுப்புகள் நடக்கும். அதன் பிறகு ஊருக்குப் போவது கஷ்டம். அதனால், சிறப்பு வகுப்புகளில் கலந்து கொள்ளாமல் ஊருக்குத் திரும்பிப் போக வேண்டிய நிலை ஏற்பட்டது. எனது நிலைமையைப் பார்த்த எனது தமிழ் ஆசிரியர் சண்முகம் சார், என்னையும் என்னைப் போன்ற மற்றொரு மாணவனையும் பள்ளியிலேயே உள்ள ஒரு அறையில் தங்கி இருக்க அனுமதி வாங்கித் தந்தார். மதிய உணவை சாப்பிட்டு விட்டு, இரவுக்கும் அதே சாப்பாடை வாங்கி வைத்துக் கொள்வோம். அதனால், பள்ளிக் கூடம் முடிந்தும் பள்ளிக்கூடத்திலேயே நீண்ட நேரம் படிப்பேன். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஊருக்குப் போய்விட்டு வருவோம்.

எங்களது வகுப்பு ஆசிரியர் மோகன் சார், கணிதப் பாடத்தையும் ஆங்கிலப்பாடத்தையும் சொல்லித் தருவார். நிறைய மார்க் வாங்கினால், அடுத்த ஆண்டும் படிக்க  நோட்டுப் புத்தகம் வாங்கித் தருவதாவும் படிப்புச் செலவைப் பார்த்துக் கொள்வதாகவும் சொன்னார்.

நான் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றபோதுஅரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த 10 மாணவர்கள்தனியார் பள்ளியில் அரசு செலவில் படிக்க வைக்கப்படுவார்கள் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வந்தது. அப்போது தர்மபுரி மாவட்ட கலெக்டராக இருந்த அமுதாஎனக்கும் அந்த வாய்ப்பைத் தந்தார்.

இதற்கிடையே, 2008ஆம் ஆண்டில், 10ஆம் வகுப்புத் தேர்வில் 500க்கு 478 மதிப்பெண்கள் பெற்றேன். கணிதத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள். நான் படித்த அரசுப் பள்ளியிலே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றேன். நான் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றபோது, அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த 10 மாணவர்கள், தனியார் பள்ளியில் அரசு செலவில் படிக்க வைக்கப்படுவார்கள் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வந்தது. அப்போது தர்மபுரி மாவட்ட கலெக்டராக இருந்த அமுதா, எனக்கும் அந்த வாய்ப்பைத் தந்தார். அதனால் தர்மபுரியில் உள்ள விஜய் வித்யலாயா என்ற மெட்ரிக்குலேஷன் பள்ளியில் கணிதம், உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தேன். படிப்புச் செலவு அனைத்தையும் அரசே பார்த்துக் கொண்டது.

பிளஸ் ஒன் வகுப்பில் தமிழ் வழியில் படித்த ஆயிரம் மாணவர்களுக்கு தமிழக அரசு இலவசமாகக் கம்ப்யூட்டரை வழங்கியது. அதுவும் எனக்குக் கிடைத்தது. அப்போது கம்ப்யூட்டரை ஓப்பன் பண்ணக்கூடத் தெரியாது. எனது அண்ணன் பாலிடெக்னிக்கில் படித்ததால், கம்ப்யூட்டரை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லித் தருவார்.

2010ஆம் ஆண்டு பிளஸ் டூ தேர்வை எழுதினேன். அந்தத் தேர்வில் 1200க்கு 1141 மதிப்பெண்கள் பெற்றேன். பொறியியல் படிப்புக்கான எனது கட் ஆப் மதிப்பெண்கள் 197.5. மருத்துவப் படிப்புக்கான எனது கட்ஆப் மதிப்பெண்கள் 193.5. மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்கவில்லை. எங்க அப்பா சிவில் என்ஜினியரிங் பாடப்பிரிவை எடுத்துப் படிக்கச் சொன்னார். சென்னையில் இருக்கும் எங்கள் ஊர்க்காரர்,  ஆட்டோமொபைல் என்ஜினியரிங் எடுத்துப் படிக்கும்படியும், அதை எடுத்துப் படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்றும் சொன்னார். அண்ணா பல்கலைக்கழகத்தின் குரோம்பேட்டை எம்ஐடியில் ஆட்டோÔமொபைல் என்ஜினியரிங் படிப்பில் இடம் இருந்தது. கோவையில் சிவில் என்ஜினியரிங் படிக்க இடம் இருந்தது. இருந்தாலும் நான் சென்னையில் படிக்க விரும்பி, குரோம்பேட்டை எம்ஜடியில் பி.டெக். ஆட்டோமொபைல் என்ஜினியரிங் படிப்பில் சேர முடிவு செய்தேன்.

அடுத்து படிக்க பணத்துக்கு என்ன செய்வது என்று யோசனையில் இருந்த எங்களிடம், அகரம் பவுண்டேஷன் மூலம் கல்லூரியில் படிக்க உதவி பெறலாம் என்று வேதியியல் ஆசிரியையான அகிலாராணி டீச்சர் யோசனை கூறினார். இதையடுத்து, அதற்கு விண்ணப்பித்தேன். அகரம் மூலம் எனக்குப் படிக்க உதவி கிடைத்தது. கல்லூரியில் «ச்ர்ந்ததும் மற்ற கிராமப்புறத்து மாணவர்களைப் போல நானும், ஆங்கிலத்தில் நடத்தப்படும் வகுப்புகள் புரியாமல் கஷ்டப்பட்டேன். விடுதியில் எனது அறையில் இருந்த நண்பர்கள் எனக்குப் பாடங்களைச் சொல்லித் தந்து புரிய வைப்பார்கள். அப்படியே கொஞ்சம் கொ]ஞ்சமாக ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்டேன்.

அடுத்த ஆண்டில், மருத்துவப் படிப்புக்கான கவுன்சலிங்கிற்கு விண்ணப்பித்தேன். ஆனால் எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைக்கவில்லை. பிடிஎஸ் படிப்பில் இடம் கிடைத்தது. அதில் அவ்வளவாக விருப்பமில்லை. அதனால், பிடிஎஸ் படிப்பில் சேரவில்லை. நான் ஏற்கெனவே படித்து வந்த பொறியியல் படிப்பையே தொடர்ந்தேன்.

கல்லூரியில் படிக்கும்போது, Shell Eco Marathan Race 2014 என்ற போட்டி பிலிப்பின்ஸ் நாட்டில் நடந்தது. அதில் எம்.ஐ.டி. சார்பில் நடந்த போட்டியில் நாங்கள் கலந்து கொண்டோம். அந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் உருவாக்கிய மினி கார் உரிய நேரத்தில் வந்து சேரவில்லை. அதனால், ஷெல் நிறுவனத்தை அணுகி பிரச்சினையைச் சொல்லி, டிஎல்எஸ் பல்கலைக்கழகத்தின் உதவியுடன், அங்கேயே இரண்டு நாட்களிலேயே புதிய மினி காரை வடிவமைத்தோம். எங்களால் அந்த மினி கார் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. இருந்தாலும், எங்களது முயற்சியைப் பாராட்டும் வகையில் Preseverance and sprit Award என்ற விருதை அவர்கள் வழங்கினார்கள். ஆனால், பிலிப்பின்ஸ் பயணத்துக்கு மாணவர்கள் சொந்தச் செலவில் தான் போக வேண்டும். அதற்கு ரூ.70 ஆயிரம் தேவைப்பட்டது. வீட்டிலிருந்த அம்மாவின் நகையை அடகு வைத்து, அப்பா எனக்கு அந்தப் பணத்தைக் கொடுத்தார்.

2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஜப்பானில் ஹிரோஷிமா பல்கலைக்கழகத்தில்  மெக்கானிக்கல் சிஸ்டம் என்ஜினியரிங் பாடப்பிரிவில் எம்எஸ் படிப்பில் முழுக் கல்வி உதவித் தொகையுடன் படிக்க இடம் கிடைத்தது.

குரோம்பேட்டை எம்ஜடியில் பிடெக் படித்து முடித்ததும் கேம்பஸ் இன்டர்வியூ மூலம சென்னையில் ரெனால்ட் நிஸான் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கு மூன்று ஆண்டுகள் வேலை பார்த்தேன். இடையிலேயே நான் படித்த கல்லூரிக்கு வந்த போது ஜப்பானில் ஹிரோஷிமா பல்கலைக்கழகத்தில் படிக்கலாம் என்ற விளம்பர அறிவிப்பைப் பார்த்தேன். அதற்கு விண்ணப்பித்தேன். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடந்தது. அதையடுத்து 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அங்கு மெக்கானிக்கல் சிஸ்டம் என்ஜினியரிங் பாடப்பிரிவில் எம்எஸ் படிப்பில் முழுக் கல்வி உதவித் தொகையுடன் படிக்க இடம் கி கிடைத்தது.

முதல் ஆறு மாதங்கள ஐப்பான் மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதைக் கற்றுக் கொண்டேன். என்னுடன் படித்த சீன, வியட்நாமிய மாணவர்களுடன் பழகுவேன். அவர்களுடன் ஜப்பான் மொழியில் பேசி எனது ஜப்பானிய மொழித் திறனை வளர்த்துக் கொண்டேன். 2019ஆம் ஆண்டு அக்டோபரில் படித்து முடித்ததும். தைக்கோ நிஷிகாவா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கு இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தேன். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டோக்கியோவில் சியோடா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சீனியர் என்ஜினியராகப் பணிபுரிகிறேன்.

யுனிவர்சிட்டி ஆஃப் தி பீப்பிள் என்ற அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கடந்த டிசம்பரில் எம்பிஏ படித்து முடித்தேன். நிர்வாகப் பொறுப்பில் சில ஆண்டுகள் ஜப்பானில் பணிபுரிந்து விட்டு இந்தியாவில் எங்களது ஊர் உள்ள பகுதியில் ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்பது எனது விருப்பம். எப்படி எதிர்காலம் இருக்கும் என்று பார்ப்போம் என்கிறார் சுந்தரவேல்.

Share the Article

Read in : English

Exit mobile version