Site icon இன்மதி

தமிழகத்தில் பாஜக வளர்ந்தால் மக்களுக்கு நன்மை கிடைக்குமா?

2011ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும் போது பாஜக தனது வாக்கு வங்கியை இரட்டிப்பாக்கியுள்ளதுடன் மேலும் இடங்களைப் பெற்றுள்ளது.

Read in : English

தமிழகத்தில் சமீபத்தில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், முதல்முறையாக தனித்து நின்று களம் கண்டு தனது  தடத்தை பதித்துள்ளது பாஜக.

தமிழகத்தில் நடக்கும் தேர்தல்கள் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு விதமான கவன ஈர்ப்பு அரங்கேறும். பொதுவாக மாநில கட்சிகள், திராவிட அடையாளம் கொண்ட கட்சிகள் தான் தேர்தல்களில் வெற்றி பெறும். அதையும்மீறி ஒவ்வொரு தேர்தலிலும் சுவாரசியமாகவும் ஆச்சரியப்படுத்தும் விதத்திலும் சில விஷயங்கள் நடக்கும். இந்த முறை ஆச்சரியத்தை தன்வசப்படுத்தி இருக்கிறது பாஜக.

இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அதிமுக கட்சியுடன் கூட்டணி வைக்காமல் தனித்து நிற்கும் பாஜகவின் முடிவு பரவலாக விமர்சிக்கப்பட்டது. இதற்கு காரணம் மத்தியில் இரண்டு முறை  பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்தாலும், தமிழகத்தைப் பொருத்தவரை பாஜகவின் சிறுபான்மை எதிர்ப்பு நிலைப்பாடு, அக்கட்சியை வாக்காளர்களிடமிருந்து ஒதுக்கி வைத்திருந்தது.

இந்த நிலையை மாற்றி தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்றால், தனித்து நின்று தேர்தலை எதிர்கொண்டு மக்களின் நாடித்துடிப்பை அறிய வேண்டும் என்றும் , உள்ளாட்சியில் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றும் பாஜகவினர் நீண்டகாலமாக கோரிக்கை வைத்திருந்தனர். தற்போது அதிமுகவில் தலைமை சிக்கல் எழுந்துள்ளதால் தனது வாக்கு வங்கியில் இழப்பை சந்தித்திருக்கிறது. இதனால் பாஜகவினரின் நீண்டநாள் கனவு தற்போது நிறைவேறியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, மாநில கட்சிகளுடனான கூட்டணி இல்லாமல் எந்த ஒரு தேசியக்கட்சியும் தேர்தலை எதிர்கொள்ளவே முடியாது என்ற நிலை தான் இதுவரை தொடர்ந்து வந்துள்ளது. இதற்கு சிறந்த உதாரணம், காங்கிரஸ். தனித்து நின்றால் மிகப்பெரிய சரிவைச் சந்திக்கும் அளவுக்கு வாக்கு வங்கியை இக்கட்சி இழந்துள்ளது. இப்படி ஒரு சூழலில் தனித்து நின்று தேர்தலை எதிர்கொள்ளும் பாஜகவின் முடிவு, பலரை ஆச்சரியத்தில் புருவம் உயர்த்தச் செய்துள்ளது.

மற்ற தேசியக் கட்சிகளைப் போல பாஜகவும் இதுவரை தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் நிலைப்பாட்டுக்கு செல்லவே இல்லை. இதற்கு முக்கிய காரணம், முன்பிருந்த பாஜக தலைவர்களின் வயது மூப்பு உள்பட பல்வேறு நடைமுறை சிக்கல்கள். அதனால் அவர்கள் இந்த அதிரடி முடிவை எடுத்திருக்கவில்லை. ஆனால் தற்போது தமிழக பாஜக தலைவர் பதவியில் அமர்ந்திருக்கும் அண்ணாமலை, இளைஞர் என்பதால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு அதிரடி முடிவுகளையும் நகர்வுகளையும் துணிச்சலாக கையில் எடுக்கிறார்.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து, கட்சிக்கு புது ரத்தம்  பாய்ந்துள்ளது. கட்சியின் கொள்கைகளை தயக்கமே இல்லாமல், தைரியமாக முன்னெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு தமிழக பாஜகவினர் வந்துள்ளனர். பெரும்பாலானவர்களின் ஒத்த கருத்துக்கு உடன்படாமல், உண்மையை அறிந்து கொள்ளும் ஆர்வம் இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது.

ஐந்து தசாப்தங்களாக தமிழகத்தை ஆளும் திராவிட கட்சிகளை எதிர்த்துமிகப்பெரிய ஆளுமையாக மாற வேண்டுமென்றால் அதற்கு சில காலம் தேவைப்படும் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனாலும் ஐந்து தசாப்தங்களாக தமிழகத்தை ஆளும் திராவிட கட்சிகளை எதிர்த்து, மிகப்பெரிய ஆளுமையாக மாற வேண்டுமென்றால் அதற்கு சில காலம் தேவைப்படும் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதை உணர்ந்து சரியாக காய் நகர்த்துகிறது பாஜக. தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநிலம் முழுக்க, பல்வேறு இடங்களில் திமுக கூட்டணியை நேரடியாக எதிர்த்து களம் கண்டுள்ளது. நீட் விவகாரம், இந்துப் பெண் தற்கொலை, தரமில்லாத பொங்கல் பரிசு பொருட்கள், சமூக ஆர்வலர் மாரிதாஸ் கைது விவகாரம், நிலக்கரி ஊழல் ஆகிய விவகாரங்களை கையில் எடுத்துக் கொண்டு தேர்தலை எதிர்கொண்டது.  மத்திய அரசின் கொள்கைகள், மேம்பாட்டு திட்டங்களை தமிழக மக்களிடம் நேர்மறையாக கொண்டு சேர்க்கும் பட்சத்தில், பாஜகவிற்கு இங்கு பெரிய எதிர்காலம் உண்டு என்பதை இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறிப்புணர்த்தியுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில், சிலர் பாஜக மற்றும் காங்கிரஸின் வாக்கு வங்கியை தவறாக ஒப்பீடு செய்துள்ளனர். தேர்தலில் பாஜக 2.1 சதவீத வாக்கு வங்கியைப் பெற்றுள்ளது. எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால், பல லட்சம் வாக்குகளை வாங்கியிருக்கிறது. பாஜகவின் இந்த தனித்த வளர்ச்சியை யாரும் மறுக்கவே முடியாது.

தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி நாங்கள்தான் என்று கூறிக்கொள்ளும் காங்கிரஸ், தனித்து நின்றால் வாக்கு வங்கியில் மிக மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்பதே உண்மை. திமுக என்ற மிகப்பெரிய மாநில கட்சியின் பின்னால் நின்று கொண்டு களம் காணும் காங்கிரஸை, சில ஊடகங்கள் தூக்கி நிறுத்தி பிடித்து உண்மைத் தகவல்களை மறைத்து வருகின்றன.

2011 உள்ளாட்சித் தேர்தலுடன் ஒப்பிடும்போதுபாஜக தனது வாக்கு வங்கியை இரட்டிப்பாகியுள்ளது.

2011 உள்ளாட்சித் தேர்தலுடன் ஒப்பிடும்போது, பாஜக தனது வாக்கு வங்கியை இரட்டிப்பாகியுள்ளது. குறிப்பாக வட தமிழ்நாடு உள்பட பல மாவட்டங்களில் பரவலாக வெற்றி பெற்று, 308 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதுமட்டுமின்றி மிகச்சிறப்பான தலைமையால், கன்னியாகுமரி மாவட்டத்தில் சக்தி வாய்ந்த கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. இதுவரை நடந்த தேர்தல்களில் பலமுனைப் போட்டிகள் இருந்தாலும் தொடர்ந்து ஒரு சில கட்சிகளே வெற்றி பெற்றுள்ளன. அந்த நிலை தற்போது மாறியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் 50 ஆண்டுகளுக்கு முன் இருந்த தனது பலத்தை தற்போது நாடு முழுவதும் இழந்து, மீட்க முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழக ஊடகங்கள், மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்த உண்மைத் தன்மையை மறைத்து வந்திருக்கிறது. ஆனாலும் மத்திய அரசின் முக்கிய நலத்திட்டங்களான முத்ரா கடன் திட்டம், வீடுகளுக்குக் குழாய் குடிநீர் திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம், 5 நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு, இலவச சமையல் எரிவாயுத் திட்டம், பெண் குழந்தைகள் திட்டம், சிறு விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு திட்டம், நேரடி பண பரிமாற்ற திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களின் வீச்சு காரணமாக, தமிழகத்தில் பாஜக தற்போது காலூன்றி உள்ளது.

தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய இரண்டு கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படும் சில ஊடகங்கள், திராவிடக் கொள்கைகளை தூக்கிப்பிடித்து வந்துள்ளன. குறிப்பாக, அதன் தலைவர்கள் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான மனநிலையை இளைஞர்களிடம் பாஜக உருவாக்கி வைத்துள்ளன.

இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், அரசு நிர்வாகத்தை மேம்படுத்தி புதுப்பொலிவு அளிப்பதற்காக தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் மக்களுக்கான சேவைகளும், நலத்திட்டங்களும் சரியாக அவர்களிடம் சென்று சேரும். இந்த நிலை தற்போது உருவாகியுள்ளது. தேசிய அளவிலான விவகாரங்கள் தற்போது பேசுபொருளாக இருக்கிறது.

எதிர்காலங்களில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தல்களில் இந்த விவகாரங்கள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். குறுகிய வட்டத்திற்குள் நிறுத்தாமல் தேசிய அளவிலான திட்டங்கள் பரவலாக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு அனைத்து திட்டங்களின் உண்மைத்தன்மை சென்று சேரும். அவர்கள் எந்தவித கையூட்டுமில்லாமல், தங்களுக்கான மத்திய அரசுத் திட்டங்களை எந்த தடையுமின்றி பெற முடியும். இல்லை எனில், வழக்கம்போல தேர்தல்களில் தவறான வழிகளில் பணப்புழக்கம் நடந்து அதன் நோக்கத்தையே சிதைத்துவிடும். இது ஒருபுறம் இருக்க, மாநிலத்தில் சமூகத்தின் மீது பொறுப்பு கொள்ளாமல் அறிவை மட்டும் வளர்த்துக் கொண்டே செல்லும் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்த உருவாகவுள்ளது இதுவும் தடுக்கப்பட வேண்டும்.

Share the Article

Read in : English

Exit mobile version