Site icon இன்மதி

சென்னை மாநகராட்சியில் பாஜகவின் ஒரு தொகுதி வெற்றியை எப்படிப் பார்க்க வேண்டும்?

(Credit: Twitter handle of K Annamalai)

Read in : English

தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் தனது ஆதரவை திமுக தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இல்லாமல் தனித்து 198 தொகுதிகளில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றும் சில வார்டுகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்தும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு மாம்பலம் 134-வது வார்டில் பாஜக வென்றுள்ளது. பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட உமா ஆனந்தன் 5,539 வாக்குகள் பெற்று அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி பாஜகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வார்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்திருக்ககூடும் என்பதும் அதுவும் பாஜகவின் வெற்றிக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிகிறது.

மேற்கு மாம்பலம் 134-வது வார்டில் பாஜக வென்றுள்ளது. இந்த வெற்றி பாஜகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 20 வார்டுகளில் பாஜக இரண்டாம் இடம் பெற்றுள்ளது. அதில் கோடம்பாக்கம், கோபாலபுரம், சாலிகிராமம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், தேனாம்பேட்டை, நங்கநல்லூர், வேளச்சேரி, அண்ணா நகர் போன்ற முக்கிய இடங்கள் உள்ளடங்கும். இந்த இடங்கள் பாஜகவின் முக்கிய ஓட்டு வங்கியாக இருக்கும் பிராமணர்கள், வேறு மாநிலங்களிருந்து இருந்து குடிப்பெயர்ந்தவர்கள், உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் அதிகம் வசிக்கும் இடங்களாக இருக்கின்றன. வீடு வீடாக சென்று பிராமணர்களிடம் ஓட்டுசேகரித்தது பாஜகவுக்கு ஆதரவு வாக்குகளைப் பெற்றுத் தந்துள்ளது.

அவர்களின் வாக்குகள் மட்டுமே பாஜகவின் வெற்றிக்குக் காரணம் என்று கூறிவிட முடியாது. ஜெயலலிதாவின் மறைவுக்கு அதிமுகவில் ஏற்பட்ட தலைமை மாற்றங்கள் அக்கட்சிக்கு மக்களிடம் இடம் இருந்த ஆதரவு குறைந்து, அந்த ஆதரவு பாஜக பக்கம் திரும்பியுள்ளதாகக் கருத வேண்டியுள்ளது. இதுவே சில வார்டுகளில் பாஜகவின் இரண்டாவது இடத்தைப் பிடித்தற்கான காரணம்.

வட சென்னை வார்டுகளான மாதவரம், எம்.எம்.டி.ஏ போன்ற இடங்களில் அதிமுக மூன்றாம் இடத்தையும் பாஜக இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது. அதிமுகவில் வலுவான தலைமை இல்லாமல் இருப்பதும், அக்கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளும் அதிமுகவின் இந்தப் பின்னடைவுக்குக் காரணமாக உள்ளது.

வீடு வீடாக சென்று பிராமணர்களிடம் ஓட்டுசேகரித்தது பாஜகவுக்கு ஆதரவு வாக்குகளைப் பெற்றுத் தந்துள்ளது.

நான் வசிக்கும் வார்டில் அதிகளவில் பிராமணர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் ஓட்டுகளை பெறுவதில் பாஜகவினர் ஈர்த்துள்ளனர். இளம் தலைமுறையினரைவிட பெரியவர்கள் அதிகம் இருப்பாதால் அவர்கள் வாக்குகளைப் பெறுவது  பாஜகவினருக்கு எளிதாக இருந்தது. இருந்தாலும், மற்ற தரப்பினர் திமுகவினருக்கே ஆதரவு அளித்தனர்” என்கிறார் கோபாலபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ்.

சௌகார்பேட்டையை சேர்ந்த முஸ்கான் ஜெயின் கூறுகையில், “தமிழகத்தில் திமுக ஆட்சி செய்கிறது. இந்த ஆட்சி மக்களுக்கு பல நல்ல முன்னேற்ற காரியங்களை செய்துவருதை பார்க்கிறோம். மேலும் இவை தொடர நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்திலும் திமுகவினர் வரவேண்டும்” என்றார்.

நான் எப்போதும் திமுகவுக்கோ அதிமுகவுக்கோ தான் ஓட்டுப்போடுவேன். ஆனால் இரண்டு கட்சிகளும் வாக்களிக்காமல் வேற கட்சிக்கே இந்தமுறை வாக்களித்தேன். இயல்பானவற்றிலிருந்து மாறுபட்டு இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுவோருக்கே வாக்களித்தேன். அது பெரிய மாற்றங்களுக்கான சிறு துவக்கமாகவும் ஆதரவாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்”, என்றார் கொருக்குப்பேட்டையை சேர்ந்த கௌதம்.

சென்னையில் வெள்ளத்தின்போது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மக்களிடம் வாக்களிக்கும் போது தாக்கத்தை ஏற்படுத்தியதா? என்று கேட்டபோது, அதை கருத்தில்கொண்டு வாக்களிக்கவில்லை என்றும், நல்லாட்சியை விரும்பியே வாக்களித்ததாகவும் பலர் தெரிவித்தனர். சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்றதை கருத்தில்கொண்டு பலர் உள்ளாட்சியிலும் திமுகவினரையே தேர்ந்தெடுத்தும் உள்ளனர் என்பதை வாக்காளர்களிடம் பேசியதிலிருந்து அறியமுடிகிறது.

மக்களிடையே திராவிட கட்சிகளிருந்து ஒரு மாறுபட்ட கட்சியும் கொள்கைகளையும் உடைய பாஜக வாக்காளர்களை கவரும் வகையில் பெரிதும் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என்றாலும் ஒரு வார்டில் வெற்றி பெற்றுவிட்டது அக்கட்சிக்கு நம்பிக்கை அளிக்கும் விஷயம்தான்.

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் என்பது அந்தந்தப் பகுதியில் உள்ள பிரச்சினைகளையும் போட்டியிடும் பிரமுகர்களையும் பொருத்தது. எனவே, இந்த ஒரு வார்டில் வெற்றி பெற்றதால் சென்னையில் பாஜகவுக்கு என குறிப்பிட்ட பகுதியில் வாக்கு வங்கி இருந்தாலும்கூட, நாடாளுமன்ற தேர்தலிலோ, சட்டப்பேரவைத தேர்தலிலோ தனித்துப் போட்டியிட்டு இதுபோன்ற வெற்றியைப் பெறும் அளவுக்கு பெரிய வாக்கு வங்கி இருப்பதாகக் கருத முடியாது. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும், அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என்ற பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக தொடரும் என்பதையே காட்டுகிறது. எதுஎப்படி இருப்பினும், சென்னை மாநகராட்சியில் பாஜக அடியெடுத்து வைத்து விட்டது.

Share the Article

Read in : English

Exit mobile version