Site icon இன்மதி

45வது சென்னைப் புத்தகக்காட்சி தொடங்கியது!: எந்தப் புத்தகங்களுக்கு வாசகர்களிடம் வரவேற்பு?

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 45வது சென்னைப் புத்தகக்காட்சி தொடங்கியது. பிப்ரவரி 16ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் புத்தகக்காட்சியில் சுமார் 800 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. ஆன்லைன் மூலம் நுழைவு டிக்கெட்டுகளைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இணையதள முகவரி: www.bapasi.com.

Read in : English

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் 45வது ஆண்டாக நடைபெறும் சென்னைப் புத்தகக்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கடந்த ஜனவரி மாதம் நடைபெற வேண்டிய கண்காட்சி கொரோனா மூன்றாம் அலைப் பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு, தற்போது பிப்ரவரி 16ஆம் தேதி தொடங்கி மார்ச் 6ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. புத்தகக்காட்சியில் எது புதிது? என்ன மாதிரி புத்தகங்களுக்கு வாசகர்களிடம் வரவேற்பு உள்ளது?

“தமிழ் புத்தகங்களை பொறுத்தவரை ஜெயகாந்தன், பாரதியார் போன்றவற்றை படிக்கும் வாசகர்கள் அதிகம். ஆங்கில மொழி வாசகர்களைப் போல புதிய புத்தகங்களையோ அல்லது புதிய ஆசிரியர்களை எதிர்பார்க்கும் வாசக வட்டம் போன்றதல்ல அது. ஒரு சாகித்திய அகாதெமி விருது கிடைக்கும் வரை அந்த எழுத்தாளரைப் பற்றி அதிகம் வெளியே தெரிவதில்லை. விருது கிடைத்த பின்பு அவரது எல்லா புத்தகங்களும் சிறப்பாக விற்க ஆரம்பித்துவிடும். வெகுஜன ஊடகங்களுக்கு சினிமாவின் மீதுள்ள அளவுக்கு ஆர்வம் புத்தகங்களின் மீதோ அல்லது எழுத்தாளர்கள் மீதோ இருப்பதில்லை. புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டியது ஊடகங்களின் கடமை” என்கிறார் காலச்சுவடு பதிப்பகத்தின் உரிமையாளர் கண்ணன். “மக்களிடம் வாசிப்பின் மீதான ஆர்வம் கூடியுள்ளது. ஆனால் வாசிப்பு மக்களிடம் இன்னும் பெரிதாகப் பரவலாகவில்லை” என்கிறார் அவர்

சினிமாவின் மேலுள்ள ஆர்வம் வெகுஜன ஊடகங்களுக்கு புத்தகங்களின் மீதோ அல்லது எழுத்தாளர்கள் மீதோ இருப்பதில்லை. புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டியது ஊடகங்களின் கடமை. என்கிறார் காலச்சுவடு பதிப்பகத்தின் உரிமையாளர் கண்ணன்.

பேராசிரியர் மற்றும் வரலாற்று அறிஞர் சாலமன் பெர்னார்ட் ஷாவின் தூத்துக்குடி துப்பாக்கிசூடு பற்றிய ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி’ புத்தகம் இந்த புத்தகக்காட்சியில் இடம்பெற உள்ளது. “ஆனால் பெரும்பாலானவர்கள் சொல்வது போன்று வாசிப்புப் பழக்கம் குறையவில்லை. மாறாக நிறைய இளைஞர்கள் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழ் புத்தகங்களை அதிகம் படிக்கிறார்கள் என்கிறார் பெர்னார்ட் ஷா.

முற்போக்கு இலக்கியத்திற்கு மவுசு கூடியுள்ளது என்கிறார் நாட்டுப்புறவியல் அறிஞர் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன்.  புத்தகங்களும் பிரபலமாக விற்பனை ஆகின்றன. மற்றொரு பக்கம் நல்ல புதினங்கள் படிப்பவரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. “முன்பு போல ரயில் பயணங்களில் பேசுவது குறைந்து படிப்பது அதிகமாயிருக்கிறது. விமான பயணங்களின் போதும் விமான நிலையங்களில் காத்திருக்கும்போது படிப்பவர்களின் எண்ணிக்கையும் கூடியுள்ளது. இவர்கள் அதிகம் படிப்பது புதினங்கள்” என்று சொல்கிறார் சிவசுப்பிரமணியன்.

முற்போக்கு இலக்கியத்திற்கு மவுசு கூடியுள்ளது என்கிறார் நாட்டுப்புறவியல் அறிஞர் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன்.  பெரியாரை பற்றியும் அம்பேத்கரை பற்றியும் வரும் புத்தகங்களும் பிரபலமாக விற்பனை ஆகின்றன.

“இந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொதுமுடக்கம் குழந்தைகள் இலக்கியம் அதிகம் வளர உதவியுள்ளது. “கைபேசிகளிடம் முடங்கிப்போகும் குழந்தைகளுக்கு ஒரு மாற்று புத்தகங்கள்” என்கிறார் பாரதி புத்தகாலயத்தின் நிர்வாகி நாகராஜன்.

ஆனால், குழந்தைகள் இலக்கியம் குழந்தைகள் உலகத்தை அவர்களது பார்வையில் இருந்து அணுகவேண்டும் என்கிறார் உயிர் பதிப்பகத்தை நடத்தி வரும் சண்முகானந்தம். “பெரியவர்கள் பார்வையில் எழுதப்படும் குழந்தைகள் இலக்கியம் எந்த அளவுக்கு குழந்தைகளுக்கானதாக இருக்கும் என்பது கேள்விக்குறி” என்று கூறும் சண்முகானந்தம், சூழலியல் புத்தகங்களுக்கும் நல்ல வரவேற்பு இருப்பதாக கூறுகிறார். மூன்றாம் உலகநாடுகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த புத்தகங்களும் அதிகம் வாசிக்கப்படுகின்றன என்கிறார் அவர்.

புத்தகங்களை தவிர்த்து, பிரிண்ட் ஆன் டிமாண்ட் எனப்படும் தேவைக்கேற்ப குறைந்த எண்ணிக்கையில் புத்தகங்களை அச்சடிக்கும் முறை பதிப்பகத்தினரிடமும் எழுத்தாளர்களிடமும் பிரபலமாகி வருகிறது. முன்பு போல அதிக எண்ணிக்கையில் புத்தகம் அடித்து அவை விற்று தீரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. எவ்வளவு தேவையோ அவ்வளவு அச்சடித்தால் போதும். “அதிகம் மூலதனம் தேவைப்படாத இந்த முறை இளம் எழுத்தாளர்களிடம் சமீப காலங்களில் மிகவும் பிரபலமாகி வருகிறது” என்கிறார் எமரால்டு பதிப்பக உரிமையாளர் ஒளிவண்ணன். ஆனால், இந்த புதியமுறையால் புத்தகங்களின் தரம் குறைவதாக சலிப்படையும் சில பதிப்பகத்தினரும் இல்லாமலில்லை.

Share the Article

Read in : English

Exit mobile version