Site icon இன்மதி

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளை எந்த அரசியல்வாதிகள் நடத்துகிறார்கள்?

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும்கூட, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் லட்சக்கணக்கான ரூபாய் கட்டணத்தை சாமானியக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களால் செலுத்த முடியாது.

Read in : English

நீட் விவாதப்பொருளாகியுள்ள தமிழ்நாட்டில், தனியார் மருத்துவ கல்லூரிகள் யாரால் நடத்தப்படுகின்றன என்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. நமது நாட்டை பொறுத்தவரை தனியார் மருத்தவ கல்லூரிகள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ் நாடும் ஒன்று. 1942ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட வேலூர் கிறிஸ்தவ மருத்தவ கல்லூரி முதல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கல்லூரிகள் வரை, தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரிகள் அதிகம். இந்த மருத்துவக் கல்லூரிகளை நடத்துவது யார் என்பது ஒரு சுவாரஸ்யமானது.

தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பெரியவைகளில் ஒன்று காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி பாரிவேந்தர் என்றழைக்கப்படும் டி.ஆர். பச்சமுத்து தொடங்கிய கல்லூரிகளில் ஒன்று. இந்திய ஜனநாயக கட்சி நிறுவனரான பச்சமுத்து கடந்த 2019ஆம் வருடம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு திருச்சியிலும் ஒரு மருத்துவக் கல்லூரி உண்டு.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கென்று ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்ற எண்ணம் 1980களில் ஏற்பட்டது. எம்ஜிஆர் ஆட்சியில் இருந்த அந்த காலகட்டத்தில் ஒரு மூவர் நிபுணர்குழு இதை ஆராய்ந்து மருத்துவ பல்கலைக்கழகத்தைத் தொடங்குவ•ற்கு பரிந்துரைத்தது. 1988ஆம் ஆண்டுக்கு முன்பு வரை வழங்கப்பட்ட மருத்துவ பட்டங்கள் எல்லாம் சென்னைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டவை. எம்ஜிஆர் மறைந்தபின்பு தொடங்கப்பட்ட  மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு அவரது பெயரே வைக்கப்பட்டது.

எம்ஜிஆருக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்பட்ட என்.பி.வி. ராமசாமி உடையார் 1985இல் ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவ கல்லூரியை ஆரம்பிக்கிறார். அதே ஆண்டில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியைத் தொடங்குகிறது.


அது போன்று தமிழகத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கான விதையும் எம்ஜிஆர் காலத்திலே தூவப்பட்டது எனலாம். வேலூரில் உள்ள கிறித்தவ மருத்துவ கல்லூரியின் கதை வேறு. எம்ஜிஆருக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்பட்ட என்.பி.வி. ராமசாமி உடையார் 1985இல் ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவ கல்லூரியை ஆரம்பிக்கிறார். அதே ஆண்டில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியைத் தொடங்குகிறது.

தங்களுக்கு இவ்வளவு நன்கொடை அளித்தால் எம்பிபிஎஸ் சீட் கிடைக்கும் என்று நாளிதழில் விளம்பரம் வெளியிட்ட கல்லூரி ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி என்று பத்திரிகையாளர்கள் நினைவு கூர்கிறார்கள். நன்கொடை காலப்போக்கில் கட்டய நன்கொடை எனப்படும் கேபிடேஷன் கட்டணமாக உருமாறியதன் பின்பு, தமிழக அரசு தனியார் கல்லூரிகளின் கட்டண கொள்ளையை தடுக்க 1992ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவந்தது. ஆனால்,  மணிபால் நிறுவனங்களை நடத்தும் டிஎம்ஏ பய் தொடர்ந்த வழக்கில் 2003ஆம் ஆண்டு  தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தனியார் கல்லூரிகளில் நிர்வாக விஷயங்களில் அரசு மூக்கை நுழைப்பதை கண்டித்ததை தொடர்ந்து, தனியார் கல்லூரி நிறுவனங்கள் கடிவாளம் அறுந்த  குதிரை போன்றாகி விட்டன.

2000ஆவது ஆண்டுக்குப் பிறகு, தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை கூடிவிட்டது. ஒரு மருத்துவ கல்லூரியின் இயல்பான பரிணாம வளர்ச்சி என்பது பெயர் வாங்கிய ஒரு மருத்துவமனை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து 500 அல்லது 1000 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாகும்போது மெல்ல அது கல்லூரியாக மாறும். ஆனால் புற்றீசல் போல தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் முளைக்க தொடங்கிய காலகட்டம் இது. எம்ஜியார் பெயரால் இருப்பதால் என்னமோ? பெரும்பாலான அதிமுக புள்ளிகள் மருத்துவ கல்லூரிகள் தொடங்க தலைப்பட்டனர்.

Ðபாரத் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியை நடத்தும் எஸ். ஜெகத்ரட்சகன் முன்னால் அதிமுகக்காரர். அதிலிருந்து விலகிய அவர் வீரவன்னியர் பேரவை என்ற அமைப்பை 2004இல் தொடங்கி பின்னர் அதையே, ஜனநாயக முன்னேற்றக் கழகம் என்ற கட்சியாக்கினார். 2009இல் அக்கட்சியைத் திமுகவுடன் இணைத்து விட்ட ஜெகத்ரட்சகன், மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார். தற்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர். இவருக்குத் தொடர்புடைய அறக்கட்டளை சார்பில் தாகூர் மருத்துவக் கல்லூரியும் நடந்து வருகிறது.

ஏசிஎஸ் மற்றும் லலிதாம்பிகை மருத்துவக் கல்லூரிகளை நடத்தும் புதிய நீதிக்கட்சியின் நிறுவனரான ஏ.சி. சண்முகம் முன்னாள் அதிமுகக்காரர். திருவள்ளூரில் அருணை மருத்துவக் கல்லூரியை நடத்தும் ஏ.வ. வேலு, முன்னாள் அதிமுகக்காரர். தற்போது தமிழக அமைச்சர்.

திருவள்ளூரில் உள்ள இந்திரா மருத்துவ கல்லூரியின் தலைவர் திருவள்ளூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மனைவி இந்திரா ராஜேந்திரன். அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் மக்களவைத் துணைத் தலைவராவும் மத்திய, மாநில அமைச்சராகவும் இருந்த மு. தம்பிதுரை, சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவக்கல்லூரி நடத்துவதாக ஒரு பேச்சு எழுந்தது. அப்போது அதை அவர் மறுத்துவிட்டார். எனினும்,  கிருஷ்ணகிரியில் உள்ள செயின்ட் பீட்டர் மருத்துவ கல்லூரியின் தலைவர் பானுமதி தம்பிதுரை.

பெரும்பாலான கல்லூரிகளின் அதிபர்கள் அரசியல் சார்பு இல்லாதது போன்று தோன்றினாலும் எதாவது ஒரு வகையில் அரசியல் கட்சிகளுடன் ஏதாவது தொடர்பில் உள்ளவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

பெரும்பான்மையான தொழிலதிபர்களே ஒரு மருத்துவ கல்லூரியை நடத்த யோசிப்பார்கள். குறைந்தபட்சம் 500 முதல் 600 கோடி ரூபாய்கள் வரை முடக்க வேண்டிவரும். இவ்வளவு பணத்தை வைத்துள்ள அல்லது பணத்தை கையாள முடிந்தவர்கள்தான் அதை பற்றி யோசிக்கமுடியும் என்று சுட்டிக்காட்டுகிறார் அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் இ. பாலகுருசாமி அவர்கள்.

எல்லா மருத்துவ கல்லூரிகளும் கல்வி சேவை செய்ய நிறுவப்பட்ட அறக்கட்டளைகளால் நடத்தப்படுகின்றன. லாபம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கும் இவற்றை ஏன் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் கொண்டு வரக்கூடாது என்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன்.

அரசியல்வாதிகள் நீட் தேர்வை எதிர்ப்பதற்கு சமூக நீதி மட்டும்தான் காரணமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறார் பாலகுருசாமி. “நீட் போன்ற தேர்வுகள் அவர்களால் அல்லது அவர்களை சார்ந்தவர்கள் நடத்தும் மருத்துவ கல்லூரிகளுக்கு ஒரு பிரச்சினையாக மாறியுள்ளதால்தான் அவர்கள் நீட்டை எதிர்க்கிறார்களே தவிர சமூக நீதி என்பதெல்லாம் ஒன்றுமில்லை” என சாடுகிறார் பாலகுருசாமி.

Share the Article

Read in : English

Exit mobile version