Read in : English
சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இருக்கிற பரபரப்பு உள்ளாட்சித் தேர்தலுக்கு இருக்காது. ஆனால், மாநகராட்சி மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் என்று கொண்டு வந்தபோது, சென்னை மாநகராட்சிக்கான மேயர் தேர்தலில் தற்போதைய முதல்வராக இருக்கிற ஸ்டாலின் போட்டி போட்டபோது, அந்தத் தேர்தல் சட்டப்பேரவைத் தேர்தலைவிட பெரிய பரபரப்பாக இருந்தது. சட்டப்பேரவை உறுப்பினராகவும் மேயராகவும் இருந்து பெற்ற அனுபவம், அவரை அமைச்சர், துணை முதலமைச்சர் என்று ஏணிப் படிகளில் ஏறி முதல்வர் பதவி வரை அவரைக் கொண்டு வந்துவிட்டுள்ளது.
தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள உதயநிதி ஸ்டாலின், மேயர் தேர்தலுக்கு களம் இறக்கப்படலாம் என்று பரபரப்பாகப் பேசப்பட்ட சூழ்நிலையில், நேரடி தேர்தல் இல்லாத நிலையில் அந்தப் பரபரப்பும் அடங்கி இந்தத் தேர்தல் சென்னையில் எந்த உப்புச் சப்பும் இல்லாமல் போய்விட்டது.
1992ஆம் ஆண்டு 73, 74வது அரசியல் சாசன திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து உள்ளாட்சி அமைப்புகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கின. இருந்தாலும், சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிந்ததும் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவது மாதிரி, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதில்லை.
உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்த வழக்குகளும், ஆட்சியில் இருப்பவர்கள் சில நேரங்களில் இத்தேர்தல்களை நடத்துவதற்குத் தயக்கம் காட்டுவதும் இத்தேர்தல்களைத் தள்ளி வைக்கக் காரணமாகி விட்டது. இதனால் ஆண்டுக்கணக்கில் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாமல் அதிகாரிகள் ஆட்சியே தொடர்ந்து இருக்கும் நிலை உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகர் மன்றத் தலைவர், பேரூராட்சிகளின் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் இருந்தபோது, ஒருவர் இரண்டு வாக்குகளைச் செலுத்த வேண்டியிருந்தது. அதாவது, வார்டு உறுப்பினரைத் தேர்வுசெய்ய ஒரு வாக்கு, மேயர் அல்லது நகர் மன்றத் தலைவரைத் தேர்வு செய்ய ஒரு வாக்கு என இரண்டு வாக்குகளை ஒரு வாக்காளர் போட வேண்டியதிருக்கும்.
தற்போது வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை, மேயர் மற்றும் நகர்மன்றத் தலைவர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாததால், ஒரு வாக்காளர் ஒரு வாக்கு மட்டுமே போட வேண்டியதிருக்கும். வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு கட்சிச் சின்னம் அனுமதிக்கப்படுவதால் கட்சிச் சின்னங்களுக்கு வாக்குகளைக் கேட்டு வருகிறார்கள்.
பெரும்பாலும் உள்ளாட்சித் தேர்தல்களில் அந்தந்தப் பகுதியில் உள்ள முக்கியப் பிரச்சினைகள் கவனம் பெறும். ஆனால், இந்தத் தேர்தலில் ஆளும் கட்சியான திமுகவும் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவும் மாநில அளவிலான பொதுப் பிரச்சினைகளைப் பேசுவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. இத்தேர்தலைப் பொறுத்தவரை, ஆளும் கட்சியான திமுக தொடர்ந்து வெற்றியைப் பெற்று, தங்களது ஆட்சிக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு தந்து வருகிறார்கள் என்று மக்கள் செல்வாக்கு இருப்பதைக் காட்ட வேண்டிய அவசியம் உள்ளது.
எதிர்கட்சிகளும் தங்களது இருப்பைக்காட்ட இந்த வெற்றி அவர்களுக்கும் வேண்டி இருக்கிறது. தனித்துப் போட்டியும் பாஜக நிலைமை எப்படி இருக்கும் என்பது இத்தேர்தல் முடிவுகள் காட்டிவிடும்.
மேயர், நகராட்சித் தலைவர் தேர்தல் மறைமுகத் தேர்தலாக நடைபெற உள்ளதால், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும். பெரும்பான்மை இடங்களைப் பெற முடியாத நிலையில், இருக்கும் இடங்களில் தலைமைப் பதவியைப் பிடிக்க குதிரை பேரங்கள் நடப்பது தவிர்க்க முடியாததாக இருக்கும். எது எப்படி இருந்தாலும்கூட ஜனநாயகத்தின் முக்கிய அமைப்பாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவது நல்லதுதான்.
அவர்கள் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கப்பாடுபடுவார்களா, அல்லது தங்களை வளர்த்துக் கொள்ளப் பாடுபடுவார்கள் என்பது அந்தந்த உறுப்பினர்களைப் பொருத்தது. எனினும், ஒரு தேர்தலில் ஜெயித்தவர்களை அடுத்த தேர்தலில்தான் பார்க்கலாம் என்று கிண்டலாகச் சொல்வதுண்டு. கவுன்சிலர்கள் அப்படி மக்களைவிட்டு ஒதுங்கி இருக்க முடியாது.
கோபாலா, ஏன் சார், எங்க போற, ஓட்டுப் போட என்று கும்பலாகச் சொல்லிக் கொண்டு போகிற கோஷத்தை தேர்தல் நேரத்தில் தெருக்களில் கேட்கலாம். இது சோஷியல் மீடியா காலம். அதுபோன்ற குரல்களை இப்போது பார்க்க முடியாது. எனினும், ஒமைக்ரான் காலத்திலும் மக்கள் தங்களது கடமையை நிறைவேற்ற வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும். கடமைச் செய். பலனை எதிர்பாராதே!
Read in : English