Site icon இன்மதி

அனிமேஷன் படித்துவிட்டு பாரம்பரிய விவசாயம் செய்யும் இளைஞர்!

அனிமேஷன் படித்துவிட்டு விவசாயத்தில் சிறிதும் ஆர்வம் இல்லாமலிருந்த சீத்தாராமன் தற்போது விழுப்புரம் முழுதும் அறியப்படும் இயற்கை விவசாயி

Read in : English

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த வண்டிப்பாளையத்தை சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சீத்தாராமன் அனிமேஷன் படித்து விட்டு, பாரம்பரிய விவசாயத்தில் களம் இறங்கியுள்ளார். இயற்கை உரத்தைத் தயாரிப்பதுடன் கருப்பு கவுனி என்ற பாரம்பரிய நெல் ரகத்தை சாகுபடி செய்து சக விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்.

விவசாய குடும்பத்தை பின்னணியாக கொண்ட நாகராஜன் மற்றும் ஏகவள்ளி தம்பதிக்கு பிறந்தவர் சீத்தாராமன். அப்பா, தாத்தா காலத்திலிருந்தே வழிவழியாய் விவசாயம் செய்து வந்த குடும்பம் இவர்களுடையது. பி.ஏ. பட்டம் பெற்ற சீதாராமனுக்கு வழக்கறிஞராக ஆசை. ஆனால், அதற்கான வாய்ப்புக் கிடைக்கவில்லை. பின்னர், ஓராண்டு 3டி அனிமேஷன் கற்று கொண்டதுடன், பத்திரிகை, பேனர் உள்ளிட்டவைகள் அடிக்கும் தொழிலில் ஈடுபட விரும்பினார். இதற்கான தந்தையிடம் சென்று பணம் கேட்ட தருணம் விவசாயம் என்றால் என்ன என்பது குறித்து யோசிக்காத சீதாராமனுக்கு, தந்தையின் ஒரே ஒரு கேள்வி அவரை விவசாயியாக மாற்றியது. உனக்கு தொழில் தொடங்க 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் வருமானம் வரும் என்று எப்படி உறுதியாய் கூறுகிறாய் என தந்தை கேட்டுள்ளார். விவசாயத்தில் கவனம் செலுத்தினால் ஓரளவுக்கு லாபம் ஈட்டி வாழ்க்கையை வாழலாம் என கூறியுள்ளார்.

இயற்கை உரத்தைத் தயாரிப்பதுடன் கருப்பு கவுனி என்ற பாரம்பரிய நெல் ரகத்தை சாகுபடி செய்து சக விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்.

தந்தையின் பேச்சை கேட்டு சீத்தாராமன், அவர்களது 15 ஏக்கர் நிலத்தில் தந்தையுடன் சேர்ந்து விவசாய பணிகளை செய்தார். 6 மாதங்கள் வரை விவசாயத்தை கற்ற சீத்தாராமனுக்கு அதிக விலை கொடுத்து உரம் வாங்குவது அதிருப்தியாக இருந்தது. விதையை விதைப்பது முதல் அறுவடை வரை செயற்கை உரங்கள் வாங்குவதால் அதிகளவில் செலவிடப்படுவதை சீத்தாராமன் உணர்ந்தார். உதாரணமாக ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்கப்பட்ட நெல்லில் ரூ.15,000 லாபம் கிடைத்தால், அதில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் ரூபாய் வரை செயற்கை உரம் வாங்க செலவிடப்பட்டது. இதை கணக்கு போட்டுபார்த்த சீத்தாராமன் கிடைக்கும் லாபத்தில் பெரும்பகுதி உரத்துக்காகவே போய்விடுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

சீத்தாராமன் விளைவிக்கும் பாரம்பரிய நெல்வகை

நாற்று விடுவதற்கு முன்னதாக விதையில் வேர்ப்பு திறன் அதிகரிக்க கெமிக்கல் கலந்து நிலத்தில் தூவப்படுகிறது. 15 நாளில் எடுக்கப்படும் நாற்று பிடிப்பதற்கு உகந்ததாக இருக்கும். மிகவும் சிறியதாக இருக்கும்  என்பதால், நாத்துக்கு முன்னதாக 5 நாளில் செடி நன்றாக வளர யூரியா போடப்படுகிறது. நாற்று நடும் போது டி.ஏ.பி அல்லது காம்ப்ளக்ஸ் உரங்கள் ஏக்கருக்கு 2 மூட்டை வரை போடப்படுகிறது. களைகள் வளருவதை தடுக்க களைக்கொல்லி தெளிக்கப்படுகிறது. 7வது நாள் அதிக கிளைப்பு வர குறுணை கலந்து யூரியா போடப்படுகிறது. 15-,20வது நாளில் பொட்டாசியம், யூரியா தெளிக்கப்படுகிறது. அதிக கதிர்விட அமோனியா பயன்படுத்தப்படுகிறது. 25வது நாள் இலை சுருள், இலை கருகல், புகையான் உள்ளிட்டவற்றை அழிக்க உர மருந்து தெளிக்கப்படுகிறது. கதிர் விட்டதும் வண்டு மற்றம் நாவல் பூச்சிகளை அழிக்க மீண்டும் உர மருந்து செலுத்தபப்டும். ஒரு நெல்லை விளைவிக்க இத்தனை செயற்கை உரம் தேவைப்படுவதையும் அறிந்தார்.

மீன் அமில கரைசல் தயாரிக்கும் சீத்தாராமன். இயற்கை விவசாய இடுபொருட்களை இவர் தன் பண்ணையில் தயாரித்து மற்ற விவசாயிகளுக்கு அளிக்கிறார்.

ஆரோக்கியத்திற்கு வழங்கப்படும் உணவில் தனக்கு தெரியாமலேயே நஞ்சை கலக்கும் விவசாயிகளின் நிலையை எண்ணி கவலை அடைந்த அவர், இயற்கை விவசாயத்தில் தனது கவனத்தை செலுத்தினார். ஒவ்வொரு ஊராக சென்று இயற்கை விவசாயம் செய்து வரும் முன்னோடிகளிடம் இருந்தும், நம்மாழ்வாரின் இயற்கை விவசாயம் குறித்த தகவல்களையும் தெரிந்து கொண்டு தனது நிலத்தில் பரிசோதிக்க ஆரம்பித்தார். ஆரம்ப காலத்தில் அவருக்கு ஏமாற்றமும் தோல்விகளுமே கிடைத்தன. ஏனெனில் அதுவரை, செயற்கையாக ரசாயன உரங்களைப் போட்டு சாகுபடி நடந்த நிலத்தில் இயற்கை உரங்களை போடும் போது சரியான மகசூல் இல்லாமல் இழப்பைச் சந்தித்தார்.

படித்துவிட்டு ஏதோ சோதனை செய்து இழப்பை தருவதாக பெற்றோர் உட்பட அனைவரும் கடிந்து கொண்டதும் உண்டு. எனினும், இயற்கை விவசாயம் மீது நம்பிக்கை வைத்த சீத்தாராமன் அரசு ஏற்படுத்தும் வாய்ப்புகளை பயன்படுத்தி ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அங்குள்ள விவசாயிகள் இயற்கையாக உரம் தயாரிப்பதையும், மகசூல் அதிகரிப்பதையும் தெரிந்து கொண்டார்.  தமிழகம் மட்டுமில்லாது, இந்தியாவின் வடமாநிலங்களுக்கும், அந்தமான் நிகோபர் தீவுகளுக்கும் சென்று வந்த சீத்தாராமன் இயற்கை விவசாயத்தின் நுணுக்கங்களை அறிந்து கொண்டார்.

இதன் பலனாய், பலவிதமான இயற்கை உரங்களை தயாரித்து தான் மட்டும் பயன்பெறாமல் தன்னை நாடி வரும் வரும் சக விவசாயிகளுக்கும் கற்று கொடுத்து வருகிறார். இந்த இயற்கை உரம் தயாரிக்கும் முறைகளை அக்ரோ சென்டர்களில் இருப்பவர்களுக்கு தெரிந்தாலும் முன்னதாகவே விவசாயிகளுக்கு அதை பரிந்துரைப்பதில்லை என்றும், தங்களிடம் உள்ள செயற்கை உரங்களை விற்பதில் மட்டுமே குறிகோளாய் இருப்பதாகவும் சீத்தாராமன் வேதனை தெரிவித்தார்.

இயற்கை விவசாயம் குறித்தும்இயற்கை உரங்கள் குறித்தும் தனக்கு தெரிந்த தகவல்களை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் எடுத்துரைக்கிறார் சீத்தாராமன்.

 

இயற்கை விவசாயம் குறித்தும், இயற்கை உரங்கள் குறித்தும் தனக்கு தெரிந்த தகவல்களை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் எடுத்துரைக்கிறார் சீத்தாராமன். அத்துடன், வேளாண் துறை அதிகாரிகளின் அழைப்பின் பேரில் ,சக விவசாயிகளுக்கும் இயற்கை விவசாயத்தின் பலன்களை எடுத்து கூறி வருகிறார். இயற்கை விவசாயத்தை ஆதரிப்பதோடு, நன்மை தரும் பனைமரங்களை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

கல்லூரி மாணவர்களுக்கும் இயற்கை விவசாயத்தை கற்பிக்கிறார் சீத்தாராமன்

ஒரு ரூபாய்க்கு ஒரு பனை விதை என 50 ஆயிரம் பனை விதைகளை வாங்கி பொது இடங்களில் விதைத்துள்ளார். இவரின் இது போன்ற செயல்களை பார்த்த விழுப்புரம் மாவட்ட அதிகாரிகள் கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தின் போது வேளாண் துறை அமைச்சகத்திற்கான ஆலோசனைகளை வழங்கும் விவசாயிகளின் குழுவில் இவரையும் பரிந்துரைத்தது, அதில் பங்கற்ற சீத்தாராமன் பனை மரங்களை பாதுகாக்க வேண்டும், நியாய கடைகளில் சிறுதானியங்கள் மற்றும் நாட்டு சர்க்கரையை விநியோகிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.

Share the Article

Read in : English

Exit mobile version