Site icon இன்மதி

மீண்டும் நகரத்துக்கு வெளியே மாற்றப்படும் மதுரை மத்திய சிறைச்சாலை!

மதுரை மத்திய சிறைச்சாலை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1865இல் கரிமேட்டில் கட்டப்பட்டது.

Read in : English

பல நூற்றாண்டுகளாக மக்கள் தொடர்ந்து வாழும் நகரங்களில் மதுரையும் ஒன்று. 1840களில் மதுரை கோட்டையை தாண்டி அமைந்த எல்லாமே மதுரை மக்களுக்கு புறநகர்தான். 1859ஆம் ஆண்டு மதுரை ரயில் நிலையம் அமைந்தபோது, நகரத்துக்கு வெகுதொலைவில் அமைத்ததற்காக மக்கள் போராட்டம் நடத்திய கதை எல்லாம் இங்கு உண்டு.

1865ஆம் ஆண்டு மதுரை மத்திய சிறைச்சாலை கரிமேடு பகுதியில் அமைந்தபோது அதுவும் ஊருக்கு வெளியேதான் இருந்ததாகக் கருதமுடியும். கரிமேடு என்பது ஒன்றுமில்லை மதுரை ரயில் நிலையத்தில் இருந்து சென்ற நீராவி என்ஜின்களில் எரிக்க நிலக்கரியைக் குவித்து வைத்த இடம். ஒரு நூற்றாண்டை கடந்தபின்பு மதுரை மத்திய சிறைச்சாலை மீண்டும் ஊருக்கு வெளியே செல்லப்போகிறது.

மதுரை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் உருவாக்கிய பூந்தோட்டத்தில் பல்வேறு வகையான ரோஜப் பூ செடிகள் வளர்க்கப்படுகின்றன.

மதுரை சிறை டிஐஜி பழனி, முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து,  அதற்கான வேலைகள் நடந்து வருவதாகக் குறிப்பிட்டார். தற்போது 33 ஏக்கரில் அமைந்துள்ள சிறைச்சாலை, பசுமை வளாகமாக ஆக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

கரிமேடுக்கு சிறை வருவதற்கு முன்பு, மதுரையின் சிறைச்சாலை, ராணி மங்கம்மாள் அரண்மனை அருகில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் இருந்தது. மதுரை நாயக்க மன்னர்களின் அரண்மனையின் ஒரு பகுதி அது.

கரிமேடுக்கு சிறை வருவதற்கு முன்பு, மதுரையின் சிறைச்சாலை, ராணி மங்கம்மாள் அரண்மனை அருகில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் இருந்தது. மதுரை நாயக்க மன்னர்களின் அரண்மனையின் ஒரு பகுதி அது. பண்டைய அரசர்களுக்கு சிறைத்துறை என்ற அமைப்பின்மீது அதிகம் நம்பிக்கை இருந்ததாகத் தெரியவில்லை. குற்றங்களுக்கான தண்டனை பெரும்பாலும் அந்தந்த கிராமங்களிலேயே நிறைவேற்றப்பட்டு விடும். தலைநகரின் சிறையில் அடைக்கப்படும் அரசியல் கைதிகளின் தலைவிதி விரைவிலேயே முடிவாகி விடும்,  மாறுகை மாறுகால் வாங்குவது முதல் மரண தண்டனை வரை. “அரசர்களுக்கு சிறைச்சாலை  பற்றி அதிகம் அக்கறை இல்லை,” என்கிறார் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம்.

சேசு சபையினர் மதுரா மிஷனை 1606இல் அமைத்த பின்பு இங்கு பணிசெய்த சேசு சபை துறவிகள் சிறைக் கைதிகளின் பரிதாப நிலையைக்கண்டு அவர்களுக்கு தொண்டு செய்ய நாயக்க அரசர்களிடம் வேண்டுகோள் வைத்ததாக மறைந்த வரலாற்று பேராசிரியர் வெங்கட்ராமன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அதை பற்றிய குறிப்புகள் சேசுசபையின் செண்பகனூர் வளாகத்தில் உள்ள ஆவணங்களில் உள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.

மதுரை சிறைச்சாலையில் யோகாசனத்தில் ஈடுபடும் சிறைக்கைதிகள்.

மதுரை நாயக்க அரசின் கடைசி காலங்களில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி  தீவிரமான நாடு பிடிக்கும் வேலையில் இறங்கியிருந்தது. நாயக்க அரசின் கடைசி அரசி மீனாட்சி சந்தாசாஹிபின் சதியில் விழுந்து தன்னை மாய்த்து கொண்டபிறகு மதுரை சிறிது காலம் மருதநாயகத்தின் பிடியில் இருந்தது. மூன்றாம் கர்நாடக போரில் பிரெஞ்சுக்காரர்களை விரட்டியடித்தபின்பு மதுரை கிட்டத்தட்ட  தாம்பாளத்தட்டில் வைத்து கொடுத்த கதையாக பிரிட்டிஷாரிடம் வந்து சேர்ந்தது. மதுரை மாவட்ட நிர்வாகம் பிரிட்டிஷ் கம்பெனியால் 1790ஆம் ஆண்டு  தொடங்கப்பட்டது.

இந்தியாவை முழுதும் கைப்பற்றியபின் கம்பெனி ஆட்சி இந்தியாவின் நிர்வாகத்தை முழுவதும் கையிலெடுத்தது. இந்திய தண்டனை சட்டம் 1860 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. சிறைத்துறை சட்டம் 1894இல் இயற்றப்பட்டது. இந்தியா முழுதும் சிறைச்சாலைகள் அமைக்க வெள்ளையர்கள் தொடங்கினார்கள். மதுரை கோட்டை 1840ஆம் ஆண்டு இடிக்கப்பட்டு நகரம் வளர தொடங்கியபின்பு நகரத்தின் மையத்தில் இருந்த சிறையை மத்திய சிறையாக கரிமேட்டில் பிரிட்டிஷார் அமைத்தனர்.

மேடைப் பேச்சுக்குப் பெயர் போன மறைந்த மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் ஒருமுறை சிறையில் நடந்த விழாவில், ‘சிறைக்கு வேண்டி நாங்கள் எல்லா வசதிகளும் செய்வோம் அடிக்கடி வந்து போகும் இடமல்லவா‘ என்று  நையாண்டி செய்த சம்பவமும் உண்டு. 

மதுரை நிர்வாகம் கைக்கு வந்தாலும் மதுரையின் முக்குலத்தோர் பிரிட்டிஷாருக்கு அடங்கும் வழியை காணோம். எனவே அவர்களை நசுக்க குற்ற பரம்பரை சட்டத்தை அவர்கள் மீது பயன்படுத்த ஆரம்பித்தார்கள். மதுரை மத்திய சிறைச்சாலை என்னவோ அவர்களுக்காகவே கட்டியது போன்று ஆகிவிட்டது.

மதுரா மில்ஸ் என்று ஸ்காட்லாந்து சகோதரர்கள் ஆண்ட்ரு மற்றும் பிராங்க் ஹார்வி 1889 ஆம் ஆண்டு அமைத்தபின்பு மதுரை வெகுவேகமாக தொழிற்வளர்ச்சி அடைய தொடங்கியது. மதுரை மற்றும் நகரை சுற்றி பல மில்கள் அமைக்கப்பட்டன. ஆலை வளர்ச்சியோடு தொழிற்சங்கங்களும் வளர்ந்தன. தொழிலாளர் உரிமைக்கு போராடிய தலைவர்களை அடைக்கும் இடமாக மத்திய சிறை மாறிப்போனது.

மதுரை சிறைச்சாலையில் கைதிகள் நடத்தும கறிக்கடைக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

பின்பு கம்யூனிஸ்ட் தலைவர்களை அடைக்கும் இடமாகவும் மாறியது. மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவர்களான சங்கரையா, K T K தங்கமணி, K P ஜானகியம்மாள், P ராமமூர்த்தி போன்றோர் மதுரை சிறையில் இருந்திருக்கிறார்கள். வேடிக்கை மேடைப் பேச்சுக்குப் பெயர் போன மறைந்த மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் ஒருமுறை சிறையில் நடந்த விழாவில், ‘சிறைக்கு வேண்டி நாங்கள் எல்லா வசதிகளும் செய்வோம் அடிக்கடி வந்து போகும் இடமல்லவா’ என்று  நையாண்டி செய்த சம்பவமும் உண்டு.

கடந்த பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் மதுரை சிறைச்சாலை பல வளர்ச்சி திட்டங்களை பார்த்திருக்கிறது. சிறைவாசிகள் தயாரிக்கும் பொருட்களை விற்கும் கடை, கறிக்கடை, மீன் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, நர்சரி என்று பல அம்சங்கள் சிறையில் உள்ளன. நகரத்துக்கு வெளியே மீண்டும் ஒருமுறை அமையப்போகும் மத்திய சிறை இன்னும் அதிகத் திட்டங்களை செயல்படுத்தும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

மதுரை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் காளான் வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள். சிறைக் கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்யும் கடையையும் அவர்கள் நடத்தி வருகிறார்கள்.

வரலாற்று பேராசிரியர் மற்றும் வழக்கறிஞர் சாலமன் பெர்னார்ட் ஷா சட்டவிதிகள் என்பது அரசர் ஹமுராபி தொடங்கி பல மாற்றங்களை கண்டுள்ளன என்கிறார். மதுரையில் நாம் இப்போது காண்பது போன்ற சிறைச்சாலையை உண்டாக்கியது பிரிட்டிஷார்தான். ஆனால் சிறைக் கொடுமைகள் என்பது சுதந்திரம் கிடைத்தபின்பும் அப்படியேதான் இருந்தன. எவ்வளவு தூரம் கைதியின் மனமாற்றத்திற்கு சிறை வழிவகுக்கிறது என்பது இன்னும் கேள்விக்குறிதான். அப்படி ஒரு மாற்றத்தை நோக்கிய படியாக புதிய சிறைச்சாலை அமையட்டும் என்கிறார் அவர்.

Share the Article

Read in : English

Exit mobile version