Site icon இன்மதி

தமிழ்நாட்டில் வலசை வரும் பறவைகளில் மாற்றம்: சதுப்பு நிலங்களின் சுற்றுச்சூழல் மாறிவருவதை அடையாளம் காட்டுகிறதா?

அரிவாள் மூக்கன்களின் எண்ணிக்கை பெருகிவருவது நமது நீர்நிலைகள் மாசுபடுவதின் அறிகுறி

Read in : English

வேனிற்காலம் ஏறக்குறைய தொடங்கிவிட்டது. வலசை போகும் பறவைகள் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல தொடங்கிவிட்டன. பறவை ஆர்வலர்களும் சூழல் வல்லுனர்களும் பறவைகள் கணக்கெடுப்பை தமிழ் நாட்டின் நீர்நிலைகளில் பல இடங்களில் முடித்து விட்டார்கள். இந்த கணக்கெடுப்புகள் நமக்கு சொல்வதென்ன?

அரிவாள் மூக்கன்களும், நீல தாழை கோழிகளும், நாம கோழிகளும் எண்ணிக்கையில் கூடியுள்ளன. வழக்கமாக நமது குளங்களில் காணப்பட்ட வெண்கொக்குகள் அருகியுள்ளன. தேர்ந்த பறவையிலாளர்கள் பறவைகள் சூழலின் அடையாளம் என்பார்கள். எனில் இந்த மாற்றம் சொல்வது ஒன்றுதான். நமது நன்னீர் நிலைகள் வேகமாக மாசடைந்து வருகின்றன.

அரிவாள் மூக்கன்களும் நீல தாழைக்கோழிகளும் சாக்கடை கலந்த நீர்நிலைகளில் தங்கள் உணவை தேடுபவை. 1990களுக்கு முன்பு இவற்றை தமிழ்நாட்டின் பகுதிகளில் காண்பது மிகவும் அரிது. வட இந்தியாவிலிருந்து இடம்பெயரும் அரிவாள் மூக்கன்கள் இங்கேயே தங்கிவிட்டதாக தெரிகிறது. “இப்போதெல்லாம் இவற்றை காண வடக்கிலிருந்து தென்தமிழகம் வருகிறார்கள்,” என்கிறார் அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையத்தின் மதிவாணன் அவர்கள்.

Common_coots

நாமக்கோழிகளின் எண்ணிக்கையும் கணிசமாக பெருகி வருவதாக பறவை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்

பறவையியலாளர் ரவீந்திரன் அவர்கள் முன்பு பெரும் எண்ணிக்கையில் இருந்த வெண்கொக்குகளை காண்பது மிகவும் அரிதாக இருப்பதாக சொல்கிறார். வெண்கொக்குகள் நன்னீர் நிலைகளில் இருப்பவை. அவற்றை காண நதி முகத்துவாரங்களுக்கு செல்லவேண்டியிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். அரிவாள் மூக்கன்களை போன்றே சாக்கடை கலந்த நீர்நிலைகளில் அதிகம் காணப்படும் நாமக்கோழிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவருவதாக சொல்கிறார் ரவீந்திரன். “தனக்கு இரையும் உகந்த சூழலும் நிலவும் இடங்களில் அவை வாழ்கின்றன. நாம்தான் வரைமுறை இல்லாமல் நமது நன்னீர் நிலைகளை கழிவுநீரை கலந்து பாழடித்து வருகிறோம்,” என்கிறார் அவர்.

நகரங்களுக்கு அருகே உள்ள நீர்நிலைகள் மிகமோசமாக மாசடைந்து வருவதாக சொல்கிறார்கள் சூழலியலாளர்கள்.


தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையத்தின் கணக்குப்படி நமது மாநிலத்தில் 24864 நீர்நிலைகள் உள்ளன.  இவற்றின் பரப்பு 902534 ஹெக்டர்கள். இந்த நீர்நிலைகளில் கடற்புரத்தின் 595 நீர்நிலைகளும் அடங்கும். இவற்றில் நகரங்களுக்கு அருகே உள்ள நீர்நிலைகள் மிகமோசமாக மாசடைந்து வருவதாக சொல்கிறார்கள் சூழலியலாளர்கள்.

மதுரையை சேர்ந்த பறவையிலலாளர் Dr பத்ரி நாராயணன் அவர்கள் நீலத்தாழை கோழிகளின் எண்ணிக்கை கடந்த சிலவருடங்களில் அதிகரித்து வருவதை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். இந்த பறவைகள் ஆகாயத்தாமரை செடிகளின் மேல் தங்களுடைய மெல்லியகால்களால் அலைந்து இரையை தேடுபவை. அவற்றின் எண்ணிக்கை பெருகுவது ஆகாயத்தாமரை செடிகள் நமது நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதை காண்பிக்கிறது.

A_Grey_headed_Swamphen_landing

நீலத்தாழை கோழிகள் ஆகாயத்தாமரை இலைகளின் மீது நடந்து திரிந்து இரையை தேடும்

அமேசான் காடுகளை தாயகமாக கொண்ட ஆகாயத்தாமரை ஒரு ஆபத்தான களை. நீர்நிலைகளில் பரவும் இந்த செடி நீர்நிலைகளின் பிராணவாயு சுழற்சியை கடுமையாக பாதிக்கிறது. சுவாசிக்கமுடியாமல் மீன்கள் மரணமடையும். நீர்நிலை மெல்லமெல்ல கருப்பாக மாறி அதன் இயல்பிலிருந்து அழியும்.

பத்ரி நாராயணன் அவர்கள் சிலவகை வாத்து இனங்களும் காணப்படுவது இல்லை என்கிறார். இவற்றுக்கு மூழ்கி இரைதேட ஆழமான நீர்நிலைகள் வேண்டும். ஆழமற்ற நீர்நிலைகளில் காணப்படும் வரித்தலை வாத்துகள் போன்றவை காணப்படும் நிலையில், நமது குளங்கள் கண்மாய்களை ஆழப்படுத்த வேண்டியதின் தேவையை இந்த பறவைகளின் போக்கு நமக்கு தெரிவிக்கிறது என்று விளக்குகிறார் அவர்.

பறவைகள் தரும் இந்த குறியீடுகளை நம்மை ஆள்பவர்கள் கவனத்தில் கொள்வது நல்லது என்கிறார்கள் சூழலியலாளர்கள்.

பறவைகள் தரும் இந்த குறியீடுகளை நம்மை ஆள்பவர்கள் கவனத்தில் கொள்வது நல்லது என்கிறார்கள் சூழலியலாளர்கள். பறவைகளிடம் காணப்படும் இந்த மாற்றங்கள் நம்முடைய நீர்நிலைகள் மெல்லமெல்ல சிதிலமடைவதை காண்பிக்கிறது. தக்க நேரத்தில் நாம் அவற்றை கவனிக்கவில்லையானால் நாம் கொடுக்கும் விலை அதிகமாக இருக்கும் என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

Share the Article

Read in : English

Exit mobile version