Site icon இன்மதி

எலைட் ஸ்கூல் திட்டம்: அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து டாக்டரான ஏழை மாணவி!

அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து டாக்டராகிய கிருஷ்ணவேணி எம்பிபிஎஸ் பட்டம் பெற்றபோது தனது அம்மா, அண்ணனுடன்.

Read in : English

ஒரு காலத்தில் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து ஐஏஎஸ் ஆன, தற்போதைய பள்ளிக் கல்வி ஆணையர் கே. நந்தகுமார் ஐஏஎஸ், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது, அரசுப் பள்ளி மாணவர்களுக்காக எலைட் ஸ்கூல் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பிளஸ் டூ தேர்வில் அவர்களை அதிக மதிப்பெண்களை எடுக்க வைத்து அரசுப் பள்ளி மாணவர்களை மருத்துவ, பொறியியல் படிப்புகளிலும் சேர வைப்பதற்கு, அரசுப் பள்ளிகளில் படித்த சிறந்த மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கும் திட்டம் இது.

அந்தத் திட்டத்தின் கீழ், அந்த அரசு சிறப்புப் பள்ளியில் தமிழ் வழியில் பிளஸ் ஒன், பிளஸ் டூ வகுப்புகளை படித்த கிருஷ்ணவேணி (23) என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவி எம்பிபிஎஸ் படித்து  டாக்டராகியுள்ளார். பள்ளிப் படிப்பையே படிக்காத கிருஷ்ணவேணியின் அம்மா பாண்டியம்மாள், கட்டடச் சித்தாள் வேலை பார்த்து கிடைத்த வருமானத்தில் தனித்து குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு, தனது பெண்ணையும் படிக்க வைத்து டாக்டராக்கியுள்ளார். பரமக்குடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து எம்பிபிஎஸ் படித்த முதல் டாக்டர் கிருஷ்ணவேணிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிப் படிப்பையே படிக்காத கிருஷ்ணவேணியின் அம்மா பாண்டியம்மாள், கட்டடச் சித்தாள் வேலை பார்த்து கிடைத்த வருமானத்தில் தனித்து குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு, தனது பெண்ணையும் படிக்க வைத்து டாக்டராக்கியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் எம். கிருஷ்ணவேணி. அவரது பூர்வீகம் பரமக்குடியிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெத்தனேந்தல். அவரது அம்மா பாண்டியம்மாள் கட்டடம் கட்டும் வேலையில் சித்தாள் வேலை பார்த்து வந்தார். அவரது வருமானத்தைக் கொண்டுதான் குடும்பம் நடக்க வேண்டும். கிருஷ்ணவேணியும் அவரது அண்ணன் அருண் குமாரும் படிக்க வேண்டும்.

இந்த மாதிரியான சிரம சூழ்நிலையில் பள்ளிப் படிப்பைப் படித்த கிருஷ்ணவேணி, தொடர்ந்து படித்து டாக்டரானது குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் நோயாளியைப் பரிசோதிக்கிறார் டாக்டர் கிருஷ்ணவேணி.

பெத்தனேந்தல் அரசு தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை படித்தேன். அப்புறம் எங்களது குடும்பம் பரமக்குடிக்கு வந்துவிட்டது. அங்கு உள்ள தனியார் பள்ளியில் நான்கு, ஐந்தாவது வகுப்புகளைப் படித்தேன். பின்னர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரைப் படித்தேன். பள்ளியில் படிக்கும்போது டியூஷன் சென்றதது கிடையாது. அதற்கான வசதியும் இல்லை. நானே வீட்டில் படிப்பதுதான்.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக நந்தகுமார் சார், அரசுப் பள்ளிகளில் படித்த சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்து, பிளஸ் டூ தேர்வில் அவர்களை அதிக மதிப்பெண்களை எடுக்க வைக்க எலைட் ஸ்கூல் என்ற சிறப்புப் பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவ, மாணவிகள் ராமநாதபுரத்தில் ஒரே பள்ளிக்கு அழைத்து வரப்பட்டு தனியே அவர்கள் தங்கிப் படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்திலேயே அரசுப் பள்ளிகளில் இருந்த சிறந்த ஆசிரியர்கள், பாடம் நடத்துவதற்காக இந்த சிறப்புப் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டார்கள்.

அரசுப் பள்ளிகளில் படித்து பத்தாம் வகுப்புத் தேர்வில் பள்ளியிலேயே முதல் மூன்று இடம் பெற்றவர்கள்தான் இந்தப் பள்ளியில் பிளஸ் ஒன், பிளஸ் டூ வகுப்பில் சேர முடியும் என்று அறிவிப்பு வந்ததைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் சார் மாணவர்களிடம் தெரிவித்தார். அதாவது, 500க்கு 450 மதிப்பெண்களுக்கு மேற்பட்டவர்கள் அந்த சிறப்புப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். நான் 444 மதிப்பெண்கள் பெற்றேன். அத்துடன் ஏழாவது ரேங்க். அதனால், எனக்கு அந்தப் பள்ளியில் சேர இடம் கிடைக்கவில்லை.

மதுரை அரசு மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தையுடன் டாக்டர் கிருஷ்ணவேணி.

எங்களது பள்ளியிலிருந்து எலைட் ஸ்கூலில் சேர்ந்த மூன்று மாணவர்களும் சேர்ந்த சில நாட்களிலேயே அந்தப் பள்ளியை விட்டு விட்டார்கள். பரமக்குடியில் உள்ள பெரிய பள்ளியான எங்களது பள்ளியிலிருந்து யாராவது அந்தப் பயிற்சியில் சேர வேண்டும் என்று எங்களது தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் சார் பள்ளி மாணவர்களிடம் பேசினார். அந்தப் பயிற்சியில் சேர விருப்பமாக இருக்கிறேன் என்று நான் சொன்னேன். உனக்கு அந்த அளவுக்கு மார்க் இல்லையே என்றார். பின்னர், அவரே முயற்சி எடுத்து, அந்தப் பயிற்சி வகுப்பு ஒருங்கிணைப்பாளரிடம் பேசியதும், எனக்கு எலைட் ஸ்கூலில் இடம் கிடைத்தது.

தொடக்க நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள முனிசிபல் பெண்கள் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள இரண்டு அறைகளில் எங்களுக்கான வகுப்புகள் நடந்தன. அங்கு உயிரியல், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவை எடுத்துப் படித்தேன். படிப்பதற்குத் தேவையான புத்தகங்களை அவர்களே தந்துவிட்டார்கள். தங்குமிடத்துக்கும் சாப்பாட்டுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆசிரியர்கள் எங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி பாடம் நடத்தினார்கள். தினந்தோறும் ஏதாவது பாடத்தில் டெஸ்ட் இருக்கும். எப்படியாவது படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றுவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் படிப்பதில் தீவிர கவனம் செலுத்தினேன்.

அப்போது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த நந்தகுமார் சார், வாரந்தோறும் பள்ளிக்கு வந்து மாணவர்களிடம் தன்னம்பிக்கையூட்டும் வகையில் பேசுவார். சில நேரங்களில் அவரது அலுவலகத்துக்கு வரவழைத்தும் மாணவர்களிடம் பேசுவார். எங்களது செட்டில் 34 மாணவிகளும் 6 மாணவர்களும்தான் இறுதி வரை படித்தோம். பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 1078 மதிப்பெண்கள் கிடைத்தது. கணித்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்தேன். உயிரியலிலும் இயற்பியலிலும் தலா 195 மதிப்பெண்களும் வேதியியலில் 194 மதிப்பெண்களும் எடுத்தேன். பொறியியல் படிப்புக்கான கட்ஆப் மதிப்பெணகள் 197.75. மருத்துவப் படிப்புக்கான கட்ஆப் மதிப்பெண்கள் 194.25.

எலைட் ஸ்கூல் இல்லாவிட்டால் நான் டாக்டராகி இருப்பேனா என்று சொல்ல முடியாது. அதற்காக நந்தகுமார் சாருக்கும் சிறப்பு கவனம் செலுத்தி எங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களும் நன்றி சொல்ல வேண்டும்.  

எனது மதிப்பெண்களுக்கு பொறியியல் படிப்பிலும் மருத்துவப் படிப்பிலும் இடம் கிடைக்கும் என்றாலும்கூட, மருத்துவப் படிப்பில் சேரலாமே என்று நந்தகுமார் சார் ஆலோசனை கூறினார். எனக்கும் எம்பிபிஎஸ் படிப்பில் சேர வேண்டும் என்பதில்தான் விருப்பம். எனவே, எம்பிபிஎஸ் படிக்க  முடிவு செய்தேன். 2015ஆம் ஆண்டில் கவுன்சலிங் மூலம் எனக்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிபிஎஸ் படிப்பில் இடம் கிடைத்து. எலைட் ஸ்கூலில் படித்த மற்றொரு மாணவர் மணிகண்டனுக்கு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. எலைட் ஸ்கூல் இல்லாவிட்டால் நான் டாக்டராகி இருப்பேனா என்று சொல்ல முடியாது. அதற்காக நந்தகுமார் சாருக்கும் சிறப்பு கவனம் செலுத்தி எங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களும் நன்றி சொல்ல வேண்டும்.

மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு பணத்துக்கு என்ன செய்வது என்று குடும்பமே சிரமத்தில் ஆழ்ந்திருந்தோம். அப்போது எல்ஐசி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கு விடுதிக் கட்டணம் செலுத்த ரூ.17 ஆயிரம் வழங்கினார்கள். எனக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தாலும்கூட, மற்ற செலவுகளுக்கு அம்மாதான் பணம் கொடுப்பார். சில நேரங்களில் தேர்வுக் கட்டணம் உள்ளிட்டவற்றுக்காக ரூ.20 ஆயிரம் கடன் வாங்க வேண்டியதிருக்கும். அடுத்த ஓராண்டுக்கு அந்தக் கடனை அம்மா அடைப்பார். மீண்டும் அடுத்த ஆண்டில் எனது படிப்புக்காக மீண்டும் கடன் வாங்குவார். பிஎஸ்சி கம்ப்யூட்டர் படித்திருந்த எனது அண்ணன் அருண்குமார், மேற்கொண்டு படிக்கும் எண்ணத்தை விட்டுவிட்டு, எனக்காக சென்னையில் ஒரு ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்தார். அவரது சம்பளத்திலிருந்து மாதம் ரூ.3 ஆயிரம் எனக்கு அனுப்புவார். தற்போது அவரும தொலைதூரக் கல்வி மூலம் எம்பிஏ படித்து விட்டு வேறு வேலை செய்கிறார்.

சைக்கியாட்ரி அல்லது டெர்மட்டாலஜி பாடப்பிரிவில்  எம்.டி. முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பைப் படிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கான முதுநிலை நீட் தேர்வை எழுதத் தயாராகி வருகிறேன்.

 பள்ளி முழுக்க தமிழ் வழியில் படித்ததால், எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்ததும் பாடங்களைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருந்தது. ஆனாலும் நானே முயன்று பாடங்களைத் திரும்பத் திரும்பப் படித்துப் புரிந்து கொள்வேன். இப்படி பல தடைகளை தாண்டிதான், சென்ற ஆண்டில் எம்பிபிஎஸ் படித்து முடித்தேன். கோவிட் நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் எம்பிபிஎஸ் படித்தவர்கள் தாற்காலிக டாக்டர்கள் நியமிக்கப்பட்டார்கள். எனக்கும் அப்போது வேலை கிடைத்தது. தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில்  கோவிட் மருத்துவ அதிகாரியாகப் பணிபுரிகிறேன்.

அடுத்து, சைக்கியாட்ரி அல்லது டெர்மட்டாலஜி பாடப்பிரிவில்  எம்.டி. முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பைப் படிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கான முதுநிலை நீட் தேர்வை எழுதத் தயாராகி வருகிறேன். அரசுப் பணியில் நிரந்தர வேலை கிடைத்தால் எனது ஊரிலோ அல்லது எனது ஊரைச் சுற்றியுள்ள கிராமங்களிலோ உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்பதே எனது விருப்பம்.

இதற்கிடையே, சமீபத்தில் எனது அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து, அவருக்கு ஸ்டன்ட் வைக்கப்பட்டுள்ளது. எனது அண்ணன் அம்மாவைக் கவனித்துக் கொள்கிறார். பரமக்குடியிலிருந்து அவர்களை மதுரைக்கு அழைத்து வர வேண்டும். அதற்காக மதுரையில் வீடு பார்த்து வருகிறேன் என்கிறார் டாக்டர் கிருஷ்ணவேணி.

Share the Article

Read in : English

Exit mobile version