Read in : English
ராமேஸ்வரம் என்றாலே நினைவு வருவது பாம்பன் ரயில் பாலம். இரண்டு கிலோமீட்டர்கள் நீளம் உள்ள இந்த பாலத்தின் மீது செல்லும் ரயில் ஒரு அழகியல் என்றே சொல்லலாம். உலகத்தின் மிக ஆபத்தான ரயில் பாதைகளில் ஒன்றாக அறியப்படும் இந்தப் பாலத்தை ரயிலில் சென்று அனுபவிப்பது ஒரு சுகம் என்றால் அருகிலுள்ள சாலை பாலத்தின் மீது நின்று அதை பார்த்து அனுபவிப்பது மற்றொரு சுகம். நாம் நின்று பார்க்கும் போது பாலம் உயர்த்தப்பட்டு படகுகள் கடந்தால் நமக்கு ஒரு குழந்தையின் குதூகலம் கிடைப்பதை உணரலாம்.
நூற்றாண்டு கடந்த பாலத்தின் கடைசி ஆண்டாக இது இருக்கும் வாய்ப்புகள் அதிகம். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய ரயில்வேயின் கட்டுமான நிறுவனமான ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் அமைத்து வரும் பாலம் முடியும் தருவாய்க்கு வந்துள்ளதால் பழைய ரயில்வே பாலத்தின் உபயோகம் முடிவுக்கு வரும் நிலையை எட்டியுள்ளது எனலாம். பணிகள் முடிய இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவிக்கும் நிலையில் வரலாற்றில் தடம் பதித்த பாம்பன் பழைய ரயில் பாலத்தை பற்றிய நினைவுகளை அசை போடலாம்.
கடந்த 2014ஆம் ஆண்டு பாம்பன் ரயில் பாலம் நூற்றாண்டை கடந்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நூற்றாண்டு விழாவை பாம்பனில் துவக்கி வைத்தார். அந்த ரயில் பாலத்துடனான தன்னுடைய நினைவுகளை மக்களோடு பகிர்ந்து கொண்டார். சிறுவனாக இருந்தபோது ராமநாதபுரத்தில் உயர் பள்ளிப்படிப்பிற்காக அந்த பாலத்தின் மீது ரயிலேறி சென்றது முதல் கல்லூரி படிக்க திருச்சி சென்றது என பாலத்தைக் கடந்து சென்ற ஒவ்வொரு நிகழ்வையும் குழந்தையை போன்று அவர் நினைவு கூர்ந்தது குறிப்பிடத்தக்கது.
1988ஆம் ஆண்டு சாலை பாலம் வழியே போக்குவரத்து தொடங்கும் வரை ராமேஸ்வரத்துக்கு மண்டபத்துக்கு இடையே இருந்த ஒரே தொடர்பு ரயில் பாலம் மட்டுமே.
1988ஆம் ஆண்டு சாலை பாலம் வழியே போக்குவரத்து தொடங்கும் வரை ராமேஸ்வரத்துக்கு மண்டபத்துக்கு இடையே இருந்த ஒரே தொடர்பு ரயில் பாலம் மட்டுமே. 1820 வாக்கிலேயே ஆங்கிலேயர்கள் பாம்பன் வழியை ஆராய தொடங்கி விட்டார்கள். இலங்கையும் ஆங்கிலேயரின் காலனியான பின்பு இந்திய – இலங்கை வணிக வளர்ச்சிக்கு ரயில் போக்குவரத்து முக்கியம் என்று உணர்ந்த ஆங்கிலேயர்கள் பாலம் அமைக்க முழுமூச்சாக வேலை செய்தார்கள். 1911ஆம் தொடங்கிய பாலம் அமைக்கும் பணி 1914 ஆம் ஆண்டு முடிவடைந்து பிப்ரவரி மாதம் 24ஆம் நாள் ரயில் போக்குவரத்து தொடங்கியது.
இந்தியாவும் இலங்கையும் பிரிட்டிஷாரின் காலனி நாடுகளாக இருந்த காரணத்தால் கொழும்பு செல்ல சென்னையில் பயணசீட்டு வாங்கும் வசதி இருந்தது. தனுஷ்கோடி வரை ரயிலில் சென்று அங்கிருந்து கப்பல் மூலம் தலைமன்னார் சென்று திரும்பவும் இரயிலேறி கொழும்பு செல்லலாம். ரயில் பாலம் ராமேஸ்வரம் மக்களின் வாழ்வையே மாற்றியது எனலாம். தங்களை இந்திய நாட்டோடு இணைத்த இந்த ரயில் பாலத்தை மக்கள் தங்கள் வாழ்க்கையோடு இணைத்தே பார்த்து வந்திருக்கிறார்கள். 1964ஆம் ஆண்டு தனுஷ்கோடியை நிர்மூலமாக்கிய புயலில் சிதைந்து போன பாலத்தை சீரமைக்க தங்களாலான எல்லாவற்றையும் தீவு மக்கள் செய்தார்கள் என்கிறார் பாம்பன் ஊராட்சியின் முன்னாள் தலைவர் பேட்ரிக். ஆறு மாதங்களாகும் மூன்று மாதங்களாகும் என்று உத்தேசித்த நிலையில் என்ஜினீயர் ஈ. ஸ்ரீதரன் 46 நாட்களில் பாம்பன் பாலத்தை சீரமைத்து சாதனை புரிந்தது வரலாறு.
2006-07 ஆண்டுகளில் நாடு முழுதும் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட நிலையில் மண்டபத்தோடு ரயில் போக்குவரத்தை நிறுத்திவிடலாமா என்று ரயில்வே அமைச்சகம் ஆலோசித்தபோது, அப்துல் கலாம் குறுக்கிட்டு தான் பிறந்த இடத்துக்கு ரயில் போக்குவரத்தை நிறுத்திவிடவேண்டாமென்று கேட்டுக்கொண்டதால் தொடர்ந்து பாலம் அகல ரயில்பாதைக்கு உகந்ததாக சீர் செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டன.
கடந்த நூறாண்டுகளில் பல சோதனைகளை பாம்பன் ரயில் பாலம் கடந்து வந்திருக்கிறது. மீட்டர் கேஜ் ரயில் பாதைக்காக அமைக்கப்பட்ட பாலம் அகல ரயில் பாதைக்கு தாங்குமா என்ற கேள்வியை தாண்டி பாலம் உழைத்திருக்கிறது. 2006-07 ஆண்டுகளில் நாடு முழுதும் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட நிலையில் மண்டபத்தோடு ரயில் போக்குவரத்தை நிறுத்திவிடலாமா என்று ரயில்வே அமைச்சகம் ஆலோசித்தபோது, அப்துல் கலாம் குறுக்கிட்டு தான் பிறந்த இடத்துக்கு ரயில் போக்குவரத்தை நிறுத்திவிடவேண்டாமென்று கேட்டுக்கொண்டதால் தொடர்ந்து பாலம் அகல ரயில்பாதைக்கு உகந்ததாக சீர் செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டன என்று நூற்றாண்டு விழாவில் ரயில்வே அதிகாரிகள் குறிப்பிட்டதை நினைவு கூறலாம். “இந்த புதிய பாலத்தோடு எங்களால் அப்படி ஒரு பிணைப்பை உணர முடியுமா என்பது சந்தேகமே” என்கிறார் பேட்ரிக்.
புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்கிய பின்பு பழைய பாலம் அகற்றப்படும் வாய்ப்புகளே அதிகம் எனலாம். கடுமையான கடலரிப்பு நிகழும் ஒரு சீதோஷ்ண நிலையில் ஒரு இரும்பு பாலத்தை பாதுகாப்பதற்கு மிகுந்த பொருட்செலவாகும். இந்த பாலத்தின் ஒரு சிறிய பகுதி மண்டபம் ரயில் நிலைய வளாகத்தில் நினைவு சின்னமாக வைக்கப்படும் வாய்ப்புள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில் பழைய ரயில்வே பாலத்தை ஒரு சுற்றுலா தளமாக மாற்றும் வழிகளையும் ஆராய வேண்டும் என்கிறார் கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் செயலாளர் எட்வர்ட் ஜெனி. “கடலிலேயே பாலத்தின் ஒரு பகுதியை அதற்கென்று படகு போக்குவரத்து அமைக்கலாம். நிலத்திலிருந்து சிறிது தூரம் பாலத்தை பராமரித்து மக்கள் கடல் மேல் செல்லும் பாதை அமைக்கலாம். நமக்காக நூறாண்டுளுக்கு மேலாக உழைத்த பாலத்தை அதன் பயன் முடிந்த பின்பு அகற்றிவிடுவது நன்றாக படவில்லை” என்று சொல்கிறார் எட்வர்ட் ஜெனி.
Read in : English