Site icon இன்மதி

திரைப்பட நட்சத்திரங்கள் பாடல் எழுதுவது ‘வைரல்’ ஹிட் ஆவதற்கு மட்டும்தானா?

எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்துக்காக திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல் காட்சியின் புகைப்படம்

Read in : English

திரைப்பட நடிகராக வேண்டுமென்று திரைத்துறைக்குள் காலடி வைத்த எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பாளர் ஆனதும், நடிப்பதே லட்சியம் என்று நினைத்த ஏ.பி.நாகராஜனுக்கு முந்தைய தலைமுறை முதல் ஷங்கருக்குப் பிந்தைய தலைமுறை வரை பல கலைஞர்கள் இயக்குநரானதும் தமிழ் சினிமா வரலாற்றின் சில பக்கங்களில் காண முடியும் உதாரணங்கள். சற்று திரும்பிப் பார்த்தால் வீணை பாலச்சந்தர், டி.ராஜேந்தர், கங்கை அமரன் என்று திரைப்பட உருவாக்கத்துக்கான 24 பிரிவுகளில் பலவற்றில் தங்களது திரைப்பட பங்களிப்பைத் தந்து ஆல்ரவுண்டர்களாக முத்திரை பதித்தவர்களும் உண்டு.

அந்த வரிசையில் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றோர் பிற படங்களில் பின்னணி பாடுவதையும் பாடல்கள் எழுதுவதையும் அப்படி எடுத்துக்கொள்ளலாமா? இதன் மூலமாக அத்துறையில் புகழ் பெற விரும்புவோருக்கான வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றதா? ஒரு திரைப்பட நட்சத்திரம் என்பதைத் தாண்டி, அவர்களது பங்களிப்பு சக கலைஞர்களுக்குச் சவால் அளிக்கிறதா? சமீபகால ‘வைரல்’ ஹிட்கள் இந்த கேள்விகளுக்குப் பலம் கூட்டுகின்றன.

1940 முதல் பாபநாசம் சிவன், உடுமலை நாராயணகவி, மருதகாசி, கு.சா.கிருஷ்ணமூர்த்தி, தஞ்சை ராமையாதாஸ், மாயவநாதன், முத்துக்கூத்தன் என்று பல்வேறு பாடலாசிரியர்கள் தமிழ் திரையிசைக்கு உயிர் தந்துள்ளனர். பாவேந்தர் பாரதிதாசனும் கவிஞர் சுரதா என்று இலக்கிய உலகைச் சார்ந்த சில அறிஞர்கள் கூட தமது பாடல் இயற்றும் திறனை வெளிப்படுத்தியிருக்கின்றனர். 29 வயதில் மரணமடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தனது காலத்தால் அழியாத பாடல்களால் இன்றைக்கும் நினைவுகூரப்படுகிறார்.  எளிமை ததும்பும் வசீகர வார்த்தைகள் மூலம் பாமர ரசிகரையும் சென்றடைந்தவர் காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசன்.

உண்மையில், தமிழ் திரையிசைப் பாடல்களின் தரம், வெற்றி, காலத்தில் நிலைத்திருக்கும் தன்மை உட்படப் பல அம்சங்களில் கண்ணதாசனே அளவுகோல். வெறுமனே ஆணும் பெண்ணும் காதல் புரிவதையும் ஊடல் கொள்வதையும் பிரிவு ஏக்கத்தில் துக்கப்படுவதையும் தாண்டிப் பல்வேறு சூழல்களுக்கேற்ற பாடல்களை எழுதிய அவர், ரத்தத் திலகம் படத்தில் அவர் எழுதிய பாடலை பாடுவதுபோல நடித்திருப்பார். ‘பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது’ பாடலில் ஒருவருக்கொருவர் பதிலடி கொடுத்துப் பேசும் பாங்கு தென்படும். ’வீடு வரை உறவு’, ‘சட்டி சுட்டதடா’ பாடல்கள் வழியாக நிலையாமையின் நிலைத்தன்மையை விளக்கிவிடுவார். ’சிரிப்பு வருது’, ‘தில்லு முல்லு தில்லு முல்லு’ பாடல்களில் அவல நகைச்சுவையையும் ஏமாற்றுத் திறமையையும் சொற்களில் வடித்திருப்பார். இவ்வளவுக்கும் நடுவே ‘கண்ணே கலைமானே’ பாடல் மூலமாகத் தூக்கத்தை நமக்குள் புகுத்தியிருப்பார்.

Naan Pizhai - Kaathuvaakkula Rendu Kadhal

காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற தனது திரைப்படத்துக்காக திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதிய பாடல் காட்சியின் வீடியோ.

கண்ணதாசனுக்குப் போட்டியாக தன் தமிழ் வல்லமையை நிரூபித்த வாலி தொடங்கி ஆலங்குடி சோமு, முத்துலிங்கம், புலமைப்பித்தன், வித்வான் வே.லட்சுமணன், பஞ்சு அருணாசலம், வைரமுத்து, பிறைசூடன், நா.முத்துக்குமார், கபிலன், யுகபாரதி, தாமரைக்குப் பின்னும் தொடரும் பாடலாசிரியர்கள் வரிசை மிகப்பெரியது. இன்று கார்க்கி தலைமுறை தலையெடுத்தபிறகு விவேக், ஞானகரவேல் உட்பட மிகச்சிலரே பாடலாசிரியர் அந்தஸ்தை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

இன்றைய சூழலில் ஒரு பாடலாசிரியரின் திறனால் பாடல் வரிகளும் இசையும் மக்களைச் சென்றடைவதைவிடசம்பந்தப்பட்ட பாடலில் பிரபலங்களின் பங்களிப்பு மிகும்போது அதிக கவனம் கிடைப்பதைப் பார்க்க முடிகிறது.

இன்றைய சூழலில் ஒரு பாடலாசிரியரின் திறனால் பாடல் வரிகளும் இசையும் மக்களைச் சென்றடைவதைவிட, சம்பந்தப்பட்ட பாடலில் பிரபலங்களின் பங்களிப்பு மிகும்போது அதிக கவனம் கிடைப்பதைப் பார்க்க முடிகிறது. உதாரணமாக, விக்ரமின் மகன் துருவ் அறிமுகமான ஆதித்ய வர்மாவில் ரதன் இசையில் ‘இது என்ன மாயமோ’ பாடலை சிவகார்த்திகேயன் எழுதியது பரவலான வரவேற்பைப் பெற்றது.

’பொயட்’ அந்தஸ்து!

2010இல் ’வானம்’ படத்தில் இடம்பெற்ற ‘எவண்டி உன்னை பெத்தான்’ பாடலை சிம்பு எழுதினார் என்பதற்காகவே படுபயங்கரமாக ஹிட் ஆனது. பின்னணிப் பாடகராகவும் அவரது புகழ் மிகப் பெரியது. சிம்பு பாடினார் என்பதற்காகவே, அப்பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனிக்கவனமும் கிடைத்தது. தான் நடிக்கும் படங்களோடு ஜெயம் ரவி, சந்தானம், பரத், கார்த்தி, விக்ரம் பிரபு, பிரசாந்த் போன்ற ரசிகர்களிடம் நன்கு அறிமுகமான நடிகர்கள் மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ், ஷிரிஷ், விஜய்காந்த் மகன் சண்முகபாண்டியன் போன்றோரின் தொடக்க காலப் படங்களிலும் பின்னணி பாடியிருக்கிறார்.

‘ஒய் திஸ் கொலவெறிடி’ பாடலை ‘3’ படத்தில் எழுதியதன் மூலம், இளைய தலைமுறையிடம் ‘பொயட்டு’ அந்தஸ்தைப் பெற்றார் தனுஷ். அப்படத்தில் வந்த ‘கண்ணழகா’ பாடல் வெறுமனே துள்ளல் வரிகள் மட்டுமே அவரிடம் இருந்து வராது என்பதை நிரூபித்தது. இதற்கு முன்னரே, தன் சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த ‘மயக்கம் என்ன’ படத்தில் ‘பிறை தேடும்’, ‘காதல் என் காதல்’ பாடல்களால் பாடலாசிரியராக அறிமுகமாகிவிட்டார் என்றாலும், 3 படப் பாடல்கள் அவருக்கு எழுதவும் வரும் என்பதைக் காட்டியது.

நெல்சன் திலீப்குமார் இயக்கிய ‘கோலமாவு கோகிலா’வில் நயன்தாரா மீதான யோகிபாபுவின் காதலைச் சொல்லும் ‘கல்யாணவயசுதான் வந்துடுச்சுடி’ பாடலை எழுதினார் சிவகார்த்திகேயன். அக்காட்சிகளில் நிரம்பியிருக்கும் நகைச்சுவைக்கேற்ப ‘ஸ்ஃபூப்’ வகையில் அமைந்த பாடல் வரிகளை முழுநேரப் பாடலாசிரியர் ஒருவர் எழுதியிருந்தாலும் இந்தளவுக்கு ‘வைரல்’ ஆகியிருக்குமா என்பது சந்தேகமே! அதேபோல, அவர் நடித்த ‘நம்ம வீட்டுப்பிள்ளை’யில் இடம்பெற்ற ‘காந்த கண்ணழகி’யும் துள்ளலைத் தந்த பாடலாக அமைந்தது. டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியான ‘லிஃப்ட்’டில் ‘இன்னா மயிலு’ எனும் புரோமோஷன் பாடலும் சரி, அப்படமும் சரி ரசிகர்களைச் சென்றடைந்ததில் சிவகார்த்திகேயன் பங்களிப்பும் ஒரு காரணம் வகிக்கிறது.

’டாக்டர்’ படத்தில் இடம்பெற்ற ‘செல்லம்மா’ பாடலும் காட்சியமைப்பும் ’அலா வைகுண்டபுரம்லோ’ தெலுங்கு படத்தில் இடம்பெற்ற ‘புட்டபொம்மா’வை நினைவுபடுத்தியது. கிட்டத்தட்ட அதனை நினைவூட்டும் வகையில் செல்லம்மா வரிகளை எழுதியிருந்தார் சிவகார்த்திகேயன். இன்னொரு பாடலான ‘ஸோ பேபி’யில் ஒரு இளைஞனின் உடைந்த காதலை வடித்திருப்பார். இப்பாடலை வேறொரு பாடலாசிரியர் எழுதியிருந்தால் என்னவாகியிருக்கும் என்பது கேள்விக்குறி.

காதலன் படத்தில் ‘பேட்டராப்’ பாடலை இயக்குநர் ஷங்கர் எழுதியது எப்படி கவனம் பெற்றதோஇளைய தலைமுறை நடிகர்கள் பின்னணி பாடுவதும் பாடல்கள் எழுதுவதும் அதே போன்றதொரு கவன ஈர்ப்பையே உருவாக்குகின்றன.

காதலன் படத்தில் ‘பேட்டராப்’ பாடலை இயக்குநர் ஷங்கர் எழுதியது எப்படி கவனம் பெற்றதோ, இளைய தலைமுறை நடிகர்கள் பின்னணி பாடுவதும் பாடல்கள் எழுதுவதும் அதே போன்றதொரு கவன ஈர்ப்பையே உருவாக்குகின்றன. நட்பின் அடிப்படையிலும், வெறுமனே நடிப்பினைச் செலுத்தமுடியாத படைப்புகளிலும் இப்படியொரு பங்களிப்பைத் தருகின்றனர் சம்பந்தப்பட்ட நட்சத்திரங்கள்.

தமிழ் சினிமாவின் தொடக்கமான நாடக மேடைகளில் நடித்த முன்னவர்கள் இத்தகு திறமைகளாலே அடையாளம் காணப்பட்ட காலமும் உண்டு. அப்படியொரு சுழற்சி மீண்டும் ஆல்ரவுண்டர்களுக்கு வழி விட்டதாகவும் கருதலாம். அதே நேரத்தில் புதிய பாடலாசிரியர்கள் உருவாவதையும் பாடல் எழுதுவதை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்துவதையும் இது பாதிக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. நட்சத்திரங்களின் பாடல் வரிகளில் எளிமையான வார்த்தைகளோடு ஆங்கிலக் கலப்பும் அதிகம் என்ற விமர்சனத்தையும் புறந்தள்ள முடியாது. இது போன்ற நட்சத்திரங்களின் படங்களில் பாடல்கள் எழுதுவதாலேயே ரசிகர்கள் மத்தியில் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு பறிபோவதையும் மறுக்க முடியாது.

2000களில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமார், கபிலன், யுகபாரதி, விவேகா, பா.விஜய் உட்படப் பல பாடலாசிரியர்கள் அடையாளம் காணப்பட்டதும் கொண்டாடப்பட்டதும் அப்படிப்பட்ட வாய்ப்புகளால்தான். இன்றைய தலைமுறை பாடலாசிரியர்களுக்கு அது கிடைக்காதபோது, முழுநேரமாக இதனைச் சார்ந்தியங்குபவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு அதிகம்.

கண்ணதாசன் பாடல்களை உதாரணம் காட்டும்போது, அவை வெளியான காலத்தில் சிலாகிக்கப்பட்டதைவிட பிற்காலத்தில் கொண்டாடப்படுபவற்றின் எண்ணிக்கை மிக அதிகம் என்று சொல்கின்றனர் தமிழ் சினிமா ஆர்வலர்கள். அப்படியொரு காலத்தால் அழியாத தன்மை இன்றைய தலைமுறை நட்சத்திரங்கள் நடிக்கும் பாடல்களுக்கு கிடைக்குமா என்பது பல கோடி ரூபாய் கேள்வி. அதற்கான பதில் மட்டுமே, இப்பாடல்களின் கருத்துவளமும் செறிவும் எத்தகையது என்பதை முடிவு செய்யும். எனினும், இந்தத் திரைப்பட நட்சத்திரங்கள் திரைப்படப் பாடலாசிரியர்களுக்கு  மாற்றாகிவிட முடியாது என்பதும் நிகழ்கால யதார்த்தம்.

Share the Article

Read in : English

Exit mobile version