Site icon இன்மதி

மத்திய பட்ஜெட்: டிஜிட்டல் சொத்து வரி தமிழக கிரிப்டோ வர்த்தகர்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

Ishan Roy, a blockchain architect, technical expert and policy advisor, is Head of the Blockchain initiative at the Centre of Excellence for Emerging Technologies, Tamil Nadu e-Governance Agency.

Read in : English

மத்திய பட்ஜெட்டில் டிஜிட்டல் சொத்துகள் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  இந்த புதிய ஒழுங்குமுறைகள் தமிழ்நாட்டில் கிரிப்டோ தொடர்பான குற்றச் சம்பவங்களை குறைக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது இந்தியாவில் புதிய டிஜிட்டல் சொத்து வரியானது, கிரிப்டோ சமூகத்தினரிடையே உள்ள நிச்சயமற்ற தன்மையை அகற்ற உதவும்  என்கிறார் தமிழ்நாடு எமர்ஜிங் டெக்னாலஜிகளுக்கான சிறப்பு மையத்தின் (CEET) பிளாக்செயின் முன்முயற்சிக்கானத் தலைவர் இஷான் ராய். அவர் ,   இன்மதி இணையதளத்திற்கு அளித்த பேட்டி:

கேள்வி: மத்திய பட்ஜெட்  உரையில் டிஜிட்டல் சொத்துகள் மீது
முன்மொழியப்பட்ட வரி ஏன் முக்கியம்?

இஷான் ராய்: பல செயலிகள் கிரிப்டோ-டு-கிரிப்டோ பரிவர்த்தனைகளைச் செய்கின்றன. உதாரணமாக, ஒரு கிரிப்டோகரன்சி மற்றொரு கிரிப்டோகரன்சியாக மாற்றப்படுகிறது அல்லது ஆன்லைன் கேமருக்கு non-fungible டோக்கன் (NFT) வழங்கப்படும் சமயங்களை நாம் சொல்லலாம். அதேபோல ஒரு கிரிப்டோகரன்சியை கிரிப்டோ எக்ஸ்சேஞ்சில் மற்றொரு கிரிப்டோகரன்சியாகவும் நாம் மாற்றலாம். இப்போது அரசு அனைத்து கிரிப்டோ பரிவர்த்தனைகளுக்கும் 30 % வரி விதிக்கப்படும் என்று கூறுகிறது. இது வரி போடப்படும் பரிவர்த்தனைகளில் எவை எல்லாம் வருகின்றன என்பதில் ஒரு சிறிய குழப்பத்தை ஏற்படுத்துகிறது. Crypto-to-fiat பரிவர்த்தனை செய்யப்படும் போது, அதாவது, யாராவது ஒரு கிரிப்டோகரன்சிக்கு பதிலாகப் பணத்தை (இந்திய ரூபாய் அல்லது அமெரிக்க டாலர்கள்) பெறும்போது மட்டுமே, 30% வரி விதிக்கப்படும் என்று சிலர் கூறுகின்றனர். அதேநேரம் இன்னும் சிலர் கிரிப்டோவை பணமாக மாற்றும்போது பெறப்படும் தொகைக்கு 30% வரி பொருந்தும் என்று கூறுகின்றனர்.

மத்திய அரசின் இந்த புதிய வரித் திட்டத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. முதலாவதாக, இனி கிரிப்டோகரன்சி என்பது ஓரளவுக்குச் சட்டத்தின் (semi-legal) கீழ் வருகிறது என்று நாம் கூறலாம். அதாவது நிதி அமைச்சரின் அறிக்கை கிரிப்டோ சட்டவிரோதமானது இல்லை என்பதைத் தெரிவிக்கிறது. இருப்பினும், இதில் சில தெளிவற்ற பகுதிகள் (க்ரே ஏரியா) இன்னும் உள்ளது;  எனவே கிரிப்டோவை semi-legal என்று கூறலாம். இது கிரிப்டோ சமூகத்திற்குக் கிடைத்த ஒரு வெற்றியாகும், ஏனெனில் இனிமேல் அனைத்து கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களும் குறிப்பிட்ட சில விதிமுறைகளையாவது பின்பற்ற வேண்டும். இது தற்போது நிலவும் நிச்சயமற்ற தன்மையை விடச் சிறந்தது. இதற்கு முன்பு, அரசு மற்றும் சில குறிப்பிட்ட நபர்களின் பேச்சுகள் பிட்காயின் மதிப்பை வீழ்ச்சி   செய்யும் வகையிலேயே இருந்தது. உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் கிரிப்டோவைப் பாதுகாக்கும் வகையில் ஏதாவது கருத்து கூறினால் பிட்காயின்களின் மதிப்பு உயரும். ஆனால், அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இனிமேல் பிட்காயின் மதிப்புகளில் இந்தளவு ஏற்ற இறக்கம் இருக்காது என நாம் கூறலாம்

பிட்காயின்கள் போன்ற கிரிப்டோகரன்சிகளை அதிகம் வைத்திருக்கும் கிரிப்டோ வர்த்தகர்களுக்கு 30% வரி என்பது பெரிய தொகை தான். எனவே அவர்கள் தங்கள் கிரிப்டோ சொத்துகளை வெளிநாட்டு நாணயத்திற்கு மாற்றுவார்களா அல்லது தனியார் வாலெட்களுக்கு மாற்றுவார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பிட்காயின்கள் போன்ற கிரிப்டோகரன்சிகளை அதிகம் வைத்திருக்கும் கிரிப்டோ வர்த்தகர்களுக்கு 30% வரி என்பது பெரிய தொகை தான். எனவே அவர்கள் தங்கள் கிரிப்டோ சொத்துகளை வெளிநாட்டு நாணயத்திற்கு மாற்றுவார்களா அல்லது தனியார் வாலெட்களுக்கு மாற்றுவார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதேநேரம் இந்த வரி விதிப்பு, சிறு வணிகர்களுக்கு நிச்சயமற்ற தன்மையைக் குறைக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.

கேள்வி: ஆன்லைன் கேமர்களால் பெறப்படும் NFTகளுக்கு வரி விதிக்கப்படலாம் என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். எனவே, இந்த புதிய கட்டுப்பாடு ஆன்லைன் கேமிங் துறையில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

இஷான் ராய்: (கிரிப்டோ கரன்சியின் மாறுபட்ட வடிவமே என்எஃப்டி அதாவது Non Fungible Tokens. உண்மையில் உள்ள சொத்துகளின் பிரதிநிதியாகவே NFT பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதனை வர்த்தகம் செய்ய முடியாது. இது டிஜிட்டல் லெட்ஜரில் சேமிக்கப்படும் ஒரு தகவலே.)

NFTகள் இந்த புதிய வரிச்சட்டத்தின் கீழ் வரும் என்று நான் கருதுகிறேன். அப்படி இருந்தால் இந்த NFT, வரிகளில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இவை கிரிப்டோ கரன்சி அல்லது பிளாக்செயினுக்கு வெளியே கூட சில பயன்களைக் கொண்டிருக்கின்றன. பாலிவுட், டோலிவுட் மற்றும் அவ்வளவு ஏன் சென்னை சிட்டி கால்பந்து கிளப் ஆகியவை கூட NFTகளில் நுழைகின்றன. அதேநேரம் NFTகளை வாங்கினால் வரி விதிக்கப்படலாம் என்று நான் கூறவில்லை. ஆனால் உங்கள் வாலெட்டில் இருக்கும் NFTகளை நீங்கள் விற்கும்போது, அதைப் பெறுபவர் 30% வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். இது NFT சந்தையில் அதிக ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தலாம். ஏனென்றால் அது பெரும்பாலும் ஊகங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஒரு சந்தை. எனவே, NFTகளை விற்கும்போது ஒருவர், அத்துடன் 30% வரியைச் சேர்த்தே இனி கணக்கிட வேண்டி இருக்கும்.

கேள்வி: இந்த புதிய வரி என்பது கிரிப்டோ வர்த்தகத்தில் ஒருவர் நுழைவதைத் தடுக்குமா?

இஷான் ராய்: அதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இன்னும் கூட பலருக்கு கிரிப்டோ சந்தையில் எப்படி நுழைவது என்று தெரியாது. இதில் ஏற்கனவே உள்ளவர்களுக்கு இதில் இருக்கும் மறைமுக செலவுகள் பற்றித் தெரிந்திருக்கும். இந்த வரி தொடர்பான அறிவிப்பு வருவதற்கு முன்பே கூட, ஒரு பிட்காயினை வாங்கக் கணிசமான அளவு கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. அதாவது அவர்கள் ஏற்கனவே பெரிய கட்டணத்தைச் செலுத்தப் பழகிவிட்டனர். இருப்பினும், ஒருவர் ஒவ்வொரு முறையும் கிரிப்டோக்களை வாங்கி விற்பனை செய்யும் போதும் 30% வரி செலுத்த வேண்டும் என்பதால், வர்த்தக அளவு குறையலாம். இருப்பினும், இது மக்களை கிரிப்டோவில் நுழைவதைத் தடுக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதேநேரம், கிரிப்டோ வைத்திருப்பவர்கள் அதை நீண்ட கால முதலீடாகக் கருதி வைத்திருக்கலாம்.

கேள்வி: கிரிப்டோகரன்சி மற்றும் NFTகள் போன்ற டிஜிட்டல் சொத்துகள் பிளாக்செயின் அடிப்படையில் இயங்குவதால் இதன் உரிமையாளர்களை எப்படிக் கண்டறிய முடியும். வாடிக்கையாளர்களின் KYCகளை செக் செய்யும் தளத்தில் பிட்காயினை வாங்காத வரையில் யார் உரிமையாளர் என்பதைக் கண்டறிந்து எப்படி  வரி விதிக்க முடியும்?

இஷான் ராய்: கோட்பாட்டளவில், ஒரு Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு கூட பிளாக்செயினில் பங்கேற்கலாம். இதன் மூலமும் ஒருவர் இதை அணுகலாம். அடிப்படையில் நீங்கள் சொல்வதைப் போல யாராலும் கிரிப்டோவை அனுப்புபவரையும் பெறுபவரையும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் பெரும்பாலான இந்திய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்கள் KYCகளை செய்கின்றன. அவர்கள் பயனாளர்களின் பான் கார்டு உள்ளிட்ட பிற தகவல்களைப் பெறுவார்கள். எனவே பரிவர்த்தனைகள் எப்படி நடைபெறுகிறது என்பதை அவர்களால் கண்டறிய முடியும். Ransomware போன்ற தாக்குதல்களில் ஒருவர் பணத்தை இழக்கும்போது க்ரிப்டோ பரிவர்த்தனைகளை டிரேஸ் செய்வது தொடர்பாகப் பெரியளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் ஏற்கனவே நிறைய ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு சிறப்பான தீர்வாக A.I மற்றும் பகுப்பாய்வை (data analytics) நாம் பயன்படுத்தப்படலாம்.

கேள்வி: ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் நாணயம் தொடர்பான பட்ஜெட் அறிவிப்பிற்கும் இதற்கும் என்ன தொடர்பு?

இஷான் ராய்: இது கிரிப்டோகரன்சியுடன் தொடர்புடையதா அல்லது தனியாகச் செயல்படுமா என்று என்னால் கூற முடியாது. இருப்பினும், அவை தனியாக இருக்கும் என நாம் வைத்துக் கொண்டால், அரசு இந்த குறிப்பிட்ட பிரிவுக்கு எந்தளவு முக்கியத்துவம் தருகிறது என்பது ஊக்கமளிக்கும் ஒன்றாகவே உள்ளது. ஏற்கனவே UPI பரிமாற்றங்கள் சில்லறை வர்த்தகத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. பிளாக்செயினைப் பயன்படுத்தி இதே வேகத்தில் இதை முறையில் கட்டணங்கள் அல்லது பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் போகலாம்.

மறுபுறம், மத்திய வங்கியிலிருந்து மற்ற வங்கிக்கு அல்லது வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது டிஜிட்டல் நாணயத்தின் மூலம் நாம் அதிக செயல்திறனைப் பெறும் வாய்ப்பு உள்ளது. ஆனால், ஒரு மிக முக்கிய பிரச்சினையைத் தீர்க்க வெளிப்படையாக ஒரு அரசே இது போன்ற ஒரு தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் போது, இத்துறையில் உள்ள இந்திய நிறுவனங்களில் முதலீடு அதிகரிக்கும். அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது கிரிப்டோ சமூகத்திற்கு இது ஒரு நல்ல நடவடிக்கை தான். ஏனெனில் இதன் மூலம் இந்தியாவை நாம் பிளாக்செயினுக்கான மையமாக மாற்றலாம். இந்தியா ஏற்கனவே அந்த இடத்தில் தான் உள்ளது என்றாலும் புதிய வரி அறிவிப்பு அதில் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

அதேநேரம் கிரிப்டோகரன்சியுடன் டிஜிட்டல் ரூபாயை எவ்வாறு இணைக்க முடியும் என்பது தான் பெரிய கேள்வியாக உள்ளது. ஏனென்றால் வழக்கமாக ஒவ்வொரு நாடுகள் வெளியிடும் பணத்தை விட கிரிப்டோகரன்சி பல நன்மைகளைக் கொண்டு உள்ளது. எடுத்துக்காட்டாக, DeFi (Decentralized Finance) எனப்படும் பரவலாக்கப்பட்ட நிதி வெவ்வேறு நாணயங்கள் (டாலர், ரூபாய் போன்ற நாணயங்கள்) இடையே கடன்களை நகர்த்த அனுமதிக்கிறது. இனி இதுபோன்ற நடைமுறைகள் வழக்கமான நாணயத்திலும் கூட வரலாம்.

எனவே, ஃபின்டெக் துறை புதுமையான தயாரிப்புகளுடன் மேலும் வலுவாக மாறுவதைக் காணலாம். கிரிப்டோவில் இருக்கும் இந்த நன்மைகள், இனி இந்திய ரூபாய் உலகத்திற்கும்கூடச் செல்லலாம். இது கிரிப்டோ சாம்ராஜ்யத்தை ஆட்டுவிக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் ஒருவர் குறுகிய காலத்தில் நல்ல லாபம் பார்க்கலாம் என்ற ஊகத்தில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யலாம். ஆனால், அதை இந்திய டிஜிட்டல் ரூபாயில் செய்ய முடியாது, ஏனென்றால் இந்திய ரூபாய் ஒரு நிலையான நாணயமாக இருக்கும். அதாவது, ஒரு இந்திய கிரிப்டோகரன்சி என்பது ஒரு ரூபாய் அல்லது நூறு ரூபாய்க்கு இணைக்கப்பட்டிருக்கும், அதாவது, விலையில் ஏற்ற இறக்கம் பெரியளவில் இருக்காது. ஆனால், கிரிப்டோ மதிப்பு அதிகரித்தால் அதில் லாபம் பார்க்கலாம் என்பதாலேயே ஏராளமானோர் கிரிப்டோகரன்சிகளை வாங்குகின்றனர்.

இரண்டாவதாக, தொழில்நுட்பத்திற்காக கிரிப்டோவில் முதலீடு செய்பவர்களின் விஷயத்தில், அவர்களை இந்திய டிஜிட்டல் ரூபாய் தடுக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால், ஸ்டார்ட்-அப் மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத இடங்களில் தான் கண்டுபிடிப்புகள் வேகமாக நடக்கும். இந்திய டிஜிட்டல் ரூபாய்களில் இத்தகைய மாற்றங்கள் நடக்கப் பல காலம் ஆகலாம். எனவே டிஜிட்டல் ரூபாய் கிரிப்டோகரன்சியுடன் இணைக்கப்படும் அல்லது கிரிப்டோக்களுக்கு ஒரு தடையாக இருக்கும் என நான் கருதவில்லை.

கேள்வி: தமிழ்நாட்டிலுள்ள கிரிப்டோ வர்த்தகர்களுக்கு இந்த புதிய சட்டம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? டிஜிட்டல் நாணய வர்த்தகத்திற்குக் கட்டுப்பாடு எவ்வாறு உதவும் அல்லது பாதிப்பை விளைவிக்கும்?

இஷான் ராய்: தமிழ்நாட்டில் பல தொழில்நுட்ப மற்றும் ஃபின்டெக் நிறுவனங்கள் உள்ளன. கிரிப்டோ இப்போது இந்தியாவில் Semi legalஆக இருப்பதால், இந்த ஃபின்டெக் நிறுவனங்கள் பிளாக்செயின் மற்றும் கிரிப்டோவை எப்படி தங்களுக்கு ஏற்ப பயன்படுத்தலாம் என்பதில் ஆர்வம் காட்டுவதை நாம் பார்க்கலாம். அதேநேரம் மெய்நிகர் கலையை (virtual art) வாங்க அல்லது விற்க கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்த விரும்புவோருக்கு இது எதிர்மறை அம்சமாக இருக்கும். அதாவது வாடிக்கையாளர்கள் இனி ஒவ்வொரு முறையும் இதுபோன்ற மெய்நிகர் கலையை வாங்கும்போது 30% வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பதால், இதுபோன்ற புதிய முயற்சிகளை  எடுக்கும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பார்கள். சென்னையில் பல பிளாக்செயின் நிறுவனங்கள் இருப்பதால் தமிழகத்தில் இது எதிர்மறையான தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

கிரிப்டோகரன்சிகளுக்கு இந்தியாவில் ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்க முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும்அத்தகைய நடவடிக்கை இந்தியாவுக்கு எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும்.

கேள்வி: கிரிப்டோகரன்சிகளை சீனா ஒட்டுமொத்தமாகத் தடை விதித்ததைப் போன்ற நடவடிக்கைகள் இந்தியாவில் எடுக்கப்பட்டால் என்ன நடக்கும்?

இஷான் ராய்:  சீனா கிரிப்டோகரன்சிகளுக்கு முழுமையாகத் தடை விதித்துவிட்டு, டிஜிட்டல் யுவானை ஊக்குவித்து வருகிறது. டிஜிட்டல் யுவானைப் பயன்படுத்தும் அனைவரையும் சீன அரசால் கண்காணிக்க முடியும், ஏனெனில் பயனர் தரவு, லெட்ஜர் மற்றும் பயனர்கள் பணத்தை எங்குச் செலவிடுகிறார்கள் என்பதைச் சீன அரசு அணுகலாம். இந்தியா ஜனநாயக நாடாக இருப்பதால், டிஜிட்டல் யுவான் போல டிஜிட்டல் ரூபாயை வங்கியால் திணிக்க முடியாது என்று நான் நம்புகிறேன். கிரிப்டோகரன்சிகளுக்கு இந்தியாவில் ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்க முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், அத்தகைய நடவடிக்கை இந்தியாவுக்கு எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும். ஏனெனில் கிரிப்டோகரன்சி மூலம், நாடு முதல் முறையாக ஒரு தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது. ஏ.ஐ, மெஷின் லேர்னிங் அல்லது ட்ரோன்கள் போன்ற தொழில்நுட்பங்களில் நாம் எப்போதும் சர்வதேச தொழில்நுட்பங்களில் இருந்து நாம் பின்தங்கியே இருக்கிறோம். பாலிகான் போன்ற பல பெரிய இந்திய பிளாக்செயின் நிறுவனங்கள் வெளிநாட்டில் பல வாடிக்கையாளர்களுடன், உலக நாடுகளின் கவனத்தைப் பெறுகின்றன. எனவே, முழு கிரிப்டோ தடை என்பது இந்த ஒரு வாய்ப்பை இழக்கச் செய்யும். எனவே, இத்தகையைத் தடையை இந்திய அரசு அறிவிக்குமா என்று என்னால் கூற முடியாது.

கிரிப்டோகரன்சியை எங்கள் பிளாட்ஃபார்மில் பயன்படுத்தும் திட்டம் எதுவும் இப்போது எங்களிடம் இல்லை.


கேள்வி: தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் பிளாக்செயின் துறையால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஏதேனும் அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதா? இந்த புதிய வரி அதில் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்துமா?

இஷான் ராய்: கிரிப்டோகரன்சியை எங்கள் பிளாட்ஃபார்மில் பயன்படுத்தும் திட்டம் எதுவும் இப்போது எங்களிடம் இல்லை. ஏனெனில் UPI மையமாகக் கொண்டுள்ள தொழில்நுட்பங்கள், மின் ஆளுமையில் அதிகப் பலனைக் கொண்டுள்ளன. டெண்டர் செயல்முறைக்குப் பிறகு சில தனியார் நிறுவனங்கள் உடன் கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

டிஎன் பிளாக்செயின் திட்டம் என்பது ஒரு வகை sandbox platform ஐ அமைத்துக் கொடுத்து, அதன் மேல் ஸ்டார்ட்-அப்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் எப்படி தங்கள் செயலிகளை உருவாக்குகிறார்கள் என்பது தான். எடுத்துக்காட்டாக, தனியார் துறைக்கான சாண்ட்பாக்ஸ் தளத்தைப் பயன்படுத்தி பிட்காயினின் மேல் பயன்படும் திட்டங்களை உருவாக்கலாம். இதன் மூலம் தமிழக மக்களுக்கு உதவ முடியும். நிச்சயமாக இது எங்கள் நீண்ட கால திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Share the Article

Read in : English

Exit mobile version