Site icon இன்மதி

3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரயில்கள்: பட்ஜெட் அறிவிப்பு நடைமுறையில் சாத்தியமா?

தானியங்கி கதவுகள், பயோ கழிவறைகள், சென்சாரால் இயங்கும் குழாய்கள் என்று பல்வேறு நவீன வசதிகள் கொண்டது வந்தே பாரத் இரயில்

Read in : English

மைய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 400 வந்தே பாரத் இரயில்கள் வரும் மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியா முழுதும் இயக்கப்படும் என்று தன்னுடைய பட்ஜெட் உரையில் தெரிவித்தார். இந்தியா முழுதுமே இரண்டே இரண்டு வந்தே பாரத் இரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றை போன்ற 400 இரயில்கள் உருவாக்குவது சாத்தியம்தானா?

இந்தியா சுதந்திரம் அடைந்த 75ஆம் ஆண்டை முன்னிட்டு 75 வந்தே பாரத் இரயில்களை நாடு முழுதும் இயக்குவதை பற்றி பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த சுதந்திர தினத்தன்று அறிவித்தார். அந்த அறிவிப்பை தொடர்ந்து 44 வந்தே பாரத் இரயில்களை உருவாக்க 2,211 கோடிகளுக்கான டெண்டர் விடப்பட்டது. இவற்றில் 24 இரயில்கள் சென்னை பெரம்பூரில் உள்ள இரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். கபூர்தலா மற்றும் ரே பரேலியில் உள்ள தொழிற்சாலைகளில் 10 வீதம் தயாரிக்க திட்டமுள்ளது.

பிரதமரின் அறிவிப்பை தொடர்ந்து 44 இரயில்களுக்கான டெண்டர் விடப்பட்டாலும் பெரம்பூர் இரயில் பெட்டி தொழிற்சாலைக்கு மட்டுமே இந்த இரயில்களை உருவாக்க தெரியும்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பெரம்பூர் இரயில் பெட்டி தொழிற்சாலை வந்தே பாரத் இரயில்களை 2018ஆம் வருடம் உருவாக்கியது. பதினெட்டு மாதங்களில் தயாரான இரயில் என்பதால் ‘ட்ரெயின் – 18’ என்றும் இந்த இரயில் அழைக்கப்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்பட்ட இரண்டு இரயில்களும் டெல்லி – வாரணாசி மற்றும் டெல்லி – வைஷ்ணோதேவி கட்ரா மார்க்கங்களில் ஓடி கொண்டிருக்கின்றன. பிரதமரின் அறிவிப்பை தொடர்ந்து 44 இரயில்களுக்கான டெண்டர் விடப்பட்டாலும் பெரம்பூர் இரயில் பெட்டி தொழிற்சாலைக்கு மட்டுமே இந்த இரயில்களை உருவாக்க தெரியும். மற்ற தொழிற்சாலைகள் இவற்றை உருவாக்கும் தொழிற்நுட்பத்தை விரைவில் கற்றுக்கொள்ளும் என்கிறார் இரயில் பெட்டி தொழிற்சாலை அதிகாரி ஒருவர்.

இரண்டுவருடமாக பாடாய்படுத்தும் பெருந்தொற்று உற்பத்தித்திறனை மிகவும் குறைந்துவிட்டதாக கவலை தெரிவிக்கிறார்கள் அதிகாரிகள். உதாரணமாக பெரம்பூர் இரயில் பெட்டி தொழிற்சாலை ஓர் ஆண்டில் 4,000 பெட்டிகள் உற்பத்தி செய்யமுடியும். இந்த உற்பத்தித்திறன் 2,500 ஆக குறைந்துவிட்டது


இந்நிலையில், பெரம்பூர் இரயில்பெட்டி தொழிற்சாலை மூன்றாவது வந்தே பாரத் இரயிலின் மாதிரிக்கான இந்திய ரெயில்வேயின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிலைகளின் அமைப்பின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இந்த அமைப்பின் ஒப்புதல் கிடைத்தவுடன் இரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதலும் பெறப்படும். இந்த ஒப்புதல்கள் கிடைத்தவுடன் தயாரிப்பு முடுக்கிவிடப்படும் என்கிறார்கள் அதிகாரிகள். ஆனால் இரண்டுவருடமாக பாடாய்படுத்தும் பெருந்தொற்று உற்பத்தித்திறனை மிகவும் குறைந்துவிட்டதாக கவலை தெரிவிக்கிறார்கள் அதிகாரிகள். உதாரணமாக பெரம்பூர் இரயில் பெட்டி தொழிற்சாலை ஓர் ஆண்டில் 4,000 பெட்டிகள் உற்பத்தி செய்யமுடியும். இந்த உற்பத்தித்திறன் 2,500 ஆக குறைந்துவிட்டது. இரயில் பெட்டி செய்வது ஏறக்குறைய கார் தயாரிப்பு போலத்தான். எல்லா உதிரிபாகங்களும் வெளியிலிருந்து வரவேண்டும். உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இந்த பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.

வந்தே பாரத் இரயில் சாதாரணமான இரயில்களை போல இரயில் இஞ்சினால் இயக்கப்படாமல், உள்ளிருந்து செயல்படும் மின்மோட்டார்களால் இயக்கப்படுகின்றன. தானியங்கி கதவுகள், பயோ கழிவறைகள், சென்சாரால் இயங்கும் குழாய்கள் என்று பல்வேறு நவீன வசதிகள் கொண்டது இந்த இரயில். “வழக்கமான எலக்ட்ரிக் இரயில்கள் நவீன வசதிகளுடன் அமைந்தால் எப்படி இருக்குமோ அதுபோல் இவை இருக்கும். நல்ல பாதுகாப்பான பயணம் செய்ய வந்தே பாரத் இரயில்கள் உகந்தவை,” என்கிறார் இவற்றில் பயணம் செய்திருக்கும் அருண்.

மூன்று வருடங்களில் 400 இரயில்களை இயக்குவது என்பது நாடு முழுதும் ஒரு நாளில் இயங்கும் 13,000 இரயில்களில் மூன்று விழுக்காடு. அவற்றோடு பழுதுபட்டால் இயக்க மேலதிக இரயில்களும் தேவைப்படும். என்றாலும் இந்த இலக்கை அடைவது நிச்சயம் சாத்தியம் என்கிறார்கள் இரயில்வே அதிகாரிகள்.

வந்தே பாரத் இரயில்கள் விரைவு இரயில்களாக தயாரிக்கப்பட்டவை. மணிக்கு 200 கிலோமீட்டர் செல்லும் திறன் படைத்தவை. எனினும் அந்த வேகத்தில் இயக்க தகுந்த ரயில்பாதைகள் இந்தியாவில் உள்ளனவா என்ற கேள்வி எழுப்புகிறார் கன்னியாகுமாரி மாவட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் செயலாளர் எட்வர்ட் ஜெனி அவர்கள். பிரதமர் அறிவித்த 75 இரயில்களில் ஒன்றை சென்னை – கன்னியாகுமரி இடையில் இயக்கவேண்டும் என்று இந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் சென்னை – கன்னியாகுமரி, சென்னை – பெங்களூரு மற்றும் சென்னை – கோவை இடையேதான் இந்த விரைவு இரயில்களை இயக்கமுடியும். “சென்னை – கன்னியாகுமரி இடையே இயக்கினால் தமிழ்நாடு முழுதும் பயன்பெறும்,” என்கிறார் ஜெனி.

Share the Article

Read in : English

Exit mobile version