Site icon இன்மதி

தமிழ்நாட்டில் இந்துத்துவம் ஏன் வெற்றி பெறவில்லை?: இது மனதின் குரல், பிரதமருடையது அல்ல!

2016 ஆம் ஆண்டு புதிய பாஜக தலைமையகத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பாஜக தலைமை.(Photo Credit: Flickr – Narendra Modi Official)

Read in : English

இந்துக்களே ஒன்றுகூடுங்கள் நமக்கான தேசத்தை நாமே கட்டி எழுப்புவோம் என்றார்கள் பாஜகவினர். தனிப்பெரும்பான்மையில் பாஜகவை வெற்றி பெறச்செய்தார்கள். ஆனால் புதிய இந்தியா கட்டியெழுப்பட்டதா? மாறாக ஒரு சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்தி கொடுப்போம் என்ற நம்பிக்கையாவது ஏற்படுத்தியதா?

சாதாரண மக்களின் சமூக பொருளாதார நீரோட்டத்தில் இவர்கள் கலக்கவில்லை என்பதே நிதர்சனம். நமது ஊரில் ஒரு பழமொழி உண்டு பணக்காரனுக்கு பணத்தோடு பணம், கடன்காரனுக்கு கடனோடு கடன் என்பது போலதான் பாஜகவின் திட்டங்களும் செயல்பாடுகளும் உள்ளன.

பாஜகவின் தேசிய தலைமையே மக்களின் நம்பிக்கையை இழந்து வருகிறது. அதற்கு காரணம் அடித்தட்டு மக்களின் சமூக பொருளாதார சிக்கல்களை களைவதற்கு பதிலாக அதிகப்படுத்தி மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி கொண்டிருப்பதுதான். அதற்கு உதாரணமாக, நீட் தேர்வை சொல்லலாம், சமூகம் பொருளாதரத்தில் பின்தங்கிய மக்களின் மருத்துவர் ஆகும் கனவை சிதைக்கிறது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட இந்து மாணவ மாணவிகளே. இந்துக்களே ஒன்றுகூடுங்கள் வென்று காட்டுவோம் என்று கோஷமிடும் எவரும் இந்த இந்துக்களுக்காக பேச முன்வரவில்லை.

அனைத்து விஷயங்களிலும் தேசம், தேசபக்தி பற்றி அதிகம் பேசுபவர்கள் பாஜகவினர் தான், எதற்கெடுத்தாலும் தேச நலனுக்காக என்கிறார்கள். ஆனால் இவர்களின் செயல்பாடுகளால் தேசத்தின் மிகப்பெரும்பான்மையான மக்கள் துன்பத்திற்கு ஆளாகிறார்கள். இங்கு ஒரு கேள்வி எழுகிறது. பாஜகவினர், எதை தேசம் என்கிறார்கள்? இங்கிருக்கும் கல்லும் மண்ணும் தான் தேசமா, இல்லை அதற்குள் வாழும் மக்களா என்று கேட்கத்தோன்றுகிறது.

பல நேரங்களில் முந்தைய ஆட்சியாளர்களை பாஜகவினர் குற்றம் சுமத்துகிறார்கள். பாஜகவினரால் குற்றம் சுமத்தப்பட்டவர்கள்தான் இந்தச் சொத்துகளை நாட்டுக்காக ஏற்படுத்தினார்கள். ஆனால் பாஜக அதை விற்றுக் கொண்டிருக்கிறது.

அனைத்திலும் முரண்பாடு. சொல்லுக்கும் செயலுக்கும் நடுவே முரண்பாடு. நூறு லட்சம் கோடிக்கு திட்டம் போடுகிறார்கள் ஆனால் ஆறு லட்சம் கோடிக்கு பொதுத்துறை நிறுவனங்களை குத்தகைக்கு விடப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களின் மீதான வரி பன்மடங்கு உயர்த்தப்படுகிறது. அதே நேரம் பெருநிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி வரி சலுகை கொடுக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் சேமிப்பு நிதி வரை கைவைத்தாகிவிட்டது.

பல நேரங்களில் முந்தைய ஆட்சியாளர்களை பாஜகவினர் குற்றம் சுமத்துகிறார்கள். பாஜகவினரால் குற்றம் சுமத்தப்பட்டவர்கள்தான் இந்தச் சொத்துகளை நாட்டுக்காக ஏற்படுத்தினார்கள். ஆனால் பாஜக அதை விற்றுக் கொண்டிருக்கிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்கிறார்கள் அப்படியானால் எதனால் மக்கள் இறந்தார்கள்? கொரோனவா? அல்லது வேறு ஏதேனும் நோயா? எதுவாக இருந்தாலும் மக்கள் இறந்தது உண்மை. அங்கே அரசு மக்களை காக்க தவறிவிட்டது என்பதுதான் உண்மை.

தமிழகத்தை பொறுத்தவரையில் பாஜகவினரின் கதையே வேறு இவர்கள் நேரடி ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்ற போதிலும் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுகவின் ஆட்சி அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி கொண்டது பாஜகதான். அதிகாரத்தில் இருந்த அதிமுகவைவிட பாஜகவின் மாநில நிர்வாகிகளின் கை ஓங்கி இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

பொதுவெளியில், சமூக ஊடகங்களில் பெரியார் பற்றிய பாஜகவினரின் பொய் தகவல்கள், மக்களிடையே மேலும் வெறுப்பை ஏற்படுத்தியது. பெரியார் பற்றிய பொய் செய்திகளும், பாஜகவினரின் முறையற்ற பேச்சுகளும் பெரியார் பற்றிய தேடலை இளைய தலைமுறையிடையே ஏற்படுத்தியது என்பதில் ஐயமில்லை. ஒரு வகையில் தி.க வினர், இவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.

பாஜகவினரின் செயலால் ஏற்பட்ட வெறுப்பு நேரடியாக அதிமுகவை பாதித்தது. தேர்தலில் தாமரையை 4 இடங்களில் மலர வைக்க, இலை மொத்தமாக கருகியது. ஆட்சி மாற்றம், கட்சி மாற்றம் எல்லாம் முடிந்தபோது பாஜகவிலும் தலைமை மாறியது. எல்லோரும் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் போன்ற சீனியர் நிர்வாகிகளை எதிர்பார்த்த போது தேசியத் தலைமை அண்ணாமலையை நியமனம் செய்தது.

சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவருக்கு தலைவர் பதவியா என்று உட்கட்சிக்குள் சலசலப்பு. அண்ணாமலை எவ்வாறு செயல்படுவார் என்பதை காட்டிலும், அவர் இதற்கு முன்னால் அவர் செய்தது என்ன என்ற கேள்வி எழுந்தது. தேடினால் அவர் முரண்பாடுகளின் மொத்த உருவமாக காட்சி தருகிறார். தற்சார்பு விவசாயி என்று சொன்னவர், தேர்தல் வந்ததும் அரசியல்வாதியானார்.

தேர்தல் நேரத்தில் ஏன் வேலையை விட்டேன் என்பதற்கு சொன்ன காரணம் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இறந்ததால் மனவேதனையில் வேலையை விட்டது போல் பேசுகிறார். அவ்வளவு மன தைரியம் இல்லாதவர் தான் சிங்கமா என்று கேட்கவேண்டியுள்ளது.

அடுத்து, We The leaders Foundation மூலமாக ஒத்த கருத்துடையோரை ஒன்று திரட்டி சமுதாயம் மற்றும் நாட்டு நலனுக்கு பாடுபடுகிறேன் என்றார். கரூரில் அது எங்கு இருக்கிறது என்று இணையத்தில் தேடினால் அது கர்நாடகாவில் உள்ளது. தமிழ்நாட்டில் ஒத்த கருத்துடையோரை ஒன்று திரட்டும் ஓர் அமைப்பு ஏன் கர்நாடகாவில் இருந்து செயல்படவேண்டும்?

2026ஆம் ஆண்டு தேர்தலில் 150 இடங்களை வெல்வோம் என்று நகைப்பை வரவழைக்கிறார். அண்ணாமலை ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். நீதிகட்சி ஆட்சி காலத்திலேயே தமிழ்நாடு சமூக நீதியுடன் கூடிய கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, அரசில் அனைவரின் பங்களிப்பு என்ற பாதையில் சென்று விட்டது. இப்பொழுது அதற்கு வயது 100.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒரு தரவை PEW Research Center என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் 88 சதவீதம் பேர் இந்துக்கள். உத்தரப்பிரதேசத்துடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் 8 சதவீதம் அதிகம். அப்படி இருந்தும் பாஜகவின் இந்துத்துவ கொள்கை இங்கு எடுபடவில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டில் 88 சதவீதம் பேர் இந்துக்கள். உத்தரப்பிரதேசத்துடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் 8 சதவீதம் அதிகம். அப்படி இருந்தும் பாஜகவின் இந்துத்துவ கொள்கை இங்கு எடுபடவில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

பாஜக, பெரும்பான்மை இந்துக்களின் கட்சியல்ல பெரும்பான்மை இந்துக்களிலேயே ஒரு சிறு குழுவிற்கான கட்சி என்பதை கட்சிக்காரர் வெளியிட்ட ஆடியோவில் அண்ணாமலை சொல்லி இருக்கிறார்.

அண்ணாமலைக்கு முன் தமிழக பாஜக தலைவராக இருந்த முருகன், வேலனுக்கு வேல் யாத்திரை நடத்திப் பார்த்தார் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உங்களுக்கு நீங்களே சமாதானம் சொல்லிக்கொள்ள அல்லது தேசிய தலைமையை நம்ப வைக்க மிகப்பெரிய வெற்றி என்று சொல்லிக்கொள்ளலாம்.

ஆனால் அது உண்மையில்லை. மக்கள் ஏற்றுக்கொள்ளாததற்கு காரணம் நீங்கள் வேலை, அட்டையில் செய்து கையில் பிடிப்பவர்கள். இங்கிருக்கும் மக்களோ இரும்பில் செய்து உடலில் குத்தி வேல் யாத்திரை செல்பவர்கள். எங்களுக்கு இருப்பது பக்தி. உங்களுக்கு இருப்பது அரசியலில் மீன் பிடிக்கும் முயற்சி.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தியே தீருவோம் என்று அண்ணாமலை பேசினார். பேரிடர் காலம் என்பதால் ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்படி, தமிழக அரசு அனுமதி தரவில்லை. அதற்கு ஏதோ தமிழகம் மட்டுமே தடை விதித்திருப்பது போல் ஒரு நாடகம்.

பேரிடர்காலத்தில் சிறு, குறு தொழில் முனைவோரும் தொழிலாளிகளும் அடுத்த மாதம் வேலையிருக்குமா அடுத்தமாதம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க என்ன செய்வது என்று அனைத்து தரப்பினரும் கையை பிசைந்து கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றியெல்லாம் வாய் திறக்க அண்ணாமலைக்கு நேரம் இல்லை.

அண்ணாமலை, மாநிலத் தலைவராகியதும், ஆக்கபூர்வமாக செயல்படுகிறாரா என்று சற்று பொறுத்திருந்து பார்ப்போம் என தோன்றியது. பதினேழு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். நாங்கள் நினைத்தால் அல்லது எங்கள் மீது கைவைத்தால் என்ற என்ற தோரணையில் அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கிறார்.

தமிழகத்தை பொறுத்தவரை தேசிய கட்சிகளின் வெற்றி என்பது வெறும் கனவுதான். அதிலும் .அண்ணாமலை கூறுவது போல் தனித்து போட்டி என்பது தற்கொலைக்கு சமம். பாஜக வசைபாடும் திராவிட கட்சிகளுடன், கூட்டணி வைத்துக்கொள்வதே, அக்கட்சியின் இருப்பை காட்டிக்கொள்ள சிறந்த வழி.

(கரூரிலும் கொடைக்கானலிலும் தொழில்நுட்பப் பணியைச் செய்து வரும் யுவராஜ், சொந்தமாக சிறிய அளவில் வர்த்தகம் செய்து வருகிறார்.)

Share the Article

Read in : English

Exit mobile version