Site icon இன்மதி

எம்பிபிஎஸ்: கடந்த ஆண்டில் நீட் தேர்வு எழுதப் பயந்த மாணவர், இந்த ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம்!

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களிலேயே அதிக மதிப்பெண்கள் பெற்ற சிவாவை நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டினார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு.

Read in : English

எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கு, அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வு எழுதி தகுதி பெற்ற மாணவர்களில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார் புதுக்கோட்டை மாவட்டம் சிலட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ஐ.சிவா.

கடந்த ஆண்டு பிளஸ் டூ படித்து முடித்த அவர், நீட் தேர்வு எழுதப் பயந்து கொண்டு அத்தேர்வை எழுதவில்லை. வேளாண் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பு இருந்தும் அக்கல்லூரியில் சேராமல், ஆசிரியர்கள் கொடுத்த உற்சாகத்தால் நீட் தேர்வுக்குத் தயாராகி, இந்த ஆண்டு நீட் தேர்வில் அவர் 514 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்த ஆண்டு நீட் தேர்வில் 500 மேல் மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்க•ள் இரண்டு பேர். அவர்களில்  முதலிடம் பெற்றவர் சிவா என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை மறுநாள் நடைபெறும் மருத்துவப் படிப்புக்கான கவுன்சலிங்கில் அவருக்கு சென்னை அரசு மருத்துவக் கல்லூரியிலோ அல்லது வேறு அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் அவருக்கு நிச்சயம் இடம் கிடைத்துவிடும். இதன்மூலம், அவரது குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி மட்டுமல்ல, சொந்த ஊரான கூத்தாடி வயல் கிராமத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் முதல் மாணவரும்கூட.

இந்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 1806 மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைக்கும்அத்துடன் அவர்களது படிப்புச் செலவை அரசே ஏற்கும் என்ற தமிழக அரசின் முடிவும் அந்த மாணவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம்.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை பெரிதும் குறைந்து விட்டது. இந்தச் சூழ்நிலையில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக அரசு கொண்டு வந்துள்ளதால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் பல சாமானிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர வழி ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 1,806 மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைக்கும். அத்துடன் அவர்களது படிப்புச் செலவை அரசே ஏற்கும் என்ற தமிழக அரசின் முடிவும் அந்த மாணவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம்.

சிவா

அறந்தாங்கியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கூத்தாடிவயல் கிராமத்தைச் சேர்ந்த ஐ. சிவாவின் அப்பா ஐயப்பன் ஆட்டுத்தோல் விற்பனை செய்பவர். பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர். அவரது அம்மா புஷ்பா வீட்டை கவனித்துக் கொள்கிறார். சிவாவின் பெற்றோர்கள் பத்தாம் வகுப்பைத் தாண்டியதில்லை. அவரது தங்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறார்.

கூத்தாடிவயல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தார். பின்னர் கூத்தாடிவயல் கிராமத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பில் சேர்ந்தார். டியூஷன் படிக்க வசதி இல்லை. பள்ளிக் கூடத்தில் சொல்லித் தருவதை நன்றாகக் கவனிப்பதுடன், தானே வீட்டில் படிப்பார்.  Ðபத்தாம் வகுப்புத் தேர்வில் 500க்கு 479 மதிப்பெண்கள் பெற்றார். பள்ளியில் முதலிடம். அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் இரண்டாவது இடம்.

அதன்பிறகு, அதே பள்ளியில் உயிரியல், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தார். 2020இல் நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் 600க்கு 553 மதிப்பெண்கள் பெற்றார். கணிதத்திலும் உயிரியலிலும் தலா 92 மதிப்பெண்களும்  இயற்பியலில் 89 மதிப்பெண்களும் வேதியியலில் 87 மதிப்பெண்களும் படித்து தேர்ச்சி பெற்றார். இத்தேர்விலும் பள்ளியில் முதலிடம் பெற்ற அவர், புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாவது இடம் பெற்றார்.

“மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதனால் நன்றாகப் படித்தேன். ஆனால், நீட் தேர்வு எழுதுவதற்குப் பயமாக இருந்தது. அதில் தேர்ச்சி பெற முடியுமா என்ற சந்தேகமும் இருந்தது. அதனால், நீட் நுழைவுத் தேர்வை எழுதவில்லை. வேளாண் படிப்பில் சேருதவற்கான எனது கட் ஆப் மதிப்பெண்கள் 180. அந்த மதிப்பெண்களுக்கு அரசு வேளாண் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், கவுன்சலிங்கிற்குச் சென்று வேளாண் பாடப்பிரிவைத் தேர்வு செய்யவில்லை. வேறு கல்லூரியிலும் சேரவில்லை” என்கிறார் சிவா.

எனது பள்ளி ஆசிரியர்களும்தலைமை ஆசிரியரும் எனக்கு ஊக்கமளித்தனர்அதனால்கல்லூரியில் சேராமல் நீட் தேர்வுக்குத் தயாரானேன்.

“நன்றாகப் படிக்கக்கூடிய நீ, நீட் தேர்வு எழுதி எம்பிபிஎஸ் படிப்பில் சேரலாமே என்று எனது ஆசிரியர்கள் ஆலோசனை கூறினார்கள். எங்களது பள்ளி ஆசிரியரான கார்த்திக் கண்ணன் சார் எனக்கு என்சிஇஆர்டி புத்தகங்ளை வாங்கித் தந்தார். தற்போது தேனி மருத்துவக் கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவரான அறந்தாங்கியைச் சேர்ந்த மாதேஷ், தான் நீட் தேர்வுகளுக்கு படித்த புத்தகங்களைத் தந்தார். அதை வைத்துக் கொண்டு படித்தேன். எனது பள்ளி ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும் எனக்கு ஊக்கமளித்தனர். அதனால், கல்லூரியில் சேராமல் நீட் தேர்வுக்குத் தயாரானேன்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“இதற்கிடையே, நீட் தேர்வுக்காகக் கோச்சிங் போகலாம் என்று எனது அம்மாவின் நகைகளை அடகு வைத்து கடன் வாங்கி திருச்சியில் தனியார் கோச்சிங் மையத்தில் மூன்று மாதங்கள் தங்கியிருந்து படித்தேன். கொரோனா பொது முடக்கம் காரணமாக ஊருக்குத் திரும்பி வந்துவிட்டேன். பிறகு வீட்டிலிருந்தபடியே, ஆங்கில வழியில் உள்ள புத்தகங்களை வைத்துக் கொண்டு நீட் தேர்வுக்காகப் பாடங்களைப் புரிந்து கொண்டு படிக்கத் தொடங்கினேன். நீட் நுழைவுத் தேர்வில் எனக்கு 514 மதிப்பெண்கள் கிடைத்தது. எப்படியும் அரசு மருத்தவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைத்துவிடும். மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என்று அறிவித்துள்ளதால் மருத்துவக் கல்லூரி படிப்புச் செலவைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. கோச்சிங் மையத்தில் சில மாதங்கள் பயிற்சி பெறுவதற்காக வாங்கிய கடனுக்கு வட்டியைக் கட்டி வருகிறோம். அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். எம்பிபிஎஸ் படித்த பிறகு முதுநிலை மருத்துவப் படிப்பைப் படிக்க வேண்டும் என்பது எனது ஆசை” என்கிறார் சிவா.

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களிலேயே அதிக மதிப்பெண்கள் பெற்ற சிவாவை நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டினார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு. அத்துடன், அரசுப் பள்ளி ஆசிரியர்களையும் பாராட்டினார். டிஆர்ஓ செல்வி, முதன்மைக் கல்வி அலுவலர் சத்தியமூர்த்தியும் மாணவர் சிவாவைப் பாராட்டினார்கள்.

Share the Article

Read in : English

Exit mobile version