Read in : English
இந்திய ஆட்சிப்பணி சட்டவிதிகளை மாற்றியைமைக்க முனைகிறது ஒன்றிய அரசு. அதன்மூலம் எந்த ஐஏஎஸ் அதிகாரியையும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் சம்மதமில்லாமலே ஒன்றிய அரசுப் பணிக்கு அழைத்துக் கொள்ளும் அதிகாரத்தைப் பெற ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மாநில அரசுகளோடு மோதும் போக்கை அதிகரிக்கும் மற்றுமொரு செயற்பாடு இது; மேலும் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கும் பாஜகவுக்கும் இடையில் மற்றொமொரு விரிசலையும் உரசலையும் உண்டாக்கும் செயல்பாடு இது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஐஏஎஸ் பணிவிதிமுறைகளை மாற்ற நினைக்கும் ஒன்றிய அரசின் விருப்பம் நாட்டின் கூட்டாட்சி மற்றும் மாநிலச் சுயாட்சிக் கட்டமைப்பின் வேரைக் கெல்லி எறிந்துவிடும் என்பதால் அதனைக் கைவிடும்படி அந்தக் கடிதத்தில் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளில் இயற்கைப் பேரிடர்கள் நிறைய ஏற்பட்டதால் அவற்றைச் சமாளிக்க ஏராளமான ஐஏஎஸ் அதிகாரிகள் முன்பைவிட அதிகமாகத் தேவைப்பட்ட வரலாறு தமிழ்நாட்டுக்கு உண்டு என்பதையும் ஸ்டாலின் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
ஐஏஎஸ் பணிவிதிமுறைகளை மாற்ற நினைக்கும் ஒன்றிய அரசின் விருப்பம் நாட்டின் கூட்டாட்சி மற்றும் மாநிலச் சுயாட்சிக் கட்டமைப்பின் வேரைக் கெல்லி எறிந்துவிடும் என்பதால் அதனைக் கைவிடும்படி அந்தக் கடிதத்தில் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
தற்போதைய இந்தச் சர்ச்சை இரண்டு அரசுகளுக்கும், இரண்டு கட்சிகளுக்கும் இடையே ஏற்கனவே இருந்த பிளவை மேலும் ஆழமாக்கிவிட்டது. ஒன்றிய அரசின் இந்த முனைப்பை எதிர்த்த எதிர்க்கட்சிகள் ஆளும் மேற்கு வங்கம், கேரளா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களின் முதல்வர்களோடு ஸ்டாலினும் கைகோர்த்திருக்கிறார்.
தமிழ்நாடு ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளில் ஒன்றிய அரசின் அலட்சியப் போக்கினைக் கண்டித்து எதிர்ப்புக்குரல் எழுப்பி வருகிறது. வெள்ள நிவாரணம், ஜிஎஸ்டி நிதியில் மாநிலங்களுக்குச் சரியான பங்கு கிடைக்காமை, பெட்ரோலிய பொருட்களின் மீது ஒன்றிய அரசு விதித்த வரியில் கிடைக்கும் வருமானத்தில் மாநிலங்களின் பங்கை மறுத்தல், நீட் தேர்வுக்கு எதிரான சட்டத்தை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பாமல் தாமதப்படுத்துதல், மேலும் பல்வேறு வழிகளில் இந்தியைத் திணித்தல் என்று ’விரிசல்’ பிரச்சினைகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது.
கோவிட்டுக்கு எதிரான தடுப்பூசி வழங்குவதாகட்டும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைத் திட்டமாகட்டும், ரயில்வே திட்டங்கள் மீதான கோரிக்கைகள் ஆகட்டும், பெரும்பாலான பிரச்சினைகளில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதான் செயல்படுகிறது என்று தமிழகஅரசு குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறது.
ஒருவகையில் இது திமுக அரசுக்கு வசதியாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் எதிர்க்கட்சிகள், குறிப்பாக அஇஅதிமுக, தேர்தல் வாக்குறுதிகள் சிலவற்றை ஏன் திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று விமர்சிக்கும்போது, உதவி செய்ய மறுக்கும் ஒன்றிய அரசின் தயக்கத்தை திமுக காரணமாகக் காட்டுகிறது.
தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சமர்ப்பித்த வெள்ளை அறிக்கை பல்வேறு விஷயங்களில் மாநிலத்திற்குக் கிடைத்த சொற்பமான நிதியுதவியைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.
நிலுவையில் இருக்கும் தமிழகத்துக் கோரிக்கைகளில் ஏற்பட்டிருக்கும் இந்த மோதல் போக்கினால், அஇஅதிமுகவும் கூட பல விஷயங்களில் திமுக அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்க வேண்டிய சூழலில் மாட்டிக்கொள்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்கள் வரவிருக்கும் சூழலில், மாநிலங்களோடு ஒன்றிய அரசு கொண்டிருக்கும் மோதல் போக்கையும், சில கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கும் அதன் தயக்கத்தையும் திமுக தன் அரசியல் ஆதாயமாக மாற்ற முயல்கிறது. நிலுவையில் இருக்கும் தமிழகத்துக் கோரிக்கைகளில் ஏற்பட்டிருக்கும் இந்த மோதல் போக்கினால், அஇஅதிமுகவும் கூட பல விஷயங்களில் திமுக அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்க வேண்டிய சூழலில் மாட்டிக்கொள்கிறது.
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்குக் கொடுத்திருந்த சந்திப்பு நேரத்தை உள்துறை அமைச்சர் விலக்கிக்கொண்டு மாநிலத்தை அவமானப்படுத்தியது திமுகவையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் கோபப்படுத்திவிட்டது. பின்பு அமித் ஷா அவர்களைச் சந்தித்தார் என்பது வேறுகதை. ஆனால் கட்சி பேதங்களைத் தாண்டி வந்த தமிழக எம்பிக்களை மட்டந்தட்டியதின் மூலம் ஒன்றிய அரசு தனது அரசியல் பரமபத விளையாட்டு ரகசியத்தை அல்லவா போட்டுடைத்து விட்டது!
Read in : English