Site icon இன்மதி

புதிய படத்துக்கு ஏன் பழைய தலைப்பு; தலைப்புக்காக பஞ்சம்?

விஷால் வெங்கட் இயக்கியுள்ள சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற திரைப்படத்தின் தலைப்பு, பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய நாவலின் தலைப்பு.

Read in : English

தமிழகத் திரையரங்குகளில் ஜனவரி 28ஆம் தேதி வெளியாகப் போகிறது சில நேரங்களில் சில மனிதர்கள் என்னும் திரைப்படம். விஷால் வெங்கட் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அசோக் செல்வன், நாசர், கே.எஸ்.ரவிகுமார், பானுப்பிரியா எனப் பலர் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 13 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமல் ஹாசன் கலந்துகொண்டு, சில நேரங்களில் சில மனிதர்கள் மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய நாவலின் தலைப்பு. ஜெயகாந்தனின் இந்தத் தலைப்பைப் பயன்படுத்த அருகதை உண்டா எனக் கேட்பார்கள், கண்டிப்பாக ஜெயகாந்தன் கேட்கமாட்டார் எனப் பேசியிருந்தார். ஆனால், கமல் ஹாசன் எதிர்பார்க்காதவண்ணம் ஜெயகாந்தனின் வாரிசுகளிடமிருந்து இந்தத் தலைப்பைப் புதிய படத்துக்கு வைப்பதற்கு எதிர்ப்பு வந்துள்ளது.

ஜெயகாந்தனின் வாரிசுகள் ஜெ.காதம்பரி, ஜெ.ஜெயசிம்மன், ஜெ.தீபலட்சுமி ஆகியோர் சில நேரங்களில் சில மனிதர்கள் என்னும் தலைப்பின் முக்கியத்துவத்தையும் காப்புரிமை தொடர்பான அம்சத்தையும் நினைவூட்டி இந்த விஷயத்தில் தலையிட்டுத் தலைப்பை மாற்ற வேண்டும் என்னும் கோரிக்கையை ஒரு கடிதமாக கமல் ஹாசனுக்கு எழுதியிருந்தார்கள். இந்தப் படத்துக்குச் சில நேரங்களில் சில மனிதர்கள் எனத் தலைப்பிட்டு அறிவிப்பு வந்தபோதே சமூக வலைத்தளங்களில் அது தொடர்பாக எழுந்த எதிர்ப்பையும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனாலும், அதே தலைப்புடன் இந்தப் படம் ஜனவரி 28ஆம் தேதி வெளியாகப் போகிறது எனப் படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.

அனுமதி எதுவும் பெறப்படாமலேயே சில நேரங்களில் சில மனிதர்கள் என்னும் தலைப்பு கையாளப்பட்டிருக்கிறது. அதை ஆதரித்தும் கமல் பேசியிருக்கிறார் என்பதுதான் சிக்கல்.

பொதுவாகவே படத் தலைப்பு சர்ச்சை விஷயத்தில் கமல்ஹாசன் பல அனுபவம் கொண்டவர். இவரது சண்டியர் என்னும் படத்தின் தலைப்பு சர்ச்சையான விஷயத்தை உள்ளடக்கியிருக்கிறது எனப் பலத்த எதிர்ப்பைச் சந்தித்தது. ஆகவே, தலைப்பை விருமாண்டி என மாற்றினார் அவர். ஆனால், வர்றார் சண்டியர் என அதற்குப் பின்னர் ஒரு படம் வெளியானது. அப்போது அதை யாரும் எதிர்க்கவில்லை. விஸ்வரூபம் என்னும் படம் கமலுக்குப் பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. அதே பெயரில் சிவாஜி நடித்த படம் ஒன்று முன்னர் வெளியாகியிருக்கிறது.

ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன் என்னும் தலைப்பையும் ஏற்கெனவே கமல்ஹாசன் தனது படத்துக்குப் பயன்படுத்தியிருக்கிறார். இந்தப் பெயரில் ஜெயகாந்தன் முதன்முதலில் இயக்கிய படம் 1965இல் வெளியானது. தேசிய விருதை வென்ற உன்னைப் போல் ஒருவன் படத்தின் தலைப்பை 2009இல் வெளியான தனது படத்துக்கு வைத்தபோது, ஜெயகாந்தனிடம் அனுமதி பெற்றுத்தான் கமல் ஹாசன் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், இப்போது அப்படியான அனுமதி எதுவும் பெறப்படாமலேயே சில நேரங்களில் சில மனிதர்கள் என்னும் தலைப்பு கையாளப்பட்டிருக்கிறது. அதை ஆதரித்தும் கமல் பேசியிருக்கிறார் என்பதுதான் சிக்கல்.

சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற நாவலின் அட்டைப்படம்.

ஜெயகாந்தன் எழுதிய சுந்தர காண்டம் என்னும் நாவலின் தலைப்பிலும் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. கே.பாக்யராஜ் இயக்கியது இந்தப் படம். உண்மையில் கமல் ஹாசன் நடித்த சூரசம்ஹாரம் படத்துக்கு முதலில் இந்தப் பெயரை வைத்ததாகவும் பின்னர் படம் வெற்றிபெறுவதற்கு உகந்த தலைப்பாக சூரசம்ஹாரத்தைத் தேர்ந்தெடுத்ததாகவும் ஒரு தகவல் காற்றுவாக்கில் அப்போது உலவியது. இது உண்மையோ வதந்தியோ? ஆனால், சுந்தர காண்டம் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த அளவுக்கு சூரசம்ஹாரம் வெற்றிபெறவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இதய ராணியும் இஸ்பேடு ராஜாவும் என்னும் ஒரு படம் வெளியானது. இதுவும் ஜெயகாந்தனின் இதய ராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும் என்னும் தலைப்பின் பாதிப்பில் உருவான தலைப்பாகத்தான் இருந்திருக்க வேண்டும். சில நேரங்களில் சில மனிதர்கள் என்னும் தலைப்பிலேயே அந்த நாவலை பீம்சிங் படமாக்கினார். அது 1977இல் வெளியானது. நடிகை லட்சுமிக்குச் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுத் தந்தது. ஜெயகாந்தனின் புகழ்பெற்ற சிறுகதையான அக்னிப்பிரவேசம் என்பதன் தொடர்ச்சியாகத்தான் இந்த நாவல் உருவானது.1972இல் இந்த நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருதும் கிடைத்தது. 

காப்புரிமைச் சட்டப்படி ஒரு படத்தின் தலைப்பைக் காப்பாற்றுவது சிரமம்தான். ஆனால், இப்படித் தலைப்பை மீண்டும் வைப்பதைச் சட்ட ரீதியான விஷயமாகப் பார்ப்பதைவிட அதைத் தார்மிக ரீதியான விஷயமாகப் பார்த்தால்தான் புரிந்துகொள்ள முடியும். பழைய படத்தின் தலைப்புகளைப் புதுப் படத்துக்கு வைப்பது நீண்ட நாள்களாக இருந்துவரும் ஒரு வழக்கமே. 2010ஆம்  ஆண்டில் தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் என்று ஒரு படம் வெளியானது. உத்தமபுத்திரன் என்றால் முந்தைய தலைமுறை சினிமா ரசிகர்களுக்கு சிவாஜி கணேசன் நடித்து 1958இல் வெளியான உத்தமபுத்திரன் தான் நினைவில் இருக்கும். அதிலும் யாரடி நீ மோகினி பாடலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இதற்கு முன்பே ஓர் உத்தமபுத்திரன் வெளியாகியிருக்கிறது. அது 1940இல் பி.யு.சின்னப்பா நடித்தது. அதில் சின்னப்பா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

நடிகர் தனுஷ் ரஜினியின் பழைய படங்களின் பெயரைத் தனது படங்களுக்கு இடுவதை வாடிக்கையாகவே வைத்திருந்தார். பொல்லாதவன், படிக்காதவன், மாப்பிள்ளை, தங்க மகன் எனப் பல உதாரணங்கள் உண்டு. அண்மையில் அவர் நடித்து மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் திரைப்படத்தின் பெயரும் புதிதன்று. சிவாஜியை நினைவூட்டும் தலைப்பே அது. சிவாஜி நடித்த பழைய படம் ராஜா. அதே பெயரில் அஜித் நடித்த படமும் வெளியானது. எம்ஜிஆர் நடித்த நாடோடி மன்னன் படத்தின் தலைப்பை சரத்குமார் தனது படத்துக்கு வைத்திருந்தார். எஸ்.எஸ். வாசன் இயக்கிய சிவாஜி கணேசன், வைஜந்தி மாலா நடித்த இரும்புத் திரை என்னும் திரைப்படம் 1960இல் வெளிவந்தது. இதே பெயரில் 2018இல் விஷால் நடித்த படமும் வந்தது. ரஜினி நடித்த நான் மகான் அல்ல என்னும் பெயரில் கார்த்தி நடித்த படம் வந்தது. ரஜினி நடித்து பாலசந்தர் தயாரித்த இந்தப் படத்துக்கு முதலில் நான் காந்தி அல்ல என்று தலைப்பிட்டிருந்தார்கள். பின்னர் தலைப்பு மாற்றப்பட்டது. 

ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல், 1977இல் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அந்தப் படத்தில் கங்கா என்ற பாத்திரத்தில் நடித்த நடிகை லட்சுமிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

பொதுவாக இப்படிப் பெயரிடும்போது, பழைய படத்துடன் தொடர்புடையவர்களின் அனுமதி பெறுவது என்பது தார்மிக அடிப்படையில் அவசியமானதொன்று. எல்லோரும் தார்மிக அடிப்படையில் செயல்படும் மனநிலையில் இருக்கிறார்களா என்பதும் கேள்விக்குறியே. படத்தின் கதையே அப்படியே கபளீகரம் செய்துவிடுவதும் தமிழ்த் திரைப்பட உலகில் புதிதில்லை. கே.பாக்யராஜின் இன்று போய் நாளை வா படத்தை அப்படியே சந்தானம், கண்ணா லட்டு திங்க ஆசையா என உருவாக்கினார். கதை என்னும்போது அதற்காக நீதிமன்றம்கூடப் போகலாம். கதையின் அசல் தன்மை அது நகலாக்கப்பட்ட விதம் ஆகியவற்றை எடுத்துக்கூற வாய்ப்பு உண்டு. ஆனால், தலைப்பு விஷயத்தில் அது ஒரு குறிப்பிட்ட சில சொற்கள் தொடர்பானவை. எனவே, அதைக் காப்புரிமை சட்டத்துக்குள் அடக்குவது எளிதன்று. அதனாலேயே பலர் பழைய தலைப்புகளை விருப்பத்துக்கு எடுத்தாள்கிறார்களோ?

மொத்தத்தில் படைப்பாளிகள் அறம் என்னும் கோணத்தில் சிந்தித்துப் பார்த்தால் இப்படிப் பழைய தலைப்புகளை அனுமதி இல்லாமல் பயன்படுத்தவோ புதுப் படத்துக்குப் பழைய பெயரை வைக்கவோ துணிய மாட்டார்கள்.

தலைப்பு என்பது ஈர்ப்புக்குரிய அம்சம் என்பதால் சட்டென்று கவனத்தை ஈர்க்கும் ஒரு தலைப்புக்காக அலையும்போது, ஏற்கெனவே ஈர்ப்பைப் பெற்ற ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்துவிடுகிறார்களோ என்னவோ? ஆனால், தனது படைப்பு தனித்துவமாகத் தெரிய வேண்டும் என விரும்பும் ஒரு படைப்பாளி இப்படியான பழைய தலைப்புகளைக் கண்டிப்பாகத் தேர்ந்தெடுக்க மாட்டார். ஒருவருடைய அடையாளத்தை இன்னொருவர் பயன்படுத்த நினைப்பது இழிவான செயலென்பது புரிந்தால் இப்படிப் பிறர் தலைப்பையோ பிறர் கதையையோ களவாட மாட்டார்கள். மொத்தத்தில் படைப்பாளிகள் அறம் என்னும் கோணத்தில் சிந்தித்துப் பார்த்தால் இப்படிப் பழைய தலைப்புகளை அனுமதி இல்லாமல் பயன்படுத்தவோ புதுப் படத்துக்குப் பழைய பெயரை வைக்கவோ துணிய மாட்டார்கள். இந்த நேரத்தில் திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்னும் பாடல் வரிகள்தாம் நினைவுக்கு வருகின்றன.

Share the Article

Read in : English

Exit mobile version