Site icon இன்மதி

வி.எஃப்.எக்ஸ். அபார வளர்ச்சி: ஹாலிவுட்டிலும் கோலோச்சும் சென்னை!

எட்டாண்டுகளுக்கும் மேலாக, அதிக பட்ஜெட்டில் தயாரான பெரும்பாலான ஹாலிவுட் படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் இந்தியாவிலேயே நடைபெற்றிருக்கின்றன.

Read in : English

எந்தவொரு காட்சிப் படைப்பானாலும், கேமிராவில் படம்பிடிக்கப்பட்டது எத்தனை சதவிகிதம் என்ற கேள்வி உடனடியாகக் கேட்கப்படும் அளவுக்குப் விஸ்வரூபமெடுத்திருக்கிறது விஎஃப்எக்ஸ் துறையின் வளர்ச்சி. அதிலும், எந்த இடத்தில் புனைவும் யதார்த்தமும் சந்திக்கிறது என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவுக்குத் துல்லியமான உழைப்பைக் கொண்டிருக்கிறது. வெறுமனே இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மட்டுமே புழங்கிக் கொண்டிருந்த விஎஃப்எக்ஸ் துறையின் வளர்ச்சி, இன்று ஹாலிவுட்டையும் சென்றடைந்திருக்கிறது. கடந்த எட்டாண்டுகளுக்கும் மேலாக, அதிக பட்ஜெட்டில் தயாரான பெரும்பாலான ஹாலிவுட் படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் இந்தியாவிலேயே நடைபெற்றிருக்கின்றன. கீழைக்காற்று மேற்கு நோக்கிப் பாய்ந்த காலம் எப்போது திசை மாறியது?!

 கிழக்கில் வடியும் ட்ரெண்ட்!

ஒருகாலத்தில் புதுமையான, பின்பற்றத்தக்க, ட்ரெண்டியான ஸ்டைலை அறிந்துகொள்ள ஹாலிவுட் படங்களையோ அல்லது அதனைச் சிறிய கால தாமதத்துடன் பிரதியெடுக்கும் இந்திப் படங்களையோ பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்ற நிலைமை இருந்தது. அப்போது, மேற்கிலிருந்து ஒரு படம் கிழக்கு நோக்கி வருவதற்குள் சில மாதங்கள் அல்லது ஆண்டுகளாகிவிடும். அவர்கள் பெல்பாட்டம் போட்டு ஓடியாடிச் சாலையைச் சுத்தப்படுத்தி முடித்தபிறகே நாம் ‘யாஹூ..’ என்று பெல்பாட்டம் காலகட்டத்தைக் கொண்டாடுவோம்.

2000களுக்குப் பிறகு அது மலையேறிவிட்டது. ஒரேநேரத்தில் நியூயார்க்கிலும் மும்பையிலும் உதிக்கும் ஒரு விஷயம் உடனடியாக இந்தியாவின் சிறு நகரங்களிலும் அமலாகும் சூழல் இன்றிருக்கிறது. இதற்கான கால இடைவெளி மிகக்குறைவு என்பதே தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எப்படிப்பட்டது என்பதைச் சொல்லிவிடுகிறது. அதே தொழில்நுட்பம் தான், இந்தியாவிலுள்ள திறமையாளர்களையும் உலகின் வாசலருகே கொண்டுபோய் நிறுத்தியது.

 முன்னெப்போதுமில்லாத வாய்ப்புகள்!

2 கே பிரச்சினைக்கு முன்னும் சரி, பின்னும் சரி, தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியர்கள் எதிர்கொண்ட வளர்ச்சி கணிப்புக்குள் அடங்காதது. அதன்பிரதிபலிப்பு கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ்நாட்டு மக்களின் வாழ்விலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட அதே போன்றதொரு வளர்ச்சியை எட்டியிருக்கிறது விஷுவல் எபெக்ட்ஸ் பிரிவு. ஒருபக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள் புதிய திறமையாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அப்பணியாளர்கள் உருவாக்கித் தரும் படைப்புத்தரத்திற்காகவே உலகம் முழுக்கவிருக்கும்  பல்வேறு நிறுவனங்கள்  இந்தியாவில் குவிந்து வருவதும் தொடர்கிறது.

கடந்த எட்டாண்டுகளுக்கும் மேலாக, அதிக பட்ஜெட்டில் தயாரான பெரும்பாலான ஹாலிவுட் படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் இந்தியாவிலேயே நடைபெற்றிருக்கின்றன

.

நொய்டா, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் விஎஃப்எக்ஸ் சார்ந்து செயல்படும் நிறுவனங்கள் நிறைய இருந்தாலும்,  கணிசமான அளவில் சென்னையிலும் பல ஹாலிவுட் திரைப்படங்கள் தயாராகின்றன என்பதுதான் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விஷயம்.

ஹாலிவுட் படங்களுக்கான பணிகள் சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களில் மேற்கொள்ளப்படுவது புதிதல்ல. 2000களிலேயே அந்தப் போக்கு தொடங்கிவிட்டது என்றாலும், கிட்டத்தட்ட 2010 வரை இரண்டாம் தர காட்சிகளை உருவாக்கும் பொறுப்பே இங்குள்ள நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதாவது, முதல் தர ஷாட்களை கையாள்வது பெரும்பாலும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள நிறுவனங்களிலேயே நிகழ்த்தப்படும். இந்தியாவில் தயாராகும் காட்சிகள் பின்னர் அவற்றுடன் இணைக்கப்படும். ஆனால், இங்கு தயாரான படைப்புகளில் இருந்த நேர்த்தியும் தெளிவும் அதற்காகத் தரப்பட்ட குறைந்தளவிலான பணமும் ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களின் பார்வையைத் திரும்ப வைத்தது.

 விரியும் படைப்பு எல்லை!

‘குறைந்த செலவில் நிறைந்த தரம்’ என்ற தாரக மந்திரம் ஹாலிவுட்டையும் அசைத்துப் பார்த்தது. அதன் தொடர்ச்சியாக, ஒரு படத்தின் சில ஷாட்கள் என்று தொடங்கி மெதுவாக மொத்தப்படமும் இங்கு தயாராகும் நிலைமை உருவாகியிருக்கிறது.

மிக யதார்த்தமான கதைக்களத்தைக் கொண்ட படங்களில் கூட, இன்று அதிகளவில் விஎஃப்எக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. அப்படியிருக்க, மாய யதார்த்தத்தை முன்வைக்கும் சாகசக் கதைகளைக் கேட்கவே வேண்டாம். அந்த வகையில் அவெஞ்சர்ஸ், மேன் ஆஃப் ஸ்டீல், டெர்மினேட்டர், மிஷன் இம்பாஸிபிள், ஸ்பைடர்மேன், இண்டியானா ஜோன்ஸ், எக்ஸ்எக்ஸ்எக்ஸ் தொடங்கி இளைய தலைமுறையினர் ரசிக்கும் கேம் ஆஃப் தோர்ன்ஸ் உட்படப் பல்வேறு படைப்புகள் முழுக்க இந்தியாவிலேயே தயாரானதும் உண்டு. இவ்வளவு ஏன், சீரியஸ் திரைப்பட இயக்குநராக அறியப்படும் கிறிஸ்டோபர் நோலனின் ‘இண்டர்ஸ்டெல்லர்’ போன்ற படங்கள் முழுக்கவே இந்தியாவில் தயாரானதுண்டு.

வெறுமனே திரைப்படங்கள், விளம்பரப் படங்கள் என்றில்லாமல் விஷுவல் எபெக்ட்ஸ்களுக்கான தேவை இன்று அதிகரித்துள்ளது. வெப் சீரிஸ்கள், தொடங்கி சில நிமிட வீடியோக்கள் வரை அனைத்திலும் இதன் பயன்பாடு பெருகியுள்ளது. போலவே, வீடியோ கேம் உருவாக்கத்திற்காக உழைப்பைக் கொட்டும் தொழில்நுட்பவியலாளர்கள் எண்ணிக்கை மிக அதிகம். இது தவிர அனிமேஷன் உட்பட காட்சியாக்கம் மற்றும் கற்பனை சார்ந்து செயல்படும் படைப்புகளின் எண்ணிக்கை நாளும் பெருகுகின்றன.

இங்கு முறையாக விஎஃப்எக்ஸ் நுட்பத்தை ஒரு கல்வியாகப் பயின்றவர்களின் எண்ணிக்கை சொற்பம்தான். படத்தொகுப்பு, ஒலி நுட்பம், இயக்கம் என்று தொடங்கி விஎஃப்எக்ஸை புத்தகங்கள் மற்றும் நண்பர்கள் வழியாகக் கற்றுக்கொண்டவர்களே இங்கு அதிகம்.

பாக்ஸ், சோனி, எம்ஜிஎம், கொலம்பியா பிக்சர்ஸ், டிஸ்னி என்று பல ஹாலிவுட் நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களோடு கூட்டுச் செயல்பாட்டை மேற்கொள்ளும் வழக்கம் கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதனால், ஒரு ஹாலிவுட் படத்தின் 90% இறுதிக்கட்டப் பணிகள் இந்தியாவிலேயே நடப்பதாகச் சொல்பவர்களும் உண்டு. குறிப்பிட்ட நிறுவனத்தின் வெவ்வேறு கிளைகளில் இப்படங்களின் காட்சிகள் தனித்தனியே உருவாக்கப்பட்டு, பிறகு லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அனுப்பும் வழக்கம் தொடர்கிறது. இதனால் வெறுமனே விஎஃப்எக்ஸ் மட்டுமல்லாமல் இதர பின்பணிகளிலும் கூட இந்தியர்களின் திறமைகளைப் பயன்படுத்தும் வழக்கம் ஹாலிவுட்டில் அதிகரித்துள்ளது. வேண்டுமென்றால் ஏதேனும் ஒரு ஹாலிவுட் ஸ்டூடியோவின் திரைப்படத்திலோ அல்லது அனிமேஷனிலோ டைட்டில் கிரெடிட்டை ஓட்டிப் பார்த்தால் தானாகப் பிடிபடும்.

டாடா எலக்ஸி, ஐ- ஜீன்,பிக்ஸ்டோன் இமேஜஸ், ஸ்பெல்பவுண்ட், மிஸ்ட், இஎஃப்எக்ஸ் உட்பட விஎஃப்எக்ஸ் சார்ந்து சென்னையில் செயல்பட்டு வரும் பல நிறுவனங்கள் பெரியளவிலும் மிகச்சிறியளவிலும் ஹாலிவுட் படங்களின் பின்பணிகளைக் கையாண்டு வருகின்றன.

 கதவின் வழியே பீறிடும் வெளிச்சம்!

ஒரு படைப்பாக்கத்திற்கான வாய்ப்புகள் குவியும்போது, அது வெறுமனே தொழில் சார்ந்ததாக மட்டுமல்லாமல் தனி மனிதனின் கற்பனை எல்லையையும் உயரத்திற்குக் கொண்டு செல்லும். அந்த வகையில், மிகத்துல்லியமான கற்பனையாக்கத்தை இந்தியர்களாலும் தர முடியும் என்பதை கடந்த பத்தாண்டுகள் உணர்த்திவிட்டன. இதன் வழியாக, மிகக்குறைந்த செலவில் ஹாலிவுட்டுக்கு இணையான தரம் கொண்ட படைப்புகளை உருவாக்கும் முயற்சிகள் இங்கு நடைபெற வேண்டும். அதன் வழியே, புதிய கற்பனைகளின் முதற்கண்ணாக சென்னையோ அல்லது இந்தியாவிலுள்ள வேறு நகரங்களோ திகழ வேண்டும். அதோடு, இதில் பணியாற்றும் தொழில்நுட்பவியலாளர்களின் உழைப்புக்கு தகுந்த ஊதியம் தரப்பட வேண்டும். அதுவே, அவர்களது தனித்துவத்தை உலகிற்கு எடுத்துக் காட்டும்.

புதிதாய் திறந்த இந்தக் கதவுகள் அடுத்த தலைமுறைக்கும் நம்பிக்கை அளித்திட, இத்துறை சார்ந்த முறையான கல்விப் பயிற்சியை வழங்குவதும் முக்கியம். ஏனென்றால், இங்கு முறையாக விஎஃப்எக்ஸ் நுட்பத்தை ஒரு கல்வியாகப் பயின்றவர்களின் எண்ணிக்கை சொற்பம்தான். படத்தொகுப்பு, ஒலி நுட்பம், இயக்கம் என்று தொடங்கி விஎஃப்எக்ஸை புத்தகங்கள் மற்றும் நண்பர்கள் வழியாகக் கற்றுக்கொண்டவர்களே இங்கு அதிகம். சில தனியார் நிறுவனங்கள் மூலமாக 6 முதல் 18 மாத காலத்திற்கு வழங்கப்படும் படிப்புகளைப் படித்தோரும் கூட எண்ணிக்கையில் குறைவுதான். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் அனிமேஷன் மற்றும் விஎஃப் எக்ஸ் நுட்பங்களை முறையாகக் கற்றுத்தருவதற்கான தேவைகள் பெருகியுள்ளது உணரப்பட்டிருக்கிறது.

சரியான வாய்ப்புகளும் சூழலும் அமையுமானால், கற்பனையாக்கத்தின் தலைநகரமாகவும் கூட சென்னை மாறலாம். பேராசை என்றாலும், அதனை நோக்கிச் செல்வதற்கான மனித சக்தியைத் திரட்ட வேண்டிய காலம் கடந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

Share the Article

Read in : English

Exit mobile version