Site icon இன்மதி

ஐ.டி. வேலை பார்க்கும் இளைஞரின் முயற்சி: குளங்களைத் தூர்வாரி பராமரிக்கும் நம்ம பசுமை திண்டிவனம்

நம்ம பசுமை திண்டிவனம் உறுப்பினர்களுடன் வேல்முருகன்

Read in : English

வறுமைச் சூழ்நிலையிலும் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து, பொறியியல் பட்டம் பெற்று தற்போது ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் திண்டிவனத்தைச் சேர்ந்த அ. வேல்முருகன் (27) என்ற இளைஞர், தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊரை மறக்காமல், அந்த ஊரில் உள்ள குளங்களைத் தூர்வாரி பராமரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.  இதற்காக நம்ம பசுமை திண்டிவனம்’ என்ற அமைப்பை நண்பர்களுடன் சேர்ந்து ஏற்படுத்தி இளைஞர்களிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் உள்பட சமூக அக்கறை கொண்ட பலருடன் கரம் கோர்த்து செயல்படுகிறார் இந்த முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரி மாணவர்.

திண்டிவனத்தைச் சேர்ந்த அ. வேல்முருகன், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். திண்டிவனம் அவரப்பாக்கத்தில் அவர்களது தாத்தா காலத்தில் இருந்த சிறிய ஓட்டு வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது அப்பா அருள்பிரகாசம் சைக்கிளில் துணிகளைக் கொண்டுபோய் வீடுகளில் விற்பவர். அதிலிருந்து கிடைக்கும் குறைந்த வருமானத்தைக் கொண்டுதான் குடும்பம் நடக்க வேண்டும். அம்மா ஆண்டாள், வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்வார். இருவரும் பள்ளிப் படிப்பை தாண்டியதில்லை. ஆனாலும் தங்களது இரு குழந்தைகளையும் எப்படியாவது நன்றாகப் படிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் அவர்கள் இருவருக்கும் ஆர்வம்.

ஞாயிற்றுக்கிழமையன்று புதுச்சேரியில் சண்டே மார்க்கெட்டில் ரோட்டில் துணிகளைப் போட்டு விற்பனை செய்வார்கள்அங்கு போய் நாள் முழுவதும் அந்த வேலை செய்தால் ரூ.300 ஊதியம் கிடைக்கும்அதை எனது படிப்புச் செலவுக்கு வைத்துக் கொள்வேன்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து தனது விடாத முயற்சியால் படித்து முன்னேறிய வேல்முருகன், தனது வாழ்க்கைக் கதையை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:

பெற்றோர் அருள் பிரகாசம் மற்றும் ஆண்டாளுடன் வேல்முருகன்

திண்டிவனம் ரோசனையில் உள்ள நாகம்மாள் நடுநிலைப் பள்ளியில் தமிழ் வழியில் படிக்கச் சேர்ந்தேன். அங்கு படிக்கக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மதிய உணவு உண்டு. அங்கு எட்டாம் வகுப்பு வரைப் படித்தேன். பின்னர், காந்தி சிலை அருகே உள்ள அரசு நேஷனல் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன்.

பத்தாம் வகுப்புத் தேர்வில் 500க்கு 454 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன். என்னுடன் படித்த மாணவர்கள் பலர் வேறு பள்ளிகளில் சேர்ந்து படிக்கச் சென்று விட்டார்கள். நான் அதே பள்ளியில் பிளஸ் ஒன் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், கம்யூப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தேன். பள்ளியில் கட்டணம் எதுவும் வாங்கவில்லை. யூனிபார்ம் கொடுத்துவிடுவார்கள். மதிய சாப்பாடு கிடைத்துவிடும். பள்ளிக்கு சைக்கிளில் போய் வந்துவிடுவேன்.

ஞாயிற்றுக்கிழமையன்று புதுச்சேரியில் சண்டே மார்க்கெட்டில் ரோட்டில் துணிகளைப் போட்டு விற்பனை செய்வார்கள். அங்கு போய் நாள் முழுவதும் அந்த வேலை செய்தால் ரூ.300 ஊதியம் கிடைக்கும். அதை எனது படிப்புச் செலவுக்கு வைத்துக் கொள்வேன்.

டியூஷன் எதுவும் போகவில்லை. அதற்கான வசதியும் கிடையாது. பள்ளி ஆசிரியர்கள் எனக்கு பாடங்களை நன்கு கற்றுத் தந்தார்கள். எனது சந்தேகங்களைப் போக்குவார்கள். நன்றாகப் படிப்பதன் மூலம்தான் எனது வாழ்க்கையை மாற்றியமைக்க முடியும் என்று நான் உறுதியாக நம்பினேன். எனவே, குடும்ப சூழ்நிலை எப்படி இருந்தாலும் தீவிரமாக கவனம் செலுத்திப் படித்தேன்.

திண்டிவனத்தில் மரக்கன்று நடும் நம்ம பசுமை திண்டிவனம் தன்னார்வ தொண்டர்களுடன் வேல்முருகன்

பத்தாம் வகுப்பில் பள்ளியிலேயே முதலிடம் பெற்ற நான், 2011ஆம் ஆண்டு பிளஸ் டூ தேர்விலும் பள்ளியிலேயே முதலிடம் பெற்றேன். பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 1101 மதிப்பெண்கள் பெற்றேன். பொறியியல் படிப்பில் சேருவதற்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் 191. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய கவுன்சலிங்கில்  பல முக்கியக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் சூழ்நிலை இருந்தது. ஆனால் அந்தக் கல்லூரிகளில் சேர்ந்தால் வெளியூரில் போய் படிக்க வேண்டியதிருக்கும். வெளியூரில் போய் தங்கிப் படித்தால் அதிக செலவாகும். உள்ளூரில் கல்லூரியில் சேர்ந்து படிக்கவே பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், வெளியூரில் கல்லூரிப் படிப்பைப் பற்றி நான் யோசிக்கவில்லை.

படிக்கிற பிள்ளை எங்க படிச்சாலும் படிக்கும் என்பார் என் அப்பா. எனவே, திண்டிவனத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரியில் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவை எடுத்துப் படித்தேன். கல்லூரி படிப்புக் கட்டணம் ரூ.7 ஆயிரம்தான். அதைச் செலுத்த வழியில்லை. இந்த நிலையில், எங்கள் ஊரில் உள்ள பேராசிரியர் கல்யாணி சொல்லி, படிக்க உதவி கோரி நான் அகரம் பவுண்டேஷனுக்கு விண்ணப்பித்தேன். பேங்க் ஆப் இந்தியா மூலம் கல்விக் கடன் பெறுவதற்கு அகரம் பவுண்டேஷன் எனக்கு உதவியாக இருந்தது. அத்துடன், அரசு ஆண்டுதோறும் வழங்கும் மிகவும் பிறப்படுத்தப்பட்டோருக்கான கல்வி உதவித்தொகை  ரூ.3000  கிடைத்தது. அந்தத் தொகையை வைத்துக் கொண்டு அதிலிருந்து தினசரி கல்லூரிக்கு ஷேர் ஆட்டோவில் செல்வதற்கு 7 ரூபாய் செலவு செய்வேன். வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துச் சென்று விடுவேன். வரும்போது நண்பர்களுடன் அவர்களது சைக்களில் வந்துவிடுவேன். இப்படிச் சிக்கனமாகத்தான் படிக்கின்ற காலத்தை ஓட்ட வேண்டியதிருந்தது.

தமிழ் வழியில் படித்த நான், கல்லூரியில் சேர்ந்ததும் கொஞ்சநாள் படிப்பில் தடுமாறினேன். கல்லூரியில் முதல் செமஸ்டரில் 60 சதவீதம் அளவுக்குத்தான் மதிப்பெண்கள் எடுக்க முடிந்தது. அப்புறம் படிப்படியாக நன்கு படிக்க ஆரம்பித்தேன். ஏழாவது செமஸ்டரில் எங்களது துறையிலே முதலிடம் பெறும் அளவுக்கு படிப்பில் முன்னேறினேன். கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் படித்த மாணவர்களில் முதலிடம் பெற்றதற்காக எனக்குத் தங்கப் பதக்கம் கொடுத்தார்கள்.

2015இல் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் இரண்டு நிறுவனங்களில் வேலை கிடைத்தது. நான் டைடல் பார்க்கில் உள்ள உர்ஜாநெட் (URJANET) என்ற ஐ.டி. நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தேன். அதில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தேன். முதலில் எனது கல்விக் கடனுக்காக வங்கியில் வாங்கிய கடனை அடைத்து முடித்தேன். தற்போது டைடல் பார்க்க்கில் டிரம்பிள் (TRIMBLE) என்ற நிறுவனத்தில் சீனியர் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறேன்.

ராஜங்குளத்தில் தூர்வாரும் நம்ம பசுமை திண்டிவனம் உறுப்பினர்கள்

விடுமுறை நாட்களில் ஊருக்கு வரும் நான், ஊரில் உள்ள குளங்களின் அவல நிலையைப் பார்த்து, அதனைத் தூய்மைப்படுத்த ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அமைப்புகள் மூலம் இதுபோன்ற பணிகளைச் செய்வதாக இருந்தால்தான் அரசு அனுமதி வழங்கும் என்று சொல்லிவிட்டார்கள். இதற்காக நம்ம பசுமை திண்டிவனம் என்ற அமைப்பை நண்பர்களுடன் சேர்ந்து ஏற்படுத்தினோம். எங்களது அமைப்பில் ஓய்வு பெற்றவர்களிலிருந்து இளைஞர்கள் வரை பல்வேறு தரப்பினர் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

திண்டிவனத்தில் ஏழு குளங்கள் உள்ளன. அதில் ராஜங்குளத்தில் நாங்கள் தூர்வாரத் தொடங்கினோம். எங்களது முயற்சியைப் பார்த்த அரசு, குளத்தை முழுமையாகத் தூர்வாரி, நடைபாதை அமைத்து அதனை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது. தற்போது குளத்தைச் சுற்றி மரங்களை நட்டு பாரமரித்து வருகிறோம். அத்துடன், குளத்தில் உள்ள குப்பைகளை வார இறுதி நாட்களில் அகற்றி தொடர்ந்து தூய்மையாக வைத்திருக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அத்துடன், குளத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்து அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டி வருகிறோம்.

ராஜங்குளத்தில் நாங்கள் தூர்வாரத் தொடங்கினோம்எங்களது முயற்சியைப் பார்த்த அரசுகுளத்தை முழுமையாகத் தூர்வாரிநடைபாதை அமைத்து அதனை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்ததுதற்போது குளத்தைச் சுற்றி மரங்களை நட்டு பாரமரித்து வருகிறோம்.

ராஜாங்குளத்துக்கு வரும் வரத்து வாய்க்கால்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாய்க்கால்களைத் தூர்வாரி அதை பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் உருவாக்கினோம். இப்படி, திண்டிவனத்தில் உள்ள ஏழு குளங்களும் எங்களது முயற்சியில் புத்துயிர் பெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்க முயற்சிகளை எடுத்து வருகிறோம். எங்களது முயற்சிக்கு பலர் உதவி வருகிறார்கள். இதுவரை, திண்டிவனத்தின் பல்வேறு பகுதிகளில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு அவற்றை பராமரித்து வருகிறோம்.

கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கபடுகிறது

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட 2 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள் போன்றவற்றை வழங்கினோம். நான் படித்த நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் நன்கு படிக்கக்கூடிய 2 ஏழை மாணவர்கள் அகரம் பவுண்டேஷன் மூலம் உதவி பெற்று படிக்க உதவியிருக்கிறேன்.  கோவில்களிலும் சாலையோரங்களிலும் ஒரு வேளை உணவுக்குக்கூட வாய்ப்பில்லாமல் இருப்பவர்களுக்கு மதிய உணவு கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுடன் நானும் இணைந்து செயல்பட்டு வருகிறேன். என்னை உருவாக்கிய இந்த சமூகத்துக்கு நான் செய்யும் சிறிய கைமாறு தான் இதுபோன்ற சமூகப் பணிகள் என்கிறார்  வேல்முருகன்.

Share the Article

Read in : English

Exit mobile version