Site icon இன்மதி

ஸ்டார்ட்-அப்களில் யார் முதலீடு செய்யலாம்?

ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்வது பிரபலமாகி வருகிறது 

Read in : English

ஸ்டார்ட்-அப்ஸ் எனப்படும் புதிய தொடக்கநிலை தொழில்கள் இப்போது ஊரெங்கும் பிரபலம். சென்னையில் உள்ள ஸ்டார்ட்-அப் பேப்புள் 10 கோடி ரூபாயை ஆரம்பக்கட்ட நிதியாக (விதைநிதியாக) திரட்டியது. பேடிஎம் நிறுவனர் விஜய் ஷங்கர் ஷர்மாவும், ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதமும் பிரதானமான முதலீட்டாளர்கள். பேடிஎம்மும், ஃப்ரெஷ்வொர்க்ஸ்ம் பெரிய அளவில் வெற்றிபெற்றிருக்கும் ஸ்டார்ட்-அப்ஸ்தான். புத்தம்புதுத் தொழில்தொடங்கும் கலாச்சாரம் இந்த மாநிலத்தில் ஓங்கிவளரும் இந்தக்காலத்தில் ஆரம்பக்கட்ட பெரும்முதலீடு என்றழைக்கப்படும் ஏஞ்சல் இன்வெஸ்டிங் அல்லது ஸ்டாரட்-அப் இன்வெஸ்டிங் இப்போதைய நடைமுறைப்போக்கு (ட்ரெண்டிங் சப்ஜெக்ட்).

ஸ்டார்ட்-அப்களில் முதலீடு செய்வது எவ்வளவு லாபகரமானது? யார்யார் அவற்றில் முதலீடு செய்யலாம்? தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் இனோவேஷன்  மிஷன் (டான்சிம்) தலைமை நிர்வாக அதிகாரி (சிஈஓ) சிவராஜா ராமனாதன் இன்மதியோடு தன்சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

வழக்கமாக ஒருதனிநபர் தன்வருமானத்தில் மீதமிருப்பதை ரியல் எஸ்டேட், தங்கம், பரஸ்பர நிதிகள், நிலையான வைப்புநிதிகள் போன்றவற்றில் முதலீடு செய்வார். அது சொத்துப்பிரிவு (அசெட் கிளாஸ்) என்றழைக்கப்படுகிறது. பங்குச்சந்தை என்பது மற்றுமொரு முதலீட்டுவழி. ஒவ்வொரு முதலீட்டிலும் அபாயம் என்னும் காரணி இருக்கத்தான் செய்கிறது. ஆபத்தைத் தவிர்க்க விரும்பும் தனிநபர் தன்பணத்தை நிலையான வைப்புநிதிகளில் அல்லது தங்கத்தில் முதலீடு செய்கிறார். பங்குச்சந்தை என்பது அதிக அபாயம் கொண்ட ஒரு முதலீடு.

பங்குச்சந்தை நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கும் ஸ்டார்ட்-அப்களில் முதலீடு செய்வதற்கும் பெரிய வித்தியாசமெல்லாம் ஒன்றுமில்லை. பங்குச்சந்தையில் பொதுவெளியில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் நாம் முதலீடு செய்கிறோம். ஸ்டார்ட்-அப் துறையில் தனிநபர்களால் வரையறுக்கப்பட்ட (பிரைவேட் லிமிட்டட்) நிறுவனங்களில் முதலீடு செய்கிறோம்.

ஸ்டார்ட்-அப்களில் முதலீடு செய்வது இன்றைய பரவலான ட்ரெண்ட். இதுஒரு புதுயுகச் சொத்துப் பிரிவு. மற்றவை எல்லாம் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் பழைய யுகத்து சொத்துப்பிரிவுகள். தொழில்நுட்பரீதியாக, பங்குச்சந்தை நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கும் ஸ்டார்ட்-அப்களில் முதலீடு செய்வதற்கும் பெரிய வித்தியாசமெல்லாம் ஒன்றுமில்லை. பங்குச்சந்தையில் பொதுவெளியில்

Sivarajah Ramanathan, CEO of TANSIM

டான்சிம் தலைமை நிர்வாக அதிகாரி சிவராஜா ராமனாதன்

பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் நாம் முதலீடு செய்கிறோம். ஸ்டார்ட்-அப் துறையில் தனிநபர்களால் வரையறுக்கப்பட்ட (பிரைவேட் லிமிட்டட்) நிறுவனங்களில் முதலீடு செய்கிறோம்.

சட்டத்தின் கோணத்தில் பார்த்தால், தனிநபர் நிறுவனங்களில் 200பேர் பங்குதாரர்களாக இருக்கமுடியும். அந்த நிறுவனங்களைப் பங்குச்சந்தையில் பட்டியலிட முடியாது. அவற்றை மதிப்பீடு செய்து அவற்றின் பங்குகளைச் சிறப்பு விலைக்கு வாங்க முடியும். தொழில்நுட்பரீதியாக இதைத்தான் ஸ்டார்ட்-அப் முதலீட்டில் நாம் செய்கிறோம்.

மரபுரீதியான முறையில், விலையை நிர்ணயம் செய்வதற்கு ஒரு நிறுவனத்தின் அசையா சொத்துக்கள், வரவுசெலவுக் கணக்கு, நல்லபெயர் ஆகியவற்றை மதிப்பீடு செய்கிறோம். இந்தப் புதுயுகத்து ஸ்டார்-அப்பில், அதன் தொழில்மாதிரியை, அதை இயக்கும் கருத்தை அல்லது அந்தத் தொழில் முன்னேறும் வாய்ப்புகளை எடைபோடுகிறோம். எவ்வளவு வேகமாக தொழில்கருத்து வளரும்? தொழில்கருத்து எப்படி தொழில்நுட்பத்தை இணைத்துச் செயல்படும்? நிறுவனத்தைத் தொடங்கிய குழுவிற்கு முன்னேடுத்துச் செல்லச் சரியான  திறன் இருக்கிறதா? இப்படி அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம். ஸ்விக்கி, ரெட்பஸ் ஆகியவை பிரபலமான சில உதாரணங்கள். தமிழ்நாட்டில் சைகிங்ஸ், டெண்ட்ர்கட்ஸ், பாங்க்பஜார் ஆகியவை இயங்குகின்றன.

ஸ்டார்ட்-அப்கள் என்பது தொழில்நுட்பத்துடன் கலந்து முன்னேறிச் செல்கின்ற கருத்துக்கள்தான். புதுமை என்பது வெறும் தொழில்நுட்பம் அல்ல. முதலில் பிரச்சினையை யார் தீர்ப்பார்? அல்லது ஏற்கனவே கொடுக்கப்பட்ட தீர்வை இன்னும் சிறப்பாக்குபவர் யார்? இதுபோன்ற ஏராளமான விசயங்கள் எல்லாம் ஆராயப்படுகின்றன.

ஐஸ்கிரீம் அல்லது காஃபி நீண்டநாளாக இருக்கும் தொழில்பொருட்கள்தான். ஆனால் அருண் ஐஸ்கிரீம்ஸ், காஃபிடே என்ற நிறுவனங்கள் ஐஸ்கிரீமோடு, காஃபியோடு புதுவித அனுபவத்தை வழங்குகின்ற புதுமையான கருத்துக்களைப் பயன்படுத்தி வெற்றிபெற்றவை.

இதில் ரொம்ப முக்கியம் தொழில்நுட்பம் அல்ல. புதுமையான கருத்தாக்கம்தான். கருத்தாக்கம் வித்தியாசமாக இருந்தால், அதுவளர்ந்து முன்னேறிச் செல்லும். ஸ்டார்ட்-அப் முதலீடு அந்தமாதிரி புதுமையான கருத்துக்களைக் கண்டுபிடித்து அவற்றிற்கு நிதியுதவி செய்யும்.

கேட்க சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒரு புதிய தொடக்கநிலை நிறுவனத்தின் வெற்றிச் சாத்தியக் காரணிகள் சூதாட்டத்தின் அம்சங்கள் கொண்டவை. பங்குச்சந்தையிலாவது நிறுவனங்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான போக்கு (டிராக் ரெக்கார்டு) இருக்கிறது. பிரபலமான நிறுவனங்கள்மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். ஆனால் ஸ்டார்ட்-அப்கள் அப்படியில்லாமல் வேறுமாதிரியாக இருக்கின்றன. யாராவது ஒரு பெரிய மனிதர் செய்யும் ஆரம்பக்கட்ட முதலீட்டோடு (ஏஞ்சல் இன்வெஸ்டிங்) பெரும்பாலும் இளைஞர்கள்தான் புதிய நிறுவனங்களைத் தொடங்குபவர்களாக இருக்கிறார்கள். அவர்களை வழிநடத்தும் இயக்குநர்க்குழுவில் இருப்பது முதலீட்டாளர்கள். நிறுவனத்தின் ஆரம்பக்கட்ட வெற்றியைப் பார்த்து மேலும் பல ஏஞ்சல் முதலீட்டாளர்களும், தொழில் முதலீட்டாளர்களும் உள்ளே வருகிறார்கள்.

இப்படி முன்னெடுத்துச் செல்லப்பட்ட நிறுவனங்கள் தனியார்ப் பங்குகளைப் பெற்றுப் பொதுப்பட்டியலிடப்படும் பெரிய நிறுவனங்களாக மாறிவிடுகின்றன. ஒரு ஸ்டார்ட்-அப் வெற்றிபெறலாம் அல்லது தோற்றுப்போகலாம். பத்து ஸ்டார்ட்-அப்களில் நாம் முதலீடு செய்தால், அவற்றில் மூன்று தோற்றுப் போகலாம்; மூன்று சிறிய நிறுவனங்களாகவே தேங்கிவிடலாம்; இரண்டு அல்லது மூன்று அதீத வெற்றிபெற்ற நிறுவனங்களாக வளர்ந்துவிடலாம்.

வெற்றிபெற்ற ஸ்டார்ட்-அப்களிலிருந்து லாபம் கிடைக்கலாம். தோற்றுப்போன நிறுவனங்களில் செய்த முதலீடு காணாமல் போய்விடலாம்; அல்லது சிறுநிறுவனங்களில் தேங்கிக் கிடக்கலாம்.

புதிதாக ஒன்றை உருவாக்கும் மனப்பான்மை கொண்டவர்களுக்கு, நீண்டகால முதலீட்டுத் திட்டம் போடுபவர்களுக்கு, இளைய தலைமுறை தொழில்முனைவோர்களை ஆதரிக்கும் இலட்சியம் கொண்டவர்களுக்கு ஸ்டார்ட்-அப் மிகமிக ஏற்றது.

உலகம் முழுவதும் முன்னேறிவருகின்ற ஒரு கலாச்சாரம் இது. ஸ்டார்ட்-அப்களில் முதலீடு செய்வது, அவற்றைக் கண்காணிப்பது, அவற்றோடு இணைந்து பயணிப்பது எல்லாமே சுவாரஸ்யமானதுதான். ஆனால் யார் அவற்றில் முதலீடு செய்ய முடியும்?

தங்கள் முதலீடுகளில் 100 சதவீதம் லாபம்பார்க்க விழைபவர்களுக்கு ஏற்ற இலட்சியத்துறை அல்ல ஸ்டார்ட்-அப். அது மிகவும் அபாயம் கொண்ட முதலீடு. அளவுக்கு மிஞ்சிய பணம் கொண்டவர்களுக்கு, போனால் போகட்டும் என்ற மனப்பான்மை கொண்டவர்களுக்கு, தர்மத்திற்குப் பணம்கொடுக்க ஆசைப்படுபவர்களுக்கு ஏற்றது ஸ்டார்ட்-அப். நிறைய பணம் சம்பாதிப்பவர்கள் எல்லோருக்குமே அந்தமாதிரியான தாராள மனப்பான்மை இருக்கும் என்று சொல்லமுடியாது.

ஏஞ்சல் இன்வெஸ்டிங் என்னும் ஆரம்பக்கட்ட பெரும்முதலீடு வியாபாரிகளுக்கோ அல்லது தங்கள் பணத்திற்கு வட்டி கேட்கும் புத்தி கொண்டவர்களுக்கோ ஏற்றதல்ல. புதிதாக ஒன்றை உருவாக்கும் மனப்பான்மை கொண்டவர்களுக்கு, நீண்டகால முதலீட்டுத் திட்டம் போடுபவர்களுக்கு, இளைய தலைமுறை தொழில்முனைவோர்களை ஆதரிக்கும் இலட்சியம் கொண்டவர்களுக்கு ஸ்டார்ட்-அப் மிகமிக ஏற்றது.

மேலும், ஒரு ஏஞ்சல் முதலீட்டாளர்க்கு அவர் குடியிருக்கும் வீட்டைத்  தவிர்த்து 2 கோடி ரூபாய் சொத்துமதிப்பு இருக்கவேண்டும் என்று ‘செபி’ என்னும் பங்குச்சந்தைக் கண்காணிப்பு அமைப்பின் வழிகாட்டி நெறிமுறைகள் சொல்கின்றன.

Share the Article

Read in : English

Exit mobile version