Site icon இன்மதி

தடுப்பூசி போடுவதைக் கட்டாயப்படுத்துவதால் போலி தடுப்பூசிச் சான்றிதழ்கள் பெருகுகிறதா?

Read in : English

அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டிவரும் நிலையில், தடுப்பூசி வேண்டாம் என மறுக்கும் மக்களும் இருக்கிறார்கள். அதனாலேயே போட்டதுபோல் போலி தடுப்பூசிச் சான்றிதழ்கள் புழக்கத்துக்கு வரத் தொடங்கிவிட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம்தான் என்று ஒருபுறமும் கட்டாயப்படுத்தக்கூடாது என்று மற்றொருபுறமும் சர்ச்சைகள் நடந்து வருகின்றன.

“கொரோனா தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொண்டால்தான் அது மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க முடியும். தடுப்பூசி பற்றிய பல்வேறு சர்ச்சைகள் இருந்தபோதும், தடுப்பூசி முறையே தவறு என்று கூறிவிட முடியாது. தடுப்பூசியால்தான் பெரியம்மை, டைஃபாய்டு, போலியோ உள்ளிட்ட நோய்கள் உலகிலிருந்து ஒழிக்கப்பட்டன. அதனால், கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்வது அவசியம்” என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத் தலைவர் ஜி.ஆர். ரவீந்திரநாத் வலியுறுத்துகிறார்.

தடுப்பூசி குறித்த அச்சம் காரணமாக அதனைப் போட்டுக்கொள்ள சிலர் மறுப்பதால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இத்தனை தடுப்பூசிகளை போட்டே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ள சுகாதாரத்துறை ஊழியர்களில் ஒரு சிலர் இந்தப் போலிச் சான்றிதழ்களை வழங்குகிறார்கள் என்கிறார் அவர். அதற்காக, போலிச்சான்றிதழ்கள் வழங்குவதை யாரும் நியாயப்படுத்திவிட முடியாது.

தடுப்பூசி பற்றிய பல்வேறு சர்ச்சைகள் இருந்தபோதும், தடுப்பூசி முறையே தவறு என்று கூறிவிட முடியாது. தடுப்பூசியால்தான் பெரியம்மை, டைஃபாய்டு, போலியோ உள்ளிட்ட நோய்கள் உலகிலிருந்து ஒழிக்கப்பட்டன. அதனால், கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்வது அவசியம்.

பாரம்பரிய மருத்துவ முறையைக் கடைபிடிக்கும் காரைக்குடியைச் சேர்ந்த பூங்குமரன், “இப்போதுவரை சோதனை முயற்சி என்ற பெயரில்தான் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகின்றன.  உரிய முறையில் பரிசோதனைகள் செய்து, விளைவுகளை ஆராய கால அவகாசம் இல்லாமல் அவசரகதியில் கொண்டுவரப்பட்டுள்ள தடுப்பு மருந்துகளை ஊக்குவிப்பதே தவறு. சுதந்திர இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவருக்கு உண்டான மருத்துவ முறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கான உரிமை உள்ளது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவு கூறுகிறது.

எனவே ‘நீங்கள் இந்த மருத்துவ முறையைத்தான் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் அதிகாரம் யாருக்குமே இல்லை.  ஒவ்வொருவரும் தனக்கு விருப்பமான மருத்துவ முறையை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் தனிமனித உரிமையைப் பறிக்கும் செயலை அரசாங்கமே செய்கிறது. தடுப்பூசிகளை போட்டுக்கொண்டால் கொரோனா வரவே வராது என்ற உத்தரவாதத்தை ஏன் எவராலும் அளிக்க முடியவில்லை? எனவே நிரூபிக்கப்படாத விஷயத்தை வைத்துக்கொண்டு அதை ஏற்றுக்கொள்ளச் சொல்வதால் நாங்கள் வேண்டாம் என்கிறோம்” என்கிறார் பூங்குமரன்.

“அலோபதி  மருத்துவ சிகிச்சை முறை மட்டுமின்றி, அனைத்து மருத்துவ முறைகளையும் உள்ளடக்கியதே சுகாதாரத் துறை ஆகும். அதனால் மற்ற மருத்துவ முறைகளைக் கடைபிடிப்பவர்களுக்கான வழிமுறைகளை சுகாதாரத்துறை ஏன் சுலபமாக்கவில்லை? நீதிமன்ற வழக்குகளை சந்திக்கும்போது ஒவ்வொரு முறையும், நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை என்றே அரசாங்கம் சொல்கிறது. ஆனால் திரையரங்குகளுக்குச் செல்ல வேண்டுமானாலும், புறநகர் ரயில்களில் பிரயாணம் செய்ய வேண்டுமானாலும் இரண்டு தடுப்பூசிகளும் போட்டிருந்தால் மட்டுமே அனுமதி என்று, ஏன் மறைமுகமாக தடுப்பூசியைக் கட்டாயப் படுத்துகிறார்கள்?” என்று கேள்வியெழுப்புகிறார் அவர்.

“தடுப்பூசி போட விருப்பமில்லாத ஒரு நபரை, போட்டுத்தான் ஆக வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கும்போதுதான் லஞ்சம் கொடுத்தாவது போலிச் சான்றிதழ் பெறும் மனநிலைக்கு அவர் தள்ளப்படுகிறார். அதனால் போலிச் சான்றிதழ்கள் பெறுவதைத் தூண்டுவதே அரசாங்கம்தான். ‘தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பாதவர்கள் ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துவிட்டு செல்லலாம் என்ற தளர்வு இருந்தால், அவர்கள் ஏன் போலிச் சான்றிதழ் வாங்கப் போகிறார்கள்? எனவே, போலிச் சான்றிதழ் வாங்குபவர்களை குற்றம் சொல்லாமல் அரசாங்கம் தனது நெருக்கடியை தளர்த்திக்கொள்ள வேண்டும்” என்கிறார் பூங்குமரன்.

“தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்தான் கொரோனா பரவக் காரணமாவார்கள் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. ஆனால், தடுப்பூசியின் மூலமாக கொரோனா வைரஸை செலுத்திக்கொண்ட 85 சதவீத மக்கள்தான் கிருமியைச் சுமப்பவர்கள்  என்பது எங்களின் வாதம். ஏனெனில் தடுப்பூசி என்ற பெயரில் கிருமியைத்தானே உடலுக்குள் செலுத்துகிறார்கள்? அதனால் தடுப்பூசி போட்டுக்கொண்டு உடலில் கிருமியைக் கொண்டிருப்பவர்களை பொது இடங்களுக்கு வர வேண்டாம் என்று தடை போட முடியுமா? நோய் பரவாமல் இருக்க வேண்டுமானால் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, அவர்கள்தான் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்” என்கிறார் பல ஆண்டுகளாக இயற்கை வாழ்வியலைக் கடைபிடித்துவரும் பாஸ்கர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

“தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால் உனக்கு நோயே வராது, பக்க விளைவுகளே இருக்காது என்றால் அதற்கான பிரமாணப் பத்திரத்தை அரசாங்கம் முதலில் தாக்கல் செய்ய வேண்டும்” என்கிறார் சித்த வைத்திய முறையைக் கடைபிடிக்கும் நந்தினி.

தடுப்பூசி போட விருப்பமில்லாத ஒரு நபரை, போட்டுத்தான் ஆக வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கும்போதுதான் லஞ்சம் கொடுத்தாவது போலிச் சான்றிதழ் பெறும் மனநிலைக்கு அவர் தள்ளப்படுகிறார்.

தடுப்பூசிக்கு எதிரான பிரசாரத்தை தொடர்ந்து செய்துவரும் மருத்துவர் கோ. பிரேமா, “இந்தியாவில் 2021ஆம் ஆண்டு ஜனவரி 16 முதல் மார்ச் மார்ச் 29 வரை மட்டும் கொரோனா தடுப்பூசியை தொடர்ந்து 180 மரணங்கள். அதிதீவிர பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் 671. இந்த எண்ணிக்கை, தடுப்பூசி பாதகங்களை கண்காணிக்கும் கமிட்டிக்கு (AEFI- Adverse Events Following Immunisation) புகார் வந்தவை மட்டுமே. புகாரில் வராத, புகாரில் வந்தும் மறுக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட எண்ணிக்கை பற்றி நாம் ஒருபோதும் கணிக்கவே இயலாது. இவற்றில் பெரும்பகுதி மரணங்கள் தடுப்பூசி போட்டு மூன்று நாட்களுக்குள் நடந்திருக்கின்றன” என்கிறார்.

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 25% சுகாதார ஊழியர்களுக்கு டெல்டா பாதிப்பு ஏற்பட்டதாக 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு தெரிவித்தது. தற்போது தலைநகர் டெல்லியில் ஜனவரி 5 முதல் 9ஆம் தேதிக்குள் 46 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர் அவர்களில் 11 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், 34பேர் புற்றுநோய் போன்ற இணை நோய் இருந்தவர்கள்.

போலி தடுப்பூசிச் சான்றிதழ்கள்அண்மையில் வெளியாகி பிரபலமான மாநாடு திரைப்படத்தின், “வந்தான், சுட்டான், செத்தான் – ரிப்பீட்டு“ என்ற வாசகத்தை வைத்து சீர்காழியில் தடுப்பூசி வேண்டாம் என்பவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தினர், “மாஸ்க்கு, லாக்டவுன், தடுப்பூசி – ரிப்பீட்டு“ என்ற பதாகையை ஏந்தியிருந்தனர். மகாராஷ்டிர உயர்நீதிமன்றத்தில் கட்டாய தடுப்பூசிக்கு எதிரான கூட்டு வழக்கை நடத்திவரும் வழக்கறிஞர் திபாலி தனது டிவிட்டர் பக்கத்தில் அந்தப் பதாகையைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

தடுப்பூசியை செலுத்திக்கொள்ள விருப்பமில்லாதவர்களை கட்டாயப்படுத்துவதை விட்டுவிட்டு அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் போலி தடுப்பூசிச் சான்றிதழ்கள் என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்பதே ‘தடுப்பூசி தேவையில்லை‘ என்பவர்களின் வாதமாக இருக்கிறது.

Share the Article

Read in : English

Exit mobile version