Read in : English
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்தில் நரசிங்கக்கூட்டம் என்ற கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன், பள்ளிக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக காலையில் இணை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். தனது சொந்தப் பணத்திலும், தனது நண்பர்களின் உதவியுடன் இதைச் செயல்படுத்தி வருகிறார்.
இதனால், சிறு தானியங்கள், பழங்கள், கிழங்கு வகைகள், சத்துள்ள பிஸ்கெட்டுகள், முறுக்கு, கடலை மிட்டாய், அதிரசம், சிறுதானிய உருண்டைகள், முளைக்கட்டிய பயறுவகைகள் என ஏதாவது ஒன்று காலை 11 மணிக்கு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 1975ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 46 ஆண்டுகள் ஆனாலும் இந்த பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 22 தான். ஆனால், 2016 இல் கிறிஸ்து ஞான வள்ளுவன் இந்தப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக வந்த போது மாணவர்கள் எண்ணிக்கை 7தான்.
பள்ளியின் வெளிச் சுவருக்கு தனது செலவில் வண்ணம் பூசி அடித்து சுவர்களை அழகாக்கினார். மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்ச்சிப் பேரணி நடத்தினார். இந்தத் தொடக்கப்பள்ளியில் இரு ஆசிரியர்களே உள்ளனர். மற்றொரு ஆசிரியரான அய்யப்பனும் இவரது முயற்சிக்குத் துணையாக இருக்கிறார். இவர்களின் உழைப்பாலும், முயற்சியாலும் பள்ளியின் தரம் தனியார் பள்ளிக்கு சவால் விடும் வகையில் உயர்ந்துள்ளது.
இந்த பள்ளியில் நேர்மை அங்காடி நடத்தப்படுகிறது. அதாவது மாணவர்களிடம் நேர்மை உணர்வை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இது தொடங்கப்பட்டுள்ளது
இந்த பள்ளியில் நேர்மை அங்காடி நடத்தப்படுகிறது. அதாவது மாணவர்களிடம் நேர்மை உணர்வை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இது தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ள மிட்டாய் ஜாடியில் எள்ளு மிட்டாய், கடலை மிட்டாய் போன்றவை வைக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து ஒரு மிட்டாயை எடுக்கும் மாணவன் அதற்கான பணத்தை அருகில் உள்ள மற்றொரு ஜாடியில் போட வேண்டும். தான் எடுக்கும் மிட்டாய்க்கான பணத்தை நேர்மையாக தாங்களே முன்வந்து அதில் செலுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். அத்துடன், மாணவர்களின் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் திண்பண்டங்களை வெளியே வாங்கி சாப்பிடுவதும் தவிர்க்கப்படுகிறது.
இதேபோல் கட்டாயம் மாணவர்கள் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதற்காக, காலை, மதியம், மாலை என 3 வேளைகளிலும் இதற்காக மணி அடிக்கப்படுகிறது. மாதந்தோறும் நடைபெறும் ஆசிரியர், பெற்றோர் சந்திப்பில் பெற்றோர்களின் கருத்துகள் கேட்கப்படுகின்றன. மாணவர்களின் படிப்பிற்காக எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
இந்தப் பள்ளி மாணவர்கள் 21 பேருக்கும் தனது சொந்த செலவில் வாட்டர் பாட்டில் வாங்கிக் கொடுத்திருக்கிறார் ஞான வள்ளுவன். மழை காலங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் தனது செலவில் குடை வாங்கித் தந்துள்ளார்.
பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவரும் ஒரு மரம் வளர்க்க வேண்டும். பள்ளியில் ஒரு மாணவன் நடும் மரத்திற்கு தினமும் தண்ணீர் ஊற்றி அதை பராமரிக்க வேண்டும். ஆண்டிற்கு ஒருமுறை யாருடைய மரம் நன்றாக பராமரிக்கப்படுகிறதோ அந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி தலைமை ஆசிரியர் பாராட்டுகிறார்.
சுதந்திர தினம், குடியரசு தினம், ஆசிரியர் தினம் மற்றும் குழந்தைகள் தினத்தை தான் பள்ளிகளில் கொண்டாடி பார்த்திருப்போம். ஆனால், இந்தப் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகளுக்கான தினத்தையும் கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில் மாணவிகளுக்குத்தான் முக்கியத்துவம்.
நமது பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி, பரமபதம், நொண்டி, கிட்டி, கோலி, சதுரங்கம், கபடி போன்ற விளையாட்டுகளில் இந்தப் பள்ளி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
பள்ளி மாணவர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பள்ளியில் நூலகத்தை ஞான வள்ளுவன் அமைத்துள்ளார். அதில் 500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. அதில் 400 மேற்பட்ட நூல்கள் முகநூல் நண்பர்கள் மூலம் பரிசாக கிடைத்தவை. இந்த பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை படித்து விட்டு வேறொரு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் முன்னாள் மாணவர்களும் இந்த பள்ளி நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
காக்கா, குருவி உள்ளிட்ட பறவைகளிடத்தில் அன்பு காட்டும் விதமாக பள்ளி வளாகத்தில் பறவை மேடை அமைக்கப்பட்டு தினமும் அதற்கு கம்பு, அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களை வைத்து மாணவர்கள் மகிழ்கின்றனர்.
மதிய உணவு இடைவெளியின் போது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் பனை ஓலைகளை கொண்டு கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியும் வழங்கப்படுகிறது. இதனால் மாணவர்களின் படைப்பாற்றல் திறன் மேம்படுகிறது. திரைப்பட துணை இயக்குநரும், ஓவியருமான முத்துச்சாமியின் உதவியால் மாணவர்கள் ஓவியக்கலையை கற்றதுடன், புகைப்படம் எடுக்கும் காமிரைவையும் பயன்படுத்தக் கற்றுக் கொண்டுள்ளனர்.
இந்தப் பள்ளியில் மதிய உணவு சாப்பிடும் முன்பு கைகளைச் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். இந்தப் பள்ளி மாணவர்கள் 21 பேருக்கும் தனது சொந்த செலவில் வாட்டர் பாட்டில் வாங்கிக் கொடுத்திருக்கிறார் ஞான வள்ளுவன். கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரை வீட்டிலிருந்து கொடுத்து விட வேண்டும் என்று பெற்றோர்களை அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். மழை காலங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் தனது செலவில் குடை வாங்கித் தந்துள்ளார். அடையாள அட்டை, புதன்கிழமை அணிய டீ-ஷர்ட் பேண்டு, செருப்பு ஆகியவையும் அவர் வழங்கியுள்ளார். அவரது இந்த முயற்சிகளுக்கு சில நண்பர்களும் உதவி வருகின்றனர்.
செயல்முறை விளக்கங்கள் மூலமும், மடிக்கணினி மூலமும் எண்ணியலும், ஆங்கிலமும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. புதிய பாடத்திட்டங்கள் ஸ்மாட் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்குக் கற்பிக்கிறார்கள்.
செயல்முறை விளக்கங்கள் மூலமும், மடிக்கணினி மூலம் எண்ணியலும், ஆங்கிலமும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. புதிய பாடத்திட்டங்கள் ஸ்மாட் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்குக் கற்பிக்கிறார்கள்.
பிற பள்ளிகளே பார்த்து பொறாமை படும் அளவுக்கு உயர்ந்துள்ள இந்த ஊராட்சி ஒன்றியப் பள்ளியின் சுற்றுச்சுவரைப் புதுப்பிக்க வேண்டியுள்ளது. பள்ளித் தரையையும் புதுப்பிக்க வேண்டியுள்ளது. இதுபோல இந்தப் பள்ளிக்கு சில அடிப்படை வசதிகளை அரசு செய்து தந்தால் இந்தப் பள்ளி மேலும் மிளிரும்.
பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன், ஆசிரியர் அய்யப்பனின் வருங்கால திட்டம் வழி தனியார் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களையும் இந்தப் பள்ளியில் சேர வைக்க வேண்டும் என்பதுதான்.
Read in : English