Site icon இன்மதி

ஜெய்பீம் மறுபக்கம்: போலீஸ் படும்பாட்டைச் சொல்லும் ரைட்டர்!

ரைட்டர் திரைப்படம் சாதாரண போலீஸார் படும் பாட்டை விவரிக்கிறது 

Read in : English

நேர்மையான கடமை தவறாத போலீஸ் அதிகாரிகளையும், போலீஸ் அல்ல, பொறுக்கி என்று சொல்லி சமூக விரோதிகளைச் சுட்டுக் கொல்லும் போலீஸ் அதிகாரிகளையும், சிரிப்பூட்டும் போலீஸ் அதிகாரிகளையும் தமிழ் திரையுலகம் கண்டிருக்கிறது. போலீஸ் துறையின் அத்துமீறல்களை சொல்லும் விசாரணை, ஜெய்பீம் படங்களை அடுத்து, காவல் துறையில் உள்ள ரைட்டர் படும் பாட்டைச் சொல்லி ரைட்டர் என்ற ஒரு படம் வந்ததுள்ளது.

ஒரு திரைப்படத்தினால் பெரிய புரட்சியை உண்டாக்க முடியாவிட்டாலும், சிற்சில மனமாற்றங்களை நிகழ்த்த முடியும். அதைச் செயல்படுத்தும்போது பல்வேறு தடைகளைத் தாண்டுவதும், சரியான புரிதலுக்கு வழிவகுப்பதும், வேறுபட்ட விமர்சனங்களை எதிர்கொள்வதற்கான வல்லமையுடன் இருப்பதும் அவசியம். மிக முக்கியமாக அரசின் போக்கு குறித்தோ, அதன் முடிவெடுக்கும் திறன் குறித்தோ, அரசு எந்திரத்தின் செயல்பாடு குறித்தோ முற்றிலும் வெளிப்படையாகப் பேசிவிட முடியாது. அரசின் அதிகாரத்தைச் செயல்படுத்துகிற, காக்கிற, அறியப்படாத ரகசியங்களாக மாற்றுகிற ராணுவம், காவல், உளவுத் துறை உள்ளிட்டவற்றை பற்றி எளிதாகத் திரைப்படங்கள் உருவாக்கிவிட முடியாது. ஆனாலும் அத்திசை நோக்கிச் சில படைப்பு முயற்சிகள் அரிதாக நிகழ்கின்றன. அவற்றுள் ஒன்றாக ஆகியிருக்கிறது ‘ரைட்டர்’ திரைப்படம்.

ஒரு துறையின் செயல்பாட்டை, அது குறித்த விமர்சனத்தை, அதன் உள்ளே நிலவும் ஏற்றத்தாழ்வுகளைப் பேச முயற்சித்திருக்கிறது ‘ரைட்டர்’மேலிருந்து கீழே பாயும் நீர் போல, காவல் துறை என்பது அதிகாரத்தைப் பாய்ச்சுமிடம் என்பதாக இக்கதையில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில், பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியிருக்கும் ‘ரைட்டர்’ திரைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் பேசுபொருளாக இருக்கிறது. ‘சிங்கம்’, ‘சிறுத்தை’ டைப் கமர்ஷியல் சினிமாக்களில் போலீஸ்காரராக வரும் நாயகனின் சாகசங்கள் ரசிகர்களால் கொண்டாடப்படும். ‘விசாரணை’, ‘ஜெய்பீம்’ படங்களில் காவல் துறையில் நிகழும் அத்துமீறல்களைக் கண்டு அதே ரசிகர்கள் வெம்புவார்கள். இன்னும் ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ‘குருதிப்புனல்’, ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ போன்ற படங்களைப் பார்த்தபிறகோ, நடிகர் ரஞ்சித் இயக்கிய ‘பீஷ்மர்’ போன்ற படங்களை ரசித்தபிறகோ, ‘போலீஸ் டிபார்ட்மெண்ட் வேறொரு உலகம்’ என்ற எண்ணம் தோன்றும்.

இதையெல்லாம் தாண்டி ஒரு துறையின் செயல்பாட்டை, அது குறித்த விமர்சனத்தை, அதன் உள்ளே நிலவும் ஏற்றத்தாழ்வுகளைப் பேச முயற்சித்திருக்கிறது ‘ரைட்டர்’மேலிருந்து கீழே பாயும் நீர் போல, காவல் துறை என்பது அதிகாரத்தைப் பாய்ச்சுமிடம் என்பதாக இக்கதையில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றும் எழுத்தர் அல்லது ரைட்டர் என்பவர் வெறுமனே தகவல்களைப் பதிவு செய்பவர் மட்டுமல்ல. குற்றம்சாட்டப்பட்டவருக்கும் காவல் துறை சார்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் இடையேயான கடைசி கண்ணி அவர்தான்.

ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றும் எழுத்தர் அல்லது ரைட்டர் என்பவர் வெறுமனே தகவல்களைப் பதிவு செய்பவர் மட்டுமல்ல. குற்றம்சாட்டப்பட்டவருக்கும் காவல் துறை சார்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் இடையேயான கடைசி கண்ணி அவர்தான். அதனாலேயே, அப்பொறுப்பை வகிப்பது சாதாரண விஷயமாகக் கருதப்படாது. “ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் ஒரு ரைட்டர் இருப்பாரு. கிராமம், நகரம், மலைப்பாங்கான இடம், வறட்சியான பிரதேசம்னு பல இடங்கள்ல, பலவித மக்கள் வாழுற

எழுத்தர் அல்லது ரைட்டர் என்பவர் குற்றம்சாட்டப்பட்டவருக்கும் காவல் துறை சார்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் இடையேயான கடைசி கண்ணி

இடங்கள்ல அந்த ஸ்டேஷன்கள் இருக்கும். அங்க இருக்குற ஒவ்வொரு ரைட்டரும் ஒரேமாதிரியான மனநிலையோட இருக்க மாட்டாங்க. ஆனா, அவங்களோட அறிவும் செயல்பாடும் ஒரேமாதிரி இருந்தாகணும். ஒரு கேஸ்ல விடுபட்டுப்போன தகவல் எது, குற்றம்சாட்டப்பட்டவர் சொல்ற தகவல்ல எது சரி, எது தவறுன்னு கண்டுபிடிக்குற ஆற்றல் அந்த ரைட்டருக்கு இருக்கும். அதுதான் அந்த வேலையோட ஸ்பெஷல்”என்றார் நண்பரொருவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் குற்ற வழக்குகள் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளைத் தயாரித்த அனுபவமே, அவரிடமிருந்து இப்படியொரு புகழுரை வரக் காரணம்.

காவல் துறை தொடர்பான சமீபத்திய படங்களில், கதையமைப்பில் ரைட்டர்களுக்கென்று தனியிடம் தருவது வாடிக்கையாகி வருகிறது. அவ்வனுபவத்தில் நிறைந்திருக்கும் புத்திசாலித்தனம் மட்டுமே அவற்றில் வெளிப்பட்டது. அதில் இருந்து மாறுபட்டு, தான் எந்தவிதத்திலும் அதிகாரத்தைத் தவறாகப் பிரயோகிக்கவில்லை என்று நினைக்கிற, செயல்படுகிற ஒருவரை முன்னிலைப்படுத்துகிறது ‘ரைட்டர்’. அதே நேரத்தில், காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் தீர்க்கப்படும் விகிதத்தை அதிகரிக்கவும், குற்றவாளியை வளைத்துப் பிடிப்பதற்காகப் போலியான தகவல்களைச் சேர்க்கவும் அந்த அனுபவம் பயன்படுத்தப்படுவதாகக் காட்டுவது புதிது. அப்படியொருவர் குற்றவுணர்ச்சி கொள்வதே இக்கதையின் மையமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

காவலர்களுக்கு 8 மணி நேர பணி, 8ஆம் நாள் கட்டாய ஓய்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காவலர் சங்கம் அமைக்கும் முயற்சியில் நாயகன் இருப்பதாகக் காட்டுகிறது ‘ரைட்டர்’. சாதாரண மக்களின் உரிமைகளைக் காக்கிற, காக்கப் போராடுகிறவர்களாக நாயகர்களைக் காட்டும் போலீஸ் கதையிலிருந்து, காவலர்களைக் காக்க சங்கம் என்ற அமைப்பு தேவை எனும் இப்படம் பெருமளவு வித்தியாசப்படுத்துகிறது. அதீத சாகசங்களை நிகழ்த்துபவர்கள் அல்லது மோசமான செயல்களைச் செய்பவர்கள் என்று ஒன்றுக்கொன்று நேரெதிரான புள்ளிகளில் காவல் துறையைச் சேர்ந்தவர்களைக் காட்டியதிலிருந்து வித்தியாசப்பட்டு, அத்துறையில் நிகழ வேண்டிய சீர்திருத்தங்களைச் சொல்கிறது.

உயரதிகாரிகள் அடுத்த நிலையிலுள்ள பணியாளர்களிடம் வெளிப்படுத்தும் அதிகாரத்தைச் சொல்கிறது. அந்த அதிகாரத்தோடு சாதீயமும் கலந்திருக்கிறது என்ற படிக்கு கதை நகரும்போது, ஒட்டுமொத்த திரைக்கதையும் வேறொரு பரிமாணம் கொள்கிறது.  

மிக முக்கியமாக, காவல் துறை பணியாளர்கள் பணி அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொள்வதைப் பற்றிப் பேசுகிறது. தகவல் அறியும் உரிமைப் போராளிகள் மரணம் குறித்த செய்திகள் கவனத்திற்கு உள்ளாகாமல் போவது குறித்துச் சொல்கிறது. உயரதிகாரிகள் அடுத்த நிலையிலுள்ள பணியாளர்களிடம் வெளிப்படுத்தும் அதிகாரத்தைச் சொல்கிறது. அந்த அதிகாரத்தோடு சாதீயமும் கலந்திருக்கிறது என்ற படிக்கு கதை நகரும்போது, ஒட்டுமொத்த திரைக்கதையும் வேறொரு பரிமாணம் கொள்கிறது.

“அரசின் எல்லாத் துறையிலும் சீர்திருத்தம் தேவைப்படுகிறது. காவல் துறையும் அதிலொன்று” என்று இது குறித்த கேள்விக்குப் பதிலளித்தார் பணி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர். ’ரைட்டர் படத்தை இன்னும் பார்க்கவில்லை’ என்பதே படம் எழுப்பும் கேள்விகளுக்கான அவரது பதில்.

தற்கொலை செய்துகொண்ட காவல் துறை பணியாளர்களின் விவரங்களைத் திரையில் காட்டும்போது, அதில் முதலாவதாக மறைந்த டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் புகைப்படம் காட்டப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, குதிரைப்படையில் சேர விரும்பும் காவலர் சரண்யாவாக இனியா நடித்த படம் இடம்பெறுகிறது. அதேபோல,  தேவகுமார் எனும் பாத்திரத்தில் ஹரிகிருஷ்ணன் நடித்திருக்கிறார். விசாரணைக்காக அவர் அழைத்துச் செல்லப்படும் காட்சியும், தங்க வைக்கப்பட்டிருக்கும் சூழலும், இதுவரை காவல் துறையைத் திரையில் காட்டிய விதத்தில் இருந்து வேறுபடுகிறது. சுவாதி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமாரோடு தேவகுமாரை ஒப்பிட்டு அனல் பறக்கும் விவாதம் சமூகவலைதளங்களில் நிகழ்கின்றன.

சரண்யாவும் தேவகுமாரும் கற்பனை பாத்திரங்களா அல்லது நிஜத்தில் வாழ்ந்தவர்களா என்ற எண்ணம் ரசிக மனதில் விதைக்கப்படுவதே இப்படத்தின் வெற்றி. ஒரு படைப்பு எந்த வகையிலாவது ரசிகனின் சிந்தனையைத் தூண்ட வேண்டுமென்ற அடிப்படை விதி இதன் முலம் நிறைவேற்றப்படுகிறது. தன்னால் ஒரு உயிர் பலியானதாகக் குற்றவுணர்சியில் நாயகன் மன்றாடும்போது, இறந்து போனவரின் சகோதரர் அவரது உடலில் சிளுவைக் குறிகளை இடும் காட்சியும் சரி; தேவகுமாரன், சேவியர் ஆகிய பெயர்களை அப்பாத்திரங்களைச் சூட்டிய விதமும் சரி; குறியீடுகள் என்றளவில் நின்றுவிடாமல், ரசிகர்களின் சிந்தனையையும் தொட்டுச் சொல்கிறது.

திருவெறும்பூரில் இருந்து திருவல்லிக்கேணிக்கு மாற்றப்பட்டாலும், காவல் நிலையம் அமைந்திருக்கும் விதம் தாண்டி அது செயல்படும் விதம் ஒன்றுதான் என்று புரிய வைக்கும்போது, காவல் துறையின் அடிப்படை எத்தனை வலுவானது என்று உணர்த்தப்படுகிறது. அதனால்தான் போஸ் வெங்கட்டும் கவின் ஜெயபாபுவும் வெளிப்படுத்தும் அதிகார மனோபாவம் நமக்கு ஒரேமாதிரியாகத் தெரிகிறது.

ஒரு சாமான்யனின் பார்வையில் போலீசாரை ஆண்டனி நடித்த ராஜா பாத்திரம் கிண்டலடிப்பது கமர்ஷியல் அம்சம்தான். ஹரிகிருஷ்ணனை சமுத்திரக்கனி காப்பாற்றத் துடிப்பதும், அதன்பிறகான அவரது செயல்பாடுகளும் கூட அப்படித்தான். இப்படி திரைக்கதையில் நிரம்பியிருக்கும் விஷயங்களை முழுமையாகக் களைந்தபின்னும் காவலர்களின் தினசரி வாழ்க்கை குறித்த கவலைகளைச் சிந்திக்க வைப்பதே இதன் வெற்றி. உள்ளடக்கம் தாண்டி காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கும் விதமும் செழுமையாக இருப்பதே இப்படத்தின் சிறப்பு.

அதிகாரப்போக்கு என்பது தனிமனிதரின் குணாதிசயம் அல்ல. தொற்றுநோய் போல, அது ஒரு துறையின் மேலடுக்கில் இருந்து கீழ் வரை நிறைந்திருக்கிறது. ‘நம்மாளுக எதிர்த்து பேசிரக்கூடாதுன்னு வெள்ளைக்காரன் கொண்டு வந்ததுதான் இந்த போலீஸு’ எனும் வசனம், சர்வாதிகாரத்தில் இருந்ததே ஜனநாயகத்திலும் தொடர்வதை உணர்த்துகிறது. அப்படிப் பார்த்தால், அரசியலமைப்பு தொடங்கி அரசு நிர்வாகத்தின் இண்டு இடுக்குகள் வரை எவையெல்லாம் ஜனநாயகத்திற்கு விரோதமானவை என்று ஒரு ஆய்வு மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதனைச் சுட்டும் ஒரு முயற்சியாக விளங்குகிறது ’ரைட்டர்’. இதனைத் தொடர்ந்து இன்னும் பல படைப்புகள் இத்திசையில் அடுத்த கட்டம் தொடும் என்ற நம்பிக்கையையும் விதைத்திருக்கிறது..!

Share the Article

Read in : English

Exit mobile version