Site icon இன்மதி

இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை: குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் சீனா

மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் சீன தூதர் 

Read in : English

ஒரு வாரத்திற்கும் மேலாக ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். கடந்த 18ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற படகுகளும் மீனவர்களும் சிறைபிடிக்க பட்டனர். அடுத்த நாள் மண்டபத்திலிருந்து சென்ற மீன்பிடி படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டன. அதற்க்கு அடுத்த நாள் ஜெகதாப்பாட்டினத்திலிருந்து சென்ற படகுகள் பிடிப்பட்டன. மூன்று நாட்களுக்குள் 68 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டது மீனவர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. படகுகளும் மீனவர்களும் விடுவிக்கப்படாவிட்டால் ஜனவரி 1ம் தேதி ராமேஸ்வரத்தில் இரயில் மறியல் போராட்டம் நடக்கும் என்று மீனவ சங்கங்கள் எச்சரித்துள்ளன.

மீனவர் சிறைபிடிப்பு ஒன்றும் புதிய நிகழ்வு அல்ல. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படுவது அடிக்கடி நடப்பதுதான். ஆனால் 68 மீனவர்கள் மற்றும் படகுகள் அடுத்தடுத்து பிடிபடுவது மீனவர்களை கலக்கத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இதற்க்கு பின்னால் சீனாவின் அழுத்தம் உள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். “இலங்கைக்கான சீன தூதர் இலங்கையின் வடக்கு பகுதிக்கு வருகை தருகிறார். அடுத்த நாள் எங்களுடைய படகுகள் கும்பல் கும்பலாக பிடிபடுகின்றன. இதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்கமுடியும்?” என்று கேட்கிறார் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜா.

தமிழக மற்றும் இலங்கை தமிழ் மீனவர்களின் உறவு மிகவும் சீர்கெட்டிருக்கும் இந்த நேரத்தில் சீனா இலங்கை தமிழ் மீனவர்கள் சார்பாக இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை அது கட்டமைப்பதாக நம்முடைய மீனவர்கள் கருதுகிறார்கள்.

ஹம்பன்தொட்ட துறைமுக கட்டுமானம் ஆரம்பித்த காலத்திலிருந்து தமிழக மீனவர்கள் தங்களுக்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு பின்னால் சீனா இருப்பதாக குற்றம் சாட்டிவருகிறார்கள். தமிழக மற்றும் இலங்கை தமிழ் மீனவர்களின் உறவு மிகவும் சீர்கெட்டிருக்கும் இந்த நேரத்தில் சீனா இலங்கை தமிழ் மீனவர்கள் சார்பாக இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை அது கட்டமைப்பதாக நம்முடைய மீனவர்கள் கருதுகிறார்கள்.

 

“தமிழக மீனவர்கள் எங்கள் தொப்புள்கொடி உறவுகள்தான். ஆனால் எங்கள் கடல் வளத்தை சீரழிப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது. இழுவை மடி இங்கு தடைசெய்யப்பட்ட ஒன்று. அதை இங்கு உபயோகப்படுத்த கூடாது என்பதுதான் எங்கள் கோரிக்கை. ஆனால் அவர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு அனுமதிக்க கோருகிறார்கள். எங்கள் நாட்டில் தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு எங்கள் கடற்பரப்பில் மீன்பிடிப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது. பசிக்கு சோறு வேண்டுமானால் போடலாம், சோற்று சட்டியை தூக்கி தரமுடியாது,” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் மன்னார் மாவட்ட மீன்பிடி சங்கங்களின் செயலாளர் எம் என் ஆலம் .

இலங்கைக்கான சீன தூதர் கிய் செங்ஹோங் கடந்த 17ம் தேதி முதல் இலங்கையின் வடமாகாணங்களுக்கு சுற்று பயணம் செய்து வருகிறார். யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூர் கந்தசாமி கோவிலில் சட்டையில்லாமல் அவர் நிற்கும் படங்களையும், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார்

 

இலங்கைக்கான சீன தூதர் யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு வருகை தந்த போது எடுத்த புகைப்படம் (ஆதாரம்: ட்விட்டர்)

மீனவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் புகைப்படங்களையும் சீன தூதரகம் தமிழில் ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சீன உதவியுடன் வடக்கு மாகாணங்களில் செயல்படுத்த இருந்த சூரிய மின் திட்டங்களை இலங்கை கைவிட்டது. அதற்கு இந்திய தரப்பு  தெரிவித்த எதிர்ப்பு காரணமாக சொல்லப்பட்டது.  ஆனால் இப்பொழுது கடல் அட்டை பண்ணை மற்றும் கடல் உணவு தொழிற்சாலை என சீனா தன் இருப்பை வடக்கு மாகாணங்களில் உறுதிப்படுத்துகிறது. “எங்கள் மக்கள் சொந்த நாட்டவரான சிங்களவர் இங்கு எதையும் அமைப்பதையே நாங்கள் விரும்புவதில்லை. ஆனால் மத்திய அரசு சீன திட்டங்களை வலிந்து எங்கள் மேல் திணிப்பதை தடுக்கும் வலு எங்களுக்கு இல்லை,” என்கிறார் ஆலம்..

இலங்கையிலுள்ள பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்களை ஒரே நேரத்தில் திருப்திப்படுத்த சீனா தற்பொழுது ஒரு இரட்டை அணுகுமுறையை வகுத்து வருகிறது. சீனத் தூதுவரின் வருகையும், வட மாகாணத்திற்கு சீனாவின் கணிசமான உதவியும் சீன ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கையாகும்.

இந்திய மீனவர்களின் சீன தாக்கத்தை குறித்த பயம் நியாயமானது என்கிறார் இலங்கையை சேர்ந்த புவிசார் அரசியல் ஆய்வாளர் அசங்க அபேயகுணசேகர. இலங்கையிலுள்ள பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்களை ஒரே நேரத்தில் திருப்திப்படுத்த சீனா தற்பொழுது ஒரு இரட்டை அணுகுமுறையை வகுத்து வருகிறது. சீனத் தூதுவரின் வருகையும், வட மாகாணத்திற்கு சீனாவின் கணிசமான உதவியும் சீன ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கையாகும். ஆரம்ப கட்டமாக மீனவ சமூகத்தை அது குறிவைக்கிறது,” என்கிறார் அபேயகுணசேகர.

இலங்கையின் உள்விவகாரங்களில் அது தலையிடாது என்ற ஒரு பிம்பத்தை சீனா கட்டமைக்கிறது. தமிழ் மக்களுக்கெதிரான இலங்கையின் மனித உரிமை மீறல்களை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் விசாரிப்பதை சீனா ஆதரிக்கவில்லை என்பதை இங்கே குறிப்பிடலாம்.

இராணுவமயமாக்கப்பட்ட ஆட்சி ஜனநாயக செயற்பாடுகளை கட்டுப்படுத்திக்கொண்டிருக்கும் வேளையில், சீனா இந்தச் சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது. ஒரு மாற்று மாதிரியை ஊக்குவித்து பொருளாதார உதவியை விரிவுபடுத்தி வருகிறது. சீனா இலங்கையை இந்தியப் பெருங்கடலில் பெல்ட் மற்றும் ரோடு முன்முயற்சிக்கான ஒரு புவிசார் மூலோபாய (strategic) மையமாக பார்க்கிறது. தங்களுடைய இருப்பு மற்றும் பொருளாதார வளங்களை தக்கவைத்து கொள்ள நினைக்கும் ராஜபக்ச ஆட்சியால் பல துறைகளில் சீனாவின் செல்வாக்கு விரிவாக்கம் பெற்று வருகிறது. “இந்தியாவின் சுய பாதுகாப்பு குறித்த, முக்கியமாக தன்னுடைய தெற்கு பகுதிகளில், கவலைகளை  சீனா புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறுகிறார்  அபேயகுணசேகர.

இந்திய கடலோர காவல்படையின் முன்னாள் கிழக்கு பிராந்தியத் தளபதியும், தற்போது சென்னையிலுள்ள சீனா குறித்த ஆய்வு மையத்தின் இயக்குநரான வாசன் அவர்கள் இதை இந்தியா மிக கவனமாக அணுக வேண்டும் என்கிறார். சீனா தன்னுடைய நோக்கங்களுக்காக என்ன வகையான துருப்பு சீட்டுகளையும் உபயோகிக்கும் எனவும் இலங்கையின் தமிழ் மீனவர்களை தனக்கு சாதகமாக அது திருப்ப முயன்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, என்கிறார் அவர்.

இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு ஆதிக்க சக்தியாக சீனா முயல்கிறது. அதற்காக இலங்கையை அது பயன்படுத்தி வருகிறது. இலங்கையை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதன் மூலம் இந்தியாவிற்கு நெருக்கடியை அது உண்டாக்க முயற்சி செய்து வருகிறது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானையும் இலங்கையையும் ஒன்றிணைப்பதன் மூலம் நிலைமையை மேலும் சிக்கலாக்கவும் சீனா நடவடிக்கை எடுக்கும். “இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நடத்தப்படும் இந்த வித்தியாசமான போரில் நாம் கவனமாக செயல்படவேண்டும். சீனாவின் இந்த போக்கை குறித்து இந்தியா இலங்கையுடன் விவாதிக்க வேண்டும்” என அவர் தெரிவிக்கிறார்

.

Share the Article

Read in : English

Exit mobile version