Read in : English
தன்னம்பிக்கை. விடாமுயற்சி. இதற்கு நிகழ்கால எடுத்துக்காட்டு சாமானியக் குடும்பத்தில் பிறந்து கோவை சுகுணாபுரத்தில் வசிக்கும் லோகநாதன் (38). ஓபராய் ஹோட்டலில் செஃப் ஆக வேலைபார்த்த அவர், சாலை விபத்தில் கழுத்துக்குக் கீழ் உடல் இயக்கத்திறனை (completely paralysed below the head) இழந்துவிட்ட போதிலும்கூட, மனதளவில் முடங்கிவிடவில்லை. முதலில் எம்ஏ டூரிஸம் அண்ட் மேனேஜ்மெண்ட் படிப்பைப் படித்தார். இதற்கிடையே, தான் வேலை பார்த்த ஓபராய் ஹோட்டல் குரூப் நிறுவனத்திலேயே தனக்கு வேலைவாய்ப்பு வழங்கும்படி கேட்டு, அங்கு தற்போது சீனியர் ரிசர்வேஷன் அசோசியேட்டாக வீட்டிலிருந்தே பணிபுரிகிறார்.
அவரது தன்னம்பிக்கையின் அடுத்தகட்டம்தான், அவரது சுயவரலாற்றுப் புத்தகம். தனது வாழ்க்கைக் கதையைப் புத்தகமாக எழுதலாம் என்ற முடிவுக்கு வந்ததும். முதலில் என்ன எழுத விரும்புகிறாரோ அதை ஸ்மாட் போனில் பேசி ரெக்கார்டு செய்து கொள்வார். பின்னர் அதைக் கேட்டு ஒவ்வொரு எழுத்தாக வலது கைப் பெருவிரலைப் பயன்படுத்தி போனில் அழுத்தி பதிவு செய்வார். தொடர்ந்து நீண்ட நேரம் அப்படி செய்து கொண்டிருக்க முடியாது. பத்து நிமிடத்துக்கு ஒரு முறை ஓய்வு எடுத்துக் கொண்டு மொபைல் போனில் தனது வாழ்க்கைக் கதையைப் பதிவு செய்வார். தினந்தோறும் நான்கு ஐந்து மணி நேர உழைப்பு. இப்படித்தான் லோகநாதனின் இவன் வேற மாதிரி அல்ல என்ற 144 பக்க சுயவரலாற்று புத்தகம் உருவானது.
வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்தாலும், உடல்ரீதியான பிரச்சினைகள் தொடர்நதாலும், மனதளவில் தன்னை மீட்டெடுத்துக் கொண்ட அவர், வாழ்க்கையை தன்னம்பிக்கையுடனும் சுயபச்சதாபங்கள் இல்லாமலும் எதிர்கொள்கிறார். தன்னை 38 வயதிலும் குழந்தை போல தன்னை எந்த நேரமும் அன்புடன் அரவணைத்துப் பார்த்துக் கொள்ளும் தனது அம்மா குறித்து நெஞ்சம் நெகிழும் லோகநாதன், தனது பெயரின் இன்சியலாக முதலில் வைத்திருப்பது அம்மா கௌரியின் பெயரில் உள்ள முதல் எழுத்தான கௌ எழுத்தைத்தான் அதையடுத்துதான் அவரது அப்பா செல்லமுத்துவின் பெயரில் உள்ள முதல் எழுத்து செ.
முதலில் எம்ஏ டூரிஸம் அண்ட் மேனேஜ்மெண்ட் படிப்பைப் படித்தார். இதற்கிடையே, தான் வேலை பார்த்த ஓபராய் ஹோட்டல் குரூப் நிறுவனத்திலேயே தனக்கு வேலைவாய்ப்பு வழங்கும்படி கேட்டு, அங்கு தற்போது சீனியர் ரிசர்வேஷன் அசோசியேட்டாக வீட்டிலிருந்தே பணிபுரிகிறார்
15 ஆண்டுகளுக்கு முன் தனது வாழ்க்கைப் புரட்டிப்போட்ட விபத்து குறித்தும் அதன் பிறகு எதிர்கொண்ட சவால்கள் குறித்தும் தனது வாழ்க்கைக் கதையைச் சொல்கிறார் சௌ.செ. லோகநாதன்.
“கரூர் பரமத்திவேலூர் மெயின்ரோட்டிலிருந்து கரூரிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்படாபாளையம்தான் எனது சொந்த ஊர். ஐந்தாம் வகுப்பு வரைப் படித்த அப்பா செல்லமுத்து, லாரி டிரைவர். அம்மா பெயர் கௌரி. அவர் பள்ளிக்கூடம் சென்றது கிடையாது. வீட்டு வருமானத்துக்காக அம்மா வேலைகளைப் பார்த்தார்.
எங்களது ஊரில் இருந்த அரசு ஆரம்பப் பள்ளியில் படித்தேன். பின்னர் எங்களது ஊரிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தேன். பத்தாம் வகுப்பில் ஓரளவு நல்ல மதிப்பெண்கள் கிடைத்தன. 11ஆம் வகுப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர வேண்டும் என்பது ஆசை. ஆனால் அந்தப் பாடப்பிரிவு எங்களது பள்ளியில் இல்லை. வேறு வழியில்லை என்று பயாலஜி குரூப்பில் சேர்ந்து விட்டேன். எங்க ஸ்கூல் ஹெட் மாஸ்டர், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு பற்றி நிறைய சொல்லுவார். நான் தமிழ் வழியில் படித்தாலும்கூட, அந்தப் படிப்பில் சேர வேண்டும் என்பது எனது ஆசை.
வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்தாலும், உடல்ரீதியான பிரச்சினைகள் தொடர்நதாலும், மனதளவில் தன்னை மீட்டெடுத்துக் கொண்ட அவர், வாழ்க்கையை தன்னம்பிக்கையுடனும் சுயபச்சதாபங்கள் இல்லாமலும் எதிர்கொள்கிறார்
பிளஸ் டூ முடித்த பிறகு எனக்கு திருச்சி துவாக்குடியில் உள்ள ஸ்டேட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் சீட் கிடைத்தது. அங்கு மூன்று ஆண்டுகள் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பைப் படித்தேன். செஃப் ஆக வேண்டும் என்பதே எனது விருப்பம். கேம்பஸ் இன்டர்வியூ மூலம் சென்னையில் ஜி.என். செட்டி சாலையில் உள்ள தி ரெசிடென்சி ஹோட்டலில் இன் ஹவுஸ் சூப்பர்வைசர் டிரைனி வேலை கிடைத்தது. இந்த வேலையில் நான்கு மாதம் இருந்தேன்.
பின்னர் ஜெயப்பூரில் உள்ள தி ஓபராய் குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ் நிறுவனத்தில் Commis Chef வேலை கிடைத்தது. அப்புறம் இரண்டு ஆண்டுகளில் அங்கு Chef De partie ஆக பதவி உயர்வு பெற்றேன். அந்த ஹோட்டலில் பணியில் நான் சந்தோஷமாக வேலை செய்து கொண்டிருந்தேன். எனது தம்பி எம்பிஏ படிக்க உதவினேன்.
2006ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி எனது வாழ்வைப் புரட்டிப் போட்ட முக்கியமான நாள். என்னுடன் வேலைபார்த்த தோழியின் வீட்டுக்கு விருந்துக்கு எனது நண்பரின் பைக்கில் சென்றுவிட்டு திரும்பி வரும்போது சிக்னலில் நின்று கொண்டிருந்தேன். அப்போது எதிர்பாராத விதமாக ஆம்னி வேன் என் மீது மோதியது. அதனால், தண்டுவடத்தில் காயம் (Cervical spinal cord injury). அதனால் கழுத்துக்குக் கீழ் உள்ள உறுப்புகள் பாதிக்கப்பட்டன. உடலை அசைக்க முடியாது. என்னால் எழுந்திருக்கவோ, நடக்கவோ முடியாது. கையையோ காலையோ அசைக்க முடியாது. தலை அசைக்கலாம். பேசலாம். கையெழுத்துப் போட முடியாது. வீல் சேரில்தான் வாழ்க்கை. அல்லது படுக்கையில் படுத்திருக்கலாம். வலது கைப் பெருவிரலை மட்டும் பயன்படுத்தலாம். அவ்வளவுதான்.
நான் காலையில் எழுந்த உடன் கண் விழிப்பது எனது அம்மாவின் முகத்தில்தான். பல் துலக்குவதிலிருந்து ஆரம்பித்து அடுத்து பாத்ரூம் வேலைகள் நடக்கும். பிறகு ஆடை மாற்றுவது சாப்பாடு கொடுப்பது போன்ற அனைத்து வேலைகளையும் செய்வது எனது அம்மாதான். காலையில் ஆரம்பிக்கும் இந்த வேலைகள் இரவில் நான் தூங்குவதோடு முடிந்துவிடாது. என்னைப் படுக்கையில் படுக்க வைத்த பின் எனது கைகளை நேராகச் சரியாக வைக்க வேண்டியது இருக்கும். அத்துடன் அவர் எனது கட்டிலுக்குப் பக்கத்திலயே படுத்துக் கொள்வார். இரவில் என்னால் திரும்பிப் படுக்க முடியாது. அதற்கு அம்மாவின் உதவி தேவை. இப்படி இரவு பகல் பாராமல் என்னைக் காத்து வருபவர் என் அம்மாதான்.
விபத்து நடந்ததைக் கேள்விப்பட்ட எங்கள் நிறுவனத்தின் தலைவர் பி.ஆர்.எஸ். ஓபராய் தொலைபேசியில் அழைத்து, “நீ எதற்கும் கவலைப்படாதே. நீ எப்போதும் ஓபராய் எம்ப்ளாயீ தான்” என்று ஆதரவுடன் கூறினார். எனது நிறுவனம் இன்று வரை எனது மருத்துவச் செலவுகளைப் பார்த்துக் கொள்கிறது
விபத்து நடந்ததைக் கேள்விப்பட்ட எங்கள் நிறுவனத்தின் தலைவர் பி.ஆர்.எஸ். ஓபராய் தொலைபேசியில் அழைத்து, “நீ எதற்கும் கவலைப்படாதே. நீ எப்போதும் ஓபராய் எம்ப்ளாயீ தான்” என்று ஆதரவுடன் கூறினார். எனது நிறுவனம் இன்று வரை எனது மருத்துவச் செலவுகளைப் பார்த்துக் கொள்கிறது. எனது நண்பர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் எனக்கு உதவி இருக்கிறார்கள். ஓபராய் ஹோட்டல் நிர்வாகத்துக்கும் அதன் ஊழியர்களுக்கும் நன்றி என்ற வார்த்தை போதாது.
விபத்து நடந்து முதல் கட்டச் சிகிச்சைக்குப் பிறகு, ஜெய்ப்பூரிலிருந்து தமிழகம் வந்து விட்டேன். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை, மறுவாழ்வுப் பயிற்சி என்று வாழ்க்கை மருத்துவமனையிலேயே எனது பொழுது கழிந்தது. ஆனாலும், என் மீது மற்றவர்கள் கழிவிரக்கம் கொள்வதில் விருப்பம் இல்லை.
விபத்தில் உடல் இயக்கத் திறனை இழந்தாலும்கூட, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி முறையில் எம்ஏ டூரிஸம் மேனேஜ்மெண்ட் படிப்பில் 2012இல் சேர்ந்தேன். அந்தப் படிப்பைப் படித்து முடிக்க பல தடைகள். அதையும் தாண்டி 2017இல் எம்ஏ பட்டம் பெற்றேன்.
எனது நிறுவனம் எனக்கு அலவன்ஸ் வழங்கி வந்தபோதிலும்கூட, நான் வேலை பார்த்து சம்பாதித்து எனது உழைப்பில் வாழ வேண்டும் என்று விரும்பினேன். எனது நண்பர் கம்ப்யூட்டர் நோட்புக் வாங்கித் தந்தார். அதில் பயிற்சி பெற்று மாதம் ரூ.5 ஆயிரம், ரூ.6 ஆயிரம் சம்பாதித்தேன். பின்னர், ஓபராய் ஹோட்டல் நிறுவனத்திலேயே வேலை கொடுங்கள் என்று கேட்டேன். அவர்கள் என்னை நம்பி 2015இல் வேலை கொடுத்தார்கள். தற்போது, ஓபராய் ஹோட்டல் நிறுவனத்தில் சீனியர் ரிசர்வேஷன் அசோசியேட்டாகப் பணிபுரிகிறேன். காலை 9.30 மணியிலிருந்து 6.30 மணி வரை பணி. வீட்டிலிருந்தே அந்தப் பணியை என்னால் சரியாகச் செய்து விட முடிகிறது. வாட்ஸ் அப், இமெயில் மூலம் செய்திகளை அனுப்பப் பழகியிருக்கிறேன். கிளைண்டுகளுடன் போனில் பேசுவேன். மருத்துவ சிகிச்சைக்குச் செல்வது என்றால் எங்களது நிறுவனத்தில் அனுமதி கொடுத்துவிடுவார்கள். அவர்கள் கொடுக்கும் ஊதியத்தை வைத்து தற்போது வாழ்க்கையை நடத்துகிறேன்.
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மறுவாழ்வுப் பயிற்சிக்காக அங்கு இருந்தபோது டாக்டர் பிரின்ஸ், உங்கள் வாழ்க்கைக் கதையைப் புத்தகமாக எழுதுங்கள் என்று யோசனை தெரிவித்தார். அதுதான் நான், எனது வாழ்க்கை அனுபவத்தைப் புத்தகமாக எழுதுவதற்கான ஆரம்பப்பொறி. 2020ஆம் ஆண்டு கொரோனா லாக்டவுன் காலத்தில் அதாவது, மார்ச் 27ஆம் தேதி எனது புத்தகம் எழுதும் பணி தொடங்கியது. எனது சொந்த அனுபவங்களை மனதில் தொகுத்து வைத்துக் கொண்டு மொபைலில் பதிவு செய்வேன். பின்னர், எனது வலது கை பெருவிரலைக் கொண்டு மொபைல் போனில் ஒவ்வொரு எழுத்தாகப் பதிவு செய்வேன். தினமும் 4, 5 மணி நேரம் இதற்காகச் செலவிட்டேன். கடந்த ஆண்டு ஜூலை 3ஆம் தேதி எனது புத்தகத்தை எழுதி முடித்துவிட்டேன்.
அண்ணன் போல இருந்து எனக்கு ஆதரவுடன் அளித்து வரும் நடராஜன், இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு ஊக்கமளித்துடன், அதை வெளியிடுவதற்கும் உதவினார். வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் புத்தகம் குறுகிய காலத்தில் இதுவரை 1600 பிரதிகள் விற்பனையாகிவிட்டது. சிங்கப்பூர், மலேசியா, கனடா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் எனது புத்தகங்களை வாங்கியிருக்கிறார்கள். என்னைப் போல பாதிக்கப்பட்டவர்கள், தங்களது வாழ்க்கையை நேர்மறை உணர்வுடன் எதிர்கொள்ள இந்தப் புத்தகம் நம்பிக்கையூட்டுமானால் நான் மகிழ்ச்சி கொள்வேன்” என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் லோகநாதன்
Read in : English