Site icon இன்மதி

உங்கள் தொழில் வளர்ச்சிக்கான வியூகம் என்ன?

Read in : English

உங்கள் தொழிலை மேம்படுத்த நீங்கள் விரும்பினால், தொழில் மேம்பாட்டுக்கான வியூகத்தில் கவனம் செலுத்துவது அவசியம். அந்த வியூகத்தைச் செயல்படுத்துவதற்கு மையமாக இருப்பவை கட்டமைப்பு, இணைத்துத் செயல்படுதல் மற்றும் தீர்வு.

ஒரு பெரிய தொழில் நிறுவனத்தின் உரிமையாளரின் லட்சியமே நிறைய பணம் சம்பாதிப்பதுதான். தொழிலைப் பற்றியோ அதன் வளர்ச்சி பற்றியோ அவர்க்கு வரையறுக்கப்பட்ட கருத்துகள் என்று எதுவும் இல்லை. அன்றாடம் தொழில் சம்பந்தமான பிரச்சினைகளோடு போராடுவதிலே அவர் மும்முரமாக இருக்கிறார். அவருக்கோ அவரது குழுவுக்கோ லட்சியமும் இல்லை; அவர்கள் எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பதும் இல்லை. அதன் விளைவாக, தொழில் தேக்கமடைந்து, காலஞ்செல்ல செல்ல தொழில் வளர்ச்சி தேய்மானம் அடைகிறது. தொழில் அபிவிருத்திக்கென்று ஒரு வியூகத்தைக் கட்டமைத்து வைத்துக் கொள்வதின் முக்கியத்துவத்தை அந்தத் தொழிலபதி பின்னர்தான் புரிந்துகொள்கிறார்.

வியூகம் என்பது நீங்கள் விரும்பிய பலன்களை அடைவதற்கான ஒரு செயல்பாட்டுத் திட்டம். அதனால் முன்னோக்கிய பாதையை வரையறை செய்யும் ஒரு தெளிவான வியூகத்தை உருவாக்குவது ஒரு நிறுவனத்திற்கு அவசியம்

வியூகம் என்பது நீங்கள் விரும்பிய பலன்களை அடைவதற்கான ஒரு செயல்பாட்டுத் திட்டம். அதனால் முன்னோக்கிய பாதையை வரையறை செய்யும் ஒரு தெளிவான வியூகத்தை உருவாக்குவது ஒரு நிறுவனத்திற்கு அவசியம். முதலீடு வியூகம், அபாயம் குறைக்கும் வியூகம், வாடிக்கையாளர்களைப் பிடிக்கும் வியூகம், மாற்றியமைக்கும் வியூகம், போட்டி வியூகம், வளர்ச்சி வியூகம், புதுமை வியூகம், நீலக்கடல் வியூகம் (போட்டி இல்லாத சூழலில் பொருளை விற்கும் வியூகம்), மற்றும் பொருத்தமான பல்வேறு வியூகங்கள் ஆகிய வியூகங்களின் பல்வேறு பெரிய அம்சங்களைத் தெளிவாக வரையறுத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு நல்ல அஸ்திவாரமாகச் செயல்படும்; தொழிலில் சந்திக்கும் சூழல்களுக்கேற்ப இந்த அஸ்திவாரத்தைப் பின்பு நிலைத்த ஒரு வழக்கமாக மாற்றிக் கொள்ளலாம்.
தொழிலதிபராக அல்லது தொழிலில் தலைமைப் பொறுப்பில் உள்ளவராக நீங்கள் இருந்தால், பின்வரும் வினாக்களைப் புரிந்துகொள்ள வேண்டும்:

• உங்கள் நிறுவனத்திற்கு வியூகம் முக்கியமென்று எது உங்களை நினைக்க வைக்கிறது?
• தெளிவாக வரையறுக்கப்பட்ட வியூகம் உங்கள் தொழிலுக்கு நீண்டநாள் எப்படி உதவும்?
• உங்கள் தொழிலின் எதிர்காலம் உங்களுக்கு எப்படி தோன்றுகிறது?

உங்கள் தொழில் வியூகத்தோடு ஆரம்பமாகி லாபத்தில் முடிகிறது. அதை மேலும் விரிவாக்கத் தேவைப்படும் வியூகம் என்பது தொழில் இயக்கங்கள் மூலம், மனிதவளத் துறையின் ஆதரவோடு, சந்தைப்பிரிவு உதவியுடன், தகவல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களைப் பிடிப்பதாகும். மேலும் அந்த வியூகம் மூலப்பொருள் வழங்குநர்களிடம் இணக்கமான உறவோடு பழகி லாபம் சம்பாதிக்கவும் வழிவகுக்கும்.

தொழிலின் ஆகமொத்த வடிவத்திற்குத் தகுந்தாற்போல் இயங்கும் பணிப்பிரிவுகளால் கூட வியூகத்தை வடிவமைக்க முடியும். உதாரணமாக, ஒரு தொழிலில் இயங்கும் ஒவ்வொரு பிரிவின் அல்லது துறையின் இயங்கு வியூகம் என்பது நிறுவனத்தின் ஒட்டுமொத்த வியூகத்தோடு கைகோர்த்து ஒத்துப்போக வேண்டும்.

ஒரு செயல்முறையை, ஓர் உற்பத்திப் பொருளை அல்லது ஒரு சேவையை மேம்படுத்தும்போது அல்லது அவ்வப்போது அபிவிருத்தி செய்யும்போது, கடைப்பிடிக்க வேண்டிய ஒரு நல்ல நிர்வாகமுறை என்பது ‘பிடிசிஏ வட்டம்’ ஆகும்.

• ’பி’ என்பது ’பிளான்’ (திட்டம்) – பிரச்சினையைக் கண்டுபிடித்து அதை ஏற்படுத்திய திறனின்மைகளை அடையாளப்படுத்துதல் அல்லது தீர்வுகளை வளர்த்தெடுத்தல்; இதுதான் ‘பி’.

• ‘டி’ என்பது ’டூ’ (செய்)) – அதாவது தீர்வை நடைமுறைக்குக் கொண்டுவருதல்

• ’சி’ என்பது ‘செக்’ (சோதித்தல்) – புதியமுறை நன்றாக வேலைசெய்கிறதா என்பதைப் பரிசோதித்தல்

• ’ஏ’ என்பது ‘ஆக்ட்’ (செயல்படுதல்) – நிறுவனம் முழுவதுக்குமான திட்டத்தைச் செயற்படுத்துதல்

உங்கள் வியூகத்தைக் கட்டமைக்க சிறந்தவழி உங்கள் சீனியர் குழுவோடு அமர்ந்து பேசி பொறுமையாக அலசி ஆராய்வதுதான்; பின்பு உருவாக்கிய வியூகத்தை நிறுவனத்தின் மற்ற பிரிவுகளுக்கும் பரப்ப வேண்டும்.

மேலும், நீங்கள் ‘பிஸினஸ் மாடல் கான்வாஸ்’ (பரவலாக ‘பிஎம்ஸி’ என்று அறியப்படுவது) என்பதையும் தயார்செய்து கொள்ளுங்கள்; ஏனென்றால் அது தொழிலின் முக்கிய பகுதிகளுக்கான தெளிவான வியூகங்களை வரையறுக்க உதவும்.

உங்கள் தொழிலின் வியூக வளர்ச்சிக்கு பின்வரும் சட்டகத்தைப் பின்பற்றலாம்:

• எஸ் – (ஷேர்கோல்டர்கள்) பங்குதாரர்களின் மதிப்பை அதிகப்படுத்துதல்
• டி – (டூல்ஸ்) கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தை வளர்ச்சிக்குப் பயன்படுத்துதல்
• ஆர் – (ரிட்டர்ன்) முதலீட்டுக்கான லாபம் என்பது அதிகப்பட்சமாக இருத்தல்
• ஏ – (ஆக்சன் பிளான்) எதிர்காலத்திற்கான செயற்திட்டத்தை வரையறுத்துக் கொள்ளல்
• டி – (டீம்) குழுவை உருவாக்கி திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
• ஈ – (இவால்யூயேசன்) செயற்பாடுகளையும், அளவுகோல்களையும் மதிப்பீடு செய்தல்
• ஜி – (கோல்ஸ்) லட்சியங்களை மறுபரிசீலனை செய்தல்
• ஒய் – (இயர் ஆன் இயர்) வருடந்தோறும் வெற்றிக்காக திட்டமிடுதல்

ஆசிரியரைப் பற்றி:

சங்கீத ஷங்கரன் சுமேஷ் ஓர் ‘லாப ஊக்குவிப்பாளர்.’ முன்னாள் தலைமை நிதிஅதிகாரியான அவர் தற்போது தொழில் மற்றும் தலைமைப்பண்புப் பயிற்றுவிப்பாளராகச் செயல்படுகிறார். நல்ல திறன்செயல்பாட்டையும், நிதி வளர்ச்சியையும் செழுமையாக்கிக் கொண்டிருக்கிறார். தொழில்முனைவோர்களும், தலைவர்களும், குழுக்களும் வளர்ந்து வெற்றிபெறுமாறு அவர்களுக்குச் சேவை செய்வது அவரது நோக்கம். பல்தேசிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றி 25 வருடம் செழுமையான அனுபவம் கொண்ட பெண்மணியான அவரது இலட்சியம் தொழில்களையும், தனிநபர்களையும் ஊக்குவிப்பது, ஆற்றுப்படுத்துவது, மற்றும் வளர்த்தெடுப்பது.

உங்கள் வியூகத்தைக் கட்டமைக்க சிறந்தவழி உங்கள் சீனியர் குழுவோடு அமர்ந்து பேசி பொறுமையாக அலசி ஆராய்வதுதான்; பின்பு உருவாக்கிய வியூகத்தை நிறுவனத்தின் மற்ற பிரிவுகளுக்கும் பரப்ப வேண்டும்

’திங்யுனீக் சொலூஷன்ஸ்’ நிறுவனத்தின் கூட்டுநிறுவனரும், சுயாதீன இயக்குநருமான சங்கீதா ‘டெட்எக்ஸ் ஸ்பீக்கரும்’ ஆவார். மேலும் அவர் ஒரு சாட்டர்டு அக்கவுண்டண்ட். ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூலில் எக்ஸிகியூடிவ் படிப்பை முடித்திருக்கிறார். இண்டர்நேஷனல் கோச்சிங் ஃபெடரேஷனில் இயங்கிய அனுபவம் கொண்ட அவர் தொழில் ஆலோசகர், தொழில்முறை பேச்சாளர். சிறந்த விற்பனையைச் சாதித்த ‘வாட் த ஃபினான்ஸ்’ புத்தகத்தின் ஆசிரியரான அவர் ‘கெட் ஹை’, ‘வேர் இஸ் த மூலா?’ ஆகிய புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்.

மேலே உள்ள கட்டுரை, தொழில் லாபத்திற்கான நிதிவளர்ச்சி கருத்துகளை உள்ளடக்கிய அவரது ’வேர் இஸ் த மூலா?’ புத்தகத்திலிருந்து எடுத்தாளப்பட்ட ஒருபகுதியாகும்.

Share the Article

Read in : English

Exit mobile version