Read in : English
சௌதி அரேபியாவின் ஒரே ஒரு ட்வீட் உலகில் உள்ள நாடுகளில் பல்வேறு விவாதங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் வழி ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான நாடுகளில் பரந்து இருக்கும் தப்லிக் ஜமாத்திற்கு தடை விதிக்கப்படுகிறது என்று மட்டும் கூறாமல், இது தீவிரவாதிகளின் நுழைவு வாயில் என அந்நாட்டின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறி இருப்பது சிலரை இஸ்லாமியர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்க வைத்துள்ளது.
இஸ்லாமியர்களுக்கு பள்ளிவாசலில் சென்று 5 வேலை தொழுகையில் ஈடுபட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பது, ஹஜ் உம்ரா செல்வது, இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவது, உள்ளிட்ட கடமைகள் ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் உண்டு. அப்படி அவர்கள் வாழும் மக்களை நெறிமுறைப்படுத்தவும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இஸ்லாமியர்களுக்கு ஒட்டுமொத்தமாக கூடி ஒரு முடிவு எடுப்பதாகற்காகவும் செயல்படுவது தான் ஜமாத். பள்ளிவாசலை சார்ந்தவர்களே ஜமாத்தில் இடம்பெற்றிருப்பது முக்கிய அம்சமாகும்.
திருமணமானாலும், இறப்பு ஆனாலும் முக்கிய முடிவுகள் ஜமாத்தார் முன்னிலையில் எடுக்கப்படும். ஜமாத் என்பது பள்ளிவாசலை நிர்வகிக்கும் ஒரு குழு. உதாரணமாக ஒரு கிராமத்தில் 10 தெருக்கள் இருந்தால் 3 தெருக்களுக்கு ஒரு பள்ளிவாசல் இருக்கும். அந்த பள்ளிவாசலின் நிர்வாக பொறுப்பு 3 தெருக்களில் வசிக்கும் இஸ்லாமியர்களை சார்ந்திருக்கும். 5 வேளை தொகைக்கு சென்று பள்ளிவாசலுடன் தொடர்பு உள்ளவர்கள் ஜமாத்தில் அங்கம் வகிப்பார்கள்.
அந்த 3 தெருக்களில் உள்ள ஆணிற்கோ அல்லது பெண்ணிற்கோ திருமணம் நடத்த திட்டமிட்டிருந்தால், இந்த ஜமாத்தார் ஒன்று கூடி நடத்தி வைப்பார்கள். இவர்களின் முன்னிலையில் இஸ்லாம் மார்க்கப்படி ஆணிற்கும், பெண்ணிற்கும் திருமணம் நடத்தப்படும். அந்தத் திருமணம் குறித்த ஜமாத்தார் மூலம் பள்ளிவாசலில் பதிவு செய்யப்படும்.
அதேநேரம் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய நேரிட்டால் எந்தப் பள்ளிவாசலில் ஜமாத் முன்னிலையில் திருமணம் நடந்ததோ அங்கு தான் முறையிடுவார்கள். இரு தரப்பிலும் பேசுவார்த்தை நடத்தும் ஜமாத் கணவன், மனைவி சேர்ந்து வாழ்வதற்கான முடிவுகளை எடுக்கும். எனினும், இருதரப்பிலும் விவாகரத்தில் உறுதியாக இருந்தால் அந்தத் திருமணம் செல்லாது என கூறி அதற்கான அறிவிப்பை வெளியிடுவர்.
இதே இறப்பு ஏற்பட்டால் அவரை அடக்கம் செய்ய அடக்கஸ்தலத்தில் அனுமதி அளிப்பதில் இருந்து அந்த உடலை இஸ்லாம் மார்க்கப்படி இறுதி தொழுகை நடத்தி நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளிலும் ஜமாத் இடம்பெறும். இதேபோன்று, இஸ்லாமியர்களுக்காக அரசிடம் முறையிடுவது, மார்க்கப்பள்ளியை நடத்துவது, இஸ்லாம் நெறிமுறைகளை இஸ்லாமியர்களுக்கு தெரிவிப்பதும் ஜமாத்தாரின் செயல்பாட்டுகளில் வரும்.
ஒரு பள்ளிவாசலில் தொழுகை நடத்தும் இமாமிற்கு மாதம் சம்பளம் வழங்குவது, இஸ்லாமிய குழந்தைகளுக்கு குர் ஆனையும், இஸ்லாம் மார்க்கத்தையும் எடுத்துரைக்கும் இமாம்களுக்கு ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பள்ளிவாசலுக்கு தேவையான நிர்வாக பொறுப்புகள் ஜமாத்தார் வசமிருக்கும்.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் ஜமாத்தார் அந்த பகுதியை சேர்ந்த இஸ்லாம் மக்களின் சுக, துக்கங்களில் மட்டுமே பங்கெடுக்க முடியும். மாறாக, வேறொரு இடத்தில் இருக்கும் பள்ளிவாசலை சேர்ந்த மக்களின் செயல்பாடுகளில் இவர்கள் தலையிட முடியாது. ஒரு நகரில் 10 பள்ளி வாசல்கள் இருந்தால் அந்த பத்திற்கும் தலைமையாக ஒரு பள்ளிவாசல் இருக்கும். இவர்களுக்கான மேல்மட்ட முடிவுகளை அந்தத் தலைமை ஜமாத்தார் எடுப்பார்கள்.
இதேபோன்று மாவட்டந்தோறும் உள்ள தலைமை ஜாமாத்தார்களுக்கு ஒரே ஒரு தலைமை பள்ளிவாசல் இருக்கும். உதாரணமாக ரம்ஜான், பக்ரீத் பண்டிகை தேதிகளை சென்னையில் உள்ள தலைமை இமாம் அறிவித்த பின்னரே அனைத்து மாவட்டங்களிலும் அது கடைப்பிடிக்கப்படும். சுருக்கமாக சொல்ல போனால், இஸ்லாமியர்களுக்கான வாழ்க்கை முறை ஜமாத் மூலம் பயணிக்கிறது.
ஆனால், சில ஆண்டுகளாக தமிழகத்தில் தப்லிக், தவ்ஹீத் என்ற இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு திருகுர் ஆனும், இறை சட்டத்திட்டங்களும் ஒன்று தான். ஒரே இறைவனை தான் வழிபடுவார்கள். ஆனால், கொள்கை ரீதியில் சிறு சிறு வேறுபாடுகள் உண்டு.
தற்பொழுது தப்லிக் ஜமாத் பற்றிய சர்ச்சைகள் எழுந்துள்ளதால் அதன் செயல்பாடுகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. அதனால், முதலில் தப்லிக் ஜமாத் என்றால் என்ன? என்று தெரிந்து கொள்வது அவசியமாவதுடன், அவர்களின் செயல் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா என்ற கேள்விக்கான பதில் அளித்தார் சென்னையில் உள்ள மக்கா பள்ளியை சேர்ந்த இமாம் ஆன முகமது மன்சூர்.
தப்லிக் ஜமாத் எந்த ஒரு அமைப்போ, ஒரு குழுவோ கிடையாது. விருப்பப்படுபவர்கள், அவர்களின் சொந்த செலவின் பேரில் இஸ்லாம் மதத்தின் மார்க்கம் குறித்தும், அதன் நெறிமுறைகள் குறித்தும் சக இஸ்லாமியர்களுக்கு எடுத்து கூறுவார்கள். அவர்களாகவே விருப்பப்பட்டு சில பகுதிகளுக்கு சென்று அங்குள்ள பள்ளிவாசலின் தொடர்பு மூலம் இஸ்லாமிய மக்களை சந்தித்து இறைவழி குறித்தும், இறை தூதரின் போதனைகள் குறித்தும் எடுத்துரைப்பது தான் தப்லிக் ஜமாத்தின் வேலை.
மேலும், தன்னிடம் இருக்கும் மிகுதியை இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் வழங்கி உதவ வேண்டும் என்ற கொள்கையை எடுத்து கூறுவதும் தப்லிக்கின் நோக்கமாக உள்ளது. இதில் இருந்து ஒருபடி அவர்கள் மேலே செல்வதும் இல்லை, கீழேவும் இறங்குவதும் இல்லை. இப்படி இருக்க, தப்லிக் ஜமாத்தையும் தீவிரவாதத்தையும் எந்த வகையில் தொடர்பு படுத்த முடியும்.
பள்ளிவாசலின் தொடர்பு மூலம் இஸ்லாமிய மக்களை சந்தித்து இறைவழி குறித்தும், இறை தூதரின் போதனைகள் குறித்தும் எடுத்துரைப்பது தான் தப்லிக் ஜமாத்தின் வேலை.
சௌதியில் இப்பொழுது இல்லை, 40 ஆண்டுகளுக்கு முன்பே தப்லிக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் மெக்காவில் 1979ஆம் ஆண்டு நடந்த வன்முறை சம்பவம் தான். 1979 நவம்பர் 20ஆம் தேதி அதிகாலையில், உலகெங்கிலும் இருந்து வந்த சுமார் 50,000 இஸ்லாமியர்கள் தங்கள் புனிதமாகக் கருதும் மெக்காவில் கப்பா வளாகத்தை சுற்றிய பகுதியில் வழிபாட்டுக்காக குவிந்திருந்தனர். 40 வயதான ஜுஹய்மன் அல்-உட்டாய்பி என்ற மத குருவின் தலைமையில் 200 ஆண்கள் அந்தக் கூட்டத்தில் கலந்தனர்.
முதன்மை வழிபாட்டை இமாம் நிறைவு செய்தபோது, ஜுஹய்மனும் அவருடைய குழுவினரும் இமாமை தள்ளிவிட்டு மைக்ரோபோனை பறித்துக் கொண்டனர். அல்-ஜமா அல்-சலாபியா அல்-முஹ்டாசிபா (ஜே.எஸ்.எம்.) என்ற அமைப்பிற்கு சொந்தக்காரர்களான அவர்கள், சௌதி அரேபியாவில் சமூக மற்றும் மத மாண்புகள் குறைந்துவிட்டதாக குற்றம்சாட்டினர். ராஜ குடும்பத்தினரின் செயல்கள் தரம் தாழ்ந்ததாக கூறி புனித தலமான மெக்காவை கைப்பற்றுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.
தன்னிடம் இருக்கும் மிகுதியை இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் வழங்கி உதவ வேண்டும் என்ற கொள்கையை எடுத்து கூறுவதும் தப்லிக்கின் நோக்கமாக உள்ளது.
வன்முறைக்கு குரானில் தடை விதிக்கப்பட்ட இடத்தில், ஆயுதங்களுடன் பலர் நின்றிருப்பதை பார்த்ததும், காற்றில் பறந்த துப்பாக்கி தோட்டாக்களும் சௌதி அரசை நிலைக்குலைய செய்தது. நெருக்கடியான சூழலை ஏற்படுத்தியது. ஒருமணி நேரத்தில் மெக்காவை கட்டுக்குள் கொண்டு வந்த ஜே.எஸ்.எம். சௌதி ராஜ குடும்பத்தினருக்கு நேரடியாக சவால் விடும் நிலையில் இருந்தது. பின்னர், பிரிட்டீஷாருடன் இணைந்து ஒருவாரத்திற்கு போராட்டத்தின் மூலம் அவர்களை சௌதி அரசு அடிபணிய வைத்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பொது இடங்களில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
புனித தலமான மெக்காவில் ரத்தம் சிந்தியதாலும், வன்முறை வெடித்ததாலும் மெக்கா வரலாற்றில் அது ஒரு கருப்பு புள்ளியாக பார்க்கப்படுகிறது. அன்றிலிருந்து சௌதிக்குள் எந்தவொரு தனிப்பட்ட அமைப்புக்கள் செயல்படவும் சௌதி அரசு தடை விதித்துள்ளது.
இஸ்லாமியர்கள் மெக்காவுக்கு வருகை தந்து வழிபடலாமே தவிர, எந்த அமைப்பையும் கூட்டம் கூட்டி நடத்த முடியாது, எந்த கொள்கைகளையும் பரப்ப கூடாது. தொழுகை முடிந்ததும் பள்ளிவாசல்கள் மூட வேண்டும் என்பது அந்நாட்டின் சட்டமாக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்தக் கதையை இங்கே கூறுகிறோம் என்றால் 40 ஆண்டுகளுக்கு முன்பே சௌதியில் தப்லிக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது வழக்கமாக அரசு அறிவிக்கும் ஒரு செயலை மிகப்பெரிய விவாதப்பொருளாக எடுத்து விமர்சிப்பதும், அதன் மீது கேள்விகளையும், குற்றச்சாட்டையும் முன் வைப்பதும் எந்த விதத்திலும் நியாயமாகாது.
மேலும் இது வரை தப்லிக் ஜமாத்தை சேர்ந்த யாரிடமாவது ஒரு ஆயுதமோ, வன்முறை தூண்டலுக்கான ஆதாரமான குற்றச்சாட்டுக்களோ இருந்தால் அதை கூற வேண்டும். அல்கொய்தா, தாலிபன், ஜெய்ஷ் -இ முகமது உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கும் தப்லீக் ஜமாத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இருந்ததில்லை. யாருடனும் வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களும் இதுவரை பதிவானது இல்லை.
அப்படி இருக்க அந்த அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றால் தப்லிக் ஜமாத்திற்கு இழப்பு இல்லை. வழக்கம் போல் அவர்களின் வழிபாட்டை செய்து கொண்டிருக்க போகிறார்கள். ஏனெனில், தனிமனிதனின் வழிபாட்டு உரிமையில் தலையிட இங்கு யாருக்கும் உரிமை இல்லையே.
அல்கொய்தா, தாலிபன், ஜெய்ஷ் –இ முகமது உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கும் தப்லீக் ஜமாத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இருந்ததில்லை. யாருடனும் வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களும் இதுவரை பதிவானது இல்லை.
தற்பொழுது சௌதி, தப்லிக் ஜமாத் குறித்து சர்ச்சையை கிளப்பி விட வேறு சில காரணங்கள் இருக்கலாம். கடும் கட்டுப்பாடுகள் நிறைந்த சௌதியின் செயல்பாடுகளில் அண்மைக் காலமாக மாற்றங்கள் நிகழ தொடங்கியுள்ளன. திரையரங்கிற்கு அனுமதி, கேளிக்கை விடுதிகள் திறப்பு, பெண்களுக்கான கட்டுப்பாடுகளில் தளர்வு உள்ளிட்ட காரணங்களை தப்லிக் ஜாமாத்தார் சுட்டிக்காட்ட நேரிடும், அது குறித்த கருத்துக்களை முன்வைக்க நேரிடும் என்ற வியூகத்தின் அடிப்படையில் தப்லீக் ஜமாத் தவறான பிரச்சாரத்தை முன் வைப்பதாக சௌதி அமைச்சகம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம்” என்கிறார் முகமது மன்சூர்.
இதனிடையே, தப்லிக் ஜமாத் குறித்த சர்ச்சையால் பாகிஸ்தான், வங்கதேசம், இந்தோனேசியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தூதர்களை தொடர்பு கொண்டுள்ளன. அதில், சௌதியில் தப்லிக் ஜமாத்திற்கு தடை இல்லை என்றும், அசம்பாவிதங்களை ஏற்படும் அமைப்புகளின் செயல்பாட்டிற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சௌதி அரசே தப்லிக் ஜமாத்திற்கு தேவையான பொருளாதார உதவிகளை செய்து வருவதாகவும் தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.
சௌதியில் சாதாரண சூழல் நிலவி வரும் நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அதை விவாதப்பொருளாக எடுத்து குறிப்பிட்ட சமூகத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியை வளர்ப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும் என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது.
Read in : English