Site icon இன்மதி

ஒரே தேசம், ஒரே சினிமா: பல மொழிகளில் ஒரு திரைப்படம் ரிலீஸ் என்ன காரணம்?

Read in : English

ஒரு மொழியில் எடுக்கப்படும் ஒரு திரைப்படம் வேறு மொழிகளில் ‘டப்’ செய்யப்படுவதோ அல்லது ஒரே நேரத்தில் பல்வேறு மொழிகளில் ஒரு திரைப்படம் உருவாக்கப்படுவதோ புதிய விஷயமல்ல. தமிழில் எஸ்.எஸ்.வாசன், ஏ.வி.எம்., நாகி ரெட்டி, எல்.வி.பிரசாத் ஆகியோருக்கு முன்பிருந்தே இந்த வழக்கம் திரையுலகில் இருந்து வருகிறது. ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒருமுறை வெவ்வேறு திரைப்படங்கள் பிற மொழிகளில் ஆதிக்கம் செலுத்துவதும் தொடர்ந்து வருகிறது.

அந்த வரிசையில் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகும் திரைப்படங்கள் பிற மொழிகளில் ‘டப்’ செய்யப்பட்டு அல்லது ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டு வெளியிடப்படும் ‘பான் இந்தியா மூவிஸ்’ ட்ரெண்ட் தற்போது பிரபலமாக இருந்து வருகிறது.

ஒரு திரைப்படம் தேசம் முழுவதும் ஒரேமாதிரியான வரவேற்பைப் பெற வேண்டுமென்றால், மானுடத்தின் வேர்களையும், பிரச்சினைகளையும், அடிப்படை உணர்வுகளையும் கொண்டிருந்தால் மட்டுமே சாத்தியம்

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ’நான் ஈ’, ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’ என்று தெலுங்கு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய திரைப்படங்கள் இவ்வகையில் ஒரு புதிய அத்தியாயத்தையே உருவாக்கியிருக்கின்றன. அவர் இயக்கியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ வரும் ஜனவரியில் வெளியாகவிருக்கிறது. கன்னடத்தில் வெளியான ‘கேஜிஎஃப்’பின் 2ம் பாகம் விரைவில் வரவிருக்கிறது. கோடை விடுமுறையில் மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ வெளியாகவுள்ளது. பிரியதர்ஷனின் ‘மரக்கார்:அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ மலையாளம் தொடங்கி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இனிவரும் காலத்தில், பெரும் வசூலைக் குறிவைத்து இப்படிப்பட்ட படங்களைத் தயாரிப்பதே அதிகமும் நிகழும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஒரு திரைப்படம் வெளியாவதென்பது சம்பந்தப்பட்ட படக்குழுவைப் பொறுத்தவரை ஒரு கனவு. ஏதோ ஒரு பகுதியில் எடுக்கப்படும் திரைப்படங்கள் தேசம் முழுவதும் ரசிக்கப்படுவது சாதாரண விஷயமல்ல. காரணம், ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பது நம் தேசத்தின் தாரக மந்திரம். மொழிகள், மாநிலங்கள், நில அமைப்புகள், கலாச்சாரங்கள், இனக்கூறுகள், மதங்கள், சாதிகள் என்று பல்வேறு வேறுபாடுகள் இங்குண்டு. அடிப்படையில் அவற்றின் ஆதார இழை ஒன்றாக இருந்தாலும், அதன் மீதமைந்திருக்கும் ஒவ்வொரு அம்சத்திற்கும் வேறுபாடு உண்டு.

இதனை மீறி ஒரு திரைப்படம் தேசம் முழுவதும் ஒரேமாதிரியான வரவேற்பைப் பெற வேண்டுமென்றால், மானுடத்தின் வேர்களையும், பிரச்சினைகளையும், அடிப்படை உணர்வுகளையும் கொண்டிருந்தால் மட்டுமே சாத்தியம்.
தமிழில் வெளியான முதல் பேசும்படமான ‘காளிதாஸ்’ படத்தில் நாயகி தமிழில் பேச, நாயகன் தெலுங்கில் மட்டுமே பேசியிருப்பார். அதன் தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் படங்கள் உருவாக்கப்பட்டு வெளியாகின.

புராணங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளில் ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட சிலவற்றை தழுவிய திரைப்படங்கள் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்டன. ‘டப்’ செய்யப்படும் கலாச்சாரம் வந்த பிறகு இவ்வழக்கம் இன்னும் அதிகமானது. அதே நேரத்தில் ஒரு மொழியில் வெற்றி பெற்ற திரைப்படம் பிற மொழிகளில் ‘ரீமேக்’ செய்யப்படும் வழக்கமும் கணிசமான அளவில் இருந்து வந்தது. தமிழில் பல்வேறு தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் இவ்விரண்டு வழக்கங்களிலும் பங்களிப்பைத் தந்துள்ளனர்.

அந்த வகையில், தமிழில் தயாராகி இந்தியா முழுவதும் பெருவரவேற்பைப் பெற்ற படம் எஸ்.எஸ்.வாசனின் ‘சந்திரலேகா’. தென்னிந்தியா மட்டுமல்லாமல் வட இந்தியாவிலும் இப்படம் பெரு வெற்றியைப் பெற்றது. காரணம், இக்கதையில் நிறைந்திருந்த பொழுதுபோக்கு அம்சம். 1965கள் வரை தெலுங்கு, தமிழில் தயாரான பல படங்கள் இந்தியிலும் வெளியிடப்பட்டன. 1970களில் இந்தி திரைப்படங்கள் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெறத் தொடங்கின. 80களில் அமிதாப்பச்சன் சூப்பர்ஸ்டார் ஆனபிறகு, தென்னிந்திய மொழிகளில் இந்திப்படங்கள் ‘ரீமேக்’ செய்யப்படுவது அதிகமானது.

90களில் கோடி ராமகிருஷ்ணா, ராகவேந்திர ராவ், ராமாராவ் போன்ற இயக்குநர்கள் தெலுங்கு படங்களை தமிழிலும் இந்தியிலும் வெளியிட்டு வெற்றிகளைச் சுவைத்தனர். சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, சுமன் போன்றோரின் படங்கள் தமிழில் ‘டப்’ ஆகி ரசிகர்களைக் கவர்ந்தன. அந்த வரிசையில் மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’வும், ஷங்கர் இயக்கிய ‘காதலன்’ படமும் தென்னிந்திய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வட இந்தியாவில் தனி மரியாதையைப் பெற்றுத் தந்தன. இந்தியா முழுமைக்குமான படங்களை மட்டுமே உருவாக்க மெனக்கெடுவதாலேயே, மணிரத்னத்தின் கடந்த 20 ஆண்டுகால படைப்புகள் கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றன.

அதனால், ஒரே நேரத்தில் பல மொழிகளில் ஒரு திரைப்படம் வெளியிடப்படுவதோ, அது வெற்றியைச் சுவைப்பதோ தமிழ் திரையுலகத்திற்கும் ரசிகர்களுக்கும் புதிய விஷயமல்ல!
இந்தியா முழுவதும் ஒரு திரைப்படம் ரசிக்கப்படும்போது, அதில் கலாசாரம் சார்ந்த தனிக்கூறுகளை இடம்பெறச் செய்வது கடினம். அதனாலேயே, கலைப்படங்கள் அந்த வகைப்பாட்டில் அடங்குவதில்லை. அதேநேரத்தில், வணிக நோக்கோடு உருவாக்கப்படும் திரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கான சாத்தியம் மிகக் குறைவு. அதோடு, கதைக்கரு, காட்சியமைப்பு முதல் நடிகர் நடிகைகள் வரை பல அம்சங்கள் நாடு முழுக்கவுள்ள ரசிகர்களை ஒரே மாதிரியாகத் திருப்திப்படுத்துவதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.

மணி ரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’, ‘ராவணன்’ படங்கள் இந்தியிலும் தமிழிலும் தனித்தனியாகத் தயாரிக்கப்பட்டு பெருவெற்றியைக் கோட்டைவிட்டன. ‘குரு’ படத்தில் அபிஷேக் பச்சன் பேசிய நெல்லைத் தமிழ் தியேட்டரில் சிரிப்பொலியை எழுப்பியது. மணிரத்னம் மட்டுமல்லாமல் பல படைப்பாளிகளும் இப்பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். இனிமேலும் இந்நிலை தொடரக்கூடும். காரணம், கதைக்கூறுகளில் இருந்த கலாச்சார அம்சங்கள் எதுவும் சம்பந்தப்பட்ட நிலப்பரப்பையோ, மனிதர்களையோ பிரதிபலிக்கவில்லை.

இதை மீற, கற்பனையான ஒரு உலகை இந்தியா முழுவதுமுள்ள ரசிகர்கள் ரசிக்கும் வகையில் உருவாக்க வேண்டும். கண்டிப்பாக, 70களில் இந்திய மொழிகளில் வெளியான கௌபாய் படங்களுக்கும் இவற்றுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இக்குறைகளை மீறி ‘பான் இந்தியா ரிலீஸ்’ என்ற வார்த்தைகளை திரைப்படத் துறையினர் உச்சரிக்க காரணம், பாக்ஸ் ஆபீஸ் வசூல் மட்டுமே!
அதேநேரத்தில், அப்படி பெறப்படும் வெற்றி, பல திரைக்குழுக்களின் கனவுகளுக்கு வடிவம் தரும். காதலன், இந்தியன், ஜீன்ஸ் படங்களின் வழியே ஷங்கர் அடைந்த புகழ்தான் தமிழ் இயக்குநர்களுக்கும் கலைஞர்களுக்குமான சந்தையையும் சம்பளத்தையும் பெரிதாக்கியது.

‘பாகுபலி’யின் வெற்றி, இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆக வேண்டுமென்ற ஆசையை அப்படத்தில் நடித்த பிரபாஸிடம் புகுத்தியிருக்கிறது. ‘கேஜிஎஃப்’ மூலமாக யாஷ், விஐபி அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார். ’பொன்னியின் செல்வன்’ மூலமாக கார்த்தியும் ஜெயம் ரவியும் இதர நடிகர் நடிகைகளும் கூட வட இந்திய ரசிகர்களால் கொண்டாடப்படலாம்.

‘பான் இந்தியா ரிலீஸ்’ என்ற வார்த்தைகளை திரைப்படத் துறையினர் உச்சரிக்க காரணம், பாக்ஸ் ஆபீஸ் வசூல் மட்டுமே!

அதேபோல, வேறு மொழிகளில் உள்ள ரசிகர்களைக் கவர வேண்டுமென்பதற்காவே கதாபாத்திரங்களுக்குச் சம்பந்தமில்லாத நட்சத்திரங்களை நடிக்க வைக்கும் அபாயமும் இதில் மறைந்திருப்பதை மறுக்க முடியாது.
அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், சோனிலிவ் உள்ளிட்ட ஓடிடி தளங்களின் வளர்ச்சியால், ஏதோ ஒரு மொழியில் தயாரிக்கப்படும் திரைப்படம் உலகம் முழுக்க ரசிக்கப்படும் சூழலும் கூட உருவாகியிருக்கிறது. ‘நவம்பர் ஸ்டோரி’ வெப்சீரிஸ் ‘பாதாள் லோக்’, ‘சேக்ரட் கேம்ஸ்’ போன்றவற்றுக்கு இணையான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றிருப்பதையும் இந்த இடத்தில் கவனித்தாக வேண்டும்.
ஆங்கிலப் படங்கள் மட்டுமல்லாமல், வேற்று மொழிகளில் அமைந்த உலகப்படங்களும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ‘டப்’ செய்யப்படும் வழக்கம் சில காலமாகத் தொடர்கிறது. இந்தியா முழுக்க ஆங்கிலப் படங்களுக்குத் தனி ரசிகர் கூட்டம் உண்டென்றாலும், அவர்களை பெருமளவில் திரள வைத்த பெருமை ‘டைட்டானிக்’ படத்திற்கு உண்டு.

அதைவிட அதிக வசூலை ‘அவதார்’ உலகம் முழுக்க ஈட்டினாலும், டைட்டானிக் ஏற்படுத்திய தாக்கம் இன்றும் மறையவில்லை. டைட்டானிக் படத்திற்கு முன்னும் பின்னுமாகப் பல திரைப்படங்கள் பல்வேறு மொழிகளில் ‘டப்’ செய்யப்பட்டு உலகம் முழுக்க வெளியாகியிருக்கின்றன. ஆனால், நேரடியாகவே ஆங்கிலத்தில் வெளியாகி அப்படம் பெற்ற வரவேற்பு உலகம் முழுக்க ஒரு சினிமா ஒரேவித வரவேற்பைப் பெறுமென்பதை நிரூபித்தது.

காரணம், அப்படத்தில் இருந்த கதாபாத்திரங்கள், கதையமைப்பு, காட்சிகளின் பிரமாண்டம் என்று பல்வேறு அம்சங்களூடே உலகப் பொதுவிஷயமான காதல் நீக்கமற நிறைந்திருந்தது. மாறாக, வெறுமனே சண்டைக்காட்சிகளுக்காகவும் கிராபிக்ஸ் ஜாலங்களுக்காகவும் கூட சில படங்கள் ரசிக்கப்படுவதுண்டு. ‘அவெஞ்சர்ஸ்’, ‘மேட்ரிக்ஸ்’ என்று பல்வேறு திரைப்பட வரிசைகள் இதற்கான உதாரணங்கள். ’மனி ஹெய்ஸ்ட்’ 5 பாகங்களும் பெற்ற வரவேற்பு, உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களைக் குறிவைத்து உருவாக்கப்படும் வழக்கத்தை வெப் சீரிஸ் தயாரிப்பில் நிகழ்த்தியிருக்கிறது.

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வடிவத்தை மாற்றிக்கொண்டே இருக்கும் ‘பான் இந்தியா மூவிஸ்’ ட்ரெண்ட் இன்னும் சில ஆண்டுகள் நீடிக்கலாம் அல்லது நிரந்தரமானதாகவும் மாறலாம்.

ஆனாலும், மேற்கிலிருந்து வரும் திரைப்படங்களை நாம் ரசிப்பது போல நமது படைப்புகளை அவர்கள் ரசிக்கும் காலம் இன்னும் உருவாகவில்லை.

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வடிவத்தை மாற்றிக்கொண்டே இருக்கும் ‘பான் இந்தியா மூவிஸ்’ ட்ரெண்ட் இன்னும் சில ஆண்டுகள் நீடிக்கலாம் அல்லது நிரந்தரமானதாகவும் மாறலாம். அஜித்தின் ‘வலிமை’, விஜய்யின் ‘பீஸ்ட்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ என்று தமிழ் திரை நட்சத்திரங்களின் படங்களும் இந்த வரிசையில் சேரக்கூடும். அது, அவர்களது புகழ் பரப்பை மேலும் விரிவாக்கலாம். இது, நாம் உண்ணும் உணவை, உடுத்தும் உடையை, வாழும் முறை வேறெங்கோ பிரதியெடுப்பதைக் காணும்போது ஏற்படும் மகிழ்ச்சி போன்றது.

இந்தியத் திரையுலகின் ஒரு பகுதியாக இவ்வகை திரைப்படங்கள் இருக்கலாமே தவிர, இவை மட்டுமே பெரும்பரப்பை ஆக்கிரமித்துவிடக் கூடாது. ’ஒரே தேசம், ஒரே சினிமா’ என்பதனூடே ஒருவித ஆதிக்க மனப்பான்மையும் நிறைந்திருப்பதே அதற்கான காரணம்.

Share the Article

Read in : English

Exit mobile version