Site icon இன்மதி

காருகுறிச்சி அருணாசலத்தின் இசையுடைய ஈர்ப்பின் இரகசியம்

தமிழகத்தின் புகழ்பெற்ற நாகஸ்வர கலைஞர் காருகுறிச்சி அருணாசலம்

Read in : English

ஒரு நண்பர் கர்நாடக இசை நிகழ்ச்சியின் யூடியூப் விடியோவின் இணைப்பை அனுப்பிவைத்திருந்தார். நான் அதை கிளிக் செய்து கேட்க ஆரம்பித்தேன். இசையில் ஆழ்ந்து போனதால் ஒரு சிலவினாடிகளுக்குள் கண்களை மூடிக்கொண்டுவிட்டேன். நாகஸ்வரத்தை கேட்டவுடன் எனது எண்ணங்கள், உணர்வுகள், கோபங்கள் அனைத்தும் மறைந்துவிட்டன. ஒரு கட்டத்தில் நான் அழுவதுபோல் உணர்ந்தேன். என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. இதற்கு முன் கடைசியாக எப்போது அழுதோம் என்பதுகூட எனக்கு நினைவில்லை. அது பல ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்கலாம்.

நான் வாட்ஸ் ஆப் மூலம் எனது நண்பரிடம் நாகஸ்வரம் வாசிப்பது யார்? என்று கேட்டேன். அவர், காருகுறி்ச்சி அருணாசலம் என்றார். எனக்கு சட்டென்று புரியவில்லை. நண்பர் மீண்டும் என்னிடம், “சிங்கார வேலனே தேவா” என்ற திரைப்படப் பாடலுக்கு வாசித்தவர் அவர்தான் என்றார்.

காருகுறிச்சி அருணாசலம்

எனக்கு கர்நாடக இசை பற்றி குறைவாகவே தெரியும். அருணாசலம் யார் என்பதுகூட எனக்குத் தெரியாது. இது என் அறியாமையின் வெளிப்பாடு.

அப்படியெனில் காருகுறிச்சி அருணாசலம் ஏன் என் கண்களில் கண்ணீரை வரவழைத்தார்? சில வகையான இசை என்னை ஈர்க்கிறது. பிங்க் ஃபிளாய்டு குழுவினரின் ராக் இசை எனக்குப் பிடிக்கும். அதை ரசித்துக் கேட்பேன். மென்மையான, சோகமான பாடல்கள் என் மனநிலையுடன் ஒத்திருக்கலாம் என நான் கருதுகிறேன்.

ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர் முகுல் ஷிவ்புத்ரா, தனிப்பட்ட வாழ்க்கையில் குறைகள் இருப்பினும் இசை என்று வந்துவிட்டால், ரசிகர்களை கட்டிப்போடும் அளவுக்கு திறமைசாலி. அவரது இசையை ரசிகர்கள் பலரும் மெய்மறந்து கேட்பார்கள். பெரும்பாலான ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர்கள் போலவே முகுல் ஷிவ்புத்ராவின் சுருதி தப்பாத இசையின் பால் நாம் கவனம் செலுத்த வேண்டும். அவரது இசையில் கவனம் செலுத்தினால் அது நமது புலன்களை அவரது இசை நோக்கி இழுக்கும்.

  நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும் அவரது இசை ஒரு புகையை போன்று உங்களது பின்னணியில் பரவி நிற்கும். அருவி போன்று கொட்டக்கூடிய இசைதான் ஆனால் ஆர்ப்பரிக்ககூடிய ஒன்றல்ல அது.

காருகுறிச்சியாரின் இசையை நீங்கள் அவ்வாறு கவனிக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அவரது இசையில் நீங்கள் மெய்மறந்து விடுவீர்கள். நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும் அவரது இசை ஒரு புகையை போன்று உங்களது பின்னணியில் பரவி நிற்கும். அருவி போன்று கொட்டக்கூடிய இசைதான் ஆனால் ஆர்ப்பரிக்ககூடிய ஒன்றல்ல அது. ஒரு சில தருணங்களில் களைக்கட்டக்கூடியதல்ல அவரது இசை. அது அவரது கச்சேரி முழுவதும் இயற்கையாக நடக்கும்.

அவர் ஆரம்ப நாட்களில் நையாண்டி மேளம் குழுவுடன் வாசித்தது அவர் தடையற்ற பாணிக்கு ஒரு காரணமா? நாட்டுப்புற இசையிலிருந்து அவர் தொடங்கியதால் ஒரு உற்சாகமான நடை அவர் வாசிப்பில் இருந்திருக்கலாம். கர்நாடக இசை அவரது அந்த உற்சாகமாக நடைக்கு ஒரு வரைமுறையை கொடுத்திருக்கலாம். நையாண்டி மேளம் வாசித்துக்கொண்டிருந்த அருணாசலத்திடம் இயற்கையாகவே தனித்திறமை இருப்பதைக் கண்டறிந்த மாமேதை டி.என்.ராஜரத்தினம்பிள்ளை, அவருக்கு பயிற்சி அளிக்க தீர்மானித்தார்.

  அவரது நுட்பங்கள் இசையின் இனிமையை குறைத்து விடாது. நாகஸ்வரத்தின் எல்லா தன்மைகள் இருந்தாலும் காருக்குறிச்சியின் இசை வாய்ப்பாட்டு பாணியைக் கொண்டதாகவே இருக்கும்.

கர்நாடக இசையின் நுணுக்கங்களை அறிந்த ஒருவர் காருகுறிச்சி அருணாசலத்தின் நாகஸ்வரத்தின் சக்தியை பற்றி விவரிக்கிறார். கர்நாடக இசை ஆர்வலர் லலிதாராம் காருகுறிச்சியாரின் இசையை பல அம்சங்களாக அலசுகிறார். நாகஸ்வர இசை என்பது பல எதிர்நிலைகளைக் கொண்டது. கைவிரல்களை அசைத்தல் x ஊதுதல், பாட்டின் தன்மை – கருவியின் தன்மை, குழைவு- தொடர்ச்சி, அழகு – நுட்பம் இவற்றை உள்ளடக்கியவை. பொதுவாக நாகஸ்வர வித்துவான்கள் இந்த எதிர்நிலைகளில் ஒரு பக்கம் சென்றுவிட வாய்ப்புண்டு. ஆனால் இந்த எதிர்நிலைகளில் இரண்டையும் உள்வாங்கி நடுநிலையுடன் வாசிக்க கூடிய திறனுடையவர் காருகுறிச்சி, என்கிறார் லலிதாராம். அவரது நுட்பங்கள் இசையின் இனிமையை குறைத்து விடாது. நாகஸ்வரத்தின் எல்லா தன்மைகள் இருந்தாலும் காருக்குறிச்சியின் இசை வாய்ப்பாட்டு பாணியைக் கொண்டதாகவே இருக்கும்.

லலிதாராம், காருகுறிச்சியின் தனித்துவமான ஸ்வர ஆலாபனைகளைப் பற்றி பேசுகிறார். கர்நாடக இசையில் ஸ்வரம் அல்லது இசைக் குறிப்புகள் பல்லவியுடன் இசைக்கப்படும்போது திரும்பத் திரும்ப அந்த வரிகள் வரும். காருகுறிச்சி, பல்லவி இல்லாமலே ஸ்வரங்களை வாசிப்பார். அவரது ஸ்வர வாசிப்புகள் ஒரு குறிப்பிட்ட தாளகட்டுக்குள் ராக ஆலாபனை போலவே இருக்கும். நையாண்டி மேளத்தின் சுதந்திரமாக வாசிப்பை இங்கு நினைவுகூறலாம்.

காருகுறிச்சியின் இசை நுணுக்கங்கள் குறித்த லலிதாராமின் நிகழ்ச்சியை வருகிற 24 ஆம் தேதி மியூசிக் அகாதெமி யூடியூப் சேனலில் பார்த்து ரசிக்கலாம்.

கோவில்பட்டியிலுள்ள காருகுறிச்சி அருணாசலத்தின் நினைவிடம்

கோவில்பட்டியிலுள்ள காருகுறிச்சி அருணாசலத்தின் நினைவிடம்

காருகுறிச்சியின் நடுநிலையான மென்மையான இசை அவரது குணாதிசயத்தை வெளிப்படுத்துகிறது என கொள்ளலாம். ஒரு பரிவான மென்மையான மனிதர். அவர் ஒரு மென்மையான உள்ளம் கொண்டவர் என்பதை வெளிப்படுத்துகிறது. குடும்பத்தின்பால் மிகுந்த அக்கறையுள்ளவராக இருந்தார். பெருந்தன்மையான மனிதர் என்று அவரை அறிந்தவர்கள் கூறுகிறார்கள். காருக்குறிச்சியின் ரசிகர் ஒருவர் மணியாச்சியில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த தமது வீட்டிலிருந்த நகைகளை எல்லாம் விற்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். பின்னர் இதையறிந்த காருகுறிச்சி, நிகழ்ச்சிக்காக பேசியிருந்த பணத்தை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார், என்ற செவிவழி செய்தியும் உண்டு.

காருகுறிச்சி அருணாசலத்தின் குணாதிசயங்கள் அவரது இசை மீதான தாக்கத்தை உண்டாக்கியிருக்கலாம். அதுவே அவரது ஈர்க்க கூடிய இசைக்கு காரணங்களாக இருக்கலாம். அவரது நூற்றாண்டின் போது அவரது இந்த அம்சத்தை நினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும்.

Share the Article

Read in : English

Exit mobile version